இயற்கையும் இறையும் ஒன்றோடு ஒன்று இரண்டறக் கலந்தது என்பதால் உலகெங்கும், அதிலும் குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு அடர்ந்த காடு மற்றும் மலைப்பகுதிகளில் அந்த இறைவன் குடி கொண்டிருக்கிறார். ஆனால் அத்தகைய இடங்களுக்கு சாமானிய மக்கள் எப்போதும் சென்று அவரை தரிசிப்பது அவ்வளவு எளிதல்ல… அதற்கு அனுமதி கிடைப்பதும் அவ்வளவு சுலபமல்ல… ஆனால் இந்த புரட்டாசி மாதம் மட்டும் இதற்கெல்லாம் விதிவிலக்கு.
‘மாதங்களில் நான் மார்கழியாக வீற்றிருப்பேன்’ என பகவத் கீதையில் கூறிய இறைவனே பெருமாளாக விண்ணில் இருந்து மண்ணிற்கு வந்து தனது பக்தர்களுக்கு காட்சியளிக்க தேர்ந்தெடுத்த மாதம் என்பதால் புரட்டாசி மாதத்தில் மட்டும் பக்தர்களுடனான அவரது தொடர்பை யாரும் தடுக்க இயலாது என்பதே அதன் காரணம். இதனால் தான் பல்வேறு இடங்களில் அடர்ந்த காட்டில், ஓங்கி உயர்ந்த மலையில் என பக்தர்களால் எளிதில் தரிசிக்க இயலாத பல்வேறு தலங்கள் அவரது பக்தர்களுக்காக திறக்கப்படுகின்றன. குறிப்பாக கோவை பகுதியில் மட்டும் பெருமாள்முடி, மேல்முடி மற்றும் கோத்தகிரி ரங்கசாமி சிகரம் உள்ளிட்ட பல்வேறு மலைகளில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டும் அந்த இறைவன் நேரடியாக தனது பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
அதில் இயற்கை எழில் சூழ்ந்த பெருமாள்முடி பயணத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்களே இக்கட்டுரை.
புரட்டாசி மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் எதிர் வந்த நவராத்திரி மற்றும் மாத இறுதி பணிச் சூழல் காரணமாக மூன்றாம் வாரம் மற்றும் நான்காம் வாரங்களில் கோவைக்குச் செல்ல எண்ணி ரயிலில் முன்பதிவு செய்து வைத்திருந்தேன். உறுதி செய்யப்படாத பயணம் என்பதால் நண்பர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் தனித்து பயணம் செய்ய முடிவு செய்திருந்தேன். ஆனால் புறப்படும் நாட்களுக்கு இரு நாள் முன்பு நண்பர் திரு. பாலாவும் தனது குடும்பத்துடன் பெருமாள் முடி செல்ல திட்டமிட்ட தகவல் கிடைத்ததால் அவருடன் இணைந்து இந்த பயணத்தை மேற்கொண்டேன்.
நவராத்திரி முடிந்தததால் பல்வேறு பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்ட கொலு பொம்மைகளை பரண்மேல் ஏற்றிவைத்து விட்டு, கொலு படிகளை வீட்டின் அலமாரியாய் மாற்றிவிட்டு, புயல் கரையை கடந்தது போல் காட்சி அளித்த வீட்டை முடிந்த அளவு சுத்தம் செய்துவிட்டு என பல்வேறு வேலைகளுக்கு பிறகு முந்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணி அளவில் நீலகிரி விரைவு ரயிலில் சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் (சனிக்கிழமை) காலை 5 மணி அளவில் கோவையை அடைந்தேன். பயணத்தின் மீதான எனது ஆர்வம் ரயிலுக்கும் தெரிந்து இருந்ததால் அது 15 நிமிடங்களுக்கு முன்பே நிலையத்தை அடைந்தது.
அந்த அதிகாலை நேரத்திலேயே ராபிடோ (Rapido) மூலம் நண்பர் பாலாவின் வீட்டை நோக்கி புறப்பட்டேன். என்னை போன்ற தனிப் பயணிகளுக்கு (Solo traveller) இத்தகைய இருசக்கர டாக்ஸி சேவைகள் உண்மையிலேயே வரப்பிரசாதம் தான். எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை போன்ற பெரிய நகரங்களை அதிகாலை நேரத்தில் அமைதியாக பார்ப்பது ஒரு வித அழகான அனுபவமே… கூகுள் காட்டிய பாதையில் சென்று தெரு முனையில் இறங்கி நடக்க ஆரம்பிக்க, அங்கு லோக்கல் ரௌடிகள் போல காணப்பட்ட தெருநாய்கள் எனது பாதையை மரித்தன. செய்வது அறியாமல் நண்பருக்கு போன் செய்ய அவரது வீடு அடுத்த தெருவில் தான் உள்ளது எனக்கூறி என் நெஞ்சில் பால் வார்த்தார். மருதமலை செல்லும் வழியில் உள்ளதால் அப்பகுதியில் அடிக்கடி மயில்கள் அகவும் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. ஒரு வழியாக நண்பரின் வீட்டை அடைந்து குளித்து முடித்து, சூடான பால் பருகி காலை 6.40 மணியளவில் அங்கிருந்து நண்பரின் குடும்பத்துடன் புறப்பட்டோம்.
