குடுமிசாமியின் தீர்த்தங்கள்...4

முந்தைய பகுதிகளை படிக்க...

  1. முன்னுரை,  முதல் பயணம்
  2. குடிமல்லம், பொன்முகலி தீர்த்தம்
  3. குடுமி சாமியின் தரிசனம், பாரத்வாஜ தீர்த்தம


மயூர தீர்த்தம்


          பாரத்வாஜ தீர்த்தத்தில் இருந்து கரையேறிய திண்ணனை கண்டதும் பன்றி வழக்கம் போல ஓட ஆரம்பித்தது. அவனும் அப்பன்றியை பிடிக்கும் நோக்கோடு அதை துரத்த ஆரம்பித்தான். வேட்டையில் முன் அனுபவம் இல்லாத போதும், வில்வித்தையில் ஓரளவு தேர்ச்சி பெற்றவனாக இருந்த அவன் பன்றியை துரத்திக் கொண்டே, ஓடியபடியே அதை நோக்கி அம்புகளை எய்தான் என்றபோதும், அவனது அம்புகளில் ஒன்று கூட அப்பன்றியை நெருங்க முடியவில்லை.  முந்தினம் காட்டிலும், நதிக்கரையிலும் போக்கு  காட்டிய பன்றி, தற்போது பாரத்வாஜ தீர்த்தத்தின் தெற்கு திசையிலுள்ள மலை சிகரத்தை நோக்கி ஓடியது. 


பொதுவாக பன்றிகளின் கால்கள்  சிறியவை என்பதால் அவைகளால் மலைகளில் வேகமாக ஏற இயலாது ஆனால் திண்ணன் துரத்தி வந்த கொழுத்த பன்றியோ வேகமாக மலை ஏறுவதை கண்டு திண்ணன் திக்கிட்டு போனான். ஒரு கட்டத்தில் திண்ணன் மூச்சு வாங்கி நிற்க, அப்பன்றியோ மலை சிகரத்தில் நின்று அவனை நோட்டமிடுவது போல் தோன்றியது. அக்காட்சியைக் கண்டு கோபம் தலைக்கேறிய திண்ணனும் வேக வேகமாக சிகரத்தில் ஏறினான். அப்போது பாறைகளில் மோதி பல காயங்கள் ஏற்பட்ட போதும் அவன் அதை கண்டுகொள்ளவில்லை. அச்சிகரத்தில் ஏறிய பின்பே அம்மலையில் மேலும் பல சிகரங்கள் இருப்பதை கண்டு பிரமித்து போனான். 


மயூர தீர்த்தத்தின் அருகில் உள்ள பொந்து விழுந்த மரம்

வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய மலையாக தோற்றமளிக்கும் திருக்காளத்தி மலை சுமார் 23 கிலோமீட்டர் சுற்றளவுடைய, பல சிகரங்களும், பள்ளத்தாக்குகளும்  கொண்ட பிரமாண்ட மலைத் தொடர் என்றபோதும் அதன் உண்மை உருவம் அதனுள் பிரவேசித்த (நுழைந்த) ஒருவரால் மட்டுமே உணர முடியும். பன்றியின் உதவியால் நமது திண்ணனும் முதல்முறையாக அம்மலையில் பிரவேசிக்க ஆரம்பித்தான். அம்மலையில் இன்னும் மாய தோற்றங்கள் இருப்பதை அறியாமல்...     


