"நாம் ஒரு அடி முன்னெடுத்து வைத்தால் இறைவன் நூறு அடி வைப்பார்" என்பது பெரியோர் வாக்கு மட்டுமல்ல நான் அனுபவத்தால் கண்ட உண்மையும் கூட... அத்தகைய அனுபவத்தைக் எனக்கு அளித்த தலைமலை பயணத்தை இங்கு பகிர்கிறேன்..
நம் ஆழ்மனதானது எப்போதும் நமக்கு பிடித்த விஷயங்களை செய்யச் சொல்லி நம்மை தூண்டி கொண்டே இருக்கும். ஒரு புதன்கிழமை (7 செப்டம்பர் 2016) அன்று எனது வழக்கமான அலுவலக பணிகளை செய்து கொண்டிருந்தேன். வேலை அதிகமாக இருந்ததால் வேறு எந்த விஷயங்களிலும் கவனம் செலுத்தவில்லை என்ற போதிலும், திடீரென்று மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. உடனடியாக ஒரு பயணம் மேற்கொண்டால் என்ன? என்பதே அது.
எந்த ஒரு பயணத்திருக்கும் தேவையான அடிப்படை விஷயங்கள் மூன்று. நோக்கம், இடம் மற்றும் நேரம். எனது நோக்கம் பயணம் மட்டுமே. அலுவலக வேலைகளை அப்படியே விட்டு விட்டு கிளம்ப முடியாது எனவே ஒரு நாள் கழித்து வெள்ளிக்கிழமை அன்று பயணம் செல்ல முடிவு செய்தேன். அடுத்ததாக எங்கு செல்ல வேண்டும் என யோசிக்க ஆரம்பித்தேன். ஏற்கனவே போக வேண்டும் என எண்ணியிருந்த பல இடங்களை மனதிற்குள் பட்டியலிட்டேன். இறுதியாக நாமக்கல் அருகே உள்ள தலைமலையை தேர்வு செய்தேன். அங்கு சென்று வந்த பின்புதான் தெரிந்தது அங்கு வாசம் செய்யும் இறைவன் தலைமலைராயர் தான் என்னை தேர்வு செய்தார் என்பது...
தலைமலை நாமக்கல் (35 கி.மீ.) - திருச்சி (65 கி.மீ.) நடுவே உள்ளது. நாமக்கல் தான் அருகிலுள்ள நகரம் என்ற போதிலும் திருச்சிக்கு தான் ரயில் டிக்கெட் இருந்ததால் அவ்வழியே செல்ல முடிவு செய்தேன். இதுதான் முதல் முறை என்பதால் ஏற்கனவே சென்று வந்தவர்களின் பயண அனுபவங்களையும் கூடுதல் தகவல்களையும் பெற எண்ணி கூகுளில் தேட, அப்போதுதான் அக்கோவில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும் என்றும், புரட்டாசி மாதம் மட்டுமே அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்ற விவரம் தெரிய வந்தது.
நான் திட்டமிட்டதோ வெள்ளிக்கிழமை. என்ன செய்வது? என யோசிக்கும்போது அக்கோவிலுடன் தொடர்புடைய திரு. நந்தகோபால் அவர்களின் தொலைபேசி எண் கிடைத்தது. உடனே அவரை தொடர்பு கொண்டு பேசுகையில், கோவில் சனி, ஞாயிறு மட்டுமே திறந்திருக்கும் என்ற போதிலும், அடுத்த வாரம் புரட்டாசி மாதம் வருவதால் இந்த வாரம் கோவில் பகுதியை சுத்தம் செய்ய சிலர் மலைக்கு செல்கின்றனர் எனவே நீங்களும் வாருங்கள் என நம்பிக்கை அளித்தார். அவர் மூலம் அந்த தலைமலைராயரே எனக்கு அழைப்பு விடுத்தார்.
செப்டம்பர் 8 2016, வியாழன் இரவு 11 மணி அளவில் சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சி செல்லும் மலைக்கோட்டை விரைவு ரயிலில் புறப்பட்டேன். அது அதிகாலை 5 மணிக்கு திருச்சியை அடைந்தது. அங்கு சூடான பால் பருகி விட்டு 10 நிமிட நடைபயணத்தில் திருச்சி புதிய பேருந்து நிலையத்தை அடைந்தேன். அங்கிருந்து நாமக்கல் செல்லும் பேருந்து 5.30 மணிக்கு நான் உட்பட வெகு சில பயணிகளுடன் புறப்பட்டது.
