எனது மன அழுத்த நிவாரணிகள் (My stress busters)

   இயந்திரமயமான இன்றைய காலகட்டத்தில் மனதே இல்லாத மனிதர்கள் கூட அந்த மன அழுத்தத்தில் இருந்து தப்புவது இல்லை எனக் கூறும் வண்ணம் நமது வாழ்வியல் முறையில் இரண்டற கலந்து, தவிர்க்க இயலாத ஒரு அங்கமாக விளங்குவது மன அழுத்தம். 

    நாம் ஒவ்வொருவரும் நமது அன்றாட வாழ்வில் பல்வேறு சூழ்நிலைகளில் பலவித சவால்களையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறோம் என்பதால் அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்பட எண்ணற்ற பற்பல காரணிகள் உண்டு. ஆனால் ‘அலை இல்லாமல் கடல் இல்லை’ என்பது போல் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வரவும் நாம் அனைவருக்கும் பற்பல மாற்று வழிகளும் உண்டு. அவையே மன அழுத்த நிவாரணிகள் (Stress busters) என அழைக்கப்படுகின்றன. 



    இந்த மன அழுத்த நிவாரணிகள் உண்மையிலேயே நமது பிரச்சனைகளை நேரடியாக தீர்ப்பதில்லை என்ற போதிலும் ஏற்பட்ட கடின சூழலில் இருந்து வெளியே வந்து சற்று இளைப்பாறவும், இளைப்பாறிய பின் புதிய உத்வேகத்துடன் மீண்டும் நமது சவால்களை சந்திக்கவும் நமக்கு உதவுகின்றன என்பதால் நம்மை அறியாமலேயே அவை நமது வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

    பல நேரங்களில் இசையாய், சில நேரங்களில் இயற்கையாய், இன்னும் சில சமயங்களில் நட்பாய் என அனைவருக்கும் சில பொதுவான மன அழுத்த நிவாரணிகள் இருந்த போதும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சில மன அழுத்த நிவாரணிகளும்  உண்டு. அவை நபருக்கு நபர், நேரத்துக்கு நேரம், சூழலுக்கு சூழல் மாறுபடுகின்றன. எனவே எனது தனித்துவமான சில மன அழுத்த நிவாரணிகளையும் இப்பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். படிப்பவர்களுக்கும் தங்களது மன அழுத்த நிவாரணிகளை பற்றி ஒரு சில நிமிடங்கள் சிந்திக்க வைப்பதும், தக்க சமயத்தில் அவற்றை நினைவுபடுத்துவதும் மட்டுமே இந்த கட்டுரையின் நோக்கமாகும்


1. ஒரு செயல் 

    வாரம் முழுவதும் இரவு நேர பணிபுரியும் என்னை போன்றவருக்கு, வாரக் கடைசியிலும் இரவு நேர உறக்கம் என்பது கானல் நீரே… ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக வார இறுதி நாட்களில் அனைவரும் கண்ணுறங்கும் நேரத்தில் அமைதியாய் கண் விழித்து அமர்ந்திருப்பது கூட ஒரு விதமான மன அழுத்தத்தை தோற்றுவிக்கும் காரணியாக விளங்குகிறது. என்னதான் எழுத்து பணியிலும் பிற பொழுதுபோக்குகளிலும் கவனம் செலுத்த முயற்சித்தாலும்,  அவைகளும் எனக்குத் தெரியாமலேயே எனது உறக்கத்தை திருடி, அதிகாலை வரை என்னை விழித்திருக்கச் செய்கின்றன. இதனால் வார இறுதி நாட்களில் விடிந்த பின் உறங்கச் செல்லும் அந்த காலை நேரத்திலும், நீண்ட போராட்டத்திற்கு பிறகு வரும் உறக்கத்திலும், அந்த உறக்கத்தில் வரும் கனவுகளிலும் கூட ஒருவித மன அழுத்தம் தொடரத்தான் செய்கிறது. 

    இத்தகைய மன அழுத்தத்தை போக்க சில நேரங்களில் ஒரு பொருளும், அதன் துணையுடன் நான் செய்யும் ஒரு செயலும், மேற்கொள்ளும் ஒரு சிறிய பயணமும் எனக்கு உதவுகின்றன..