திண்ணன் மலைச்சிகரத்தை அடைந்ததும், அவனுக்காகவே காத்திருந்த பன்றி இடது புறம் திரும்பி மலை சரிவை நோக்கி ஓட ஆரம்பித்தது. ஓடும்போது உரசிய செடி கொடிகளால் உடலில் ஏற்பட்ட சிராய்ப்புகளை பொருட்படுத்தாமல் அவனும் தன்னால் முடிந்த அளவுக்கு வேகமாய் ஓடினான். தொடந்து ஓடிய அவன் ஒருகட்டத்தில், ஒரு பள்ளத்தாக்கு பகுதியில் பன்றியை நெருங்கியும் விட்டான். இன்னும் சில அடிகளில் அதை பிடித்து விடலாம் என எண்ணியபோது அருகிலிருந்த ஒரு பொந்து விழுந்த* மரத்தடியில்   இருந்த ஓட்டையில் நுழைந்தது. திண்ணனும் பன்றி தன்னிடம் சிக்கிவிட்ட சந்தோஷத்தில் தனது வில் அம்புடன் மரபொந்தின் வாயிலில் காத்திருந்தான். சிறிது நேரம் காத்திருந்தும் மரத்தினுள் இருந்து சத்தம் ஏதும் வராததால் சற்று எச்சரிக்கையாக மரத்தினுள் எட்டிப் பார்த்த திண்ணன் அதிர்ச்சியடைந்து  போனான்.


ஆம்! அவன் துரத்திவந்த பன்றி மீண்டும் மாயமாய் மறைந்து போனது... 


அதிர்ச்சியடைந்த திண்ணனுக்கு மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியவில்லை. இரண்டாம் முறையாக தன் கண் முன்னால் பன்றி காணாமல் போன காட்சியை அவனால் நம்ப முடியவில்லை. பல்வேறு குழப்பத்துடன் தான்  கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்த அவன் பாதையை சரியாக கவனிக்காததால்  கால் இடறி அருகில் உள்ள சிறிய குளம் போன்று தோற்றமளித்த ஒரு நீர்நிலையில் தவறி விழுந்தான். அது திருக்காளத்தியின் முக்தி தரும் தீர்த்தங்களில் ஒன்றான மயூர தீர்த்தம் என்பதை அறியாமல்...   


மயூர தீர்த்தம்


மயூரம் என்பதற்கு மயில் அல்லது அழகு என்று பொருள். எப்போதும் எந்த நீர்நிலையிலும் ஆற அமர குளித்து, நீரில் தெரியும் நிழலில் தனது புறத்தோற்றதின் அழகை கண்டு ரசிக்கும் திண்ணன், எதிர்பாரா வண்ணம் நீரில் தவறி விழுந்ததால் முதல்முறையாக தனது அழகை ரசிக்காமல் அவசர அவசரமாய் கரையேறி வந்தான். அதற்குள் மயூர தீர்த்தம் அவன் தனது புறத்தோற்றத்தின் அவன் மீது கொண்டிருந்த மாயையை நீக்கியதே அதற்கு காரணமாகும்...                             

* திருக்காளத்தி மலையில், மயூர தீர்த்தத்தின் அருகில் அந்த பொந்து விழுந்த மரம் இன்றும் உள்ளது.      


      

மகாலிங்க தரிசனம்


         மயூர தீர்த்தத்தில் நீராடி தனது புற அழகின் மீதிருந்த மாயையை விலக்கப் பெற்ற திண்ணனுக்கு, இப்போது இம்மலையே ஒரு மாய உலகமாய் தோன்றியது. மேலும் இம்மலையில் நீண்ட நேரம் இருப்பது உசிதமல்ல என தோன்றியதால் விரைவாய் அங்கிருந்து வெளியேற வேண்டுமென எண்ணினான்.  பன்றியின் பின் தலைகால் புரியாமல் ஓடிவந்ததால், வந்த பாதை அவனுக்கு நினைவில் இல்லை. மேலும் தனது "குடுமி சாமி" தனித்திருப்பார் என்ற எண்ணம் மேலோங்கியதால் அவசர அவசரமாக புதிய வழியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினான். 