வடவள்ளி, கணுவாய் போன்ற பகுதிகளை கடந்து மாங்கரை பகுதியை நோக்கிச் செல்ல செல்ல பசுமையின் அளவும் அழகும் கூடிக்கொண்டே சென்றது. கிட்டத்தட்ட 20 கிலோமீட்டருக்கு முன்பே எதிரே கம்பீரமாய் தெரிந்த மேல்முடி சிகரம் மேற்குதொடர்ச்சி மலையின் பிரமாண்டத்தை எடுத்துரைத்தது. தடாகம் மற்றும் அனுவாவி பகுதிகளின் இடையே சென்ற ஆனைகட்டி சாலையின் இருபுறமும் பல்வேறு மலை சிகரங்கள் அணிவகுத்து இருந்தன. அதில் மேல்முடி செல்லும் வழி வலதுபுறமும், நாம் செல்லும் பெருமாள்முடி சிகரம் இடப்புறமும் இருந்தன. இறுதியாக பல்வேறு அழகிய மற்றும் அபாய வளைவுகளுடன் கூடிய மலைச் சாலையில் பயணித்து, பெருமாள் முடி நுழைவாயிலில் அமைக்கப்பட்ட காவல் சோதனை சாவடியை அடைந்தோம்.
மலைக்கு செல்லும் அனுமதி காலை 7 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே என்பதால் அங்கு அதிக எண்ணிக்கையிலான கார்கள் அணிவகுத்து நின்றன. அது தவிர நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்களில் பலநூறு மக்கள் சாரைசாரையாக பெருமாள்முடியை நோக்கி சென்றுக் கொண்டே இருந்தனர். அங்கு சிறிய தாமதத்திற்கு பிறகு சுமார் 7 கிலோமீட்டர் கொண்ட offroad பயணத்தின் முடிவில் காலை 8.25 மணியளவில் அடிவார கிராமமான சேம்புக்கரையை அடைந்தோம். அங்கு நிரம்பி வழிந்த பார்க்கிங் மற்றும் சாலையின் ஓரம் நின்று இருந்த வாகனங்களின் எண்ணிக்கையே மலையேற வந்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகளின் எண்ணிக்கையை கூறியது. இது Instagram மற்றும் youtube போன்ற சமூக வலைத்தளங்களின் பங்களிப்பாகும். இது ஒருவகையில் வரவேற்கதக்கதாக தோன்றினாலும் மலையேற வரும் பயணிகள் அதற்கேற்ப தங்கள் வாழ்வியல் முறையை (Life style) பின்பற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும். சேம்புக்கரை பழங்குடியினர் கிராமத்தில் பல்வேறு தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கேயே காலை உணவை (இட்லி) முடித்துக் கொண்டு பெருமாள்முடி மலையேற்றத்தை துவங்கினோம்.
காலை 8.45 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் துவங்கிய பயணத்தில் அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு மரத்தடியில் கிராம தெய்வங்களை வழிபட்டு மலையேற ஆரம்பித்தோம். எதிரே தெரிந்த மலையில் தூரத்தில் ஊர்ந்து செல்லும் எறும்புகள் போல மக்கள் எங்கள் கண்களுக்கு புலப்பட்டனர். மேகங்கள் உரசிச் செல்லும் மலையை நெருங்க நெருங்க அதன் குளிர்ச்சி நமக்குள்ளும் பரவியதை போல உணர்ந்தோம்.
எடுத்த எடுப்பிலேயே ஏற்றம் நிறைந்த மலையில் ஏற ஏற வியர்த்து கொட்ட துவங்கியது. சுமார் 20-30 நிமிடங்களுக்கு பிறகு திரும்பி பார்க்கையில் நாம் ஏறிவந்த உயரம் நன்றாக தெரிந்தது, அடிவார கிராமத்தின் அழகும், மறுதிசையில் தெரிந்த தூர சிகரங்களின் பேரழகும் அதில் தொலைதூரத்தில் தெரிந்த காற்றாலைகளும் நம் கண்களுக்கு விருந்தாகின. குறிப்பாக அடர்ந்த காட்டின் நடுவே தூரத்தில் தெரிந்த காட்டு இலாகா ஓய்வு மாளிகை (Forest rest house), வாய்ப்பு கிடைத்தால் அங்கு சென்று ஒரு நாளாவது தங்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது.
