பைந்தமிழ் காதல் - 7. You have been selected

முந்தைய பகுதிகளை படிக்க


பைகளே (Backpacks) நமது பின்புற  விழிகள்.
பயணத்தின் போது , நாம் முன் நோக்கிப் பார்க்க
அவை பின் நோக்கிப்  பார்க்கும்...  



இன்று (2006ம் ஆண்டு)


        "Mr. Vetriselvan, Please come to the meeting room" என இரண்டாம் முறை கூப்பிட்ட பிறகே நிகழ்காலத்திற்குள் மீண்டும் வந்தேன். சுமார்  20 பேர் கலந்து கொண்ட இந்த நேர்முகத்தேர்வில், நான் உட்பட 3 பேர் மட்டும் ஒருவர் பின் ஒருவராக அறைக்குள் அழைக்கப் பட்டோம். மீட்டிங் அறையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு அதிகாரியும், நாம் முன்பே சந்தித்த அந்த நவநாகரீக மங்கையும் இருந்தனர். உள்ளே நுழைந்தவுடன் எங்களை அமரச் செய்து "Congratulations! you have been selected" என அவர் கூறிய வார்த்தைகள் என் நெஞ்சில் பால் வார்த்தது. மகிழ்ச்சி வானில் என்னை சிறகடித்து பறக்கச் செய்தது.   இந்த தருணத்திற்காக  தானே கடந்த ஓராண்டாக காத்திருந்தேன்... வெற்றி! வெற்றி! என என் மனம் எனது பெயரையேச் சொல்லியபடியே ஆனந்தக் கூத்தாடியது. பின்னர் தங்களது உயர் அதிகாரி ஒருவர் இன்னும் சிறிது நேரத்தில் எங்களை சந்தித்து சம்பளம் மற்றும் பிற விவரங்களை தெரிவித்த பின் பணி ஆணையினை (Offer letter) வழங்குவார் என்றும் அதுவரை அந்த அறையிலேயே சிறிது நேரம் காத்திருக்குமாறும் கூறினர்...

 நான் மீண்டும் காத்திருக்க தயாரானேன்... 
முன்பு போல் தேர்வு முடிவுக்காக அல்ல. எனது அடுத்தகட்ட திட்டத்திற்காக... காத்திருக்கும் இந்த சிறிய இடைவெளியில் இக்கதையைப் படிக்கும் உங்களை மூன்றாண்டுகளுக்குப் முன் சென்று மீண்டும் என்னையும் அவளையும் எங்கள் கல்லூரியின் ஆண்டு விழாவில்  சந்திக்குமாறு பணிவோடு அழைக்கிறேன்.


2003ம் ஆண்டு

        இன்று எங்கள் கல்லூரியின் ஆண்டு விழா. தற்போது மூன்றாமாண்டு படிப்பதால் நாங்கள் சீனியர் ஆகிவிட்டோம் என்பதால் சற்று உற்சாகமாகவே இருந்தோம். அதிலும் இவ்வாண்டில் கிடைத்த அவளின் நட்பு என்னை கூடுதலாக உற்சாகப்படுத்தியது. கடந்த சில மாதங்களாக அவளிடம் உண்மையான நட்புடன் பேசி பழகியிருக்கிறேன். அவளும் என் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறாள். கள்ளம் கபடம் இல்லாமல் பேசிப் பழகும் வாய்ப்பு நட்பில் மட்டுமே சாத்தியம் என நன்றாக உணர்ந்திருந்தேன் என்பதால் காதலேனும் கிளர்ச்சியை விட நட்பெனும் குளிர்ச்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் ஆண்டு விழாவின் மறுநாள் அவளின் பிறந்தநாள் என்பதால் ஆண்டு விழாவில் அவளுக்கு ஒரு சிறிய பரிசளித்து என் நட்பினை பின் தொடர வேண்டும் என தீர்மானித்தேன். நான் இதற்கு முன் யாருக்கும் (குறிப்பாக பெண்களுக்கு) பரிசுகள் வாங்கித் தந்து அனுபவம் இல்லாததால், பல கட்ட அதி தீவிர யோசனைக்கு பிறகும் என்ன வாங்க வேண்டும் என்ற முடிவுக்கு வர முடியவில்லை. சற்று முட்டாள்தனமாக தோன்றினாலும் பரவாயில்லை என்று இறுதியாக அவளிடமே கேட்டுவிட்டேன். அதற்கு சிரித்தபடியே "நீ எதை கொடுத்தாலும் எனக்கு  surprise தான் வெற்றி. Please don't ask me" எனக்கூறி புறமுதுகிட்டு சென்றாள். அப்போது அவள் முதுகில் தொங்கிக் கொண்டிருந்த நமது நீல நிற பை நண்பன் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான்.

