தலைமலை பயண அனுபவம் - 2

இக்கட்டுரையின் முந்தைய பகுதி



    உச்சி சிகரத்தை கண்டதும் உடனடியாக அங்கு சென்று இறைவனை தரிசிக்க வேண்டும் என்று தோன்றியது ஆனால் அப்போது கோவில் திறந்து இருக்கவில்லை என்பதால் மீண்டும் கருப்பண்ணசாமி கோவிலை அடைந்து அங்கு ஓய்வெடுக்க ஆரம்பித்தேன். பயண களைப்பின் காரணமாக சற்று நேரத்தில் அங்கேயே ஒரு மரத்தடியில் உறங்கிப் போனேன். 


        
        சுமார் 12 மணி வாக்கில் கோவிலின் பூசாரி வந்தார். வந்தவர் நேராக உச்சி கோயிலுக்குச் செல்லாமல் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர் என்பதை கணக்கெடுத்துக் கொண்டு சிறிது நேரத்தில் வருவதாகக் கூறி கருப்பண்ணசாமி கோவிலினுள் சென்றார். பிறகு சுமார் 30 நிமிடங்களுக்கு பின்பு வெளியே வந்து எங்களை உச்சி கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.



        உச்சிக் கோவிலுக்கு செல்லும் பாதை செங்குத்தாகவும், படிகட்டுகள் நன்கு அமைக்கப்பட்டும் இருந்தது‌. உச்சி சிகரத்தில் ஏறும் வழியில் கிருஷ்ணர் கோவில் உள்ளிட்ட மேலும் இரண்டு சிறிய கோவில்கள் இருந்தன. அங்கிருந்த கொடி மரம் போன்ற ஜயஸ்தம்பத்தின் அடியில் காகம், குரங்கு போன்ற உயிரினங்களின் சிலைகள் இருந்தது வித்தியாசமாக இருந்தது


    பின்பு மூலவர் சன்னதிக்கு சென்று தானே தோன்றிய தலைமலைராயர் எனப்படும் ஸ்ரீதேவி பூதேவி சமேத சஞ்சீவிராய வெங்கடாஜலபதி பெருமாளை தரிசனம் செய்தோம். கோவில் சுமார் 3200 அடி உயரத்தில் உள்ளது.  ‌ தலைமலை புராண ரீதியாக சஞ்சீவி மலையின் ஒரு துண்டு என்றும், இக்கோவில் நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டது என்றும் கோவிலின் பூசாரி எடுத்துரைத்தார்.


    பக்தர்கள் கூட்டம் அதிகம் இல்லாத போதும் எங்கள் நான்கு பேருக்காக மட்டும் ‌ கோவிலைச் திறந்து தரிசனம் செய்ய உதவியது மனதிற்கு நெகிழ்வாக இருந்தது. பின்பு வெளியே வந்ததும் கோவிலை பூட்டிவிட்டு எங்களை பொறுமையாக வர சொல்லிவிட்டு அவர் கருப்பண்ணசாமி கோவிலை நோக்கி விரைந்து சென்றார். நாங்களும் வெளியே வந்து இயற்கையை ரசிக்க ஆரம்பித்தோம்.


    
    தலைமலையின் உச்சி சிகரத்தில் இருந்து பார்க்கும் போது எங்கும் பச்சைப்பசேல் என்று கண்களுக்கு குளுமையாகவும், மனதிற்கு இதமாகவும் இருந்தது‌. மேலும் நாங்கள் கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து வந்த வழித்தடம் நன்றாக தெரிந்தது‌.
 ‌ ‌ 

        நான் இயற்கையை நன்றாக ரசித்துக் கொண்டிருக்கும் போது, உடன் வந்த நண்பர்கள் கோவிலை சுற்றி கிரிவலம் செல்ல போவதாக கூறினர். தலைமலை கோவில் ஒரு சிகரத்தின் உச்சியில் அமைந்துள்ளது. அதை சுற்றிவர பிரகாரம் கூட இல்லை. மேலும் கோவிலின் பின்புறம் அதலபாதாளம் உள்ளது ‌‌ என்ற போதிலும் ஆபத்தான முறையில் வெறும் 4 அங்குல அகலமே உள்ள கோவிலின் சுற்று சுவரை சுற்றி வருவது பல ஆண்டுகளாக பக்தர்களின் வழக்கமாக உள்ளது.  ‌‌‌‌‌


        நண்பர்கள் மூவரும் ஆபத்து நிறைந்த அப்பாதையில்  கோவிலை சுற்றி வந்ததை இப்போது நினைத்தாலும் மனதுக்குள் ஒரு திகில் உண்டாகிறது‌. ‌சமீபத்தில் இந்த கிரிவலம் தடைசெய்யப்பட்டது ஒரு ஆறுதலான விஷயமாகும்‌‌.  ‌ 


           பின்பு மீண்டும் சிறிது நேரம் இயற்கை அன்னையின் பேரழகை கண்ணார ரசித்துவிட்டு உச்சி சிகரத்தில் இருந்து இறங்கி கருப்பண்ணசமி கோவிலை அடைந்தோம்‌. அங்கிருந்த கோவிலின் பூசாரி ‌‌ எதிரே உள்ள கன்னிமார் தீர்த்தத்தை தெளித்து கொண்டு கருப்பண்ணசாமியை தரிசனம் செய்துவிட்டு வருமாறு கூறினார். 

