மலைகளின் உச்சியில் அமையப் பெற்ற இறைவனின் திருக்கோவில்கள் பல உண்டு. ஆனால் இறைவனே இயற்கை வடிவில் குடிக் கொண்டிருக்கும் ஒரு மலையே பெருமாள்மலை. புறநானூற்று குறிப்புகளில் காணப்படும் இப்புராதனமான பெருமாள்மலை, கொடைக்கானல் மலைத் தொடரில் அமைந்துள்ள உயரமான ஒரு சிகரம். இம்மலையில் உள்ள அருள்மிகு லஷ்மண பெருமாள் ஆலயத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ திருவிழாவும் அதன் இறுதி நாளான்று தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. அன்று ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மலையேறி காட்டுக்குள் சென்று அங்குள்ள புனித தீர்த்தத்தை எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து விழாவை சிறப்பாக முடித்து வைக்கின்றனர். அத்தகைய புனித பயணத்தில் பங்கு பெற இறைவனின் அருளால் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.
இயற்கையின் மடியில் இன்பமாய் இருந்த அந்த பொன்னான தருணத்தின் நினைவுகளின் தொகுப்பே இப்பதிவு...
பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான தீர்த்தவாரி திருவிழா பெருமாள்மலையில் உள்ள அருள்மிகு லஷ்மண பெருமாள் ஆலயத்தில் இருந்து காலை 8 மணிக்கு சரியாக புறப்பட்டது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இறைவனை வழிபட்டு, பயபக்தியுடனும், மேளதாளத்துடனும் தங்கள் புனித பயணத்தை தொடங்கினர். கோவிலில் இருந்து வெளியே வந்தபின் பிரதான சாலையை கடந்து, எதிரே தெரிந்த குறுகிய மேடான மலைச்சாலையில் தங்கள் தீர்த்த யாத்திரையை ஆரம்பித்தனர். அப்போது ஈரப்பதம் நிறைந்த கொடைக்கானல் பகுதியில், சாலை ஓரங்களில் உள்ள சுவர்களில் படர்ந்திருந்த கொடிகளில் மலர்ந்திருந்த அழகிய மலர்கள், காற்றில் அசைந்து பக்தர்களை வரவேற்றன.
சிறிது நேர நடை பயணத்திற்கு பிறகு பக்தர்கள் கூட்டம் சாலையின் முடிவிலிருந்த ஒரு தனியார் தோட்ட பகுதியில் நுழைந்து சென்றது. தோட்டத்தின் நடுவே இருந்த ஒத்தையடி பாதையில், இடதுபுறம் பள்ளத்தில் பாயும் நீர்நிலையின் ஓசையை செவியோரம் ரசித்துக்கொண்டே, வழியில் குறுக்கிட்ட ஓடைகளைக் கடந்து, பாதையோரம் காணப்பட்ட சிற்சில மலர்களின் அழகிய தோற்றங்களில் மனதை இழந்து கொண்டே பயணத்தை தொடர்ந்தோம்.
தனியார் தோட்டத்தை கடந்ததும், ஒரு சிறிய சுவற்றை தாண்டி குதித்த பின்னர் எதிரே தெரிந்த மலைச்சாலையை கண்டபோதுதான், நாங்கள் வந்த பாதை ஒரு சுலபமான குறுக்கு வழி (Short cut) என்று அறிந்தோம். அச்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திலிருந்து எங்கள் மதிய உணவை பெற்றுக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.
மலைச்சாலை
காட்டுக்குள் செல்லும் சாலையில், வழியில் முளைத்திருந்த செடிகளும், விழுந்து கிடந்த மரங்களும் அச்சாலையில் வழக்கமான போக்குவரத்து ஏதும் இருக்காது என்பதை நமக்கு எடுத்துரைத்தது. முன்னால் செல்லும் பக்தர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாத போதும், பாதை தெளிவாக இருந்ததால் எங்கள் பயணத்தை தொடர முடிந்தது.
