முந்தைய பகுதியை படிக்க
நிலக்கோடியில் சில தினங்கள் - 1
நிலக்கோடி முனை (முக்கடல் சங்கமம்)
சென்ற அத்தியாயத்தில் சூரிய அஸ்தமனமும் சூரிய உதயமும் கண்ட நாம், இந்த அத்தியாயத்தில் அந்த நிலக்கோடியில் அமைந்திருக்கும் தீவுகளையும் பிற சுற்றுலாத்தலங்களையும் நோக்கி பயணிக்கிறோம். முதலில் காந்தி மண்டபத்திற்கும் பகவதி அம்மன் கோயிலுக்கும் இடைப்பட்ட முக்கடல் சங்கமத்தை அடைந்தோம்.
இந்திய துணை கண்டத்தின் நிலக்கோடியில் இதுவே கடைக்கோடி இடம். வங்கக் கடலும், அரபிக் கடலும் இந்திய பெருங்கடலுடன் இணைந்து கலந்து மூன்று கடல்களும் ஒன்றாய் சங்கமிக்கும் அந்த அற்புத இடத்தில் பாறைகளின் இடையே பொங்கி வந்த அலைகள் கண்ணாடி போல தெள்ளத் தெளிவாக இருந்தது. சற்று தூரத்தில் பாறைகள் மீது மோதி அலைகள் உயரச் சிதறிய போதும், கரையோரம் ஆழம் சற்று குறைவாக இருந்த இந்த இடம் நிச்சயம் குழந்தைகளுக்கான ஒரு நீச்சல் குளம் எனலாம். நிலக்கோடியில் நின்று கடலழகை சிறிது நேரம் ரசித்த பின் அடுத்த இலக்கான குமரிக் கடலின் முக்கிய சுற்றுலா தளமான விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைகள் அமைந்திருக்கும் தீவுகளை நோக்கி புறப்பட்டோம்.
படகு துறையும் கண்ணாடி பாலமும்
விவேகானந்தர் பாறை தீவுக்கு செல்லும் படகு துறையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. விடுமுறை நாட்களில் இங்கு வருவதை தவிர்ப்பது அல்லது அதிகாலையிலேயே வந்து வரிசையில் நின்று விடுவது நல்லது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்திருந்த போது ஏற்பட்ட கடும் சோர்வு, வரிசையில் உடன் நின்ற பள்ளி குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்ததில் காணாமல் சென்றது. கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் ஏற்றிச் சென்ற படகு அலைகள் மேல் ஆடி அசைந்து சென்று சுமார் 10 நிமிட பயணத்தில் விவேகானந்தர் பாறையை அடைந்தது.
அய்யன் திருவள்ளுவர் சிலை
கண்ணாடி பாலத்தை கடந்த பின் தமிழுக்கு மட்டுமின்றி உலகிற்கே பொதுமறை தந்து வழிகாட்டிய அய்யன் திருவள்ளுவர் தாய்நாட்டை நோக்கி பார்த்தபடி நின்றிருக்கும் அந்த பாறையை அடைந்தோம். கண்ணாடி பாலம் கட்டுவதற்கு முன்பு சிறிய பரிசல்கள் மூலம் தான் இங்கு வர இயலும். பீடத்தின் அடியில் அமைக்கப்பட்ட படிகளில் உள்ள சாளரங்கள் வழியே கடலை ரசித்தபடியே ஏறிச் சென்று இரண்டு அடிக்குள் உலகை அளந்து தமிழின் புகழை உலகெங்கும் பரப்பிய அய்யனின் பாதங்களை அடைந்தோம். அவரின் காலடியில் நின்ற போது தான் கம்பீரமாய் நின்று இருந்த அந்த 133 அடி உயர (பீடத்துடன் சேர்த்து) சிலையின் உண்மையான உயரமும் பிரம்மாண்டமும் தெளிவாக தெரிந்தது. அப்போது சிலையின் உச்சியில் நேராக மின்னிய கதிரவன், தன்னை போலவே இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் வள்ளுவர் தந்த திருக்குறளும் உலகெங்கிற்கும் ஒளி தந்து பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்ற உண்மையை உரக்கச் சொன்னான்.
