ரைன் நதிக்கரையினிலே...2 முதல் அபிப்ராயம்

இக்கட்டுரையின் முந்தைய பகுதியை படிக்க


ரைன் நதிக்கரையினிலே... 

 2. ஜெர்மனி - முதல் அபிப்ராயம் 
(First impression)     



பிராங்க்ஃபர்ட் (Frankfurt) அறிமுகம்

        இரண்டாம் உலகப்போரின் பிறகு அமெரிக்க வசம் இருந்த மேற்கு ஜெர்மனியின் மிக முக்கியமான நகரமாக பிராங்க்ஃபர்ட் விளங்கியதால் அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய  விமான நிலையம் இங்கு உள்ளது.  மேலும் 2012ம் ஆண்டின் கணக்கின்படி ஐரோப்பாவில் லண்டன், பாரிஸ் நகரங்களுக்கு அடுத்தபடியாக அதிக பயணிகள் பயன்படுத்தக் கூடியதாகவும், 113 நாடுகளுக்கு மேல் விமான சேவை அளிக்கும் விமான நிலையமாகவும் திகழ்கிறது. மிகப்பெரியதாக இருந்தபோதிலும், மிகவும் நேர்த்தியாக செயல்பட்டு (Well-organized) வருவது பாராட்டத்தக்கது.  ஆம்! வெறும் 25 நிமிடத்திற்குள்ளாகவே நுழைவுச் சோதனையை (Emigration checking) முடித்து,  எங்கள் பைகளை (Luggage) பெற்று வெளியே வர முடிந்தது.



        எங்கள் அலுவலகம் விஸ்பேடன் (Wiesbaden) நகரின் புறநகர் பகுதியான  வாலூஃப் (Walluf) என்ற இடத்தில் அமைந்திருந்ததால், அதன் அருகிலுள்ள எல்ட்வில்லே (Eltville) என்ற கிராமத்தில் ஒரு அடுக்குமாடி வீட்டில் (Apartment) தங்க ஏற்பாடு செய்திருந்தனர். இது விமான நிலையத்தில் இருந்து சுமார் ஒரு மணி நேர பயண தூரமாகும். நேர்த்தியாக அமைக்கப்பட்ட சாலைகள், அதில் வலதுபுற பயணம் (Rightside drive),  எவ்வளவு போக்குவரத்து நெரிசல் இருந்த போதும் சாலை விதிகளை மதிக்கும் பண்பு ஆகியவை இக்குறுகிய பயணத்தில் நம்மை கவர்ந்து அந்நாட்டின் மேல் ஒரு நல்ல முதல் அபிப்பிராயத்தை (First impression) உருவாக்கியது.


        எல்ட்வில்லேவின் காலநிலை ஊட்டி, கொடைக்கானல் போன்று குளிராக இருந்தது. அதில் அமைந்திருந்த எங்கள் அப்பார்ட்மெண்டின் உட்பகுதி மரத்தினால் கட்டப்பட்டு அழகாக இருந்தது. வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை என அனைத்து அறைகளிலும் வெளிப்புற குளிரை தாங்கும் வண்ணம் ஹீட்டர்கள் பொருத்தப்பட்டிருந்தது. பார்க்கிங் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி விளக்குகள் (Automatic lights) மற்றும் ஒரு சிறிய தோட்டம், அதிலிருந்த புத்தர் சிலை மற்றும் தவளை பொம்மை போன்றவை அக்குடியிருப்பிற்கு மேலும் அழகு சேர்த்தன. சிறிது நேர ஓய்விற்கு பிறகு, போன் மூலம் ஓர் இந்திய உணவகத்தில் ஆர்டர் செய்து வாங்கிய உணவை உண்டு எனக்குண்டான அறையில் உறங்க சென்றேன். புதிய இடத்திலும் பயணக் களைப்பின் காரணமாக உறக்கம் நன்றாக வந்தது என்றபோதிலும் அதிகாலையில் வீசிய கடுங்குளிர் என் உறக்கத்தை லேசாக அசைத்து பார்த்தது. 





தோட்டத்தில்...




முதல் நாள் இன்று


8 அக்டோபர் 2021

      
        
        அதிகாலையிலேயே கண்விழித்த நான் காலை 6:30 மணி அளவில் ஒரு சிறிய நடை பயணம் செல்ல எண்ணி வெளியே புறப்பட்டேன். வெளிப்புற வெப்பநிலை வெறும் 6 டிகிரி செல்சியஸாக இருந்த போதும் குளிரை ஓரளவு சமாளிக்க முடிந்தது. காலை 7 மணிக்கு கூட ஊரெங்கும் சற்று இருளாகவே இருந்தது . 


        வெளியே சென்ற பிறகுதான் நாம்  மலைப் பகுதியில் வசிப்பதாகத் தெரிகிறது. ஆம்!  சுற்றிலும் பல சிறிய மலை சிகரங்களைப் பார்க்க முடிகிறது. சாலைகள் மிகவும் அழகாக இருக்கின்றன. பொதுவாக அனைத்து வீடுகளின் வெளியிலும் மக்கள் அதிகளவில் மலர் செடிகளை வளர்த்து வருகின்றனர். சாலை எங்கும் பூத்து குலுங்கிய பலவித  அழகிய மலர்களால் அப்பகுதியே ரம்மியமாக இருந்தது. சில நிமிட நடைப்பயணத்திற்குப் பிறகு, கைகளும், கால்களும் உறைவது போல் தோன்றுகிறது. ஷீ மற்றும் கையுறை (Shoe and gloves) இல்லாமல் வெளியே செல்வது நல்லதல்ல. இலையுதிர் காலத்தின் ஆரம்பநிலை என்பதால் காலை 8:00 மணிக்கு மேல்தான் சூரியன் பிரகாசிக்கிறது. கோடைகாலத்தில் சில நேரங்களில் அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கூட சூரியஒளி இருக்கும் என பிறர் கூற பின்னர் அறிந்து கொண்டேன்.