உண்ணி பூக்கள்
முதலில் நேராக சென்ற சாலை, சிறிது நேரத்தில் இடப்புறம் வளைந்து, அதன்பின் வலப்புறம் திரும்பி எங்களை ஒரு மலை முகட்டை நோக்கி அழைத்துச் சென்றது. அங்கு சாலையோரங்களில் உள்ள செடிகளில் பல வண்ண உண்ணி பூக்கள் பூத்துக் குலுங்கின. அப்பூக்களை கண்டு மகிழ்ந்த வண்ணத்துப்பூச்சிகள் அவற்றைச் சுற்றி சுற்றி பறந்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தன.
பிறகு சாலைவழி முடிந்ததும், ஓங்கி உயர்ந்த ஒரு மலை முகட்டை அடைந்தோம். அப்போது மலைமுகடு முழுவதும் பனி சூழ்ந்து காலநிலை முழுவதும் மாறி ரம்யமான ஒரு சீதோஷண நிலையை தோற்றுவித்தது. அம்மலை முகட்டில் இருந்த உயர் கோபுரத்தில் (watching tower) ஏறி அங்கிருந்து வேடிக்கை பார்த்து சிறிது நேரம் மனம் மகிழ்ந்து பயணத்தைத் தொடர்ந்தோம்.
தொடர்ந்து சென்று மலைமுகடுக்கு பின்புறம் இறங்கி செல்லும் பாதையில், பனி சூழ்ந்த உயர்ந்த மரங்கள் நடுவே பலவித வித்தியாசமான பூக்களை கண்டு ரசித்துக்கொண்டே இறங்கி, குடை சாய்ந்து விழுந்து கிடந்த மரங்களை தாண்டி பின் மற்றுமொரு சிகரத்தில் ஏறி அதன் உச்சியை அடைந்தோம். அங்கு வெட்டவெளியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இறைவனின் திருவுருவத்திற்கு பக்தர்களில் சிலர் பாலாபிஷேகம் செய்தனர். அவ்வுருவத்தையும், அங்கிருந்த திரிசூலத்தையும் வணங்கிய பின், அச்சிகரத்தின் பின்புறம் இறங்கினோம்.
இறுதியாக மதிய வேளையில், எல்லா புறமும் மலைச் சிகரங்களும், பள்ளங்களும் சூழ்ந்த காட்டில், அற்புத அமைவிடத்தில் சுயம்புவாய் உருவாகும் புனித பெருமாள்மலை தீர்த்தத்தை அடைந்தோம்.
தீர்த்தத்தை அடைந்ததும், அங்கேயே சிறிது நேரம் ஓய்வெடுத்து நாங்கள் கொண்டுவந்த மதிய உணவை உண்ண ஆரம்பித்தோம். அக்கறையாக சமைக்கப்பட்டு, அன்புடன் வழங்கப்பட்ட காய்கறி சாதமும், மூக்கடலை பொரியலும் அமிர்தமாய் உள்ளிறங்கியது. வயிறார உண்டபின் அருகிலுள்ள இடங்களில் உலாவ ஆரம்பித்தோம். அப்போது அங்கே உயர்ந்த மலைச் சிகரங்களின் மட்டுமே காணக்கூடிய ஒருவித மஞ்சள் மலர்களை கண்டோம். அதிலும் குறிப்பாக ஒரு மலரின் மகரந்தம் மயில் போல் காட்சியளித்து என் கண்களை கவர்ந்தது.
நாங்கள் ஓய்வெடுத்து உலாவிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், பெருமாள்மலை பக்தர்களோ; உணவு கூட உண்ணாமல், தங்கள் வாய் மற்றும் நாசிகளை துணிகளால் கட்டிய பின் தாங்கள் கொண்டு வந்திருந்த குடங்களில் புனித தீர்த்தத்தை அள்ளி, அவற்றை பாதுகாப்பாய் மூடி அங்கிருந்த இறை உருவத்தின் முன் பூஜைக்கு வைத்தனர். தனது சிறு மூச்சுக்காற்று கூட இறைவனின் தீர்த்தத்தை அசுத்தப்படுத்தி விடக்கூடாது என்ற அவர்களின் அக்கறை மனதிற்கு நெகிழ்வாய் இருந்தது.