    உறக்கமில்லா இரவுகளின் அதிகாலைப் பொழுதில் எங்கள் கட்டிடத்தின் பார்க்கிங் பகுதிக்கு செல்வேன். அங்கு அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்கும் எனது தோழனை ஒரு உதை உதைப்பேன். ஒரு சில நேரங்களில் ஒரு சில கூடுதல் உதைகளுக்கு பின் அவன் விழித்தாலும் உடனே கர்ஜித்து தனது உற்சாகத்தை தெரிவிப்பான். அந்த அதிகாலை நேரத்தில் அமைதியான சாலைகளில் பயணித்து பல்லாவரம் வரை செல்வேன். அங்கு உழவர் சந்தையில் எதிரே, பழைய யா. முகைதீன் பிரியாணி கடையின் அருகில் இருக்கும் சாலையோர தேனீர் கடைக்கு செல்வேன். அங்கு சுட சுட ஒரு சாம்பார் வடையும் ஒரு சிங்கிள் டீயும் போதும். ஏற்பட்ட மன அழுத்தம் எங்கோ பஞ்சாய் பறக்க துவங்கும். போகும் போது தனியே சென்ற என்னுடன் திரும்பும் வழியில் உற்சாகமும் உடன் வருவதை காணலாம்.


 


    ஏற்பட்ட அந்த உற்சாகத்திற்கு காரணம் உடன் வந்த பிளாட்டினாவா, உள்ளே சென்ற சாம்பார் வடையா அல்லது நான் மேற்கொண்ட அந்த சிறிய பயணமா என்பதை நான் அறியேன். ஆனால் நான் செய்யும் அந்த செயலின் காரணமாக, அதன் பின் எதிர்வரும் அன்றைய நாள் மன அழுத்தம் ஏதும் இன்றி சிறப்பாகவே துவங்கும்.


2. ஒரு பழக்கம் 

    பொதுவாக எழுத்து என்பது பயிற்சியால் கைகூடும் ஒரு முயற்சி. அதிலும் என்னைப் போன்ற எழுதுவதில் ஆர்வம் உள்ளோருக்கு, நாம் எந்த அளவுக்கு எழுத நினைக்கிறோமோ அந்த அளவை விட அதிகமாக படிக்கவும், நமது எழுத்தை மேம்படுத்தவும் தினசரி பயிற்சி அவசியம். ஆனால் எனது அன்றாட பணிகளில் பல நேரங்களில் இதற்கெல்லாம் தினமும் நேரம் ஒதுக்க சாத்தியமாகாமல் போகலாம். அலுவலகம் மற்றும் பிற சுழல் காரணமாக எனது எழுத்தும், படிப்பும் தடை பெறலாம். நமக்குப் பிடித்தமான ஒரு பணியை செய்ய இயலாத கையறு சூழலில் அதுவே கூட ஒரு மன அழுத்தத்தை தோற்றுவிக்கும் காரணமாக மாறலாம். ஆனால் ஏற்பட்ட அந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டும் வர எழுதவும் படிக்கவும் செய்யும் நமது அந்த பழக்கமே கூட நமக்கு உதவலாம். 

    ஆம்! பெரிய கதைகளும் கட்டுரைகளும் புத்தகங்களும் எழுத இயலாத சூழ்நிலையில், அதற்குண்டான சிந்தனைகளில் மூழ்க முடியாத நிலையில், கிடைக்கும் ஒரு சில நிமிட இடைவெளிகளில், அவ்வபோது மனதில் தோன்றும் புதிய புதிய சிந்தனைகளை சிறு குறிப்புகளாக எழுதி வைக்கும் பழக்கம் எனக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. 



    அது, நான் செய்ய வேண்டிய செயல்களாக இருக்கலாம் (Task list),  செய்து முடித்த செலவாக இருக்கலாம் (Expenses tracking) அல்லது ஆழ்மனதின் அடியிலிருந்தோ அல்லது என்னுடன் பேசும் நபர்களின் உரையாடலில் இருந்தோ சட்டென மனதில் தோன்றும் ஒரு சிறிய கருத்தாக கூட இருக்கலாம். அதை ஒரு சிறிய தாளிலோ, எனது அலைபேசியிலோ அல்லது கணிப்பொறியிலோ பதிவு செய்து வைக்கும் போது அந்த சிறிய பதிவுகள் கூட என் எண்ணத்தில் பெரிய மாற்றங்களை செய்கின்றன. மேலும் இந்த சிறிய சிறிய பதிவுகள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரு பெரிய திட்டமாக உருவெடுத்து,  நான் அடுத்து செய்ய போகும் செயல்களுக்கு உண்டான உத்வேகத்தை தருகின்றன.

