நம்ம சண்முகம் எல்லாத்துலயும் சராசரி தான்.
இத்தனைக்கும் அவனுக்கு தெரியாத விஷயம்னு ஒன்னு உலகத்துல எதுவும் இல்ல… குண்டூசி முதல் ராக்கெட் டெக்னாலஜி வரை எல்லாம் அவனுக்கு தெரியும். சங்க இலக்கியம் முதல் லேட்டஸ்ட் ஹிட் சாங் வரை எல்லாம் அவனுக்கு தெரியும். லோக்கல் கவுன்சிலர் முதல் டொனால்ட் ட்ரம்ப் வரை எல்லாரையும் அவனுக்கு தெரியும். ஆனா என்ன எல்லாம் கொஞ்சம் அரைகுறையாக தெரியும். அதுதான் அவன் பிரச்சனையே…
எதையும் முழுசா தெரிஞ்சுக்காம அரைகுறையா மட்டுமே தெரிஞ்சுகிட்டு அடுத்தடுத்த விஷயத்துக்கு தாவிக்கிட்டே இருப்பான்.
சின்ன வயசுல இருந்தே அவன் அப்படித்தான். எந்த ஒரு பொருளையும் கடைசி வரை அடம் பிடிச்சு வாங்கவும் தெரியாது. அதே போல அது வேணாம்னு விட்டுடவும் மனசு இருக்காது. மொத்தத்துல ரெண்டுத்துக்கும் நடுவுல ரெண்டும் கெட்டானாவே இருப்பான்.
பத்து பேர் கலந்துக்கிற போட்டியில முத மூணு பேருக்கு பரிசு கொடுத்தா வேகவேகமா முதல்ல ஓடி வருவான் ஆனா கடைசி நேரத்துல திடீர்னு ஏதாவது யோசிச்சு திரும்பி பார்த்து நாலாவதா போட்டிய முடிச்சு பரிசை தவற விடுவான். வேலையிலும் அப்படித்தான் வருஷம் ஃபுல்லா எக்ஸ்டெண்ட் பண்ணி நல்லா வேலை செய்வான் ஆனா ப்ரோமோஷன் கிடைக்கற டைம்ல அப்பரைஸல்க்கு முன்னாடி வாரம் சிக் லீவு போட்டுட்டு சினிமாவுக்கு போயி மாட்டிக்குவான். அப்பப்ப கவர்ன்மெண்ட் வேலைக்கும் முயற்சி பண்ணுவான் ஆனா எக்ஸாம் சரியா எழுதாம அதுலயும் கோட்டை விட்டுடுவான்.
ரெண்டு பிஸ்கட் சாப்பிட மட்டுமே வயித்துல இடம் இருக்கிற நாய்க்கு ஒரே நேரத்தில் நாலு பிஸ்கட்டை போட்டா எப்படி அது எல்லாத்தையும் அரைகுறையாக கடிச்சு மிச்சம் வச்சிட்டு, அதுக்கும் திருப்தி இல்லாம பிஸ்கட் போட்ட நமக்கும் திருப்தி இல்லாம இருக்குமோ அது மாதிரி தான் ஒரு விஷயம் முடியறதுக்குள்ளேயே அடுத்த விஷயத்துல கவனம் செலுத்த ஆரம்பிப்பான். அதனாலேயே எந்த ஒரு விஷயத்தையும் கம்ப்ளீட்டா அவனால முடிக்க முடியாது.
உடம்ப குறைக்க ஜிம்முக்கு போவான். அது குறைய ஆரம்பிக்கறதுக்குள்ள அத விட்டுட்டு யோகா பண்ண ஆரம்பிப்பான். கொஞ்ச நாள் கழிச்சி அதுவும் செட் ஆகாதுன்னு டயட்டுக்கு மாறுவான். டயட் ஆரம்பிச்சு ஒரு வாரத்துக்குள்ள ஃப்ரெண்ட்ஸ் ட்ரீட்டுக்கு கூப்பிட்டா அங்கேயும் போவான். இப்படி மாறிகிட்டே இருக்கிறதால தான் அவன் சராசரி சண்முகம்.