அந்த அதிகாலை நேரத்தில் மின்விளக்குகளால் ஜொலித்த திருச்சி மலைக்கோட்டையின் அழகு என் கண்ணை பறித்தது என்றால், அதன்பின் காவிரி - கொள்ளிடம் பாலங்களை கடந்து செல்லும் போது ஸ்ரீ ரங்கநாதர் கோவில் கோபுரத்தை கண்டதும் ஏற்பட்ட பரவச உணர்வு என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. பிறகு பேருந்து நம்பர் ஒன் டோல்கேட்டை கடந்து, இடதுபுறம் திரும்பி, கொள்ளிடம் கரையோரமாக திருவாசி, குணசீலம் ஊர்களை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது திரு. நந்தகோபால் அவர்கள் என்னை அலைபேசியில் அழைத்தார்.
அப்போது தான் திருச்சி வந்ததும் அவர் தன்னை தொடர்பு கொள்ள கூறியது நினைவுக்கு வந்தது. நான் மறந்தாலும் அவர் சரியான நேரத்தில் என்னை அழைத்தது மனதிற்கு நெகிழ்வாக இருந்தது. அவர் திரு. ராமசாமி என்ற மற்றொருவரின் அலைபேசி எண்ணை தந்து அவரை தொடர்புகொள்ளுமாறும் அவர் என்னை வழி நடத்துவார் என்றும் கூறினார். அந்த அலைபேசி அழைப்பை துண்டிக்கும் முன்பே மற்றொரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அதில் பேசியவர் அவர் கூறிய திரு. ராமசாமி என்பவர்.
அவர் முசிறி, தொட்டியம் ஆகிய ஊர்களை கடந்ததும் வரும் ஏலூர்பட்டி என்ற ஊரில் இறங்குமாறும் அங்கிருந்து அடிவாரத்திற்கு செல்ல ஒரு பேருந்து உள்ளது என்றும் கூறினார். மேலும் ஒருவேளை அப்பேருந்தை தவற விட்டால் தானே வந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வதாக உறுதியளித்தார். நான் சென்ற பேருந்து சரியாக 7.30 மணிக்கு ஏலூர்பட்டி அடைந்தது. சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஏலூர்பட்டியிலிருந்தே தெரிந்த தலைமலை சிகரங்களின் தோற்றம் அதன் பிரம்மாண்டத்தை எடுத்துரைத்தது.
அதிகாலை சீக்கிரமாக எழுந்ததால் ஏற்பட்ட கடும்பசி வயிற்றைக் கிள்ளிய போதும், எதிரே உள்ள உணவகத்திற்குள் செல்லாமல் எனக்கான பேருந்துக்கு காத்திருந்தேன். பத்து நிமிடத்தில் (7.40 மணி) எருமைபட்டி என்ற ஊருக்கு செல்ல வேண்டிய பேருந்து வந்தது. அதில் ஏறி எல்லக்கல் என்ற இடத்தில் இறங்கி எதிரே தெரிந்த சாலையில் அடிவாரத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தேன்.
அந்த கிராமத்து பாதை அப்போது ஆள் அரவமின்றி இருந்தது என்ற போதும் அங்கு வீசிய சுத்தமான காற்று என் உடலை தழுவி, மனதை வருடிச் சென்றது. சுமார் ஐந்து நிமிட நடைபயணத்தில் ஒரு கிராமத்து ஆசாமியை சந்தித்தேன். கைலியும் பனியனும் அணிந்து, பல் துலக்கி கொண்டிருந்த அவரிடம் அடிவாரத்திற்கு செல்லும் வழியைக் கேட்க, அவரோ நீங்கள் தான் சென்னையிலிருந்து வரும் விஜயபாஸ்கரா? என்று என வினவினார்!!!
அப்போதுதான் தெரிந்தது என்னுடன் அலைபேசியில் பேசிய திரு. ராமசாமி தான் அவர் என்பது!!! மலைக்குச் செல்லும் ஆட்கள் ஏற்கனவே சென்றுவிட்டதாகவும், மலை ஏற சுமார் 2 மணி நேரம் ஆகும் எனவும் கூறிய அவர், என்னிடம் தேவையான குடிநீர் இருக்கிறதா என்பதை உறுதி செய்துவிட்டு செல்லும் பாதையை கூறினார். பிறகு தனியே செல்கிறீர்களா? அல்லது துணைக்கு ஆட்களை அனுப்பட்டுமா என வினவினார்.
"இறைவன் இருக்க வேறு வழி துணை எதற்கு?" என்ற எண்ணத்தில் நானும் தனியே செல்ல உறுதி கொண்டேன். பின்பு அவரிடம் விடைபெற்று அடிவாரத்தை அடைந்தேன். அங்கிருந்த சிறு கோவிலில் அமர்ந்து நான் கொண்டு வந்திருந்த ரொட்டித் துண்டுகளில் சிலவற்றை சாப்பிட்டுவிட்டு, அடிவாரத்தில் இருந்த காவல் தெய்வங்களை வேண்டிக் கொண்டு காலை 8.25 மணி அளவில் மலையேற்றத்தை துவங்கினேன்.