    நம்மால் ஒரு மிகப்பெரிய கட்டிடத்தை எழுப்ப நேரமில்லை என்றால் கிடைக்கும் சிறிய இடைவெளிகளில் குறைந்தபட்சம் சிறு சிறு கற்களை சேமிப்போம். அது ஒரு நாள் நாம் கட்டப் போகும் பிரம்மாண்ட கோட்டைக்கு நிச்சயம் பயன் தரும். எந்த காரணமும் இன்றி சிறு வயது முதல் நானாக ஏற்படுத்திக் கொண்ட இந்த குறிப்பெடுக்கும் பழக்கம், தானாகவே ஒரு சிறந்த மன அழுத்த நிவாரணியாக விளங்குகிறது.


3. ஒரு விளையாட்டு 

    வாழ்க்கை என்னும் விளையாட்டில் நான் சிக்கி தவிக்கும் போதெல்லாம், என்னை நானே என்னை மீட்டெடுக்க நான் ஆடும் ஒரு விளையாட்டு இது. பொதுவாக நமது அன்றாட வாழ்வில் நாம் சிறு சிறு விஷயங்களை எல்லாம் தாவிக் குதித்து கடந்து செல்வதை போல ஒவ்வொரு கோலியையும் மற்றொன்றை தாண்டி போட்டுவிட்டு இடையில் இருக்கும் ஒன்றை வெளியே எடுக்க வேண்டும். இப்படியே அனைத்தையும் தாண்டி, கடந்து சென்ற பின் கடைசியாக நாமும் நம்மை உள்ள முக்கிய பிரச்சனைகளும் எஞ்சி இருப்பதைப் போல ஒரு சில கோலிகள் மட்டுமே மீதம் இருக்கும். இப்படி அனைத்து கோலிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே எடுத்து இறுதியாக ஒன்றை மட்டுமே மீதம் இருக்கும் வகையில் ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்பதே இலக்கு. சிறிது கவனமுடன் கையாண்டால் அனைத்து சூழ்நிலைகளையும் கடந்து எஞ்சியிருக்கும் நமது சுயத்தை நாமே அடையாளம் காண்பதே இந்த விளையாட்டின் தத்துவம் போல எனக்கு தோன்றுகிறது.




    பொதுவாக அனைவரும் மையத்தில் இருந்து துவங்கி மையத்திலேயே முடிக்கும் வண்ணம் இவ்விளையாட்டை ஆடினாலும், எந்த க(வ)ட்டத்தில் இருந்து துவக்கினாலும் இறுதியாக ஒன்றில் முடிக்கும் வகையில் இதில் சிறு வயதில் இருந்தே எனக்கு ஒரு பயிற்சி உண்டு. இதனால் இவ்விளையாட்டில் உள்ள ஒரு சில சூட்சுமங்களை (Techniques) நான் அறிவேன் என்றபோதும் ஒவ்வொரு முறையும் சிறிது கால இடைவெளிக்கு பிறகு விளையாடும் போது அந்த சூட்சுமங்கள்  எல்லாம் அடிக்கடி மறந்துவிடும். இருப்பினும் சிறிது நேர தொடர் முயற்சிக்கு பின் நம்மை நாமே தொலைத்துவிட்டு தேடுவதை போல அனைத்தையும் கடந்து நிற்கும் என்னை நானே கண்டுபிடிக்க இந்த விளையாட்டு எனக்கு உதவுகிறது. 

    'ப்ரைன்வீட்டா' என்றழைக்கப்படும் இந்த விலையாட்டை விளையாட பெரிய அளவில் அறிவு (ப்ரைன்) எதுவும் தேவையில்லை. ஒரு சில கோலிகளும், ஒரு சில மணிதுளி கவனமும் போதும். நம்மை நாமே மீட்டெடுக்கலாம். 


