பைந்தமிழ் காதல் - 8. My friend



பை என்பதற்கு பசுமை, அழகு, இளமை
என பல பொருள் உண்டு.
எனவே தான் பைங்கிளி, பைந்தமிழ் போன்ற
வார்த்தைகள் தமிழில் புழக்கத்தில் உள்ளன.


        மேடையிலிருந்து அவள் பொழிந்த கவிதை மழை, காற்றில் விரைவாய் கலந்து,  என் செவிகளில் நுழைந்து, மனதை அடைந்தது.


நட்பு என்னும் சொல்லுக்கு,
நல்லதொரு இலக்கணம் நீ...

உண்மை என்னும் வார்த்தைக்கு,
உரித்தான பொருள் நீ...

தனிமை என்னும் துயரத்தை,
தனிமைப் படுத்தியவன் நீ...

இனிமை என்னும் கவிதையை, என்
வாழ்வில் இயற்றியவன் நீ...

அன்பு என்னும் அனுபவத்தை
அள்ளி தந்தவன் நீ...

நீ... நீ... நீயே...நீக்கமற 
நிறைந்தாய் என் வாழ்வில்...



என் குறிஞ்சி மனதை
குளிர செய்தாய்... 

என் முல்லை வனத்தில் 
மலராய் மலர்ந்தாய்...

என் மருத நிலத்தில்
பயிராய் விளைந்தாய்...

என் நெய்தல் வாழ்வில் 
அலையாய் இருந்தாய்...

என் பாலை மனதில் 
மழையென பொழிந்தாய்...



வாடிய மன பயிருக்கு
நீராய் வந்தாய்...

தனிமை எனும் குழந்தைக்கு
தாயாய் நின்றாய்...

இயந்திர உலகில் 
இசையாய் நிறைந்தாய்...

என் தேவைகள் 
அனைத்தும் நீயே அறிவாய்...

நட்பெனும் சேவையை 
தொடர்ந்திடுவாய்...



என் வெறுமை கோடையில்
நிழலாய் நின்றாய்...

என் தனிமை குளிரில் 
போர்வையை தந்தாய்.....‌

என் துயர மழையில்
குடையாய் இருந்தாய்...

என் இளவேனில் காலத்தில்
வாசமாய் நிறைந்தாய்...

என் இலையுதிர் காலத்தை
இல்லாமல் செய்தாய்...



நேற்று என்பது அழிக்க 
முடியா இறந்த காலம்...

நாளை என்பது நிச்சயம்
இல்லா எதிர் காலம்....

நாம் நட்பாய் 
பழகிய சில காலம்...

இதுவே என் 
வாழ்வின் பொற் காலம்...

இக்காலம் என்றும் நீளவே
துதிக்கிறேன் இறைவனை தினந்தோறும்...



பொன் தேடி 
நிலத்தை அகழ்ந்தேன்...

பொருள் தேடி 
வியர்வையில் உழைத்தேன்...

இலக்கியம் தேடி
நூலகத்தில் நுழைந்தேன்...

இறை தேடி 
ஆலயத்தில் தொழுதேன்...

நானாக தேடாமல் 
தானாக எனைத் தேடி...

நாடிவந்த என் நட்பே!
நீயே என்றும் நிரந்தரம்...



நன்றி! வணக்கம்!!! ... என அவள் முடிக்கும் முன்பே விசில் சத்தமும், கரகோஷம் விண்ணை பிளந்தது; நிச்சயமாய் அவளைப் பாராட்டி அல்ல... அவளை சீக்கிரம் முடிக்கச் சொல்லி! இது கல்லூரி மாணவர்களின் இயல்பே. இக்கால மாணவர்களுக்கு கவிதையை ரசிக்கும் அளவு பொறுமையும் ரசனையும் இல்லை. எனவே அவர்கள் ஆண்டுவிழாவில் இவ்வாறு கிண்டல் செய்வது இயல்பு. நானும் அப்படிப்பட்ட மாணவர்களில் ஒருவனாகவே இருந்திருப்பேன், வேறு யாராவது இக்கவிதையை கூறியிருந்தால்...



    ஆனால் இன்று அப்படி இல்லை. நிச்சயமாக இது பரிசு பெறும் அளவிற்கு சிறந்த கவிதை இல்லை என்ற போதிலும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல் அவளின் இந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக எனக்காகவே பாடிய அக்கவிதையின் அர்த்தத்தை நான் நன்றாக உணர்ந்தேன்.

  நினைவுகள் என்றும் நீங்காது என்பர் ஆனால் நான் அதைப் பொய்யாக்குவேன். என் கடந்த கால நினைவுகளை வேரோடு பிடிங்கி எறிவேன். 

இனி ஆயுள் முழுவதும் அவளின் உண்மையான நண்பனாக இருப்பேன் என உறுதி பூண்டேன். 

தொடரும்...

அடுத்த பகுதியை படிக்க

Comments

Post a Comment