பயணங்கள் எப்போதுமே உற்சாகத்தை அளித்தாலும், குறிப்பிட்ட காரணம் அல்லது நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் போது அந்த உற்சாகம் பலமடங்காக அதிகரிக்கிறது. எனது குடந்தை பயணமும் அப்படியே...
புறப்பட்ட கதை
ஏற்கனவே சில கதைகளையும், கட்டுரைகளையும், பயண அனுபவங்களையும் எழுதிய எனது அடுத்தகட்ட நடவடிக்கையாக, ஒரு சிறுநாவல் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அதன் முன்னோட்டமாக சரித்திரமும், ஆன்மிகமும் நிறைந்த சில இடங்களை தேடி கோயில் நகரமான குடந்தையை நோக்கி ஒரு வெள்ளிக்கிழமை இரவு, சென்னை தாம்பரத்தில் இருந்து உழவன் விரைவுவண்டி மூலம் புறப்பட திட்டமிட்டேன்.
பொதுவாக இரவு நேரத்திலும் வெப்பக் காற்றை வீசும் சென்னை, கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக குளிர்காற்றுடன் என்னை வழியனுப்பி வைத்தது. அந்த குளிர்காற்றை ரசித்தபடியே, எனக்கான ரயிலுக்கு காத்திருந்த சிறு இடைவெளியில் இரண்டு ரயில்கள் என்னை கடந்து சென்றன. அந்த ரயில்களையும், அதிலிருந்த பெட்டிகளையும், அவற்றில் பயணம் செய்த நூற்றுக்கணக்கான பயணிகளையும் காண்கையில், அவர்களுக்கும் என்னைப் போலவே எத்தனை எத்தனை கதைகளும், காரணங்களும் இருக்கக்கூடும் என்றெல்லாம் மனது சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென பெய்த சாரல் மழை எனது சிந்தனையை கலைத்தது.
குளிர்காற்றுடன் இணைந்த சாரல் மழை, கதை தேடி பயணம் புறப்பட்ட என்னை கவிதை பாடி அனுப்பி வைத்தது போல் தோன்றியது. அம்மழையை ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்த அற்புதமான வேளையில், சரியான நேரத்தில் எதிர்வந்தது எனக்கான ரயில்வண்டி. அது வான் மழையை ரசித்துக் கொண்டிருந்த என்னை ஆன்மிக மழையில் நனைக்க கும்பகோணத்திற்கு அழைத்து செல்ல வந்தது. ரயிலின் மேலடுக்கு படுக்கையில் (upper berth) சில மணி நேர உறக்கத்திற்கு பின், அதிகாலை ஐந்து மணியளவில் கோவில் நகரமான குடந்தையை அடைந்தேன். ரயில் நிலைய வளாகத்திலேயே குளித்து முடித்து, தேனீர் பருகிய பின் இலக்கை நோக்கிய எனது பயணம் துவங்கியது...
கும்பகோணத்தின் கதை
முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டு இவ்வுலகமே மூழ்கியபோது, உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் உருவாக்கும் அமுதத்தை ஒரு குடத்தில் அடைத்த இறைவன், இவ்விடத்தில் அக்குடத்தை உடைத்ததால் கும்பம் (குடம்) + கோணம் (உருகுலைந்தது) என பொருள் தரும் வண்ணம் கும்பகோணம் என்ற பெயர்பெற்ற குடந்தையில் எண்ணிலடங்கா கோவில்கள் உள்ளன. பார்க்கும் அனைத்து திசைகளிலும் பல கோபுரங்கள் கண்களுக்கு புலப்படும் குடந்தையில் நால்வரால் பாடல் பெற்ற பல சிவாலயங்களும், ஆழ்வார்களால் பிரபந்தம் பெற்ற பல திவ்யதேசங்களும், நகரை சுற்றி நவக்கிரக கோவில்களும் உள்ளன. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு போர்களை கடந்து கம்பீரமாய் எழுந்து நிற்கும் அந்நகரின் நடுவே பொன்னி என்றழைக்கப்படும் காவிரி ஆறு உற்சாகமாக பாய்கிறது. அப்புண்ணிய நதியின் இருபுறமும் உள்ள பல கோவில்களில், வடக்கே உள்ள கோவில்கள் வடகரை தலங்கள் என்றும், தெற்கே உள்ள கோவில்கள் தென்கரை தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. முதலில் தென்கரை தலங்களை தரிசித்து அதன் பின் வடகரை தலங்களுக்கு செல்வதே எனது திட்டமாக இருந்தது.