        அதுவும் நல்லது தான். அவன் சிரித்த சிரிப்பில் இருந்து எனக்கு ஒரு சிந்தனை தோன்றியது. அதன்படி ரங்கநாதன் தெருவிற்கு சென்று நமக்கு ஏற்கனவே பரிச்சயமான பை கடைக்கு (Bag shop) மீண்டும் சென்று இம்முறை அழகான சிறிய கைப்பையை (Handbag) வாங்கி வந்தேன். ஏனெனில் கைப்பை தான் பெரும்பாலான பெண்களின் கைகளில் எப்போதும் தவழும். அதுபோலவே எனது நட்பும் எப்போதும் அவளுடன் இருக்க வேண்டும் என எண்ணினேன்.  நீலநிறம் எனது பழைய எண்ணங்களை நினைவுபடுத்த கூடும் என்பதால் அதைத் தவிர்த்து பிங்க் பையை தேர்வு செய்தேன். அதில் பூட்டியிருந்த அழகான ஒரு சிறு சங்கிலியும் அப்பையை தேர்வு செய்ய ஒரு காரணமாகும்.  அவளுக்கு தெரியாமலேயே சர்ப்ரைஸாக கொடுக்க எண்ணினேன்.


        ஆண்டு விழா ஆரம்பித்தது. ஒவ்வொருவராக தங்கள் திறமையை மேடையில் காட்டிக் கொண்டிருந்தனர். இவள் எதைப் பற்றிப் கவிதை பாடப் போகிறாள் என இதுவரை என்னிடம் கூறவில்லை. ஏற்கனவே பலமுறை கேட்ட போதும் சர்ப்ரைஸ் எனக் கூறி முடித்து விட்டாள்‌. இவளுக்கான நேரம் வந்தபோது, இவளது பையை என்னிடம் தந்துவிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றாள். போகும்போது என் காதில் "வெற்றி, உன்னை பற்றி தான் இன்று கவிதை சொல்ல போகிறேன்" என கூறிச் சென்றாள். என்னைப் பற்றி சொல்ல அவளிடம் என்ன இருக்கிறது??? ஒருவேளை அவளுக்கும் என் (முன்) போல் காதல் எண்ணம் ஏதேனும் இருக்கக்கூடுமோ? என்ற மெல்லிய சலனம் என் மனதில் மீண்டும் எட்டிப் பார்க்க, அச்சலனத்தை என் மனமுதிர்ச்சியால் தகனம் செய்தேன். 

    பார்க்கலாம் அவளது சர்ப்ரைஸ் எனக்கு பிடித்திருக்கிறதா? அல்லது எனது சர்ப்ரைஸ் அவளுக்கு பிடித்திருக்கிறதா? என்று...


    என் கடன் பணி செய்வதே என்பதுபோல், தீய எண்ணங்களை புறந்தள்ளி, அவள் பாடச் சென்ற அந்நேரத்தில் அவளறியாமல் நான் வாங்கி வந்த சிறிய கைப்பையை அவளது கல்லூரி பையினுல் வைத்துவிட்டேன். அப்போது எனது முன்னாள் காதலின் சின்னமாக விளங்கிய அந்த நீல நிற பை என்னைப் பார்த்து ஏளனமாக சிரித்தது போல் தோன்றியது. ஒருவேளை இன்னாள் நட்பின் சின்னமாக நான் வாங்கி வந்த பிங்க் நிற கைப்பையை காட்டிலும் நானே பெரியவன் என்ற அகம்பாவ எண்ணம் அப்போது அதற்கு தோன்றியிருக்கக்கூடுமோ? என்பதை நானறியேன்...


அப்போது தான் இனிய குரலோசை என் செவிகளில் விழுந்தது...


தொடரும்...


அடுத்த பகுதியை படிக்க

Comments

Post a Comment