குடந்தையில் ஒரு நாள் - 2 வடகரை தலங்கள்

முந்தைய பகுதியை படிக்க  

தென்கரை தலங்கள்


     
   
இளைப்பாறிய கதை 
     
      காலையில் கதிரவன் தோன்றிய நேரத்தில் புறப்பட்டு உச்சி பொழுதுக்குள் குடந்தைக்கு பெயர் தந்த கலசம் விழுந்த இடங்களில் எல்லாம் பயணம் செய்த பின், கும்பேஸ்வரர் கோயிலின் வடக்கு வீதியில் உள்ள மாமீஸ் கிராண்ட் கஃபேயில் (Maami's grand Cafe) மதிய உணவை உண்டேன். சென்னையை போல் அல்லாமல் சற்று தடித்த அரிசி சாதம் சற்று ருசியாகவே இருந்தது. குறிப்பாக அவர்கள் பரிமாறிய வத்தகுழம்பு அருமையாக இருந்ததால் அதற்குண்டான பாராட்டுகளை தெரிவித்தேன்.  மனதும், வயிரும் நிறைந்த பின் அடுத்த இலக்கான காவிரியின் வடகரை தலங்களை இனிய மாலை பொழுதில் தரிசிக்க எண்ணி எனது இயந்திர குதிரையை (Bajaj Pulsar) மீண்டும் ஓடவிட்டேன்.


    குடந்தையின் வடபுறம் உள்ள காவிரி பாலத்தை கடந்து, இடப்புறம் திரும்பி சுவாமிமலை செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்ற பிறகு மீண்டும் வலப்புறம் திரும்பி, திருப்புறம்பியம் செல்லும் பாதையை அடைந்தேன். இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த வயல்வெளிகளையும் அதன் பசுமையையும் கண்ணார ரசித்த பின் எதிர்வந்த காவேரியின் கிளை நதியான மண்ணியாற்றை கடந்து சரித்திரப் புகழ்பெற்ற திருப்புறம்பியம் கிராமத்தில் உள்ள சாட்சிநாதர் ஆலயத்தை பிற்பகல் 1.30 மணிக்கெல்லாம் அடைந்தேன்.


9. யாழ்ப்பாணம் ஆறுமுக சித்தர் ஜீவ சமாதி


            திருப்புறம்பியம் சாட்சிநாதர் கோயில் மாலை 4 மணிக்கு பிறகு தான் திறப்பார்கள் என்ற நிலையில், ஒதுங்க இடமில்லா இடத்தில், உச்சி வெயிலில் அடுத்த இரண்டு மணிநேரத்தை எப்படி கடப்பது என்று யோசிக்கும் போது உடல் இளைப்பாற இடமும், மனம் மகிழ ஆன்மிக அனுபவமும் தந்து உதவினார் அவ்வூரில் சித்தியடைந்த யாழ்ப்பாணம் ஆறுமுக சித்தர்.


           ஆம்! உள்ளூர்காரர் ஒருவரின் அறிவுரைப்படி சாட்சிநாதர் ஆலயத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரம் உள்ள யாழ்ப்பாணம் ஆறுமுக சித்தர் ஜீவ சமாதிக்கு சென்றேன். அங்கு கிபி 1850களில் வாழ்ந்த ஆறுமுக சித்தர் மட்டுமின்றி அவரது சீடர்கள் என மொத்தம் 5 சமாதிகள் ஒரு சிறிய கோயிலிலும் அதன்பின் உள்ள தோப்பிலும்  இருந்தன. அங்கு திருப்பணி செய்யும் சீடர் ஒருவரின் துணையோடு பாம்புப் புற்றுகள் நிறைந்த தோப்பில் இருந்த சமாதிகளை தரிசனம் செய்தேன். அங்கிருந்த பாம்புகள் அடிக்கடி சித்தர் சமாதியின் மேல் தனது தோலை உரிப்பது வழக்கமாகும். அங்கு இன்றும் சித்தர் தியானத்தில் இருப்பதாக கருதப்படுவதால் முடிந்த அளவு அமைதி காப்பது உத்தமம். 


            சித்தர்களை தரிசித்தபின், அவர்கள் தந்த தேனீரை பருகி, அங்கேயே ஓய்வெடுத்த பின் அவர்களுக்கு நன்றி கூறி, சுமார் 3 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு, சாட்சிநாதர் கோயிலின் பின்புறம் உள்ள அய்யனார் கோயில் எனப்படும் பள்ளிப்படை கோயிலுக்கு சென்றேன்.   


