பைந்தமிழ் காதல் - 3. Follow me

முந்தைய பகுதிகளை படிக்க


பைகளே அனைத்தையும் 
பரிபூரணமாக்குபவை.  எனவே தான் 
நாம் வாங்கும் அனைத்து பொருட்களும் பையிலிட்டு தரப்படுகின்றன...


 2002ம் ஆண்டு

நான் காத்திருக்கிறேன்..

        மேற்கு மாம்பலம், ஜெய்சங்கர் தெருவிலுள்ள சாய்பாபா கோவில் வாசலில் அவளுக்காக காத்து இருக்கிறேன்... அவள் இங்கு தான் என்னை வரச் சொன்னாள். நான் நாத்திகன் இல்லை என்ற போதிலும், பொதுவாக எனக்கு கோயிலுக்குச் செல்லும் பழக்கம்  இல்லை. எனினும் அவள் வருவதாக கூறியதால் இங்கே நிற்கிறேன். இக்கோயில் இருக்கும் தெருவில் உள்ள துரித உணவகத்திற்கு அடிக்கடி என் நண்பர்களுடன் வரும் நான், ஒருமுறை கூட கோயிலினுள் சென்றதில்லை.

        அவளுக்காக காத்திருக்கும் இந்த சிறிய இடைவெளியில் என் மனதானது, கால எந்திரத்தில் ஏறி, ஒரு ஆண்டுக்கு முன்பு பயணத்து சென்று மீண்டுமொருமுறை ரங்கநாதன் தெருவில் உள்ள பை கடைக்கும், எங்கள் கல்லூரி முதல் நாள் விழாவிற்கும் சென்று வந்தது. அன்று நாங்கள் சந்திக்கத் தவறியதையும், இன்று சந்திக்கப் போவதையும் ஒப்பிட்டு பார்த்தது...

        அப்போது தான் விண்ணிலிருந்து வந்த புஷ்பக விமானத்திலிருந்து இறங்கி வந்த தேவதை போல அவள் என் எதிரே தோன்றினாள்.  பச்சை ரவிக்கையின் மேல் வெள்ளை தாவணியும் உடுத்தி, சிறு நெற்றியில் சந்தனத்திற்கு மேல் சிறு சாந்து பொட்டும் வைத்திருந்த அவள் திருமுகத்தை நான் பரிபூரணமாக தரிசிக்கும் முன்பே, அம்முகத்தை கொண்டே என்னை உள்ளே வர சொல்லி சைகை செய்துவிட்டு கோயிலுக்குள் விரைந்து சென்றாள். எதற்காக கோயிலுக்குள் கூப்பிடுகிறாள் என்று புரியாவிட்டாலும்,  கணநேரத்தில் அவள் சைகையை புரிந்து கொண்ட நான் கேள்வி ஏதுமின்றி மந்திரித்து விட்ட ஆடு போல அவள் பின்னாலேயே செல்கிறேன்...

இது முதல்முறை அல்லவே!... 
        ஏற்கனவே ஒரு முறை அவள் பையை பின் தொடர்ந்து சென்ற நான், தற்போது அவள் மெய்யை பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன்... ஒருவேளை இது வாழ்க்கை முழுதும் தொடர கூடுமோ???  என்ற கேள்விக்கு என்னிடம் தற்போது விடையில்லை என்ற போதிலும் அவளை பின்பற்றி கோவிலுக்குள் நுழைகிறேன்.   இன்று வியாழக்கிழமை மாலை, சாய்பாபாவிற்கு ஆரத்தி நேரம் என்பதால் கோவிலில் சற்று கூட்டம் அதிகம் போலும். கூட்டத்திலிருந்து சற்று விலகி நின்ற அவளின் அருகில் நான் சென்றதும், "Thank you so much"   எனக்கூறி, அவளின் கையில் இருந்த ஒரு சிறிய பையை (Carrying bag) வேகவேகமாக எனது கையில் திணித்தாள்... 


        நான் கேட்ட வார்த்தைகள் வெளிப்பட்டது, அவளின் மொழியிலிருந்தா? அல்லது மீன்கள் போன்றிருந்த இரு விழியிலிருந்தா?  என அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த நான் குழப்பத்தில் ஆழ்ந்த போது, அவள் செவிகளில் தொங்கிக்கொண்டிருந்த  தோடுகள் ஆடிய விதம் என்னை எண்ணி எள்ளி நகையாடுவது போலிருந்தது.‌.. இவற்றையெல்லாம் கடந்து நான் பேச வாயெடுத்தபோது, "Once again thanks for your help! Please, நாளைக்கு collegeல பேசிக்கலாமே" என்று அவள் கூறிய வார்த்தைகள் என் காதுகளில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட ஆரம்பித்தது.  அப்போது கோவிலின் ஒலித்த மணியோசை சாய்பாபாவிற்கு ஆரத்தி ஆரம்பித்துவிட்டதை மட்டுமில்லாமல், எனது வாழ்விலும் வசந்தம் வந்துவிட்டது என்பதை உறுதி செய்தது...


        என்னிடம் இவ்வாறு கூறிவிட்டு சென்ற அவள் நேராக பெண்கள் வரிசையின் உள்ளே சென்று அமர்ந்தாள். ஆரத்தி ஆரம்பித்தது... எல்லாரும் இறை தரிசனம் செய்து கொண்டிருக்க, நானோ தூரத்தில் நின்றபடியே என் மனவுலகில் இவளை தரிசனம் செய்து கொண்டிருக்கிறேன். ஆரத்தி முடிந்து அவள் உட்பட அனைவரும் கலைந்து சென்ற சிறிது நேரத்திற்கு பிறகு தான் இப்பூமிக்குள் மீண்டும் வந்தேன். அவள் என் கையில் திணித்த பை நினைவுக்கு வர அதை திறந்து பார்த்தேன். அதில் நான் கொடுத்த சயின்டிஃபிக் கால்குலேட்டரும், மிக சிறிய காகிதத்தில் "Many thanks" என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது... எனது கால்குலேட்டரை விட அந்த காகிதத்தையும், அதை சுமந்து வந்த அந்தப் பையையும் பத்திரப்படுத்திக் கொண்டேன். 

ஆயிரம் இருந்த போதும், முதன்முதலில் அவள் எனக்களித்த பரிசல்லவா???!!!

தொடரும்...

அடுத்த பகுதியை படிக்க

Comments

  1. Wow..I like love stories so much. but,your writings are live in my front of eyes..eagarly waiting for next episode..🤩

    ReplyDelete

Post a Comment