காதல்ல கூட அப்படித்தான். எது எப்படியோ அடிச்சி பிடிச்சு ஒரு பொண்ண தன்ன லவ் பண்ண வெச்சான். ஆனா அவள மீட் பண்ணும் போதேல்லாம் கடைசி நேரத்துல ஏதாவது வேலைல மறந்துட்டு, சரியான நேரத்துக்கு போகாம அவகிட்ட மாட்டிகிட்டு முழிப்பான். ஆனா அதையும் எப்படியாவது பேசி இழுத்து பிடிச்சி சமாளிப்பான். இப்படி எல்லாத்துலயும் கடைசி நேரத்துல சொதப்பற தன்னோட குணம் அவனுக்கே தெரிஞ்சாலும் அத சரி பண்ண எந்த முயற்சி பண்ணாம ஒரு சராசரி ஆளாகவே வாழ்வான் நம்ம சண்முகம்.
கடவுள் இல்லைன்னு பகுத்தறிவு வசனம் எல்லாம் பேசுவான். பேசி முடிச்ச உடனே சாப்பிட கூப்பிட்டா சாமிக்கு சஷ்டி விரதம் இருக்கேன்னு கதை சொல்லுவான். இப்படி எல்லாரையும் கன்பியூஸ் பண்ணி ஒரு ரகமா இருப்பான். சரி பழக்க வழக்கத்துல தான் அப்படின்னு பார்த்தா உருவத்துலயும் அப்படித்தான். ரொம்ப ஹைட்டாவும் இருக்க மாட்டான். ரொம்ப ஒயிட்டாவும் இருக்க மாட்டான். ரொம்ப கொயிட்டாவும் இருக்க மாட்டான். ரொம்ப போல்டாவும் இருக்க மாட்டான். மொத்தத்தில் எந்த ஒரு வரையறைக்குள்ளேயும் வரையறுக்கவே முடியாதவன் அவன்.
இப்படி எல்லாத்துலையும் முன்னுக்கும் போகாம பின்னுக்கும் வராம, தான் படைச்சதுலயே ஒரு தினுசா இருக்கிற சண்முகத்த பாத்து அந்த பிரம்மாவே கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டாரு. எப்படியாவது அவன சரி பண்ணனும்னு சனி பகவான் கிட்ட சொன்னாரு… அவரும் பல சோதனைகளை வெச்சி அவன முன்னேத்தறதா வாக்கு குடுத்தாரு. ஒண்ணு அவன், தான் வெக்கற எல்லா சோதனையையும் கம்ப்ளீட்டா தாண்டி வெற்றி பெற்று முன்னுக்கு வரணும். இல்ல அவனால முடியலன்னு தன்ன சரணடையனும். ரெண்டுத்துல எது நடந்தாலும் நிச்சயமா அவன முன்னேத்தறதா உறுதி தந்தாரு. மொத்தத்துல “சனியின் சங்கடங்கள் எப்போதும் நல்லதுலயே முடியும்ன்னு” நம்ம சண்முகம் மூலமா நிரூபிக்க அவரும் நெனச்சாரு…
சனி பகவானும் தன் திட்டப்படி நம்ம சண்முகத்தோட ராசில சஞ்சரிச்சாரு… அதுவரை சராசரியா போய்ட்டு இருந்த அவன் வாழ்க்கை அதுக்கப்புறம் ரொம்ப டெர்ரரா மாறுச்சு.
மொதல்ல அவன் வேலை செய்ற இடத்துல இருந்து பிரச்சனை ஆரம்பிச்சிது. அதுவரை டே ஷிப்ட்ல இருந்த அவன திடிர்னு நைட் ஷிப்ட்க்கு மாத்திட்டாங்க. அதுலயும் வேலை அதிகம். அதுவரை அரைகுறையா தூங்கிட்டு இருந்த அவனுக்கு அந்த தூக்கமும் போச்சு. ஆறே மாசத்துல தூக்கம் சரியில்லாம கொஞ்சம் கொஞ்சமா உடம்பும் சரியில்லாம ஆச்சு. அப்பப்ப ஆஸ்பத்திரி, மருந்து மாத்திரைன்னு கையில இருந்த கொஞ்ச நஞ்ச காசும் செலவானதால கொஞ்சம் கடனும் வந்து சேர்ந்துச்சு.
இந்த நேரத்துல அவனோட காதலும் அவன் லவ்வர் வீட்டுக்கு தெரிஞ்சு போச்சு. ஆனா அவன் கவர்ன்மெண்ட் வேலைக்கு போனா தான் பொண்ணு கொடுப்பேன்னு அவளோட அப்பா ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு. இத பத்தி பேசணும்னு அவ போன் பண்ணும் போதேல்லாம் சரியா தூங்காம, அப்படி தூங்கினாலும் நேரத்துக்கு எந்திரிக்காம இருந்ததால அவனால சரியா ரெஸ்பான்ஸ் பண்ண முடியல… அவளும் அவன் மேல கோச்சிக்கிட்டு அவன் நம்பர பிளாக் பண்ணிட்டா.