      
மீண்டும் பயண கதை


10. திருபுறம்பியம் அய்யனார் கோவில் 


    திருபுறம்பியம் அய்யனார் கோயில் என்றழைக்கப்படுவது இறந்தவர் நினைவாக கட்டப்பட்ட ஒரு பள்ளிப்படை கோவிலாகும். இதுவே நான் எழுத நினைத்த கதையில் முக்கிய பங்கு வகிக்கப் போகும் ஒரு இடமாகும். சாட்சிநாதர் கோயிலின் பின்புறம் உள்ள தோப்பில் அமைந்துள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்திற்கு செல்ல மண்ணியாற்றின் கரையோரமாக சுமார் இரண்டு கிலோமீட்டர் பயணித்து, அழகிய வயல்வெளியின் நடுவே நடந்து செல்ல வேண்டும்.



        பள்ளிப்படை கோயிலை தரிசிக்க வந்த என்னை அங்கிருந்த  வயல்வெளியில், நன்றாக முளைத்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்பயிர்கள், தங்கள் சிரம் தாழ்ந்து என்னை வரவேற்றது போல் தோன்றியது. ஆள் அரவமில்லா ஒரு அமைதியான இடத்தில் ஒரு சோழ மன்னனும், அவருக்கு துணையாய் ஒரு கங்க தேசத்து மன்னனும் உறங்கி கொண்டிருக்கும் அந்நினைவிடத்தில் நானிருந்த சில மணித்துளிகளில் அங்கு நடந்த வரலாற்று சம்பவங்கள் எல்லாம் என் கண்முன் படமாய் ஓடியது. என்னை பொறுத்தவரை அங்கிருக்கும் பயிர்களில் விளைவது வெறும் நெல் அல்ல; சுமார் ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட வீரமே... அந்த மாவீரர்களின் வரலாற்றை நான் எழுதப்போகும் கதையில் தவறாமல் படிக்குமாறு இக்கட்டுரையை படிக்கும் வாசகர்களை பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.        


             
11. சாட்சிநாதர் கோயில்




    யாழ்ப்பாண ஆறுமுக சித்தரையும், வயல்வெளியில் உள்ள அய்யனார் கோயிலையும்  தரிசித்த பின், காவிரியின் வடகரை தலங்களில் ஒன்றான கடும்படு சொல்லியம்மை உடனுறை சாட்சிநாதர் கோயிலை அடைந்தேன். கோயிலின் வெளியே பிரமாண்ட ஐந்து நிலை  ராஜகோபுரத்தின் முன்பு தென் திசையை நோக்கியபடி தென்புர பரமன் என்றழைக்கப்படும் குருபகவான் சன்னிதியும், அவர் பின் சூர்யபுஷ்கரணி எனப்படும் பிரம்மதீர்த்த குளமும் உள்ளது. குளத்தில் நீர் இல்லாததால், குருபகவான் அருளை மட்டும் பெற்றுக்கொண்டு கோயிலில் நுழைந்த எனக்கு அளவில்லா ஆச்சர்யம் காத்திருந்தது.       


   ஆம்! கிளிகளின் ராஜ்ஜியம் என்பது போல் ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான கிளிகளை காணமுடிந்தது எனது அதிர்ஷ்டமே... சுமார் மூன்று ஆள் உயரமுள்ள சுற்று சுவரும், அதன் அருகிலிருந்த பனைமரங்களும், கோவிலின் பிரம்மாண்டத்தை இன்னும் அதிகப்படுத்தி காட்டின. வெளி பிரகாரத்தை வலம் வந்த உடன், உள்ளே நுழைய, அங்கு வலப்புற சன்னிதியில் அருள்பாவித்து கொண்டிருந்தார் இனிமையான பேச்சை வரமாய் தரும் கடும்படு சொல்லியம்மை. அவரை வணங்கியபின் மூலவர் சன்னிதியில் நுழைய அங்கு இடப்புறம் தனி சன்னிதியில் வீற்றிருந்தார் பிரளயம் காத்த விநாயகர். இவரே பிரளயத்தின் போது பொங்கிவந்த ஏழு கடல் நீரை இக்கோயில் வாசல் அருகில் உள்ள ஒரு கிணற்றில் நிரப்பி இவ்வூரை காத்து, பிரளயத்திற்கு புறம்பாய் இருந்த ஊருக்கு திருப்புறம்பியம் என்ற பெயரையும் அளித்தவர். வருண பகவானால் கிளிஞ்சல் மற்றும் கடல் பொருட்களால் செய்யப்பட்ட இவரது திருமேனிக்கு ஆண்டுக்கு ஒருமுறை விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே தேன் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.  அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதையும் அவரின் திருமேனி உறிந்து கொண்டு செம்பவள மேனியாக காட்சி அளிப்பது ஒரு அதிசயமாகும். பழமையான இக்கோயிலில் பல்வேறு சிற்பங்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. தற்போது ஆலயத்தில் உள்ள சில தூண்கள் புதுப்பிக்கபட்டு வருகின்றது.   