அய்யன் வள்ளுவரை தரிசித்த பின் மீண்டும் கண்ணாடி பாலம் வழியே நடந்து, விவேகானந்தர் பாறையை அடைந்து அங்கே கம்பீரமாய் ஒரு கோட்டை போல் இருக்கும் விவேகானந்தர் மண்டபத்தில் நுழைந்தோம். இந்த பாறையில் தான் உலக சமய மாநாட்டில் பங்கேற்க சிகாகோ செல்லும் முன்பு இங்கு சில நாட்கள் அந்த மகான் தியானம் செய்து உத்வேகம் பெற்றார். சுவாமி விவேகானந்தருக்கே உத்வேகம் அளித்த இடத்தை தரிசிக்க இந்த சாமானியன் விஜயபாஸ்கருக்கும் கொடுத்து வைத்திருந்ததை என்னை மகிழ்ந்தேன். நிச்சயம் தரிசிக்க வேண்டிய நேர்மறை எண்ணங்கள் நிரம்பிய இடம் இது. கட்டிடத்தின் அடியில் அமைந்த தியான மண்டபத்தில் சில மணித்துளிகள் அமைதியாய் அமர்ந்து இறைவனுக்கு நன்றி கூறி மீண்டும் படகில் ஏறி அங்கிருந்து விடை பெற்றோம்.
சுசீந்திரம் மாருதி ஹோட்டல்
கன்னியாகுமரியில் நல்ல உணவகம் எது என யாரை கேட்டாலும் அவர்கள் கை காட்டுவது இரண்டு ஹோட்டல்கள். அசைவம் என்றால் ஹோட்டல் அப்சல். சைவம் என்றால் சுசீந்திரம் மாருதி ஹோட்டல். பொதுவாக மதுரை தவிர்த்து பிற ஊர்களில் உணவின் சுவை சென்னைவாசிகளுக்கு பொருந்துவது கடினம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எதுவுமில்லாமல் தான் சென்றோம். ஆனால் மதிய சாப்பாடு உண்மையிலேயே நன்றாக இருந்தது. சாம்பார் ரசம் போன்றவை லேசான இனிப்புடன் சுவையாக இருந்தாலும் வத்த குழம்பு மடடும் ஒன்றுமில்லாமல் சற்று வெறுமையாக இருந்தது. இது குறித்து எனது கருத்தை (Feedback) அவர்களிடம் தெரிவித்த போது அது அருகில் உள்ள சுசீந்திரம் ஊரின் பாரம்பரிய சுவை என்றும் அந்த ஊர்க்காரர்களுக்கு அதுவே மிகவும் பிடிக்கும் என்று கூறினார்கள்.
திருப்பதி வெங்கடாஜலபதி கோயில்
ராமாயண தரிசனம்
விவேகானந்தர் கேந்திரம் கன்னியாகுமரி நுழைவாயில் அருகே அமைந்த ஆன்மீக இடம். இந்த இடத்தைப் பற்றி அவ்வளவு விவரங்கள் தெரியாவிட்டாலும் திருப்பதி பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்ட நாங்கள் நேராக ஆட்டோவில் இங்கு நுழைந்தோம். முதலில் உள்ளே சென்று ஏகாட்சர மஹாகணபதி விநாயகரையும் பின் அருகில் இருந்த விவேகானந்தர் உள்ளிட்ட பல ஆன்மீக தலைவர்களின் புகைப்படங்கள் இருந்த கண்காட்சியை கண்டுக்களித்த பின் ராமாயண அருங்காட்சியகத்திற்குள் நுழைந்தோம்.
ராமாயண அருங்காட்சியகத்தில் வரைபட கண்காட்சி உண்மையிலேயே அருமையாக இருந்தது. பல்வேறு அழகான ஓவியங்களால் நிரப்பப்பட்டிருந்த அந்த கண்காட்சி குறைந்த நேரத்தில் மிகப்பெரிய இதிகாசமான முழு வால்மீகி ராமாயணத்தையும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. கண்காட்சியின் உள்ளே புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை. கண்காட்சியின் மாடியில் பாரத மாதாவின் சிலையும் மேலும் சில சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் இருந்தன. அது தவிர சுற்றுப்புறச் சூழலையும் மனநலத்தையும் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு ஒளிப்பட காட்சி அரங்கம் இருந்தது ஆன்மீக பூமியான இந்தியாவில் அனைவரும் குறிப்பாக குழந்தைகள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் இந்த ராமாயண அருங்காட்சியகம்.