பயணக் கதை
1. மகாமக குளம்
கும்பகோணத்தில் உள்ள அனைத்து இடங்களையும் பார்க்கவே ஒரு தனிப்பிறவி எடுக்கவேண்டும் என்பதால் தேர்ந்தேடுத்த சில இடங்களை மட்டும் தரிசிக்கும் எண்ணம் கொண்டு முதலில் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் புண்ணிய மகாமக குளத்தை நோக்கி நடக்க ஆரம்பிதேன்.
மகாமக திருக்குளத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கிலும், மாதந்தோறும் மக நட்சத்திர தினத்தன்று ஆயிரக்கணக்கிலும், ஆண்டுதோறும் மாசிமகத்தன்று பல்லாயிரக்கணக்கிலும், பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமக தினத்தன்று பல லட்சக்கணக்கிலும் பக்தர்கள் நீராடுவது வழக்கமாகும். பிரளயத்தின் பின் உடைந்த அமுத குடத்தில் இருந்த அமிர்தம் தேங்கிய இடமான திருக்குளத்தை சுற்றி 16 மண்டபங்களில், பல பெயர்களில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அக்கோவில்கள் அனைத்தும் கும்பகோணத்தை சுற்றி பல தலங்களில் உள்ள சிவாலயங்களின் பிரதிபலிப்பாகும். எனவே மகாமக குளத்தை சுற்றிவருவது என்பது பல்வேறு கோயில்களை ஒரே நேரத்தில் தரிசித்த அனுபவித்தை தரும் என்ற நம்பிக்கையில் அக்குளத்தை முதலில் வலம் வந்து எனது பயணத்தை சிறப்பாக துவக்கினேன்.
முகுந்தேஸ்வரர், தானேஸ்வரர், இடபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், தினேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாமகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்கேஸ்வரர், முக்தேஸ்வரர், சேஷத்திர பாலேஸ்வரர், பிரம்மதீர்த்தேஸ்வரர் அனைவரையும் வலம்வந்த பின் பிரம்மதீர்த்தம் என்றழைக்கப்படும் அமுத குளத்தில் நுழைந்து தீர்த்தத்தை ஸ்பரிசம் செய்தது இறைவன் எனக்களித்த தனி அனுபவமாக இருந்தது.
2. காசி விஸ்வநாதர் கோயில்
புண்ணிய மகாமக குளத்தை வலம் வந்த பின், குளத்தின் அருகில் இருந்த அரசமரத்தடி விநாயகர் மற்றும் எலந்தமரத்தடி விநாயகர்களை தரிசித்த பின் குளத்தின் எதிரே இருந்த தீர்த்த மண்டபத்தின் அருகிலுள்ள திருக்கோயிலில் குடியிருக்கும் அருள்மிகு காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மனை தரிசிக்கும் நோக்குடன் அக்கோயிலில் நுழைந்தேன். இறைவனும் நானும் மட்டுமே இருந்த அமைதியான சன்னிதியில் எனது பயணம் சிறக்க வேண்டிக்கொண்டேன். மூலவரை தரிசித்த பின் உட்பிரகாரத்தில் இருந்த நவ கன்னிகைகளையும், பிற சன்னிதிகளையும் தரிசித்த பின் வெளி பிரகாரத்தை சுற்றி வர, அங்கு தோட்டத்தில் குடியிருந்த, ராமபிரானால் வழிபடப்பட்ட ஷேத்திர மகாலிங்கத்தை தரிசிக்கும் பேறு பெற்றேன்.
