முந்தைய பகுதிகளை படிக்க
நாம் எப்போதோ மறந்துவிட்ட ஒன்றை,
வேறொரு தருணத்தில் எடுத்துத் தந்து
நம்மை ஆச்சரியப்படுத்தும் குணம்
கடவுளுக்கு மட்டுமல்ல பைகளுக்கும் உண்டு...
புயலுக்கு பின் அமைதி மட்டுமல்ல, ஆனந்தமும் கூடதான்... கடந்த ஓராண்டாக என் வாழ்வில் வீசிய புயல் இன்று ஓய்ந்தது. ஓய்ந்தது மட்டுமின்றி நான் தொலைத்த என் வசந்தத்தையும் மீண்டும் என்னிடமே கொண்டு வந்து சேர்த்தது... "Happiness always returns to port" என்ற ஆங்கில வரிகளுக்கேற்ப எனது மகிழ்ச்சி மீண்டும் என்னை தேடி வந்தது...
"என்னாச்சு வெற்றி? உடம்பு சரியில்லையா?" என அவள் கேட்ட கேள்விகளுக்கு ஏதேதோ சொல்லி சமாளித்து வைத்தேன். இன்று அவள் டிப்பார்ட்மெண்டில் பாரம்பரிய தினம் (Traditional day) என்பதால் பாவாடை தாவணியில் வந்திருப்பதாக கூறியவள், பின்பு பேசியது எதுவும் என் காதில் விழவில்லை... அன்று அடித்த பாபா கோவிலின் மணி ஓசை மட்டுமே என் காதில் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது என்ற போதிலும் கடைசியாக கூறிய ஒரு செய்தி. அம்மணியோசையும் கடந்து என் இதயம் வரை நுழைந்து என்னை ஆனந்தக் கூத்தாட செய்தது...
ஆம்! அவளும் இனி பஸ்ஸில் தான் கல்லூரிக்கு வரப் போகிறாளாம்...
நான் காரணம் ஏதும் கேட்கவில்லை. அவளும் பேருந்தில் வருவதற்கான காரணத்தை கூறவில்லை. எது எப்படியோ நடப்பதெல்லாம் நல்லதற்கே என்ற எண்ணத்தில் எனது பயணத்தை தொடர்ந்தேன். முதலில் சில நாட்கள் தயங்கி தயங்கி பேச ஆரம்பித்த நான், வெகுவிரைவில் நன்றாக பேச ஆரம்பித்தேன். சிலநாள் பழக்கத்திலேயே ஓரளவு நன்றாக பேசும் அளவிற்கு நண்பர்களானோம். இப்போதெல்லாம் நான் பேருந்தில் தூங்குவதில்லை. அப்பா குணமடைந்து பழையபடி வேலைக்குச் செல்வதும் ஒரு காரணம் என்ற போதிலும், பிரதான காரணம் அவளே!. அவளிடம் பேச பேச தான் நான் செய்த தவறு எனக்கு புரிய ஆரம்பித்தது. ஆண்கள் பள்ளியிலேயே படித்த எனக்கு, பொதுவாக பெண்களிடம் அதிகமாகப் பேசிப் பழக்கமில்லை. இது கூட அவளைக் கண்டவுடனேயே என் மனதில் ஏற்பட்ட சலனத்திற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஒரு பெண்ணிடம் நேரடியாக கூட பழகாமல், அவள் மனதை புரிந்து கொள்ளாமல் கண்டவுடனேயே காதல் கொண்ட, எனது எண்ணங்களை வெட்கப்பட்டேன்.