மெழுகுசிலை அருங்காட்சியகம்
ராமாயண அருங்காட்சியகத்தை கண்டு ரசித்த பின் இரவு உணவுக்கு முன்பு சிறிய இடைவேளை கிடைத்ததால் அருகில் இருந்த மெழுகுசிலை அருங்காட்சியகம் (Wax Museum) சென்றோம். இதுவே இந்தியாவின் முதல் மெழுகு சிலை அருங்காட்சியம் என அறிவிப்பு பலகை வைத்திருந்தார்கள். அங்கு அன்னை தெரசா, அமிதாப்பச்சன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ரவீந்திரநாத் தாகூர், சில ஹாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளின் சிலைகள் இருந்தன.
சாதனைகள் பல புரிந்த ஆளுமைகளுடன் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பின் அருகில் இருந்த முப்பரிமாண (3D) அறையில் நுழைந்தோம். அங்கு பலவித ஓவியங்கள் இருந்தன. அவற்றில் சில குறிப்பிட்ட இடங்களில் இருந்து புகைப்படங்களை எடுக்கும்போது அவை ஓரளவு முப்பரிமாணமாக தெரிகின்றன. அங்கும் ஒரு சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வழியில் இருந்த சிறிய உணவகத்தில் (தேவி ஹோட்டல்) சுவையான இரவு உணவை முடித்துக் கொண்டோம். அங்கேயே மறுதினம் காலை சிற்றுண்டிக்கான மெனுவையும் கேட்டுக் தெரிந்து கொண்டோம். அப்போதே மறுநாள் காலை உணவுக்கு நிச்சயம் மீண்டும் அங்குதான் வரவேண்டும் என கொள்கை முடிவு செய்து அன்றைய இரவு உறங்கச் சென்றோம்.
18.3.2025 ஞாயிற்றுக்கிழமை
இன்றே இந்த நிலக்கோடியில் நாங்கள் தங்கப் போகும் கடைசி தினம். முதலில் அருகில் உள்ள இந்தியாவின் கடைக்கோடி மலையான மருந்துவாழ் மலைக்கு மலையேற்றம் செல்ல ஒரு திட்டம் இருந்தது ஆனால் சூழ்நிலை சற்று சாதகமாக அமையாததால் முடிந்த அளவு அலைச்சல் இல்லாமல் ஓரிரு இடங்களை மட்டும் பார்த்துவிட்டு சற்று ஓய்வெடுக்க முடிவு செய்தோம். எனவே பொறுமையாக எழுந்து குளித்து முடித்த பின் காலை உணவுக்கு முன் ஒரு குறுகிய நடைபயணம் மேற்கொண்டோம். அப்போது வானில் இருந்து உடலில் விழுந்த ஒரு சில நீர் துளிகள் மழையின் தூரலா? அல்லது நினைவுகளில் கலந்த நிலக்கோடி கடல் நீரின் சாரலா? என தெரியவில்லை. அது கடந்த இரண்டு தினங்களாக கடலோரத்திலேயே வசித்து வந்ததால் ஏற்பட்ட மனப்பிரமை போல தோன்றியது.
முதலில் எங்களின் தங்குமிடத்தின் எதிரே இருந்த சக்கர தீர்த்த குளத்தின் அருகில் குடியிருந்த காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தோம். அங்கு சந்தனம் குங்குமம் விபூதி உள்ளிட்ட பிரசாதங்களை வாழையிலையில் வைத்து மடித்து தந்தது சிறப்பாக இருந்தது.