காவேரி கரையில் உள்ள குடந்தையில், கங்கை கரையில் உள்ள காசி விஸ்வநாதரின் அருளை பெற்றபின் தொலைதூரத்தில் உள்ள கோவில்களை தரிசிக்கும் நோக்குடன் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த இருசக்கர வாகனத்தை பெற்று கொண்டு எனது பயணத்தை தொடர்ந்தேன். முதலில் கும்பகோணத்தின் தென் திசையில் உள்ள குடவாசலை நோக்கி எனது இரும்புக்குதிரையை (Bajaj Pulsar) செலுத்தினேன்.
3. குடவாசல் கோணேஸ்வரர் கோயில்
கும்பகோணத்தில் இருந்து தெற்கு திசையில் அதிக வளைவுகள் கொண்ட பாதையில், வழியில் குறுக்கிட்ட காவேரியின் கிளைநதிகளையும், சாலையோரம் இருந்த வயல்வெளிகளையும், பிற கோவில்களையும் கடந்து, சுமார் 19 கிலோமீட்டர் தூரம் பயணித்து குடவாயில் என்றழைக்கப்படும் குடவாசலில் குடியிருக்கும் கோணேஸ்வரர் கோவிலை அடைந்தேன். பிரளயத்தின் பின் உடைக்கப்பட்ட அமுத குடத்தின் வாய் பகுதி விழுந்த இடம் என்பதால் குடம் + வாயில் = குடவாசல் (குடவாயில்) என்றழைக்கப்படும் ஊரில் உள்ள கோணேஸ்வரர் ஆலயம் முற்கால சோழ மன்னரான கோசெங்காணான் கட்டிய ஒரு மாடக்கோவில் என்பது அங்கு சென்ற பின்பே தெரிந்தது.
மூன்று பிரகாரம் கொண்ட பழமை மாறா இத்திருக்கோவிலில் உள் பிரகாரத்தில் உள்ள மாடியின் மீது எம்பெருமான், கோணேஸ்வரராக குடியிருக்கிறார். யாருமில்லா கோவிலில் இறைவனுடன் நானிருந்த சில நிமிடங்கள் முற்பிறவியில் நான் செய்த தவத்தின் பலனே என எண்ணும் அளவிற்கு அற்புதமான தரிசனம் பெற்றேன். இரண்டாம் பிரகாரத்தில் குடவாயிற் குமரனையும், காய்த்து குலுங்கிய பலா மரத்தையும் வணங்கி, பிறகு தென்னை மரங்கள் சூழ அமையப்பெற்ற மூன்றாம் (வெளி) பிரகாரத்தை வலம்வந்து ஆனந்தமடைந்தேன். கோவில் எதிரே உள்ள தீர்த்தக்குளம் நீரில்லாமல் வற்றி இருந்தது மனதிற்கு சங்கடமாய் இருந்தது. தீர்த்தக்குளத்தின் முன்பு, கோவிலை நோக்கியவாறு ஆனைமுக கடவுள் குடியிருக்கிறார். தற்போது கோவிலின் வாயில் அருகே ஒரு கொட்டகை அமைக்கப்பட்டு மரவேலை திருப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
4. சாரநாத பெருமாள் கோயில் திவ்யதேசம்
கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சாலை ஓரம் அமைத்திருந்த ஒரு பெரிய குளத்தையும் அதன் பின் இருந்த பிரம்மாண்ட கோபுரத்தையும் கண்டதும், அக்கோவில் எனது பயணத் திட்டத்தில் இல்லாவிட்டாலும் கூட அதனுள் செல்ல ஆர்வம் கொண்டு, குடவாசலில் இருந்து திரும்பும் வழியில் அக்கோயிலுக்குள் நுழைந்தேன். அங்கு சென்ற பின்பே அக்கோயிலில் இறைவன் எனக்களித்த ஆச்சர்யம் தெரிந்தது.