அவளுடன் பேசி பழக ஆரம்பித்த சில நாட்களுக்குப் பிறகு அவள் பேருந்தில் வர ஆரம்பித்ததற்கான காரணத்தை கூறினாள். இவளுடன் நட்பாக பழகிய வேறொரு மாணவன் இவளின் மீது ஒரு தலையாக காதல் கொண்டு தினமும் இரயில் நிலையத்தில் தொல்லை கொடுத்தானாம். அவள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காதால் தனது பயணப் பாதையை மாற்றிக் கொண்டதாக தெரிவித்தாள். அவன் யார் என்று அவள் என்னிடம் கூறவில்லை. நானும் அவளிடம் கேட்கவில்லை. பொதுவாக நமது அனுபவங்களே நமக்கு பாடங்கள் கற்றுத் தரும் என்பர். ஆனால் அவளது அனுபவம் எனக்கு பாடம் கற்றுக் கொடுத்தது. இப்படிப்பட்ட ஒரு அனுபவத்திற்கு பின்பும், மற்றொரு ஆணான எண்ணிடம் எப்படி சகஜமாக பழகி நண்பனாக ஏற்றுக் கொண்டாள் என்பது எனக்கு சற்று ஆச்சரியமாகவே இருந்தது. நல்ல வேளை நான் தவறு செய்யவில்லை. இதுவரை அவளிடம் தவறாக எதையும் பேசவில்லை. கடவுளுக்கு நன்றி! இனியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என என் மனம் என்னை அறிவுறுத்தியது. நாட்கள் செல்லச் செல்ல அவளது நட்பே எனது முதன்மையான எண்ணமாக மாறி அவள் மீது எனக்கு இருந்த காதலை புறம் தள்ளியது. கல்லூரியின் மூன்றாம் ஆண்டு இறுதி நாட்கள் நெருங்க நெருங்க எங்களுக்குள் இருந்த நட்பு பலப்பட்டது. எனது மன சலனங்களை மறந்து அவளுக்கு நல்ல நண்பனாக இருக்க முடிவு செய்தேன்...
பேருந்தில் ஒரே சமயத்தில் இருவருக்குமே இடம் கிடைப்பது அரிது.
அச்சமயங்களில் யார் ஒருவருக்கு இடம் கிடைத்தாலும் அவர்கள் மற்றவர்களின் பையையும் வாங்கி தங்கள் மடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எங்களுக்குள் உள்ள ஒரு எழுதப்படாத ஒப்பந்தமாகும். பொதுவாக பெண்களுக்கு பேருந்தில் இடம் கிடைப்பது எளிது என்பதால் பெரும்பான்மையான நாட்களில் அவள் தான் என் பையை சுமப்பாள் எனினும் சில நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும் போது அவளது நீல நிற பையை நான் சுமக்கும் வாய்ப்புகள் உண்டு. அப்போதெல்லாம் அவளது பை எனது பழைய நினைவுகளை நியாபகப்படுத்தும். ஒரு சில சமயங்களில் எங்கள் இருவரின் பைகளின் கைப்பிடிகளும், பட்டைகளும் ஒன்றோடொன்று பிணைந்திருக்கும். எங்களைப் போலவே எங்கள் பைகளும் நாட்கள் செல்லச் செல்ல ஒன்றுடன் ஒன்று கூடிப் பேசி தங்களின் நட்பையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்தன போலும்.
It's always a good time to begin...
மூன்றாம் ஆண்டு இறுதித் தேர்வு நெருங்க சில நாட்கள் இருக்கும்போது, எங்கள் கல்லூரியின் ஆண்டு விழா வந்தது. என் கல்லூரியின் வழக்கப்படி ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக ஒரு நாள் முழுவதும் காலை முதல் மாலை வரை கல்ச்சுரல் டே (Cultural day) கொண்டாடப்படும். இதில் மாணவ மாணவிகள் ஆடல், பாடல் மற்றும் பிற கலைகளில் தங்களுக்கு உள்ள திறமையைக் காட்டலாம். கல்லூரிப் படிப்பை சமாளிப்பதற்கே தனித்திறமை வேண்டும். இதில் மேற்கொண்டு வேறு திறமைகளை எங்கு தேட என நான் எண்ணிக் கொண்டிருக்க...
இசையில் ஆர்வமுள்ள அவளோ ஆண்டுவிழாவில் கவிதை பாட தயாரானாள்...
தொடரும்...
அடுத்த பகுதியை படிக்க
train trackla bus poguthu....
ReplyDeleteAppo nalaiku full ah kavithai ah..... so exciting.....
ReplyDeleteJil Jung Juk...
ReplyDelete