சாலையோர மலர்கள்






        அன்றைய தினம் அலுவலக தினம் (வெள்ளிக்கிழமை) என்பதால் வேறெங்கும் வெளியே செல்ல திட்டமிடவில்லை‌‌ என்ற போதிலும் மாலையில் அருகில் உள்ள எல்ட்வில்லே ரயில் நிலையத்திற்கு (Eltville bf) பேருந்து மூலம் சென்று அதன் அருகிலுள்ள ஒரு பூந்தோட்டத்திற்குச் சென்றோம்‌ தோட்டத்தில் பல அழகிய ரோஜாக்களை கண்டு நம் மனதை பறிகொடுத்தோம். பிறகு அதன் அருகில் உள்ள ரைன் நதிக் கரையை அடைந்தோம். 


ரைன் நதி - அறிமுகம்

        ரைன் (Rhine) ஐரோப்பாவின் முக்கிய நதி‌. சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உருவாகும் இது ஜெர்மனி, லக்சம்பர்க் ஆகிய நாடுகளின் வழியே 1230 கிலோமீட்டர்கள் பயணித்து நெதர்லாந்து நாட்டில் கடலில் கலக்கிறது. இது ஐரோப்பாவின் முக்கிய நீர்வழிப் போக்குவரத்து தடம். இதன் கரையை ஒட்டி பல்வேறு கோட்டைகள் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ளன.  சிந்து நதிக்கு கிழக்கே உள்ள பகுதி எப்படி இந்தியா என்று அழைக்கப்பட்டதோ அதேபோல் ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீசர் ரைன் நதிக்குக் கிழக்கே இருந்த, தான் கைப்பற்றாத பகுதியை ஜெர்மானியா என்று அழைத்ததாக ஜெர்மனியின் வரலாறு கூறுகிறது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஜீவநதி முதல் பார்வையிலேயே என் மனதில் நீங்கா இடம் பெற்று இக்கட்டுரைக்கு தலைப்பாகவும் மாறிவிட்டது. 



ரைன் நதிக்கரையில்...


        பிறகு எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் தமிழரான திரு. அரவிந்த் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் அந்நாட்டிலேயே படித்து பல்லாண்டு காலமாக அங்கேயே பணிபுரிபவர். அவர் எங்களை விஸ்பேடன் நகருக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் நகரில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களை பற்றி விவரித்துக் கொண்டே இருந்தார்‌. மேலும் நகரப் பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்ய உதவும் வாராந்திர பாஸ் (Weekly pass) எடுக்கவும் உதவினார்.  ‌ பிறகு நகரின் முக்கிய பகுதியான Marktplatz எனப்படும் மார்க்கெட் பகுதிக்குச் சென்றோம். அங்கு பெரிய தேவாலயம் (Church) ஒன்றும் அதன் அருகில் உள்ள தெருக்களில் கடைகள் பலவும் இருந்தன. நண்பர்கள் Jerkins உட்பட தங்களுக்கு தேவையான சில பொருட்களை அங்கு வாங்கினர். பிறகு பேருந்து மூலம் எங்கள் அறைக்கு திரும்பினோம். அடுத்தநாள் வாரயிறுதி  என்பதால் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்க்க திட்டமிட ஆரம்பித்தோம்.


பயண திட்டம்

        ஜெர்மனி ஐரோப்பாவில் உள்ள 26 நாடுகள் கொண்ட ஷெங்கன் பரப்பின் (Schnegen Area) ஓர் அங்கம் என்பதால், அந்நாட்டின் விசா பெற்ற ஒருவர் பிற ஷெங்கன் நாடுகளுக்குள் எந்தவிதமான கூடுதல் அனுமதி இல்லாமலேயே சென்று வர முடியும். எனவே அருகில் உள்ள பிற நாடுகளில் உள்ள பிரபல இடங்களான ஜூரிச் (சுவிட்சர்லாந்து), பாரீஸ் (பிரான்ஸ்), ப்ரஸ்ஸல்ஸ் (பெல்ஜியம்) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு செல்ல வேண்டும் என நமது நண்பர்கள் பேரார்வம் கொண்டனர்.






        பல்வேறு நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நண்பர்கள் அனைவரும் பனிப்பொழிவை (Snowfall) பார்க்கும் ஆர்வத்தோடு சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெர்மனியின் மற்றொரு நகரான முனிச்சை (Munich) தேர்வு செய்தனர் ஆனால் எனது விருப்பம் வேறாக இருந்தது. கடையில் விற்கும் நெய்யை விட கையில் இருக்கும் வெண்ணையே உயர்ந்தது என்பதால் இருக்கும் இரண்டு வார இறுதி விடுமுறை நாட்களில் முடிந்தளவு அருகில் உள்ள பகுதிகளை ஆராய்வதே எனது திட்டமாக இருந்தது. எனவே அவர்களின் பயணத்தில் நான் பங்கு பெறவில்லை. தனியே, தன்னந்தனியே எனது பயணத்தை ஆரம்பித்தேன்...



தொடரும்...



ரோஜா தோட்டத்தில்













அடுத்த பகுதியை படிக்க...

Comments

  1. I really appreciate you. Because you not only just visit there, you came with some history about that Rhine River...

    ReplyDelete

Post a Comment