ஆம்! நான் நுழைந்தது 108 வைணவத் தலங்களுள் ஒன்றான திருசேறை சாரநாத பெருமாள் கோயில். சாரம் என்பதற்கு வளமை என பொருள். வளமையான காவேரி பாயும் மண்ணில் அமைந்துள்ள இத்தலத்தில் மண்ணெடுத்தே பிரளயத்தின் போது அமுத குடம் செய்யப்பட்டது என தலபுராணம் கூறுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீமகாலட்சுமி, சாரநாயகி, ஸ்ரீநீலாதேவி ஐந்து தேவிகளுடன் காட்சியளிக்கும் பெருமாளின் அருகே இத்தலத்தில் முக்தி அடைந்த மார்க்கண்டேய மகரிஷி ஒருபுறமும், அவர் பாதம் பணிந்து, கங்கையை போல் தானும் பெருமை பெற்ற காவேரி தாயார் ஒருபுறமும் வீற்றிருக்கின்றனர். காவேரி தாயாரை தெளிவாக பார்க்கும் வண்ணம் கருவறை எதிரே ஒரு கண்ணாடியும் வைக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை நாயக்க மன்னன் அழகிய மனவாளன், மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவிலுக்கு திருப்பணி செய்ய கற்களை அனுப்ப, அதிலிருந்து நரச பூபாலன் என்பவன் வண்டிக்கு ஒரு கல் வீதம் திருடி இங்கு கோயில் கட்ட முயன்றான். விசாரிக்க வந்த மன்னனுக்கு இறைவன் இங்கு ராஜகோபாலராகவே காட்சி அளித்த வரலாறு கொண்ட இத்தலத்தில் சமீபத்தில் திருப்பணி முடிந்து கோயில் மிகவும் நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது.
5. திருநாரையூர் நாச்சியார் கோயில் திவ்யதேசம்
அழகான ஆறுகளை கடந்து, நிழல் தரும் சாலையில் பயணித்து அடுத்து நான் அடைந்தது நாச்சியார் கோவிலை... புகழ்பெற்ற கல் கருடன் குடியிருக்கும் இத்திருக்கோவிலில் ஸ்ரீ வஞ்சுளவல்லி தயார் சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் அருள்பாவிக்கிறார். நான் செல்லும்போது இங்கு காலசந்தி பூஜை நடந்து கொண்டிருந்ததால் சற்று நேரம் கருட பகவான் சன்னிதியில் இருந்து அவரின் அழகை தரிசிக்க முடிந்தது. மேலும் ஸ்வாதி நட்சத்திரத்தை முன்னிட்டு கருட பகவானுக்கு தைல காப்பு பூசப்பட்டிருந்தது.
"தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை நான் சென்று திருநறையூரில் கண்டேனே" என பாடிய திருமங்கை ஆழ்வாருக்கு இறைவனே ஆச்சரியராக இருந்து முத்திராதானம் செய்த இக்கோவிலை கட்டியவர் சைவ சமயத்தை சார்ந்த சோழ மன்னர் கோசெங்காணான் என்பது சிறப்பு செய்தி. தீவிர சிவபக்தரான அவர் 70 மாடக்கோவில்களை ஈசனுக்கு கட்டிய பின் 71வது கோவிலை, ஸ்ரீ சீனிவாச பெருமாளின் ஆணைப்படி வைணவத் திருத்தலமாக கட்டியதாக தல வரலாறு கூறுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அற்புதமான திருத்தலம். இதன் திருக்குளம் முழுவதும் நீர்நிரம்பி காட்சியளித்து மனதிற்கு நிறைவை தந்தது.
