பொதிகைமலை பயணம் - பாகம் 4 சிவ தரிசனம்
முந்தைய பாகங்களை படிக்க
பொதிகைமலை பயணம் - பாகம் 1 முதல் அடி
பொதிகைமலை பயணம் - பாகம் 2 அதிருமலை பயணம்
பிப்ரவரி 14 காலை 10.50 மணி
அகத்தியரை கண்டோம் !
பிறவிப்பயனை அடைந்தோம் !
மீண்டும் மீண்டும் அவரை தரிசிக்க பேராவல் கொண்டோம் !!!
தமிழ் கூறும் நல் உலகிற்கு பல அருட்பெரும் தொண்டுகள் புரிந்த அகத்திய மாமுனி, பொதிகை மலை உச்சியில் ஏகாந்த வனத்தில், வலது கையில் கமண்டலமும், இடது கையில் தண்டமும் ஏந்தியவாறு நமது தமிழ்நாட்டை நோக்கியவாறு வீற்றிருக்கிறார். இது நம் தமிழ்நாட்டிருக்கு கிடைத்த மிகப்பெரும் பேராகும். அகத்தியரை தொட்டு பூஜை செய்ய தற்போது அனுமதியில்லை. எனவே அவர் முன் நின்று நன்றாக பிராத்தனை செய்து கொண்டோம்.
பொதிகை சிகரத்தின் சீதோஷண நிலை உடனுக்குடன் மாறக்கூடியது. மேகங்கள் அடிக்கடி பொதிகையை தழுவி செல்லும்போது ஏற்பட கூடிய குளிர் மற்றும் பனிமூட்டம் அருகில் இருப்பவரை கூட மறைக்க கூடியது. எனினும் நாம் சென்ற நேரத்தில் இருந்த தெளிந்த வானம் நமக்கு அதை சுற்றி இருந்த காட்சிகளை தெளிவாக காண உதவியது. பொதிகை மொட்டில் இருந்து மேற்குப் புறம் அதிருமலை முகாமும், கிழக்குப் புறம் கரையார் அணையின் எழில்மிகு தோற்றமும் தெளிவாக தெரிந்தது. மேலும் நாம் சற்றும் எதிர்பாராத சில காட்சிகள் நம்மை பேரானந்த பெருநிலைக்கு அழைத்துச் சென்றது.
ஐந்தலை பொதிகை / நாகப்பொதிகை
நாம் எதிர்பார்த்து சென்றது ஒரு பொதிகை மலையை காண ஆனால் கண்டது 3 பொதிகை மலைகளை, ஆம்! அகத்தியர் மலைக்கு எதிரே இருந்த (நாம் முன்பு கண்ட) அழகிய சிகரங்களுக்கும் பொதிகை என்றே பெயர். எதிரே இருந்த 5 சிகரங்களை கொண்ட மலை ஐந்தலை பொதிகை அல்லது பஞ்சலிங்க பொதிகை என்றும், அதன் பின்னால் இருந்த லிங்க வடிவ மலை சிகரம் நாக பொதிகை என்றும் அழைக்கப்படுவதாக சக பயணிகளிடமிருந்து அறிந்து கொண்டோம். அச்சிகரங்களில் மேகங்கள் முட்டி செல்லும் பேரழகை காண கண் கோடி வேண்டும். அதில் நாக பொதிகை மலையில் கல்தாமரை என்னும் அறிய மூலிகை இருப்பதாகவும், மேலும் பாம்பன் என்றொரு நீர்வீழ்ச்சி இருப்பதாகவும் நாம் சந்தித்த நண்பர் வர்கீஸ் ரவி அவர்கள் கூறினார்.
நம்முடன் வந்த சிவகணேசன் அய்யா அவர்கள் கூறுகையில் நாக பொதிகை சிவ வடிவம் என்றும், அதை பஞ்ச பூதங்களாகிய ஐந்தலை பொதிகையை கடந்தவாறு அகத்தியர் நோக்கியுள்ளார் என கூறினார். அந்த தத்துவம் நமக்கும் சரியாகவே தோன்றியது. அப்போது நாக பொதிகையை கடந்து சென்ற மேகம் சிவபெருமான் நெற்றியிலுள்ள திருநீறு போன்ற வடிவத்தை தந்து அக்கருத்தை மெய்யென எடுத்துரைத்தது.