4. ஒரு புத்தகம் 

    எந்த ஒரு செயலையும் கவனமாகவும் மனப்பூர்வமாகவும் செய்ய ஒருவித மன ஒருநிலைப்பாடு  தேவைப்படுகிறது. ஆனால் அந்த மன ஒருநிலைபாடு எல்லா நேரத்திலும் கை கூடுவதில்லை. கலங்கிய நீரில் ஏற்படும் அலைகளைப் போல தொடர் சிந்தனை அலைகளால் நமது மனம் சில நேரம் அமைதி அடைவதில்லை. உண்டான பிரச்சனைகளும் அல்லது நாம் பிரச்சனைகளாக நினைக்கும் ஒரு சில எண்ணங்களும் நம்மை கலங்கடித்து விடுகின்றன. அத்தகைய சூழல்களில் நமது கவனத்தை தற்காலிகமாக திசை திருப்ப உடனடியாக ஒரு பயணம் அவசியம். அப்பயணம் நம்மை, ஏற்பட்ட சவாலான சூழலுக்கு வெளியே வந்து, இளைப்பாறி, மீண்டும் சென்று அந்த பிரச்சனைகளை புது உத்வேகத்துடன் முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் இருந்து எதிர்கொள்ள நமக்கு உதவும். அப்படி நான் அடிக்கடி மேற்கொள்ளும் ஒரு அற்புத பயணமே இந்த புத்தகம்.   

    உடனடி பயணம் என்பது என்பது எல்லா நேரங்களிலும், அனைத்து சூழலிலும் சாத்தியமே என்பதைப் போல படிக்க துவங்கிய ஒரு சில வரிகளிலேயே என்னை மற்றொரு உலகிற்கு உடனடியாக அழைத்துச் செல்லும் வலிமையும் வேகமும் கொண்ட புத்தகம் இது. கம்யூனிசம் கலந்த ஒரு கமர்சியல் பேண்டஸி. இக்கதையில் வரும் ஒவ்வொரு வரியும், இடமும், சம்பவங்களும், கதாபாத்திரங்களும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை.

    பொதுவாக ஆழ்ந்து படிக்கவே புத்தகங்கள் என்ற நிலையை கடந்து, மேலோட்டமாக படிக்க ஆரம்பித்தால் கூட போதும். அடுத்த சில நொடிகளில் நான் வேறொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பேன். நீச்சல் தெரியாமல் தன் மேல் தத்தளிக்கும் ஒருவனை, அந்த கடலே தனக்குள் அழைத்துச் சென்று, அங்கு ஒளித்து வைத்திருக்கும் தனது அபூர்வ முத்துக்களை பரிசாக தந்தால் எப்படி ஒரு உணர்வு இருக்குமோ அதுபோல நேரமில்லாத நேரத்தில் நான் மேம்போக்காக படிக்கும்போது கூட பற்பல அதிசயங்களை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் அற்புதமான புத்தகம் இது.  



    எனது அம்மா இருதய சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது நான் படித்த ஒரு புத்தகம் இதுதான். இடைவிடாத பணிகளின் இடையில் கிடைக்கும் சிறிய உணவு இடைவேளையில் கூட நான் படிக்க விரும்பும் ஒரு புத்தகமும் இதுதான். எப்போதெல்லாம் அதிக வேலைப்பளு காரணமாக எனது புறப் பயணங்களை மேற்கொள்ள முடியாவிட்டாலும், நான் கடின சூழ்நிலையில் இருப்பதுப் போல தோன்றினாலும், ஏற்பட்ட சவால்களை முழு மூச்சுடன் சந்திக்கும் முன் சற்று வெளியே வந்து புதிதாய் என்னை நானே மீண்டும் துவங்க உதவும் ஒரு புத்துணர்வு கருவியே இந்த புத்தகம்.

    ‘வேள்பாரி’ - நேரம் இருந்தால் நீங்களும் படித்துப் பாருங்கள் இந்த பொக்கிஷத்தை… படிக்கும் போதே உங்களை சுற்றி காட்டின் வாசம் வீசும்.


முடிவுரை 

    இப்படியாக ஒரு செயல், ஒரு பழக்கம், ஒரு விளையாட்டு, ஒரு புத்தகம் என நான்கும் ஏற்பட்ட மனஅழுத்தத்தை  குறைக்கும் தனிப்பட்ட நிவாரணிகளாக திகழ்ந்து, நான்கு திசைகளில் இருந்து வரும் சவால்களை சந்திக்கவும் அவற்றை முழு முயற்சியுடன் எதிர்கொள்ளவும் உதவுகின்றன. 

    அனைத்திற்கும் மேலாக அனைத்தையும் சந்திக்க நானு(மு)ம் தயாராக இருக்கும் போது, ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து விடை பெறுவது எளிதே…

    உங்கள் மனஅழுத்த நிவாரணி என்ன? பின்னூட்டத்தில் (Commet) பதிவிடுங்கள்   




Comments

  1. உங்கள் இந்த கட்டுரை யும் மன அழுத்தம் குறைக்க உதவியது

    ReplyDelete

Post a Comment