6. சொர்ணபுரீஸ்வரர் கோயில் (எ) படிக்காசுநாதர் கோயில்
காவேரியின் கிளை நதியான அரசலாற்றின் கரையில் உள்ள அழகாபுத்தூரில் குடந்தை - குடவாசல் சாலையின் ஒரு திருப்பத்தில் அழகிய வயல்வெளியின் நடுவே செல்லும் பாதையில் படிக்காசுநாதர் கோயில் எனப்படும் சொர்ணபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்துணை நாயனாருக்கு தனி சன்னதி கோயிலின் வாசலிலேயே அமைந்துள்ளது. இத்தலத்தின் தாயார் பெயர் சௌந்தரநாயகி என்கிற அழகம்மை, பெயருக்கேற்ற வண்ணம் அழகோவியமாக காட்சியளித்தார். கருவறையின் இடப்புறம் புகழ்துணை நாயனார் மற்றும் லஷ்மி, மாணிக்கவாசகர், சம்பந்தர், அப்பர், சுந்தரர் - பரவை நாச்சியார் சிலைகள் உள்ளன. மூலவரின் பின்புறம் லிங்கோத்பவரின் சிலை அருமையாக செதுக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் உலகில் எங்கும் இல்லாத அதிசயமாக கல்யாண சுந்தர சண்முக சுப்பிரமணிய சுவாமியாக எழுந்தருளிய முருகப் பெருமான், தனது மாமனான திருமாலிடம் இருந்து பெற்ற சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். இது பூர்வ ஜென்ம கர்ம பாவதோஷ நிவர்த்தி ஸ்தலம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருந்தது எனது பாக்கியமே... நான் சென்ற போது இங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பின்பு தவிட்டுக்கு குழந்தையை தத்துக் கொடுக்கும் ஒரு நிகழ்வும் நடந்தது. எனது கதைக்காக நான் தேடிச் சென்ற பயணத்தில் முக்கிய தலமான இதன் வரலாற்றை எனது நாவலில் நிச்சயம் எழுத வேண்டும் என எண்ணும் வகையில் அற்புதமான அனுபவங்களை அள்ளித் தந்த திருத்தலம் இது.
7. அமிர்தகலசநாதர் கோயில்
"கமலங்கள் முகம்மலரும் கலயநல்லூர் காணே" என சுந்தரரால் பாடப்பெற்ற புகழ்பெற்ற திருக்கலயநல்லூர் என்றழைக்கப்படும் சாக்கோட்டையில் உள்ள அமிர்தகலசநாதர் கோயிலே இப்பயணத்தில் எனது அடுத்த இலக்காகும். கும்பகோணத்தின் தெற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள காவேரியின் தென்கரை ஆலயங்களுள் ஒன்றான இக்கோயில், பிரதான சாலையில் இருந்து வெறும் 200 மீட்டர் தூரத்தில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது. கோயிலில் நுழையும்போதே இருபுறமும் உள்ள அமிர்தவல்லி அம்பாள் நந்தவனம் அழகிய மலர்களுடன் என்னை வரவேற்றது. பக்தர்கள் பெரும்பாலும் யாருமில்லா கோயிலில் எக்கசக்கமான புறாக்கள் குடியிருக்கின்றன.
பிரளயத்தின் பின்பு உலகை உய்விக்க இறைவனால் உடைக்கப்பட்ட அமிர்த கலசத்தின் மைய பகுதி விழுந்ததால் கலயம் எனப்பொருள்படும் வண்ணம் திருக்கலயநல்லூர் என அழைக்கப்படும் இத்தலத்தில் முன்னொரு காலத்தில் ஒரு கோட்டைக்குள் இக்கோவில் அமைந்திருந்ததால், கோட்டை சிவன் கோவில் என்றே இன்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது . அதுமட்டுமில்லாமல் இப்பகுதியில் சாக்கியர்கள் (பௌத்தர்கள்) அதிகம் வசித்து வந்ததால், சாக்கியர் கோட்டை என பொருள்படும் வண்ணம் சாக்கோட்டை என தற்காலத்தில் இவ்வூர் பெயர் பெற்றுள்ளது. இத்தலத்தின் அமிர்தவல்லி தாயார் இங்கு ஊசிமுனையில் தவமிருந்து இறைவனை அடைந்ததால் தபஸ் அம்மனாகவும் வெளிப்பிரகாரத்தில் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தின் விருட்சமாக வன்னிமரம் உள்ளது. அமைதியான அனுபவத்தை அளித்த திருத்தலம்.
