பைந்தமிழ் காதல் -10. Meeting


2006ம் ஆண்டு  (இன்று) 

        சிறிது நேர காத்திருப்புக்கு பிறகு அவர்கள் கூறிய உயர் அதிகாரியை சந்திக்கும் வாய்ப்பு நல்கியது. சென்னை புறநகரில் உள்ள தொழிற்சாலையில் பணி. வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை. தினமும் வீட்டில் இருந்து அழைத்துச் செல்லவும், திரும்ப விடவும் பேருந்து வசதி. இலவச மதிய உணவு. இவற்றையெல்லாம் விட கைநிறைய சம்பளம், எதிர்காலத்தில் திறமைக்கேற்ப நல்ல வாய்ப்புகள் என அவரது நிறுவனத்தில் நான் பெறப்போகும் சலுகைகளை பட்டியலிட்டார். குறிப்பாக அவர் பேசியவிதம் மிகவும் ஊக்கப்படுத்துவதாக அமைந்து மனநிறைவை தந்தது. என்னை அறியாமல் அவர் மீது ஒரு மரியாதை உண்டானது. அப்பெரிய மனிதரிடமிருந்து பணி உத்தரவை பெறும்போது, என் மனதில் இருந்த பாதி பாரம் குறைந்தது போல் தோன்றியது. அன்றும் அப்படித்தான் ஒரு பெரிய மனிதரை சந்தித்தேன். ஆனால் அன்றைய சந்திப்பு இன்று போல் அவ்வளவு இனிதாக அமையவில்லை.


2003ம் ஆண்டு

        ஆண்டு விழாவின் மறுநாள் கல்லூரி விடுமுறை. அவளின் அழைப்பை ஏற்று  அவளது பிறந்த நாளன்று மாலை அவர்கள் வீட்டிற்குச் சென்றேன். குறிப்பாக அவள் தனது அப்பாவைப் பற்றி கூறிய வார்த்தைகள் அவர் மீது மிகவும் மரியாதையை ஏற்படுத்தி இருந்தது. எனவே அப்பெரிய மனிதரை சந்திக்க வேண்டி ஆவலுடன் சென்றேன். ஆனால் முன்தினம் அவ்வளவு உற்சாகமாக என்னை அழைத்த அவள் முகம் இன்று களையிழந்து காணப்பட்டது. அவள் என்னை வரவேற்ற விதம் மிகவும் சம்பிரதாயமாகவே இருந்தது. உடல்நிலை ஏதும் சரி இல்லையா? என நான் கேட்க "அப்படி ஏதும் இல்லை" என பதிலுரைத்தாள் என் முகத்தை ஏறெடுத்துப் பார்க்காமலேயே... அது எனக்கு சரியாக தோன்றவில்லை. அவள் வீட்டு வரவேற்பறையில் அவளது பெற்றோர் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்து பிறகு அவள் அமைதியானாள். எனக்கும் எப்படி பேச வேண்டும் என்பது தெரியவில்லை என்பதால் நானும் அமைதியாகவே இருந்தேன்‌. 


        சிறிது நேரம் நீண்ட இந்த அமைதியை அவளது தந்தையால் மட்டுமே உடைக்க முடிந்தது. 

 "அப்பா என்ன பண்றாரு வெற்றி?" என சகஜமாக பேச ஆரம்பித்தார்‌. 

நானும் அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சகஜமாக பதில் கூற ஆரம்பித்தேன். 

சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு "உன்ன பத்தி நிறைய சொல்லி இருக்கா, உன்ன பாக்கணும்னு தோணுச்சு. அதனால தான் வர சொன்னேன்" என்றார். 

"உங்களைப் பத்தியும் நிறைய சொல்லி இருக்கா சார்"

அதற்கு அவர் சிரித்துக்கொண்டே "அப்படி என்ன சொன்னா?" என கேட்டார். 

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. முந்தைய தினம் அவள் கூறிய வாழ்க்கையின் படிநிலைகள் (steps of life) அதாவது முதலில் படிப்பு, அடுத்து வேலை, பிறகுதான் காதல், கல்யாணம் போன்றவற்றை அப்படியே ஒப்பித்தேன்.

"அத பத்தி நீ என்ன நினைக்கிற வெற்றி?" 

"நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு சரி சார்" 

"அப்படியா சொல்ற?" என அவர் கேட்ட தோரணையில் சிறிது ஏளனம் செய்வது போல் இருந்தது என்றாலும் தவறாக நினைக்க காரணம் ஏதுமில்லாததால் நான் அதை பெரிதாக கவனிக்கவில்லை.  

        நாங்கள் இவ்வளவு நேரம் உரையாடிய போதும், நடுவில் அவள் ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனமாக இருந்தது எனக்கு ஆச்சரியம் தந்தது. வழக்கமாக நாங்கள் சந்திக்கும் போது அவள் தான் அதிகம் பேசுவாள். நான் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசுவேன். ஒருவேளை அவள் வீட்டில் அதிகம் பேச மாட்டாள் போலிருக்கிறது என எண்ணினேன். 

        பிறகு நேரமாகிவிட்டதால் அவர்கள் கொடுத்த காபியை பருகிய பின் அவர்களிடமிருந்து விடை பெற தயாரானேன். விடைபெறும் நேரத்தில் கூட அவள் எதுவும் பேசாமல் இருந்தது சற்று நெருடலாகவே இருந்தது. கிளம்பும் முன் "நான் கொடுத்த கிப்ட் பிடிச்சிருந்ததா?" என நான் கேட்க, அதற்கு அவள் தன் அப்பாவின் முகத்தை பார்க்க,  நடப்பது எதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போது அவள் கண்களின் ஓரம் இருந்த ஈரத்தை கண்ட நான், அதற்கான காரணத்தை கேட்கும் சூழ்நிலை அங்கு இல்லை என உணர்ந்து விடைபெற்றேன். மனதில் பல வினாக்களோடு...



        அன்றிரவு எனக்கு உறக்கம் வரவில்லை. மனதில் கேள்விகள் பல இருந்தும் விடையேதும் இல்லை. ஒருவேளை அவளின் அப்பா எங்கள் நட்பை தவறாக எண்ணி விட்டாரோ? என்ற கேள்விக்கு,  அவர் பேசிய விதம் அவ்வாறு இல்லை என்றே நினைக்கத் தோன்றியது. மேலும் அவர் சகஜமாக பழகிய விதம் அவரை பற்றி அவள் கூறியது உண்மைதான் எனவும், அவர் ஒரு ஜென்டில்மேன் என்றே நினைக்க தோன்றியது. இவளுக்குதான் ஏதோ பிரச்சினை போலிருக்கிறது ஆனால் அதை அங்கு  நம்மிடம் கூறும் சூழ்நிலை இல்லை போலும். எங்கே போய்விடப் போகிறாள்? நாளை காலை கல்லூரிக்கு வரும்போது கேட்டு விடலாம் என்று எண்ணி நான் உறங்கச் செல்ல பின்னிரவு ஆகிவிட்டது. நீண்ட மனப் போராட்டத்திற்கு பிறகே உறக்கம் வந்தது. அதில் கனவும் வந்தது. 

    கனவில் நான் அவளுக்கு கொடுத்த கைப்பையை அவள் என் முகத்தில் விட்டெறிந்து "இது எனக்கு பிடிக்கல" என கூறுவது போல் தோன்றியதின் காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை...

தொடரும்...

அடுத்த பகுதியை படிக்க

Comments

Post a Comment