        பிரளயம் காத்த விநாயகரை தரிசித்த பின் இறுதியாக மூலவர் சன்னிதிக்கு சென்று அங்கு சுந்தரரால் "நற்றவா நான் உனை மறக்கினும்; சொல்லும் நா நமசிவாயமே" என மனமுருகி வணங்கப்பட்ட சாட்சிநாதரை தரிசிக்கும் பேரு பெற்றேன். ஒரு பெண்ணின் கற்பை காக்க தானே நேரில் வந்து சாட்சி சொன்னதால்  சாட்சி நாதர் என்றழைக்கப்படும் சிவபெருமானை இத்தலத்தில் வழிபட்டது உண்மையிலேயே அவர் எனக்களித்த பேறாகும். மிகவும் மனநிறைவை தந்த அற்புதமான இக்கோவிலின் வரலாற்றை இன்னும் விரிவாக எழுத வேண்டும் என எண்ணம் கொண்டேன். 


          
12. வில்வவனநாத சுவாமி (எ) வில்வவனஸ்வரர் கோவில்

        திருப்புறம்பியம் தந்த மனநிறைவுடன் புறப்பட்டு அருகிலுள்ள  வடகாவேரி என்றழைக்கப்படும் கொள்ளிடதை தரிசிக்க சென்றேன். காவிரியின் கிளைநதியான கொள்ளிடம், அதன் உபரி நீரை வெளியேற்றவே பயன்படுவதால், ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் மணல்வெளியாக காட்சியளித்தது. அங்கு கரையோரம் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு மயில்களை ரசித்த பின், மேடான குறுகிய சாலையில் சுவர் போல் வளர்ந்திருந்த கள்ளிச்  செடிகளின் அருகே பயணம் செய்து  திருவைகாவூரில் உள்ள வளக்கைநாயகி உடனுறை வில்வவனேஸ்வரர் கோயிலை அடைந்தேன். 


           மரண பயம் போக்கும் இக்கோயிலின் எதிரே இருந்த எம தீர்த்ததையும், வாசலில் தனிசன்னிதியில் எழுந்தருளியுள்ள விநாயகரையும் தரிசித்து, உள்ளே நுழைந்த எனக்கு ஆச்சர்யம் அளித்தது வாசலை நோக்கியபடி அமைக்கப்பட்டிருந்த நந்தி. ஆம்! சிவனின் வாகனமான நந்திகேஸ்வரர், இத்தலத்தில் தஞ்சம் புகுந்தவர்களை காக்க, எதிர்வரும் எமனை துரத்தவே வாசலை  நோக்கியபடி வீற்றிருக்கிறார் என இக்கோயிலின் தலபுராணம் கூறுகிறது.       



   முன்னொரு காலத்தில் வனமாய் இருந்த இவ்விடத்தில் துரத்திய புலிக்கு பயந்து ஒரு மரத்தில் ஏறினான் வேடன் ஒருவன். புலி மரத்தடியை விட்டு அகலாததால் அதில் அமர்ந்தபடியே, இரவு முழுவதும் தூங்காமல் இருக்க மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாக பறித்து போட்டு கொண்டிருந்தான். விடிந்த பின்னரே அம்மரம் வில்வமரம் என்றும், அவன் பறித்து போட்ட வில்வ இலைகள் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்ததையும் அறிந்தான். சிவராத்திரியான அன்று தன்னையறியாமலே தனக்கு வில்வ அர்ச்சனை செய்த வேடனுக்கு முத்தி அளித்த இறைவனின் திருவிளையாடல்  காட்சி இங்கு சிறப்பான முறையில் செதுக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டுள்ளது.  
    

