Restart (மீண்டும் ஒரு முறை)

முதலில் ஒரு குட்டி கதை

    வெவ்வேறு துறையில் இன்ஜினியரிங் படித்த நான்கு நண்பர்கள் ஒரே காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். நல்ல வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த வண்டி திடீரென நின்றுவிட்டது.

    காரில் இருந்த மெக்கானிக்கல் என்ஜினீயர், "இன்ஜின்ல ஏதோ ப்ராப்ளம். நான் பாக்கறேன்" எனக் கூறி வண்டியில் இருந்து இறங்கினான். வெகுநேரம் ஆகியும் என்ன பிரச்சனை எனப் புரியவில்லை.

    சற்று நேரம் கழித்து காரில் இருந்த எலக்ட்ரிகல் என்ஜினீயர், "என்ஜின்ல ஒன்னும் இருக்காது. சர்க்யூட்லதான் ஏதாவது பிரச்சனை இருக்கும்" என கூறி  வயர்களை நோண்டிக் கொண்டிருந்தான்.

    உடன் பயணித்த கெமிக்கல் என்ஜினீரோ, "அதெல்லாம் ஒன்னும் இல்ல... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போட்ட பெட்ரோல்ல தான் ப்ராப்ளம். அதுக்குதான் ரெகுலரா நல்ல பங்க்ல பெட்ரோல் போடணும்" என தன் பங்குக்கு ஒரு கருத்தை கூறினான்       

    வெகுநேரம் ஆகியும் என்ன பிரச்சனை என வண்டியில் இருந்த யாருக்கும் தெரியவில்லை.

    இறுதியாக இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் "Lets shutdown the windows and restart" எனக்கூறி ஜன்னல்களை மூடி வண்டியை மீண்டும் ஆன் செய்ய, கார் தானாகவே ஸ்டார்ட் ஆக ஆரம்பித்தது.

    கம்ப்யூட்டரில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளை Restart செய்யச் சொல்லி சமாளிக்கும் விதத்தை கிண்டல் செய்யும் கடி ஜோக்குகளில் இது ஒன்று.   

    ரீஸ்டார்ட் செய்தால் (மீண்டும் துவங்கினால்) அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடுமா? எவற்றையெல்லாம் ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்? அது அவ்வளவு எளிதா?  ஏற்கனவே துவங்கிய முயற்சிகளை எல்லாம் கைவிட்டு மீண்டும் ஒரு முறை முதலில் இருந்து துவங்குவது சாத்தியமா? இப்படி பற்பல கேள்விகள் மனதில் எழ, அதற்கான சிந்தனையே இந்த கட்டுரை.

 




ரீஸ்டார்ட் - உறவுகள் 

    இயந்திரமயமாக்கப்பட்ட இந்த உலகில் நாம் தொலைத்த அற்புத பொருளே உறவுகள். ஆம்! பொருட்களின் பின்னால் ஓடும் நமது அன்றாட வாழ்வில் நமது அன்பான உறவுகளை, பிரியமான நண்பர்களை இழக்கிறோம். நம்மை அறியாமலேயே அவர்களை விட்டு வெகுதூரம் விலகி செல்கிறோம். நமது வாழ்வின் முக்கிய கட்டங்களில் நமக்கு உதவிய, கடினமான மற்றும் இன்பமான நேரங்களில் நம்முடன் இருந்த, நமது வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய அவர்களை நம்மை அறியாமலேயே புறக்கணிக்கிறோம்.      

 தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் அற்ப குற்றங்களை பெரிதாக்கி, மனதளவில் சில பல சாக்குப் போக்குகள் சொல்லி அந்த உறவுகள் இடையே ஒரு இடைவெளியை உருவாக்குகிறோம். நாம் ஏற்படுத்தும் இந்த சிறிய இடைவெளியை காலமும் தன் பங்கிற்கு பெரிதாக்க, அந்த உறவுகளை தொடர இயலாமல் தடுமாறுகிறோம். இறுதியில் ஒரு கட்டத்தில் நமது வாழ்வை திரும்பி பார்க்கும் போது அனைவரையும் இழந்து ஒரு அனாதை போல உணருகிறோம். 

  எனவே முதலில் நமது தயக்கங்களை சிறிது தள்ளிவைத்து அந்த அற்புத உறவுகளை புதிப்பிப்போம். நமது வாழ்வில் பெரும் பங்காற்றிய அவர்களுக்கென சில நேரம் ஒதுக்கி, அவர்களின் அற்ப நிறை-குறைகளை பெரிதாகாமல், தேவையற்ற மனஸ்தாபங்களை மறந்து, முதலில் இருந்து நமது உறவினை ஆரம்பிபோம். ஒருவேளை அவர்கள் நமது உறவுக் கரத்தை ஏற்க மறுத்தாலும், இடையில் உள்ள தடைகளை தகர்க்க மீண்டும் ஒருமுறை முயலுவதில் தவறில்லை.