வேலை, உடல்நிலை, காதல், பைனான்சுன்னு அதுவரை எல்லாத்துலயும் சராசரியா இருந்த அவன் வாழ்க்கைல, எல்லா ஏரியாலயும் பிரச்சன முத்தி போயி டோட்டலா லாக் ஆயிட்டான் நம்ம சராசரி சண்முகம்.
அப்பதான் சனி பகவான் தந்த அந்த வாய்ப்பு அவன தேடி வந்துச்சி. அவன் எப்பயோ அரைகுறையா எழுதுன ஒரு எக்ஸாம்ல பாஸாகி பைனல் இன்டர்வியூக்கு லெட்டர் வந்துச்சு. கிடைச்சா கவர்ன்மெண்ட் வேலை, பர்மனண்ட் டே ஷிப்ட், நல்ல சம்பளம், பொண்ணும் கிடைக்கும்ன்னு அவனோட எல்லா பிரச்னையையும் போக்கற ஒரே மருந்தா அந்த இன்டர்வியூ இருந்துச்சு. அவனுக்கு நல்லது செய்ய நெனச்ச அவரு, சனி பெயர்ச்சி முடியற நாள்ல அந்த இன்டர்வியூ மூலமா அந்த கடைசி வாய்ப்பை தந்தாரு.
சனி பகவானுக்கு மட்டுமில்ல… நம்ம சண்முகத்திற்கும் நல்லா தெரியும் அவன் அந்த அளவுக்கு ஒர்த் இல்லன்னு. இருந்தாலும் அவனுக்கு கிடைச்ச கடைசி வாய்ப்பா அது இருந்துச்சு. இதுல எப்படியாவது செலக்ட் ஆகிடணும்னு முடிவு பண்ணி நல்லா ப்ரீப்பர் பண்ண ஆரம்பிச்சான் அவன். மொத்தத்துல இதுவரை இல்லாத அளவுக்கு தீயா வேல செய்ய ஆரம்பிச்சான்.
என்னதான் தீயா வேல செஞ்சாலும் கடைசி நேரத்துல சொதப்புற தன்னோட குணம் அவனுக்கே தெரிஞ்சதால, இந்த முறை வேற எந்த கவன சிதறலும் இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணி, ஏற்கனவே இருந்த வேலைக்கு மெடிக்கல் லீவ் சொல்லிட்டு, ராத்திரியும் பகலும் தூங்காம, வேற எதுலயும் கவனம் செலுத்தாம, ஏன் ப்ளாக் பண்ண தன்னோட லவ்வர பாக்க கூட முயற்சி பண்ணாம, முதல் முறையா முழு மூச்சா முயற்சி பண்ணான் நம்ம சண்முகம்…
இவ்வளவு கஷ்டப்பட்டு முயற்சி பண்ணாலும், நாளாக நாளாக நம்ம சண்முகத்துக்கு பதட்டம் அதிகமாச்சு. அதிலும் இன்டர்வியூ நாள் நெருங்க நெருங்க பதட்டம் இன்னும் கூடி போச்சு. இந்த இன்டர்வியூவ எப்படி சமாளிக்கறதுன்னு யோசிச்சப்ப தான் அவனுக்கு அவன் நண்பன் ஆறுமுகம் நியாபகம் வந்துச்சு. அவனும் நம்ம சராசரி சண்முகம் மாதிரியே கொஞ்சம் வருசத்துக்கு முன்னாடி ஆவரேஜ் ஆறுமுகமா இருந்தவன் தான். ஆனா இதே மாதிரி ஒரு கவர்ன்மெண்ட் வேல கிடைச்சு செட்டில் ஆனதால இப்போ அமேசிங் ஆறுமுகமா மாறிட்டான். இதனால அவன மீட் பண்ணி ஐடியா கேட்டான் நம்ம சண்முகம்.