மீண்டும் மீண்டும் அகத்தியரையும், மற்ற பொதிகை சிகரங்களையும் வணங்கியும் ரசித்தும் இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அகத்தியர் மலை மீது வெகுநேரம் இருக்க வனத்துறை அனுமதிப்பதில்லை, இருந்தபோதும் நம்மால் முடிந்த அளவு (சுமார் 50 நிமிடங்கள்) வரை அங்கு தங்கி இருந்து பேரானந்ததை அனுபவித்தோம். பிரிய மனமில்லாமல் அகத்தியரை மீண்டுமொருமுறை தரிசித்து விட்டு பிரிய மனமின்றி புறப்பட்டோம்.
சுமார் 11.40 க்கு பொதிகை உச்சியிலிருந்து புறப்பட்ட நாம், வந்த வழியே திரும்பிச் சென்று மாலை 3 மணி அளவில் அதிருமலை முகாமை அடைந்தோம். பிற்பகல் 2 மணிக்குள் வருவோர்க்கு உடனடியாக போனகாடு செல்ல அனுமதி கிடைக்கும்; ஆனால் நமது 3 நாள் பயணத் திட்டத்தால் அதைப் பற்றி நாம் கவலைகொள்ளவில்லை.
அதிருமலை முகாமில் திரு. வக்கீஸ் ரவி அவர்களை சந்தித்தோம். அவர் பல ஆண்டுகளாக பொதிகை மலைக்கு வந்து சென்று கொண்டிருப்பவர். அவர் தமிழ்நாட்டிலிருந்து பொதிகை மலை செல்லும் பாதையை விவரித்தார். மேலும் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு முக்கிய இடங்களை பற்றியும் விவரித்தார். அவருடன் பேசியது மனதிற்கு மிகவும் இனிமையாக இருந்தது. அவருக்கு இந்நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுளேன் (மிகவும் நன்றி அய்யா!)
பிறகு முகாம் பின்புறமுள்ள சிற்றருவியில் குளித்து விட்டு மீண்டுமொருமுறை பொதிகை மொட்டை தரிசித்தோம். மாலையில் சூடான சுக்குக்காபி மற்றும் வாழைக்காய் பஜ்ஜியை ருசித்துவிட்டு அறைக்கு திரும்பும்போது அதிருமலை முகாமில் பெருமழை பெய்தது. அம்மழையை ரசித்தவாறு நானும், நண்பர் பரணியும் அன்றைய நினைவுகளை மீண்டுமொருமுறை அசைபோட்டோம். அப்போது முதல் நாள் பயணத்தில் வந்த சிலர் நன்றாக நனைத்தபடி வந்தனர். அவர்கள் மறுநாள் மலை உச்சியை அடையும் பாதை மேலும் கடினமாக இருக்கக் கூடும். ஏற்கனவே ஈரமாக இருக்கும் வழுக்கு பாறைகள் மேலும் வழுக்க வாய்ப்புண்டு.
பொதிகை மலையில் அடிக்கடி மழை பொழிவது வெகு சாதாரண நிகழ்வாகும். நமது ஊரில் பிப்ரவரி மாதத்தில் மழையை பார்ப்பது அதிசயம். பிறகு இரவு 7 மணிக்கு மேல் இரவு உணவான கஞ்சியை பருகி, மறுநாள் காலைக்கான உணவு டோக்கனை பெற்றுக் கொண்டோம். பிறகு சிறிது நேரம் வெளியே உலவிய போது வானத்தை பார்க்க, அது பின் மாலையில் மழை பெய்ததற்கு நேர்மாறாக மிக தெளிவாகவும், நட்சத்திரங்களை பார்க்கும்படியும் இருந்தது. பிறகு சுமார் 9 மணி அளவில் சுகமான நினைவுகளோடு உறங்கிப் போனோம்.
Really amazing anna.... You r really blessed soul.... Stay happy
ReplyDeleteNice
ReplyDeleteCloud moving photography really amazing...