ஒற்றையடிப்பாதை போல் துவங்கிய காட்டுப்பாதை போகப் போக அகலமாகியது. வழியில் இருந்த இறை உருவங்களை வணங்கிக்கொண்டே பயணத்தை தொடர்ந்தேன். முதலில் சமதள பாதையாக ஆரம்பித்த வழி, போகப்போக சற்று மேடாக மாறி சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு பெரிய வழுக்குப் பாறைகளின் வழியாக மாறியது. மழைக்காலங்களில் வழுக்குப் பாறைகளில் ஏறுவது கடினமான காரியமாக இருக்கக்கூடும்.
அடுத்த 30 நிமிடங்களுக்குப் பின் நான் சென்ற பாதை இடதுபுறமாக திரும்பி ஒரு மலை உச்சியை நோக்கி சென்றது. பாதையின் ஓரம் பக்தர்களின் பாதுகாப்புக்காக இரும்பு கம்பிகள் நடப்பட்டிருந்தன. அடடா, இவ்வளவு சீக்கிரமாக மலை உச்சியை நோக்கி செல்கிறோமே என்ற எண்ணம் அப்போது தோன்றியது. மேலும் யாரும் இல்லா பாதையில் நான் மட்டும் மலை ஏறிக் கொண்டிருந்தது ஒரு தனி அனுபவமாக தோன்றியது.
போக போகத்தான் தெரிந்தது நான் ஏறிக் கொண்டிருந்தது உச்சிக்கு போகும் வழியில் உள்ள மற்றொரு சிகரத்தில் என்பது! கிட்டத்தட்ட சிகரத்தின் உச்சியின் அருகில் சென்ற போதும் நாம் செல்ல வேண்டிய தலைமலை உச்சி சிகரத்தின் தரிசனம் கிட்டவில்லை . பின்பு காட்டு வழியில் நடந்து காலை 10.12 மணி அளவில் ஒரு சமதளத்தை அடைந்தேன் அங்கு ஒரு மண்டபம் போன்ற கோவிலும் அதன் எதிரே ஒரு பெரிய குளமும் இருந்தது. குளத்தைச் சுற்றி அந்தகால மண்டபங்கள் சிதிலமடைந்து கிடந்தன.
கோவிலின் அருகினில் சிலர் தேவையற்ற மரங்களை அப்புறப்படுத்தி பாதையை சரி செய்து கொண்டிருந்தனர். அவர்கள்தான் திரு. நந்தகோபால் கூறியவர்கள் போலும். அவர்களைத் தவிர கல்லூரி மாணவர்களைப் போல தோற்றமளித்த மேலும் மூன்று பேர் இருந்தனர். அவர்களும் மலையேறி இறைவனை தரிசிக்க வந்ததாக கூறினார்.
தலை மலையில் பல்வேறு சிகரங்கள் உண்டு அவற்றில் உயரமான ஒரு மலைச்சிகரத்தில் தலைமலை சஞ்சீவிராயர் என்கிற வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. நான் எதிர்பார்த்து வந்த கோவில் அதுவே. ஆனால் தற்போது நான் இருக்கும் உள்ள கோவில் ஒரு சமதள இடத்தில் இருந்தது. அது குறித்து விசாரித்தபோது நான் தற்போது இருக்கும் இடம் கருப்பண்ணசாமி கோவில் என்றும் எதிரே உள்ள தீர்த்தம் கன்னிமார் தீர்த்தம் என்றும் கூறினர்.
நான் வந்த பாதையில் அவர்களை பார்க்கவில்லையே என்ற போது, தலை மலைக்குச் செல்ல மூன்று பிரதான பாதைகளும் அதைத் தவிர இரு பாதைகள் என மொத்தம் ஐந்து பாதைகள் உள்ளதாக கூறினர். நான் வந்தது எருமைபட்டி தடம். அதைத் தவிர வடவத்தூர் தடம் மற்றும் பவுத்திரம் (சிவந்திபட்டி) தடம் என மேலும் இரு பிரதான வழிகள் உள்ளதாக அப்போது தான் அறிந்து கொண்டேன் . மேலும் அனைத்து பாதைகளும் நான் தற்போது இருக்கும் கருப்பண்ணசாமி கோவிலையே வந்தடையும் என்றும் கூறினர்.
கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து 15 நிமிடத்தில் உச்சி கோவிலை அடையலாம் என்று கூறினர். பின்பு அவர்கள் கூறிய பாதையில் உச்சி கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். காட்டுக்குள் ஒளிந்திருக்கும் புதையல் வெளிப்பட்டது போல தலை மலை உச்சி சிகரம் கண்ணெதிரே தோன்றியது. இதை தானே எதிர்பார்த்து வந்தோம் என உள்மனது உற்சாகத்தில் ஆனந்த கூத்தாட தொடங்கியது. தலை மலையின் உச்சி சிகரம் நான் நினைத்ததைவிட பிரம்மாண்டமாக இருந்தது...
தொடரும்...
Very nice 👌
ReplyDeleteSuper...
ReplyDelete