பிறகு முன்தினம் இரவு உணவை உண்ட தேவி ஹோட்டலுக்கு மீண்டும் சென்றோம். இன்னும் கேட்டால் அவர்கள் கூறிய அந்த காலை மெனுவே எங்களை அங்கு அழைத்துச் சென்றது. கன்னியாகுமரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை சிற்றுண்டியாக பெரும்பாலான ஹோட்டல்களில் ஆப்பமும் கடலைகறியும் கிடைக்கும். கேரள ஸ்டைலில் கருப்பு மூக்கடலையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்யப்படும் கடலைக்கறியை எதிர்பார்த்த சென்ற எங்களுக்கு வெள்ளை மூக்கடலை குருமாவை தந்தார்கள் என்ற போதும் அதன் சுவை உண்மையிலேயே நன்றாக இருந்தது. அதன் அற்புத சுவையில் சில பல ஆப்பங்களை உள்ளே தள்ளிவிட்டு மீண்டும் எங்கள் அறையை அடைந்தோம்.
சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்
சுசீந்திரம் கோவிலில் உள்ள பல தலைகள் கொண்ட ஒரு சிலையை ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைத் தளங்களில் பார்த்திருந்தால் அதை நேரில் பார்க்கும் ஆவல் எனக்கு நீண்ட நாட்களாக இருந்தது. எனவே சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு கன்னியாகுமரி - நாகர்கோவில் தடத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமால்யன் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டோம் ஆனால் சற்றும் எதிர்பாராமல் பங்குனி மாதம் முதல் தேதியில் காலையில் பெய்த மழை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக எங்கள் பயணத்தை தள்ளிப் போட்டது. கூடுதல் ஓய்வுக்குப் பிறகு பேருந்தில் மூலம் சுசீந்தரத்தை அடைந்தோம்.
பிரம்மா விஷ்ணு ஈஸ்வரன் மும்மூர்த்திகளின் ஒருங்கிணைந்த வடிவமான தாணுமாலயரின் தரிசனம் அற்புதமாகவே இருந்தது. பெண்களின் கற்பின் சக்தியை போற்றும் இந்த கோவிலின் தலபுராணம் சிறப்பு வாய்ந்தது. மேலும் அக்கோவிலில் நிகழ்ந்த அகழ்வின்போது கிடைத்த 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலையும் கம்பீரமாய் இருந்தது. அங்கிருந்த ஒருவர் கோவிலில் இருந்த சப்தஸ்வர இசை தூண்களையும், அழகிய சிற்பங்களையும் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சிலையின் ஒரு காதில் குச்சியை விட்டால் மறு காதில் வெளியே வரும் வித்தையையும் விளக்கினார். கோவிலின் பிரகாரங்கள் விசாலமாகவும் அழகாகவும் இருந்தன. தெற்கு பிரகாரத்தை சுற்றி வரும் போது ஒரு சிறிய குன்றின் மீது கோவில் கொண்ட காசி விஸ்வநாதர் தியானம் செய்ய ஏற்ற அமைதியான இடம்.
அனைத்தையும் ஆசை தீர கண்டு களித்த பின் நான் தேடி வந்த சிலையை பற்றி வினவ, அது ராஜ கோபுரத்தின் மூன்றாம் நிலையில் இருப்பதாக கூறினார்கள். தூரத்திலிருந்தே அந்தச் சிற்பங்களை ரசித்த பின் அங்கிருந்து புறப்பட்டோம்.
ஹோட்டல் அப்சல்
சுசீந்திரம் கோவிலில் இருந்து புறப்பட்டு மீண்டும் குமரி முனைக்குச் சென்று அங்கு பஜார் வீதியில் சில அலங்காரப் பொருட்களை வாங்கி வந்தோம். அவைகள் பெரும்பாலும் சங்கு, சோழி, சிப்பி போன்ற கடல் பொருட்களால் செய்யப்பட்டு இருந்ததன. இதை தவிர பணப்பயிர்கள் மற்றும் வாசனை பொருட்கள் என்று அழைக்கப்படும் மிளகு, சோம்பு போன்றவையும் சில கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அங்கு பகவதி அம்மன் கோவில் அருகே சென்னையில் இருந்து வந்திருந்த நண்பர் பரணியை குடும்பத்துடன் சந்தித்து மகிழ்ந்தோம். பிறகு ஆன்மீக வேலைகள் அனைத்தும் முடிந்ததால் அந்த நிலக்கோடி கடல் வயலில் விளையும் மீன்களின் சுவைகளையும் அறிய எண்ணி ஹோட்டல் அப்சலுக்கு சென்றோம். என்னதான் நான் சைவமாக இருந்தாலும் உடன் வந்தவர்களின் துணை கொண்டு அந்த உள்ளூர் உணவுகளின் சுவைகளை அறிய ஆவல் கொண்டேன்.