பொதுவாக மலையில் இருந்து உருவாகும் நீர்நிலையின் பாதையில் சென்றால்  விரைவாக அடிவாரத்தை அடையலாம் என்பதால், அங்கிருந்த ஒரு நீரோடையின் வழியை பின்பற்றி நடக்க ஆரம்பித்தான். விரைவாய் புறப்பட்ட அவனுக்கு, பாறையில் ஏறியதாலும், பன்றிக்கு பின்னால்  ஒடி வந்ததாலும், கால் இடறி மயூர தீர்த்தத்தில் விழுந்ததாலும் ஏற்பட்ட காயங்களை பொருட்படுத்தாமல் வேகமாக நடந்த போதும், சுமார் ஒரு நாழிகைக்கு பின் சற்று அதிகம் மூச்சு வாங்கியதால் சிறிது இளைப்பாற எண்ணி நீரோடையின் ஓரம் இருந்த ஒரு பெரிய பாறையில் சாய்ந்தபடி  சிறிதுநேரம் அமர்ந்தான்.  சிறிது நேரத்திற்கு பிறகே தான் சாய்ந்திருந்த அப்பாறையில் பூசப்பட்டு இருந்த வண்ணங்கள் தன் உடல் மீதும் ஒட்டிக்கொண்டதை உணர்ந்து உடனடியாக எழுந்து விலகி நின்றான்.



சுக பிரம்ம மகரிஷி வழிபட்ட திருக்காளத்தி மகாலிங்கம்


ஆம்! ஒரு சிறிய மரத்தின் அடியில் இருந்த அப்பாறையில் விபூதி மற்றும் குங்குமம் கொண்டு யாரோ வணங்கி விட்டு சென்றிருந்தனர். பார்க்க சற்று அகலமாகவும், வித்தியாசமாகவும் இருந்ததால் அது தனது குடுமி சாமி இல்லை என்று அவனுக்கு தோன்றியபோதும், திடீரென தோன்றிய உள்ளுணர்வின்படி தன்னையறியாமல் அப்பாறை முன் விழுந்து வணங்கி, தனது பயணத்தை தொடர்ந்தான், தனக்கு தரிசனம் அளித்தது திருகாளத்தி காட்டில் உள்ள மகாலிங்கம்*  என்ற உண்மையை அறியாமலே....


பின்பு ஒரு வழியாக சரியான பாதையை கண்டுபிடித்து அடிவாரத்தை அடைந்த அவன்,  வழியில் கிடைத்த சிறு விலங்குகளை வேட்டையாடியபடியே ஆற்றங்கரையோரம் வடக்கு திசையை நோக்கி நடந்து, தனது பிரியமான குடுமி சாமியிடம் வந்தடைந்தான். பிறகு நீண்டநேரம் அவரை காக்க வைத்ததற்காக மனப்பூர்வமாக அவரிடம் மன்னிப்புக் கோரி, தான் கொண்டு வந்த மாமிசத்தை அவருக்கு சமர்ப்பித்தான்.


அப்போது குடுமி சாமி மீது பூசபட்டிருந்த (பூஜை செய்ய வந்த அந்தணரால் பூசப்பட்ட) அதே விபூதி மற்றும் குங்குமத்தை  கண்ட அவன், தான் காட்டில் கண்ட அந்த பெரிய பாறையும் குடுமி சாமியின் மற்றொரு தோற்றமே என்பதை உணர்ந்து கொண்டான். பிறகு வழக்கம் போல் அவருக்கு துணையாக இரவு முழுவதும் குடுமி சாமியின் அருகிலேயே கண்விழித்து நின்றான்...  


* சதுரகிரியில் உள்ளதுபோல்,  திருகாளத்தி மலைத்தொடரிலும் காட்டின் நடுவே, சுகபிரம்ம மகரிஷியால் பல்லாண்டு காலம் வழிபாடு செய்யப்பட்ட ஒரு மகாலிங்கம் உள்ளது.      


அடுத்த பகுதியை படிக்க...  

5. தட்சிண காளி, பைரவ தீர்த்தம்

Comments

Post a Comment