தீர்த்தக் குடங்கள் அனைத்தும் இறைவனின் முன் அடுக்கி வைத்த அடுத்த நொடியில் இதற்காகவே காத்திருந்தது போல் மழைத்துளிகள் விண்ணிலிருந்து மண்ணில் விழுந்தன. இக்காட்சி பக்தர்களின் இச்செயலால் இறைவனின் மனம் குளிர்ந்து ஆனந்தத்தை மழையாய் பொழிந்தது போல் தோன்றியது.
பூஜை முடிந்ததும் பக்தர்கள் தீர்த்த குடங்களை தங்கள் தலையில் ஏந்தி அங்கிருந்து புறப்பட்டனர். நாமும் அவர்களுடன் புறப்பட்ட அந்நேரத்தில் மலையெங்கும் பனி சூழ்ந்து அருகில் உள்ளோரை கூட காண முடியாத காலநிலை உண்டானது. இருப்பினும் நேரம் ஆகிவிட்ட காரணத்தினால் பக்தர்களும், அவர்களைத் தொடர்ந்து நாமும் அப்பகுதியிலிருந்து பிரியாவிடை பெற்று புறப்பட்ட போது, முதலில் சிறு துளிகளாக தோன்றிய தூறல் மழை துளிகள், பெரும் துளிகளாக உருமாற்றம் அடைந்து பெருமழையாக பொழிந்தது.
மழை நேரத்தில், மலையோரத்தில் இறங்குவது நமக்கு சவாலான பணியாக இருந்தது. ஆம்! பாதையில் பலமுறை வழுக்கி விழ நேரிட்டது. ஆனால் பெருமாள்மலை பக்தர்களோ, அம்மழையை சிறிதும் பொருட்படுத்தாமல், தடுமாற்றம் ஏதுமின்றி, தீர்த்த குடங்களில் இருந்து ஒரு துளி தீர்த்தம் கூட கீழே சிந்தாமல் சுமந்துகொண்டு, பத்திரமாகவும் அதே நேரத்தில் வேகமாகவும் மலையிலிருந்து இறங்கினர். அவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சற்று திணறித்தான் போனோம்...
நாங்கள் ஏறிய வழி வேறு, ஆனால் இறங்கும்போது வேறொரு வழியில் நடந்து, அருகில் உள்ள கிராமங்கள் வழியாக பயணப்பட்டோம். அப்போது வழியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு சிறு கோவிலில் மாலை தேநீருக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அம்மழை நேரத்தில், மலை கிராமத்தில் நாம் பருகிய, வெதுவெதுப்பான தேநீர், உண்மையிலேயே நம் நாவில் தேன்போல் தித்தித்தது.
தேனீர் பருகியதும் அங்கிருந்து புறப்பட்டு, மலைச்சாலையில் தூரச் சிகரங்களையும் அதன் பின்னே பொங்கிவரும் மேகங்களையும் ரசித்துக் கொண்ட மலையிலிருந்து இறங்கினோம். இறங்கும் வழியில் விளையாடிக் கொண்டிருந்த கள்ளம் கபடமில்லா கிராமத்து சிறுவர்களின் மகிழ்ச்சியைக் கண்ட போது, அம்மகிழ்ச்சி நம் மனதில் எதிரொலித்து, நாமும் அவர்களில் ஒருவராகி போனோம்.
இறுதியாக மாலை 5 மணி அளவில், நாம் புறப்பட்ட அருள்மிகு லஷ்மண பெருமாள் ஆலயத்தை அடைந்து நம் பயணத்தை இனிதே நிறைவு செய்தோம். அதன் பின் பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தங்களால் இறைவனுக்கு அபிஷேகமும் ஆராதனையும் தொடர்ந்தது... நாமும் அங்கிருந்து அடுத்த இலக்கை நோக்கி நம் பயணத்தை தொடர்ந்தோம்...
மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்...
நன்றிகள்
- எல்லாம் வல்ல லஷ்மண பெருமாளுக்கு...
- தீர்த்த யாத்திரையில் பங்கு கொண்ட பக்தர்களுக்கு...
- பயணத்தை ஏற்பாடு செய்த நண்பர் ஸ்ரீராமுக்கு...
- இப்பதிவை படிக்கும் உங்களுக்கு...
அடுத்த பதிவு
அருமையான பதிவு பயணங்களும் பயண பதிவும் தொடர்ந்து கொண்டிருக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க வளமுடன்
அருமை.
ReplyDelete