காலை 9.25 மணியளவில் ஒரு திருப்பத்தில் நாம் சந்தித்த பாறைகள் ஓய்வெடுக்க சிறந்த இடமாகும். அங்கு பூத்து குலுங்கிக் கொண்டிருந்த ஒரு மலர்ச்செடி காற்றில் அசைந்து அனைத்து பக்தர்களையும் வருக வருக என வரவேற்றது. அங்கு சில நிமிட ஓய்வுக்கு பிறகு புறப்பட, தொடர்ந்து வந்த பாதை ஒரு எளிதான சமவெளி என எண்ணி ஏமாற்றம் அடைந்தேன். எத்தனை மலைகளை ஏறினாலும் மலையும், காடுகளும் எப்போதும் கணிக்க இயலாதவை என மீண்டும் ஒரு முறை உணர்ந்தேன். ஆம்! இதுவரை ஏறியதெல்லாம் ஏற்றமே அல்ல எனக் கூறும் வண்ணம் அந்த செங்குத்து பாறை வழி இருந்தது. இருப்பினும் பல்வேறு மலைகளில் இப்படி தவழ்ந்து ஏறிய அனுபவம் இருந்ததால் அதை சற்று எளிதாகவே சமாளிக்க முடிந்தது. மூன்று பெரும் மலைகளில் முதல் மலையை ஒருவழியாக ஏறிக் கடந்தோம். நீண்ட நேரம் ஏறியது போல தோன்றினாலும் சுமார் ஒரு மணி நேரமே ஆகி இருந்தது.
முதல் மலைக்கும் இரண்டாம் மலைக்கும் இடையில் மலைகளின் மடியில் இயற்கையாய் அமைந்த சமவெளி பூலோக சொர்க்கம் போல தோன்றியது. ஆனால் அங்கு காணப்பட்ட சாணங்கள், அந்த சொர்க்கத்தை அனுபவிக்க நமது பெரியவர்களும் (யானைகள்) அடிக்கடி அங்கு வந்து செல்வதை உணர்த்தியது. அந்த சொர்க்க லோகத்தில் இருந்து பார்க்க அடுத்தது மேலும் இரு சிகரங்கள் அழகாய் தோன்றியது. அதில் இடப்புறம் இருந்த இரண்டாம் மலையில் ஏறிக்கொண்டு இருந்த பக்தர்களின் வரிசை நாம் செல்ல வேண்டிய பாதையை காட்ட, வலப்புறம் பச்சை போர்வையை போர்த்தியது போல தெரிந்த சிகரத்தில் (மூன்றாம் மலை) மோதி விளையாடிக் கொண்டிருந்த மேகம் நாம் அடைய வேண்டிய இலக்கை கூறியது.
கிட்டத்தட்ட சமவெளி பாதையாய் அமைந்த இரண்டாம் மலை எதிர்பார்த்ததை விட மிகவும் எளிதாக இருந்தது. சுமார் 10.40 மணியளவில் புல்வெளிகள் நிறைந்த மூன்றாம் மலையில் காலடி எடுத்து வைக்க, அப்போதுதான் கண்விழித்த சூரியன், மேகங்களை விலக்கி உச்சி சிகரமான பெருமாள்முடியின் பேரழகை வெளிச்சம் போட்டுக் காட்டினான்.
பசுமை… பசுமை… பசுமை… அது ஒன்றே நமது கண்களுக்கு புலப்பட்டது.
மூன்றாம் மலையில் கோட்டை சுவரை போல எதிரில் தெரிந்த பாறைகள் நாம் நமது இலக்கை நெருங்கி விட்டோம் என அறிவித்தது. அடுத்த 20 நிமிடங்களில் (காலை 11:15 மணி) ஒரு அற்புதமான காட்சி முனையை (View point) அடைந்தோம். அதில் அமர்ந்து வேடிக்கைப் பார்க்க நாம் வந்த பாதை, அதன் பின் அலை அலையாய் மலைகள், மலைகளின் உச்சியில் உரசிச் சென்ற மேகங்கள் என இயற்கையின் ஒட்டுமொத்த பேரழகும் இங்குதான் உள்ளதோ என எண்ண தோன்றியது. வலப்புறம் தெரிந்த பக்கத்து சிகரத்தின் உச்சியில் தவழ்ந்த கார்மேகம் எப்போது வேண்டுமானாலும் மழை தருவேன் என சொல்லாமல் சொல்லியது. தொடர்ந்து மலை ஏறி சென்று சமவெளிகள், சில சில குன்றுகள் அனைத்தையும் கடந்து சென்ற பாதையில் அடுத்த ஐந்து நிமிடத்தில் நாம் தேடி வந்த இறைவன் கண்ணெதிரே புலப்பட்டார்.