            பிரகாரத்தில் இடப்புறம் வல்ரவ விநாயகர் மற்றும் தட்சிணாமூர்த்தி சிலைகள் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. சப்தமாதர்களும், ஆறுமுக பெருமானும் தனித்தனி சன்னிதியில் குடியிருக்கின்றனர் . வலப்புற பிரகாரத்தில் மகாவிஷ்ணு, அர்த்தநாதீஸ்வரர் மற்றும் எருமையின் தலைமேல் இருக்கும் துர்க்கை அம்மன் சிலைகள் உள்ளன. தலத்தின் நாயகியான வளக்கைநாயகி இறைவனின் வலப்புறம் தனி சன்னிதியில் அருள்மழை பொழிகிறார்  



13. ஸ்ரீ வல்வில்ராமன் கோவில் திவ்யதேசம்

      வில்வவனநாத சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு சோளம் பயிரிடப்பட்டிருந்த வயல்வெளி நடுவே இருந்த சாலையில் பயணித்து  அடுத்ததாக நான் சென்றது திருப்புள்ளபூங்குடியில் உள்ள வல்வில்ராமன் கோயிலுக்கு... புள் என்றால் பறவை. பூதம் என்றால் உயிர். பறவையான ஜடாயுவிற்கு மோட்சம் அளித்தபின் ராமபிரான் அவருக்கு இறுதி சடங்கு செய்த தலம் இது என்பதால் திரு + புள்ள + பூதம் + குடி = திருப்புள்ளபூதங்குடி என அழைக்கப்படுகிறது. மூலவர் சன்னிதியில் ராமபிரான் சயன கோலத்தில் இருப்பது தனிசிறப்பாகும். இத்தலத்தின் உற்சவர் வல்வில்ராமன். பிரகாரத்தில் இடப்புறம் தலநாயகி பொற்றாமரையாள், ஸ்ரீ ஹோப்ஜவள்ளி என்ற பெயரிலும் வலப்புறம் ஸ்ரீ உத்தியோக ந்ருஸிம்மர் என்ற யோக ந்ருஸிம்மர் தனி சன்னிதியிலும் எழுந்தருளியுள்ளனர்.


         இக்கோவிலின் விமானம் மிகவும் அற்புதமாக உள்ளது. 96 வகை வைணவ விமானங்களில், இதற்கு சோபன விமானம் என்று பெயர். அற்புதமான விமானத்தை கொண்ட இத்திருத்தலம், திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்றது. வெளிப் பிரகாரத்தில் அழகான நந்தவனம் உள்ளது.



14. இன்னம்பூர் எழுத்தறிநாதர் திருக்கோயில்

        
            இந்திரனின் யானை ஐராவதம் தீர்த்த ஸ்நானம் செய்து சாபம் நீங்கிய, இத்தலத்தில் யானை படுத்திருப்பது போல் அமைக்கப்பட்ட கஜப்ருஷ்ட விமானத்தின் கீழ் சுயம்புலிங்கமாக எழுத்தறிநாதர் எழுந்தருளியுள்ளார். சோழ மன்னனிடம் கணக்கராக பணிபுரிந்த சுதர்மன் என்பவரின் மேல் சுமத்தப்பட்ட பழியை துடைக்க இறைவனே கணக்கராக வந்து தீர்த்ததால், கல்வி தரும் இறைவன் இங்கு எழுத்தறிநாதராக வணங்கப்படுகிறார்.


           சுகுந்த குந்தலாம்பாள் (என்கிற பூக்கொம்பு நாயகி) மற்றும் நித்ய கல்யாணி என இரு பெயர்களில் இரு தனித்தனி சன்னிதிகளில் அம்பாள் குடிகொண்டுள்ள இக்கோயிலில்  வருடத்தின் ஆறு நாட்கள் (ஆவணி 31, புரட்டாசி 1,2, பங்குனி 13, 14,15)  சூரிய ஒளி இறைவனின் மேல் நேராகப் விழுவது தனிசிறப்பாகும். நெல் பரப்பி அதில் குழந்தைகளை எழுத பழக உதவுகிறார் எழுத்தறிநாதர்.



