ஒரிரவில் பல கதைகள்


1. ஓங்கி உயர்ந்த இந்த மலையில் சற்று சிரமப்பட்டு ஏறிக் கொண்டிருக்கிறேன். முன்பு போல் அடிக்கடி டிரக்கிங் செல்வதில்லை என்பதால் வழக்கத்தை விட மூச்சு சற்று அதிகமாகவே வாங்கியது. இது எந்த மலை என்று தெரியவில்லை. இதற்கு முன்பு என் வாழ்வில் இப்படி ஒரு மலையை பார்த்தது போலவும் தோன்றவில்லை. ஏறி வந்த வழியில் இயற்கைக்கு பஞ்சமில்லை. பர்வதமலை சாயல் லேசாக இருந்தும் அதுபோல இது இல்லை. இறுதியாய் உச்சியை அடைந்தேன். வரிசையில் நின்றேன். இறைவனைப் தரிசித்து, அவர்கள் தந்த சூடத்தை தொட்டு கண்ணில் ஒற்றினேன். மீண்டும் ஒரு முறை மனமார வேண்ட எண்ணி ஒரு கணம் கண்களை மூடி திறக்க, எதிரே இருந்த தெய்வம் திடீரென காணாமல் போனதன் காரணம் புரியவில்லை.

2. இவர்களை எல்லாம் விட்டு எப்படி பிரியப் போகிறேன் என தெரியவில்லை. வெகுசில நாட்களுக்குள்ளாகவே நன்றாக பழகி விட்டனர். குறிப்பாக அவளது அந்த அழகான முகம் கண்ணின் முன்னே வந்து வந்து சென்றது. விடை பெறுவதற்கும் அவளிடம் அதைச் சொல்ல முடியுமா என மனம் ஏங்கியது ஆனால் அதற்குண்டான தைரியம் என்னிடம் இல்லை. இந்த இடம் ஒரு ஆடிட்டோரியம் போல தோன்றுகிறது. மேடையில் வரிசையாக நின்று இருந்தோம். எனக்கு பின் தான் அவள் நின்று இருந்தாள். அவளைத் திரும்பி பார்க்கவும் தைரியம் இல்லை. எனக்கான முறை வந்தது. சம்பிரதாயத்திற்கு ஓரிரு வார்த்தைகள் பேசி விடை பெற்ற பின் மேடையை விட்டு இறங்கினேன். அடுத்ததாக அவரின் மனைவி இவர் பேசுவார் என நிகழ்ச்சி தொகுப்பாளர் தவறுதலாக சொல்ல, உடனடியாக திரும்பிப் பார்த்தேன். அப்போது பேச ஆரம்பித்த அவளின் முகத்தில் இருந்த வெட்கமே நான் சொல்ல வந்ததை சொல்லாமல் சொல்லியது. 

3. ஓர் அழகான ஊர் திருவிழா. புதிதாய் யூட்யூபரான நான் அங்கு நின்றிருந்தேன். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த மாடுலேஷனில் சொல்லிப் பார்ப்போம் என எனக்கு நானே ப்ராக்டிஸ் செய்து கொண்டேன். புதிதாய் வாங்கிய ஐபோனை அதற்குண்டான ஸ்டிக்கில் பொருத்தி சரியாக இயங்குகிறதா என ஒரு முறை சோதித்து பார்த்தேன். அனைத்தையும் சற்று விரிவாக கவர் செய்ய வேண்டும். ஒன்று விடாமல் அனைத்து நிகழ்வுகளையும் தரமாக பதிவு செய்ய வேண்டும். இது ஒரு புதிய முயற்சி. இது நிச்சயம் வெற்றி பெற வேண்டும். இனி நேரம் கிடைக்கும் போது இதுவரை எழுதியதையும் வீடியோவாக வெளியிடுவோம். என்றெல்லாம் எண்ணிக்கொண்டே கூட்டத்தோடு கூட்டமாக கலந்து மறைந்தேன்.

4. ரயில்வே சுரங்கப்பாதையின் அடியில் சற்று வேகவேகமாக சென்று கொண்டிருந்தேன். பொதுவாக சாதுவான நான் திடீரென ஏன் இப்படி நடந்து கொண்டேன் என எனக்கே தோன்றவில்லை. எதிரில் யார் வருகிறார்கள் என ஏறெடுத்து பார்க்கவும் சற்று பயமாகவே இருந்தது. எனது அதிக வேகத்தால் அவர்கள் மீது மோதி விடுவேனோ என்றும் தோன்றியது. ஏன் அப்படி ஓர் கோபம் வந்தது? எதற்காக சாலையின் ஓரம் இருந்த அந்த பூனையை தூக்கி எறிந்தேன்? வானில் பறந்து கீழே விழுந்த போது மஞ்சள் நிற பூனையின் உடலில் சிகப்பு நிற ரத்தம் வழிந்தது. அதன் உடலில் உயிர் இல்லை என தெரிந்ததும் ஒரு கணம் உறைந்து போனேன். இனி இப்படி எல்லாம் செய்யக்கூடாது என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஒரு வழியாக பதட்டத்துடன் சுரங்கப்பாதையை கடந்து மறுபுற சாலையை அடைந்த தருணத்தில் எதிரே ஜீப்புடன் நின்றிருந்த போலீஸ் ஆபிசர் இனி மற்றதை பார்த்துக் கொள்வார். 

5. குளிர் அதிகமாக இருந்ததால் போர்வை சற்று சரி செய்தேன். இருப்பினும் மெல்லியதான அந்த போர்வையால் குளிரை கட்டுப்படுத்த இயலவில்லை. அளவு கடந்த குளிரும் அதனுடன் இணைந்த கொசுக்கடியும் எனது உறக்கத்தை கெடுத்தது. இரவில் குடித்த நீரும் அடிவயிற்றில் முட்ட, வேறு வழி இன்றி போர்வை விலக்கி எழுந்தேன். மின் விளக்கை ஒளிரவிட்டேன். கொசுபேட் கொண்டு நான்கு புறமும் இருந்த சில கொசுக்களை அடித்துப் பொசுக்கினேன். அறையில் ஓடிக் கொண்டிருந்த Acயை நிறுத்தி, மின்விசிறியை ஓட விட்ட பின் கடிகாரத்தை பார்த்தேன். நள்ளிரவு 2.00 மணி. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான்கு மணி நேர நல்ல உறக்கம். நான்கு மணி நேரத்தில் நான்கு கனவுகள். ஒவ்வொன்றும் ஒரு ரகம். ஒரு கதை சொல்லியான எனக்கு தொடர்ந்து பல கதைகளை சொன்ன இந்த இரவு எனக்கு பிடித்திருந்தது. 

மீண்டும் தொடர காத்திருந்த உறக்கத்தையும், அதில் வர காத்திருந்த கனவுகளையும் சற்று காத்திருக்க சொல்லிவிட்டு அரைகுறையாக நிழல் போல தோன்றிய அந்த கதைகளை அலைபேசியில் பதிவு செய்தேன். அவற்றையே இப்போது உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.


இப்போது மணி 2.45 மீண்டும் உறங்கச் செல்கிறேன். கனவுகள் தொடரட்டும்... கதைகளும்தான்... 

Comments

  1. கனவிலும் பருவதமலை நினைப்புதான்

    ReplyDelete
  2. ஐந்தும் அருமை.ஐந்து சிறுகதை எழுத பிரபஞ்சம் உங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கு

    ReplyDelete

Post a Comment