ரீஸ்டார்ட் - முயற்சிகள்  

           நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வின் பல்வேறு தருணங்களில், பல்வேறு விஷயங்களில், பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம். ஒரு சில முயற்சிகள் திட்டமிட்ட இலக்கை அடைந்தாலும், நமது இலக்கு தவறிய பல அம்புகள் 'தோல்விகள்' என்ற பெயரில் எப்போதும் நம் மனதை அரித்துக் கொண்டே இருக்கும். காலம் செல்ல செல்ல நாளடைவில் அந்த தோல்விகளே நமது வாழ்க்கை என நமக்கு நாமே சமாதானம் கூறி அவற்றுடன் வாழ பழகிக் கொள்கிறோம். அந்த தோல்விகள் தந்த வலியால் நமது முயற்சிகள் அனைத்தையும் 'விதி' என்ற பெயரில் கைவிட்டு,  நாமே நமது வாழ்வை சுருக்கிக் கொள்கிறோம்.       

    வெற்றி என்பது வென்றவர்க்கு மட்டுமே சொந்தமில்லை. தொடர்ந்து முயற்சிக்கும் ஒவ்வொருவரும் வெற்றியாளரே... எனவே ஏற்கனவே நாம் தோல்வி அடைந்தது கைவிட்ட முயற்சிகளை மீண்டும் தொடர முயற்சிப்போம். வெற்றியாளர்கள் பெற்ற மகிழ்ச்சியை விட தோல்வி அடைந்தவர்கள் பெற்ற அனுபவங்கள் சிறப்பானது என்பதால் மீண்டும் மீண்டும் சரியான முறையில் முயற்சித்தால் அந்த வானம் கூட நமது வசப்படக் கூடும்.

        தொடர் முயற்சிகளை கைவிடாத ஒருவரை அந்த முயற்சியும் என்றும் கைவிட்டதில்லை. மீண்டும் முயலுவோம். உலகை வெல்லுவோம்.  


ரீஸ்டார்ட் - சிந்தனைகள் 

    எண்ணங்களே நமது வாழ்வை தீர்மானிப்பவை. அந்த எண்ணங்களை உருவாக்குபவை மனதில் தோன்றும் சிந்தனைகள். ஆனால் சிறு வயதில் இருந்தே நாம் கற்ற கல்வி, கேட்ட செய்திகள், பார்த்த சம்பவங்கள், பெற்ற அனுபவங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து ஒரு பலமான சுவற்றை உருவாக்கி, நம்மை அதனுள் மட்டுமே சிந்திக்க செய்கின்றது. இதனால் நம்மை அறியாமலேயே பெரும்பாலும் நம் மனது ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே இயங்குவதை நாம் உணர்வதில்லை. பரந்த இந்த உலகில் மாற்று கருத்துக்களை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் நமது கருத்தை மட்டுமே பிரதானமாக எண்ணி வாழ்கிறோம். முழு மனதோடு இவ்வுலகோடு இணையாமல் முரண்படுகிறோம்.   

       அனைவருக்கும் பொதுவான இந்த பூமியில், தேவையற்ற சச்சரவுகளை உருவாக்கும் நமது வழக்கமான டெம்ப்ளேட் (Template) சிந்தனை முறையை விட்டு சற்று விலகி, நாம் சிந்திக்கும் முறையை மறு சீரமைப்பு செய்வோம். அனைத்து கருத்துக்களையும் (Thoughts, ideas and interpretations) ஏற்கும் மனப் பக்குவத்தை அடைய முயலுவோம். மீண்டும் புதிதாய் சிந்திப்போம். அந்த சிந்தனை மலர்களால் இந்த பூமியை மலரச் செய்வோம்.


ரீஸ்டார்ட் - புதிய நீங்கள் 

   நாம் அனைவரும் சிறுவயதிலிருந்தே பற்பல கனவுகளுடன் ஆசைகளோடும் வளர்கிறோம். ஆனால் காலப்போக்கில் சூழ்நிலைகள் காரணமாக அந்த கனவுகளையும், ஆசைகளையும் தியாகம் செய்கிறோம். இறுதியில் ஒரு நாள் திரும்பிப் பார்க்கும்போது நமக்கென சுய அடையாளம் ஏதுமின்றி தனித்து நிற்கிறோம். 

    எனவே இதுவரை இல்லாவிட்டாலும் இனி நாம் வாழும் ஒவ்வொரு நாளிலும் புதிதாய் ஒன்றை கற்றுக் கொள்ளவும், ஏற்கனவே செய்த தவறுகளை திருத்திக் கொள்ளவும் முயற்சிப்போம். நம்மால் மீண்டும் பிறக்க இயலாது. ஆனால் முழுமூச்சுடன் முயன்றால் நிச்சயம் மீண்டும் புதிதாய் மாற இயலும்.  விலகிய உறவுகளை புதிப்பித்து, கைவிட்ட முயற்சிகளை மீண்டும் துவங்கி, புதிய சிந்தனைகளை மனதில் ஏந்தி,  புதிய நம்மை உருவாக்குவோம்.  




Restart your relationships

Restart your efforts

Restart your thoughts

Restart your life with new version of you...


எனது பிற பதிவுகளை படிக்க...






Comments

  1. restart is not simple word ,it's a magic ,ur words explained it well, and gave energy to try,thanks

    ReplyDelete

Post a Comment