        
    நாங்களும் அவர் கூறியபடியே கருப்பண்ணசாமியை தரிசனம் செய்து விட்டு வர, அவரோ எங்களை அமரச் செய்து,  வாழை இலையில் உணவு பரிமாறி எங்களை சாப்பிட சொன்னார். இதற்காகத்தான் அவர் விரைவாக கோவிலிலிருந்து வந்தார் போலும். காலையில் சரியாக சாப்பிடாத எனக்கு அவர் பரிமாறிய உணவு தேவாமிர்தமாக தோன்றியது. தன்னை நாடி வந்த பக்தர்களின் மனதை மட்டுமன்றி வயிற்றையும் நிறையச் செய்த இறைவனை கருணைக்கு எல்லை ஏதுமில்லை.


    

        பின்பு அங்கிருந்தவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்ற போது உடன் வந்த மூன்று நண்பர்களோ, நான் வந்த எருமைபட்டி வழித்தடத்தில் தற்போது பேருந்து எதுவும் இருக்காது எனவே தங்களுடன் சிவந்திப்பட்டி வழித்தடத்தில் இறங்குமாறு அழைத்தனர். மேலும் அவர்கள் மூவரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்திருப்பதால்  என்னையும் அவர்களுடன் அழைத்துச் சென்று பேருந்து நிறுத்தத்தில் விடுவதாகவும் கூறினர். கோவில் பூசாரியும் அதுவே சரி என்று கூறியதால் நானும் அவர்களுடன் சிவந்திப்பட்டி வழியில் இறங்க முடிவு செய்தேன்.



    சிவந்திப்பட்டி வழி சற்று சரிவாகவும், மணல் பாங்கு நிறைந்ததாகவும் இருந்தது‌. நான் ஏறி வந்த எருமைபட்டி வழித்தடம் ஒருவித அமைதியான  அனுபவத்தை தந்தது என்றால், சிவந்திபட்டி வழித்தடத்தில் தெரிந்த உச்சி சிகரத்தின் காட்சி ஆனந்த அனுபவத்தை அளித்தது. பிற்பகல் 2.45 மணிக்கு உச்சியில் இருந்து கிளம்பிய நாங்கள் இயற்கையை தரிசித்துக் கொண்டே ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு 3.47 மணிக்கு அடிவாரத்தை அடைந்தோம். அடிவாரத்தில் இருந்த ஆஞ்சநேயர் கோவிலில் இறைவனுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.




        நண்பர்கள் மூவரும் அவர்கள் செல்ல வேண்டிய இடத்தையும் தாண்டி சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து என்னை தொட்டியம் பேருந்து நிறுத்தத்தில் பத்திரமாக இறக்கி விட்டனர். அவர்களுக்கு நன்றி கூறி அங்கிருந்து விடை பெற்றேன்.




    அங்கிருந்து நாமக்கல் சென்று நாமக்கல் கோட்டையை பார்வையிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயரையும், அவர் அங்கே இருக்கக் காரணமான நாமக்கல் நரசிம்மரையும் தரிசனம் செய்து இரவு 9 மணி அளவில் சென்னை செல்லும் ரயிலில் நீங்கா நினைவுகளுடன் புறப்பட்டேன். இந்நினைவுகளே ஐந்து ஆண்டுகள் கடந்த பின்பும் இக்கட்டுரையை எழுத என்னை தூண்டியது.



    நான் நாமக்கல் பேருந்தில் ஏறியவுடன் திரு. நந்தகோபாலிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது. எருமைபட்டி தடத்தில் மலைக்குச் சென்று வெகு நேரம் ஆகியும் திரும்ப வராததால் எனது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள அழைத்ததாக கூறியது மனதிற்கு நெகிழ்வாக இருந்தது. 


        திரு. நந்தகோபால் மட்டுமல்ல, எனக்கு வழிகாட்டிய திரு. ராமசாமி, இறை தரிசனமும் உணவும் அளித்த கோவிலின் பூசாரி,  பேருந்து நிலையத்தில் இறக்கி  விட்ட மூன்று நண்பர்கள் என யாருக்கும் என்னை முன்பின் தெரியாது ஆனால் நான் இறைவனை நோக்கி எடுத்து வைத்த ஒரு சிறிய முயற்சியின் விளைவாக அந்த தலைமலைராயரே என்னை அழைத்துக் கொண்டார் என்பது மட்டும் உறுதி...


"நாம் ஒரு அடி எடுத்து வைத்தால்: இறைவன் 100 அடி முன்னே வருவார்"


விரைவில் மீண்டும் ஒரு பயணக் கட்டுரையில் சந்திப்போம்...


நன்றி! வணக்கம்!




பிற பதிவுகளை படிக்க...

Comments

Post a Comment