15. ராமஸ்வாமி கோவில்


        திட்டமிட்ட அனைத்து கோயில்களை தரிசித்து, திட்டமிடாத பல அனுபவங்களை பெற்ற பின் மீண்டும் குடந்தயை அடைந்து எனது பயணத்தை நிறைவு செய்ய எண்ணிய நான், என்னையறியாமல் தானாகவே நுழைந்தது தென் அயோத்தி என்று அழைக்கப்படும் ராமஸ்வாமி கோயிலில்... ஆம்! எனது பயண திட்டத்தில் இல்லாத இக்கோயிலில் இருந்த ஏதோ ஒரு ஈர்ப்பு என்னை தானாகவே உள்ளே அழைத்துச் சென்று அற்புத அனுபவத்தை அள்ளித் தந்தது. நான் சென்ற நேரத்தி உள்ளே பக்தி பிரசங்கம் ஒன்று நடந்து கொண்டு இருந்ததால் கோயிலில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.

            மூலவர் சன்னிதியில் சக்கரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்யப்பட்ட ஸ்ரீராமர், சக்கரவர்த்தினி சீதா பிராட்டி மட்டுமின்றி லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்கனன் ஆகிய அனைவருடனும் சபையில் இருப்பது தனிசிறப்பாகும். பகவானின் எதிரே ஆஞ்சநேயர் கையில் வீணையுடன் ராமாயணத்தை பாராயணம் செய்யும் காட்சி உண்மையிலேயே அற்புதமாக இருந்தது. கோவிலின் சுற்றுசுவரில் முழு ராமாயணமும் 218 ஓவியங்களால் அழகாக வரையப்பட்டிருந்து நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இது தவிர ஒரு கண்ணாடி அறையில் வரையப்பட்ட அருமையான நவீன தஞ்சாவூர் ஓவியமும் எனது கண்ணைப் பறித்தது. எனது பயணத்தை சிறப்பாக முடிக்கும் மனநிறைவை தந்த திருத்தலம்.



முடிவுரை

           இறைவன் அளித்த சிறப்பான அனுபங்களுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் கும்பகோணம் டிகிரி காபியை குடித்து, வாடகைக்கு எடுத்திருந்த இருசக்கர வாகனத்தை திரும்ப ஒப்படைத்து விட்டு பயணத்தை சிறப்பாக முடித்து, மீண்டும் ரயிலேறி சென்னைக்கு புறப்பட்டேன்...
அற்புதமான அனுபவங்களை அள்ளித் தந்த குடந்தையின் நினைவுகளோடு...


மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்...



மேலும் சில புகைப்படங்கள்



காவிரி நதி 



மண்ணியாறு (காவிரியின் கிளை நதி)


மண்ணியாறு (காவிரியின் கிளை நதி)



நெற்பயிர்கள் 



திருப்புறம்பியம் பள்ளிப்படை அய்யனார் கோயில் 



விளைந்து கிடக்கும் நெல்மணிகள்

 

விளைந்து கிடக்கும் நெல்மணிகள்



வயல்வெளி 



சாட்சிநாதர் கோயில்
 


சாட்சிநாதர் கோயில் சூர்யபுஷ்கரணி (எ) பிரம்ம தீர்த்தம்   



ஏழுகடல் கிணறு 



சாட்சிநாதர் கோயில் உள்ளே

 

சாட்சிநாதர் கோயில் பிரகாரம் 



சாட்சிநாதர் கோயில் உள்ளே



சாட்சிநாதர் கோயில் உள்ளே



சாட்சிநாதர் கோயில் உள்ளே



சாட்சிநாதர் கோயில் உள்ளே



வறண்டு கிடைக்கும்  கொள்ளிடம் 


 
வறண்டு கிடைக்கும்  கொள்ளிடம்



கொள்ளிட கரையில் 



கொள்ளிட கரை சாலை 



இன்னம்பூர் வில்வநாத சுவாமி கோயில் 



வில்வநாத சுவாமி கோயில் எம தீர்த்தம் 



விளைந்து கிடக்கும் சோளக்காடு 



விளைந்து கிடக்கும் சோளக்காடு



அழகிய மலரொன்று (வல்வில் ராமன் கோயில்) 



வல்வில் ராமன் கோயில் விமானம் 



எழுத்தறிநாதர் கோயில் கோபுரம் 

 

எழுத்தறிநாதர் கோயில் உள்ளே



பயண தோழன் பல்சருடன்



கும்பகோணம் டிகிரி காஃபி 




பிற பதிவுகளை படிக்க...


Comments