‘முடி’ என்றால் உச்சி என்று ஒரு பொருள் உண்டு. பெருமாள் முடியின் உச்சியில் ஒரு பெரிய பாறை அந்த இறைவனின் திருவுருவமாகவே வழிபடப்படுகிறது. கண்ணெதிரே தெரிந்த பெருமாள் பாறையை கைகூப்பி வணங்க, அது அடுத்த சில நொடிகளில் மாயமாய் மறைந்து போனது. அது மேகத்தின் திருவிளையாடல் ஆகும். உச்சியை மறைத்த மேகங்கள் நம்மை இன்னும் அருகே வரச் சொல்லி அழைத்தது. இறுதியாக காலை 11.45 மணி அளவில் காட்டின் நடுவே மலையின் உச்சியில் குளிர்ந்த இடத்தில் பாறை உருவில் ஏகாந்தமாய் வீற்றிருக்கும் அந்த இறைவனின் திருக்கோவிலை அடைந்தோம்.
இறை தரிசனம் முடிந்ததும், சற்று ஆபத்தான பாதையில் பெருமாள் முடி சிகரத்தை மிகுந்த எச்சரிக்கையோடு பக்தர்களோடு பக்தர்களாக நாம் வலம் வர, அங்கு வந்திருந்த நமது இளைஞர்களோ அப்பகுதியில் உள்ள ஆபத்தை உணராமல் பல்வேறு பாறைகளின் உச்சியில் இன்று விதவிதமாக படம் எடுத்துக் கொண்டிருந்தனர். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு இறுதியாக மதியம் ஒரு மணி அளவில் அங்கிருந்து விடை பெற்றோம். அப்போது அலை போல் எதிரே திரண்டு வந்த மேகங்கள் நம்மை வழி அனுப்பி வைத்தது. இறங்கும் வழியில் சில குழந்தைகளுடன் பேசிக் கொண்டும், இறங்கச் சற்று சிரமப்பட்ட பிற நண்பர்களுக்கு சிறு சிறு உதவிகளை செய்துக் கொண்டும் மலை இறங்கினோம். இறுதியாக மதியம் 2.45 மணி அளவில் அடிவாரத்தை அடைந்தோம்.
அடிவாரத்தில் தங்கள் ஊரை நாடி வந்து மனமார இறை தரிசனம் பெற்ற பக்தர்களின் வயிறார உணவளித்த சேம்பக்குடி பழங்குடி மக்களின் அன்புக்கும் பண்புக்கும் ஈடு இணை இல்லை. அவர்களுக்கு நன்றி கூறி அங்கிருந்து புறப்பட்டு திரும்பும் வழியில் ஆனைகட்டி சாலையில் பெரு மழை பெய்தது. மலை ஏறும் போதும் இறங்கும் போதும் பெய்யாமல் நம் பயணம் நல்லபடியாக முடிந்த பின் பொறுத்திருந்து பெய்த அந்த மாமழைக்கு நன்றி கூறி விடைபெற்று நண்பரின் வீட்டை அடைந்தோம். அங்கு சிறிது நேரம் சிரம பரிகாரங்களை மேற்கொண்டு, மாலை நேர உணவிற்கு பின் சற்று கூடுதல் நேரம் இருந்ததால் மருதமலை சென்று கருணைக்கடலான அந்த கந்தனையும் ராஜ அலங்காரத்தில் தரிசித்து விட்டு அற்புதமான நினைவுகளுடன் சென்னை திரும்பினோம்.
நன்றிகள்
இயற்கை உருவில் குடி கொண்ட அந்த இறைவனுக்கு
சேம்பக்கரை கிராம மக்களுக்கு
நண்பர் பாலா மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு
அனுமதி தந்த வனத்துறையினருக்கு
பக்தர்களுக்கு வழி விட்ட வனவிலங்குகளுக்கு
இப்பதிவை பொறுமையாக படிக்கும் உங்களுக்கு
மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்.
அடுத்த பகுதி
அருமையான பதிவு பாஸ் உனது பயணம் மேலும் தொடர்ந்திட வாழ்த்துக்கள்
ReplyDeleteNice experience with your writing. Superb writing
ReplyDeleteThanks for the wonderful experience, wishing you to write more.
ReplyDeleteஎழுதிய வரிகள் எங்களையும் அழைத்து சென்றதுபோல் இருந்தது. நன்றிகள் பல. வாழ்த்துக்கள்.
ReplyDeleteAn expressive and gentle writing. you are spiritual, nature and people lover. you must have enjoyed this visit.
ReplyDelete