ஹோட்டல் அப்சலில் விதவிதமான மீன்கள் ரூபாய் 100 முதல் 500 வரை அதற்கேற்ற விலையில் ரக ரகமாக இருந்தன. அவை அனைத்தும் அன்று காலையில் பிடித்து வந்த புதிய மீன்கள் என கூறினார்கள். நான் சுமாரான சைவ சாப்பாட்டை விரும்பி சாப்பிட, அவர்கள் பரிமாறிய பிரியாணியும் மீன்களும் அந்த ஊருக்கேற்ற சற்று வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருந்ததாக அதை ருசித்தவர்கள் கூறக் கேட்டுக்கொண்டேன். மதிய உணவிற்குப் பின் எங்கள் ஓய்வு தொடர்ந்தது.
வட்டக்கோட்டை
இரவு 11 மணிக்கு மேல் தான் ரயில் என்ற நிலையில் மதிய ஓய்வுக்கு பின் நேரம் அதிகம் இருந்தது. எனவே எங்கள் இறுதி இலக்கான ஒரு கடற்கரையோர கோட்டையை பார்க்க எண்ணி, ஒரு ஆட்டோ மூலம் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள வட்டக்கோட்டையை அடைந்தோம்.
அலை கடலோரம் எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க அமைந்த அழகான ராணுவ கோட்டை. கிட்டத்தட்ட பாண்டியர் காலத்தில் இருந்தே இருப்பதாகவும் அதை பிற்காலத்தில் திருவாங்கூர் அரசிடம் இருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் கைப்பற்றி செப்பனிட்டதாகவும் தகவல் தெரிந்தது. கடல் அலைகள் அணி அணியாக படையெடுத்து வந்து கோட்டை சுவற்றில் தொடர்ந்து மோதி, அதை நகர்த்த முயலும் வகையில் அமைந்த அழகான இடம். குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் ரிலாக்ஸ் ஆக இருக்க மிகவும் ஏற்ற இடம். இதேபோன்று ஒரு கடற்கரை கோட்டையை எகிப்தில் உள்ள மத்தியதரைக்கடல் நகரமான அலெக்ஸாண்டரியாவில் பார்த்து ரசித்த நினைவு வந்தது. கோட்டை சுவற்றில் அமர்ந்து கடல் அலைகளை ரசிக்கவும், சில புகைப்படங்கள் எடுக்கவும் செய்தோம். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்தால் நிச்சயம் ஒரு நல்ல அனுபவத்தை தரும் இடம் இது.
முடிவுரை
மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை மற்றும் திற்பரப்பு அருவி ஆகியவை கன்னியாகுமரி அருகே நாகர்கோவில் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய பிற இடங்களாகும். ஆனால் நிலக்கோடியை மட்டுமே குறிக்கோளாக கொண்ட எங்கள் பயணத் திட்டத்தில் அவை யாவும் இடம் பெறவில்லை. பிறகு ஒரு முறை ஒரு நல்ல மழைக்காலத்தில், ஒரு தனித்த பயணத்தில் அவைகளை பார்த்து ரசிக்கலாம் என எண்ணி நிலக்கோடியில் மட்டுமே எங்களின் முழு நேரத்தையும் செலவிட்டோம்.
தேசியம், தெய்வீகம், இயற்கை மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அனைத்தும் சரியான விகிதத்தில் சேர்ந்த ஒரு கலவையான அந்த நிலக்கோடி நகரில் வாழ்ந்த சிறந்த சில தினங்களின் நிரந்தரமான நினைவுகளுடன் அங்கிருந்து விடை பெற்றோம்.
மேலும் சில புகைப்படங்கள்
நிலக்கோடி முனை (முக்கடல் சங்கமம்)
படகு துறையும் கண்ணாடி பாலமும்
அய்யன் திருவள்ளுவர் சிலை
பிற பதிவுகளை படிக்க…
Comments
Post a Comment