முந்தைய பகுதிகளை படிக்க
பைகளும் மனங்களும் ஒன்றே...
ஓரளவு தான் பாரம் தாங்கும்.
அளவு கடந்த அழுத்தம்
அதை கிழித்து விடக் கூடும்...
நாம் மேற்கொள்ளும் அனைத்து பயணங்களும் இனிமையாக அமைவதில்லை. எனது இரயில் பயணமும் அப்படியே... அவளுடன் இணைந்து எனது பயணத்தை துவங்க எண்ணிய என் எண்ணத்தில் மண் அள்ளி போட்டது மகளிர் சிறப்பு இரயில். ஆம்! தினமும் காலையில் லேடீஸ் ஸ்பெஷல் இரயிலில் தான் அவள் செல்கிறாள். சரி காலையில் தான் அப்படி என்றால், மாலையில் திரும்பி வரும் போதும் தன் தோழிகளுடன் சேர்ந்து மகளிர் பெட்டியில் தான் பயணிக்கிறாள்... அப்பாவிடம் போராடி இரயில் பாஸ் வாங்கியது விழலுக்கு இறைத்த நீர் போன்றானது. எப்போதாவது தூரத்திலிருந்து என்னைப் பார்த்து அவள் உதிர்க்கும் சிறு புன்னகையே இப்பயணத்தில் எனக்கு ஆறுதலாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல அந்த ஆறுதலே ரணமாய் மாறி என் நெஞ்சை முள்ளாய் தைத்தது. இலவு காத்த கிளி போல தினமும் தூரத்தில் இருந்தே அவளை பார்த்து ஏங்க ஆரம்பித்த தருணத்தில் தான் என் வீட்டில் நடந்த ஒரு நிகழ்வு என் நெஞ்சில் பேரிடியாய் இறங்கியது.
வழக்கம் போல் வேலைக்குச் சென்று திரும்பும் வழியில் என் அப்பாவின் வாகனம் ஒரு நாள் விபத்துக்குள்ளானது. ஓரளவிற்கு பெரிய அடிதான் என்றபோதிலும் நல்லவேளையாக உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை. இருந்தபோதிலும் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு பெரிய அளவில் கால்களுக்கு சிரமம் கொடுக்க கூடாது என டாக்டர் அறிவுறுத்தினார். என் அப்பா வேலை செய்யும் அலுவலகத்தின் முதலாளி மிகவும் நல்லவர். இவரே எனது படிப்புக்கு தேவையான பணத்தை கடனாகத் தந்து உதவியவர். அப்பாவின் கால் சரியாகும் வரை வேலைக்கு வர வேண்டாம் என்றும், அது வரை சம்பளம் மாதம் மாதம் வீடு தேடி வந்துவிடும் என்று கூறினார். இது எங்களுக்கு ஆறுதலாக இருந்த போதிலும், மருத்துவ செலவுகளையும், பிற கூடுதல் செலவுகளையும் சமாளிப்பது சிரமம் ஏற்பட்டது. இதனால் தினமும் காலையில் வீடு வீடாகச் சென்று பால் பாக்கெட் போடும் வேலையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு என் மேல் விழுந்தது.
தினமும் காலை நான்கரை மணிக்கு எழவேண்டும். ஏழரை மணி வரை வேலை. அதன்பின் அவசர அவசரமாக கிளம்பி கல்லூரிக்குச் செல்ல வேண்டும். சில நாட்களில் காலை உணவருந்த கூட நேரம் இருக்காது. கூடுதலாக இரயில் பாஸ் எடுக்க பணம் இல்லாததால் என் விதியை நொந்து கொண்டு, மீண்டும் பேருந்தில் பயணம் செய்ய ஆரம்பித்தேன். அதிகாலை சீக்கிரம் எழுவதால், சில நேரங்களில் வகுப்பறைகளிலும், பெரும்பான்மையான நேரங்களில் பேருந்துப் பயணங்களிலும் தூங்க ஆரம்பித்தேன். நான் இறங்க வேண்டியது கடைசி ஸ்டாப்பிங் தான் என்பதால் பாதகம் ஏதுமில்லை.... இத்தூக்கம் ஒன்றே அவளை அடிக்கடி காண முடியாத என் ஏக்கத்தை ஓரளவு தீர்க்கும் மருந்தாக அமைந்தது.