8. ஆதி கும்பேஸ்வரர் கோயில்
காலையில் ஆரம்பித்த எனது இந்த பயணத்தில் குடந்தையின் தென்புறம் உள்ள இடங்களுக்கு சென்ற பின் நாளின் முதல் பாதியை சிறப்பாக முடிக்க எண்ணி, நகரின் மையப் பகுதியில் எழுந்தருளியுள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு சென்றேன். மிகப்பெரிய கோயிலான இதுவே பிரளயத்தின் பின் உடைக்கப்பட்ட அமுத குடத்தின் அடிபாகம் விழுந்த இடமாகும். இறைவனுக்கு பின்னால் உள்ள பிரகாரத்தில் வலஞ்சுழி விநாயகர் காட்சியளிக்கிறார். மூலவருக்கு இடப்புறம் தலத்தின் நாயகி மங்களாம்பிகை தனி சன்னிதியில் அருள் பாவிக்கிறார். மேலும் சிறப்பு அம்சமாக நிறைந்த அமுதகுடத்தை அம்பெய்தி உடைத்த ஈஸ்வரன், ஸ்ரீ வேடமூர்த்தியாக தனி சன்னிதியில் குடியிருக்கிறார். இவர் இங்கு கிராதமூர்த்தி என்ற சிறப்பு பெயராலும் அழைக்கப்படுகிறார்.
இறைவனை தரிசித்த பின் சன்னிதியின் வெளியே இருந்த குடந்தையின் வரலாற்று ஓவியங்களை கண்டுகளித்து, கோவிலுக்கு வரும் பக்தர்களை ஆசிர்வதித்து கொண்டிருந்த, தலத்தின் இறைவியின் பெயரையே தன் பெயராக கொண்ட மங்களம் என்ற யானையிடம் ஆசிர்வாதம் பெற்று, எனது முதல் பாதி பயணத்தை சிறப்பாக்க முடித்துகொண்டேன். அடுத்த பாதி பயணத்தில் இறைவன் எனக்காக எடுத்து வைத்திருக்கும் பொக்கிஷங்களை அறியாமல்...
தொடரும்...
மேலும் சில புகைப்படங்கள்
மகாமக குளம்
காசி விஸ்வநாதர் கோயில்
குடவாசல் கோணேஸ்வரர் கோயில்
குடவாசல் கோணேஸ்வரர் மாடக் கோயில்
குடவாசல் கோணேஸ்வரர் கோபுர தரிசனம்
குடவாசல் கோணேஸ்வரர் கோயில் பிரகாரம்
குடவாசல் கோணேஸ்வரர் கோயில் உள்ளே
குடவாசல் கோணேஸ்வரர் கோயில் திருக்குளம்
சாரநாத பெருமாள் கோயில் கோபுரம்
சாரநாத பெருமாள் கோயில் கோபுர தரிசனம்
சாரநாத பெருமாள் கோயில் பிரகாரம்
குடந்தை - குடவாசல் சாலை
திருநாரையூர் நாச்சியார் கோயில் கோபுரம்
திருநாரையூர் நாச்சியார் கோயில் திருக்குளம்
சொர்ணபுரீஸ்வரர் கோயில் நுழைவாயில்
சொர்ணபுரீஸ்வரர் கோயில் பாதை
சொர்ணபுரீஸ்வரர் கோயில் உள்ளே
சொர்ணபுரீஸ்வரர் கோயில்
சொர்ணபுரீஸ்வரர் கோயில் உள்ளே
சொர்ணபுரீஸ்வரர் கோயில் உள்ளே
சொர்ணபுரீஸ்வரர் கோயில் உள்ளே
சொர்ணபுரீஸ்வரர் கோயில் லிங்கோத்பவர்
அமிர்தகலசநாதர் கோயில்
அமிர்தகலசநாதர் கோயில்
அமிர்தகலசநாதர் கோயில் பிரகாரம்
ஆதி கும்பேஸ்வரர் கோயில்
ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை
Comments
Post a Comment