ஆறுமுகத்துக்கு கொஞ்சம் கடவுள் பக்தி அதிகம். அந்த கடவுள் அருளாலே தான் தனக்கு அந்த வேல கிடைச்சதா நம்பறவன் அவன். குறிப்பா சனிக்கிழமை தோறும் தவறாம அந்த சனி பகவானுக்கு விளக்கு போட்டதால தான் தன்னோட வாழ்க்கை மாறுச்சு. அதேப் போல “இன்டர்வியூ போறதுக்கு முன்னாடி பக்கதுல இருக்குற கோவிலுக்கு போயி விளக்கு போட்டா நிச்சயம் வேல கிடைச்சுடும்ன்னு” சண்முகத்துக்கிட்ட சொன்னான் அவன். எது எப்படியோ, எப்படியாவது நம்ம சராசரி சண்முகத்துக்கு அருள் தந்து, அவன முன்னேத்திடனும்ன்னு அந்த ஆறுமுகம் மூலமா நம்ம சண்முகத்துக்கிட்ட அருள்வாக்கு சொல்ல வெச்சாரு நம்ம சனி பகவான்.
இவ்வளவு நாள் தீவிரமா முயற்சி பண்ண நம்ம சண்முகத்துக்கும், அருள் தர்ற கடைசி வாய்ப்பா அத நெனெச்சாரு நம்ம சனி பகவான். அது மூலமா தான் பிரம்மாவுக்கு தந்த வாக்கையும் நிறைவேற்ற நெனச்சாரு. மொத்ததுல சண்முகத்துக்கு மட்டுமில்ல அந்த சனி பகவானுக்கும் இதுதான் கடைசி வாய்ப்பு.
இன்டர்வியூ நாளும் வந்தது.
காலங்காத்தாலயே சீக்கிரம் எழுந்து குளிச்சு முடிச்சு சாப்பிடாமல் கொள்ளாமல் புறப்பட்டான் நம்ம சண்முகம். பாக்கெட்ல வெறும் இருபது ரூபா தான் இருந்துச்சு. அது எடுத்துகிட்டு நேரா கோவிலுக்கு போனான். அவன் கோவில் உள்ளே வரத பாத்துட்டு சனி பகவானும் சந்தோஷமானாரு. எது எப்படியோ இன்னும் கொஞ்ச நேரத்துல அவனுக்கு அருள் கொடுத்து தன்னுடைய டார்கெட்ட முடிக்க நினைச்சாரு.
நேரா உள்ள போன சண்முகம் மூலவரையும், அம்மனையும் அதுக்கு அப்புறம் நம்ம சனிபகவானையும் நல்லா கும்பிட்டான். அவரும் அவன பாத்து நல்லா சிரிச்சாரு. விளக்கு எத்தின அடுத்த செகண்டே அவன் வாழ்க்கைய மாத்த தயாரா இருந்தாரு. விளக்கு போடுற இடம் வெளிப்பிரகாரத்துல கொஞ்சம் தள்ளி இருந்துச்சி பிரகாரத்தையும் மூன்று சுத்து சுத்தினான் நம்ம சண்முகம். கடைசியா விளக்கு போடற இடத்துக்கு வந்தான்.
கோவிலுக்கு உள்ளேயே விளக்கு விக்கிற கடையும் இருந்துச்சு. அங்க போயி “விளக்கு எவ்வளவு?” ன்னு என்று கேட்டான் சண்முகம்.
“20 ரூபாய்” என்று சொன்னாங்க.
“சரி குடுங்க” அப்படின்னு பாக்கெட்ல இருந்து 20 ரூபாய எடுத்து நீட்டினான் சண்முகம்.
அவங்களும் பின்னாடி திரும்பி விளக்கை எடுத்து அவன் பக்கம் குடுத்தாங்க.
ஆனா அந்த விளக்க வாங்க நம்ம சண்முகம் அங்கே இல்ல…
சுத்தி முத்தி தேடிப் பார்த்தால் நம்ம சண்முகத்த எங்கேயும் காணல…
எங்கடான்னு கொஞ்சம் கவனிச்சு பாத்தா…
.
.
.
.
.
.
.
சட்டென மனசு மாறி கொஞ்சம் தள்ளி இருக்கிற பிரசாத கடைக்கு போயி அந்த 20 ரூபாய்க்கு முறுக்கு வாங்கி தின்னுட்டு இருந்தான் நம்ம கிறுக்கு பய சண்முகம்…
வழக்கம்போல கடைசி நேரத்துல சொதப்பி சனி பகவானுக்கே சப்ரைஸ் கொடுத்தான் அவன்.
ஏன்னா அவன் தான் ‘சராசரி சண்முகம்’
Just for fun
Comments
Post a Comment