"இடுக்கண் வருங்கால் நகுக!" (துன்பம் வரும் நேரத்தில் சிரி) என்பது முதுமொழி. தொடர்ந்து துன்பங்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கும் போது, ஒருவன் தன் நிலையை எண்ணி மட்டுமே சிரிக்க முடியும்! என் நிலையும் அப்படித்தான் இருந்தது. இந்த இன்னல்களிடையே கல்லூரியின் இரண்டாம் ஆண்டு முற்று பெற்றது. மேலும் விடுமுறை நாட்களில் கூட பகுதி நேர வேலைக்குச் செல்ல வேண்டிய அவல நிலை, என் மனதில் பூத்த காதல் அரும்பை கிள்ளி எறிந்து, எனது ஆசைகளை அதல பாதாளத்தில் தள்ளி புதைத்தது...
இரண்டாம் ஆண்டில் ஏற்பட்ட இச்சோதனைகள் மூன்றாம் ஆண்டு துவக்கத்திலும் தொடர ஆரம்பித்தது... அப்பாவிற்கு உடல் நலம் தேறினாலும், தினமும் காலையில் எனது உதவி அவருக்கு தேவைப்பட்டது. கடும் சோர்வு காரணமாக வழக்கம்போல பேருந்தில் தூங்க ஆரம்பித்தேன். இக்குறுகிய தூக்கங்களிலும் சில நேரங்களில் சிறுசிறு கனவுகள் வருவதுண்டு... கனவுகளில் சில நேரம் அவள் வருவாள் என்ற போதிலும் அவை அனைத்தும் பகல் கனவுகளாகவே முடிந்துவிடும்...
இரவு எவ்வளவு நீண்டதாக இருந்தபோதிலும் விடியல் என்பது நிச்சயம் உண்டு... அதே போல் எனக்கு ஏற்பட்ட சோதனைகளுக்கெல்லாம் முடிவு வரும் காலம் நெருங்கியது. இன்றைய கனவில், கடந்த ஆண்டு சாய்பாபா கோவில் எதிரே வந்த புஷ்பக விமானம் மீண்டும் விண்ணிலிருந்து இறங்கி வந்தது. தேவதை போல அவள் மீண்டும் என் கண்ணெதிரே தோன்றினாள். அதே பச்சை ரவிக்கை - வெள்ளை தாவணி, அன்று போலவே சந்தனத்திற்கு மேல் ஒரு சிறு சாந்து பொட்டு. என்னை எள்ளி நகையாடிய அதே தோடுகள்... எனது அருகே வருகிறாள்... "எழுந்திருங்க வெற்றி! Bus stop வந்துருச்சு!" என்கிறாள்... பேசியது அவள் மொழியா? அல்லது விழியா? என்ற அதே குழப்பத்தில் மீண்டும் தவிக்கிறேன்... எனது தோளில் கைவைத்து லேசாக உலுக்குகிறாள் ... இப்போது நான் தெளிவடைந்து உணர்கிறேன்... நான் கண்டது கனவல்ல!!!
ஆம்!!! அவள் தான்!!! அவளே தான்!!!!!
மீண்டும் என் வாழ்வில்...
தொடரும்...
அடுத்த பகுதியை படிக்க
Sila varikal kavathaikal serkalam en virupam ..... Babu
ReplyDeleteWe have special episode only for kavithai
DeleteWaiting for next chapter...
ReplyDeleteWow such an interesting episode....
ReplyDelete