முந்தைய பதிவினை பார்க்க / படிக்க...
9. விஜயநகர அரண்மனையின் எச்சங்கள்
அற்புத ஹம்பி பயணத்தில் மன்னர்கள் கட்டிய கோவில்களை தரிசித்த பின் இறுதியாக நாங்கள் சென்ற இடம் விஜயநகர அரண்மனை. இந்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அழிவில் இருந்து காத்த விஜயநகர சாம்ராஜ்ஜிய மன்னர்கள் வாழ்ந்த இடம். ஒரு காலத்தில் நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாய் இருந்த இடத்தில் தற்போது அதன் சுவடுகள் மட்டுமே காணப்படுகிறது. இதில் பின்வரும் இடங்களை கண்டேன்.
அரசிகளின் குளியல் அறை
(Queen's bath house)
இது மக்களை ஆண்ட மன்னர்களை தங்கள் அழகாலும், அறிவாலும் ஆட்சி செய்த ராணிகள் குளிக்கும் இடம். ஒரு கட்டிடத்தின் உள்ளே அமைந்திருக்கும் குளியல் குளத்தை சுற்றி நடைபாதையும், ஜன்னல்கள் வைத்த மாடங்களும் உள்ளன.
Queen's bath house
மஹாநவமி மேடை
(Mahanavami Dippa)
மஹாநவமி மேடை பொதுவாக தசரா விழாக் காலங்களில் கலைநிகழ்ச்சிகளை கண்டுகளிக்க அமைக்கப்பட்ட ஒரு உயர்ந்த மேடையாகும். மேடையின் பின்னால் உள்ள படிக்கட்டு மண்டப சுவற்றில் பல்வேறு சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இதற்கு சற்று அருகில் இருந்த கல் கதவுகள் கலைகளின் உச்சமாக தோன்றியது.
மஹாநவமி மண்டபம்
கருங்கற்களால் அமைக்கப்பட்ட அழகிய குளம். பூமிக்குள் புதைத்திருந்த இது, பிற்காலத்தில் அகழ்வாராய்ச்சி மூலம் வெளிக்கொணரப்பட்டதாக அறிந்தோம். இதற்கு நீரூற்ற பாறைகளை செதுக்கி அமைக்கப்பட்ட குழாய்கள் உள்ளன. பண்டிகை காலங்களில் நீராடல் நிகழ்ச்சிகளுக்கு பயன்பட்டிருக்க கூடிய ஒரு இடம்.
அரண்மனை மற்றும் ரகசிய அறை
(Kings Palace and Secret chamber)
மிகப்பெரிய அரண்மனை இருந்த சுவடும் அதில் நூறுகால் மண்டபம் இருந்த தடயமும் உள்ளது. அரண்மனை அழிக்கப்பட்டதால் அதனுள் இருந்த ரகசிய அறை நம் கண்களுக்கு புலப்படுகிறது. அரண்மனையை சுற்றி கற்களால் அமைக்கப்பட்ட அகலமான கோட்டை சுவர்களும் அதனுள் யானைகள் நீரருந்தும் இடம் மற்றும் ஒரு நேரத்தில் பல குதிரைகள் நீரருந்தும் தொட்டி உள்ளன.
விஜயநகர அரண்மனை இருந்த இடம்
கமல மஹால் மற்றும் கண்காணிப்பு கோபுரம்
(Lotus mahal and Watch tower)
கமல மஹால் என்றழைக்கப்படும் அழகான சமச்சீர் கட்டிடம். தாமரை மொட்டுகள் போன்ற கோபுரங்களை கொண்ட இது அரச குடும்ப பெண்கள் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது. இதன் அருகில் ஒரு கண்காணிப்பு கோபுரமும் ஒரு சிறிய அரண்மனை இருந்த எச்சமும் காணப்படுகின்றது.
யானை கொட்டகை
(Elephant stables)
கமல மஹால் அருகே 11 பெரிய அறைகள் கொண்ட அழகான யானை கொட்டகையும், அதன் அருகில் வீரர்கள் தங்குமிடமும் உள்ளது. இதன் மாடங்கள் இஸ்லாமிய கட்டிட கலையை சேர்ந்தது.
யானை கொட்டகை
ஹசார ராமர் ஆலயம்
(Hazara Rama temple)
ஆயிரம் ராமர் எனப் பொருள்படும்படியான பெயர் கொண்ட ஹசாரராமர் ஆலயத்தில் உள்ள சுவர்களில் உண்மையிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட அற்புத சிற்பங்கள் உள்ளன. இது இரண்டாம் தேவராய மன்னரால் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அவை ராமாயணம் மற்றும் பல்வேறு இதிகாச நிகழ்வுகளை எடுத்துரைக்கின்றன. இது அரண்மனை வளாகத்தில் அரச குடும்பத்தினர் மட்டும் வழிபடும் கோவிலாக இருந்திருக்க கூடும். தவறாமல் காண வேண்டிய அற்புத காலை பொக்கிஷம்.
பிற இடங்கள்
நேரமின்மை மற்றும் மதிய வெயில் காரணமாக நான் தவறவிட்ட இடங்கள்.
- ஸ்ரீ மால்யவந்த ரகுநாதர் ஆலயம்
- கோதண்டராமர் ஆலயம்
- அரண்மனை வளாகத்தில்
- Octagonal tank (அறுங்கோண குளம்)
- Underground Shiva temple (பாதாள லிங்கேஸ்வரர் )
மொத்தத்தில் கலாச்சார புதையலான ஹம்பியில் நான் பார்த்த இடங்களும் உணர்ந்த அற்புத அனுபவங்களும் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை என்றபோதும் என்னால் முடிந்த அளவு சுருக்கமாக இப்பதிவில் விளக்க முயற்சித்துள்ளேன். தென்னிந்திய கலாச்சாரத்தை கட்டிக்காத்த அந்த விஜயநகரத்தின் வீர வரலாற்றின் கதையை விரைவில் எழுதுவேன் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.
நன்றிகள்
- இயற்கையை படைத்த இறைவனுக்கு
- அற்புத நகரை நிர்மாணித்த விஜயநகர மன்னர்களுக்கு
- மன்னர்களின் எண்ணங்களை செயல்படுத்திய தொழிலாளர்களுக்கு
- உடன் பயணித்த நண்பர்களுக்கு
- இப்பதிவை பார்த்து ரசிக்கும் உங்களுக்கு
- புகைப்படங்களை எடுக்க உதவிய Redmi 7Sக்கு
- இப்பதிவை படிக்கும் உங்களுக்கு
உங்களின் கருத்துக்களை Commentல் பதிவு செய்யவும்
மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்.
பிற பதிவுகளை பார்க்க / படிக்க...
Comments
Post a Comment