கோடையை கொண்டாடுவோம்



ஸ்ஸ்ஸ்பா... என்ன வெயில்! 
100 டிகிரிக்கு மேல கொளுத்துது.
எப்பதான் மழை வரும்? 
ஏசி வாங்கலாமா? 

    கோடை காலத்தில் இவையெல்லாம் வழக்கமாக நாம் கேட்கும் வார்த்தைகள் தான். கோடை என்றாலே வெயிலின் கொடுமையும், அனல் வீசும் காற்றும், வியர்வையின் துர்நாற்றமும், வியர்க்குருவின் அரிப்பும், இவை அனைத்தும் சேர்ந்து தோற்றுவிக்கும் ஒருவித எரிச்சலும் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் இவை அனைத்தும் கோடையில் ஒரு சில பரிமாணங்களே...

    சுண்டிவிடும் நாணயத்தை போலவே எந்த ஒரு நிகழ்வுக்கும் இரு நேர் எதிர் விளைவுகள் இருப்பது வழக்கம். நம்மைச் சுட்டெரிக்கும் கோடையும் அதற்கு விதிவிலக்கல்ல... அதற்கும் மற்ற சில சிறப்புகள் உண்டு. அந்த சிறப்புகளை உணர்ந்தவர்கள் அந்தக் கோடையை வரவேற்று கொண்டாடுவதும் உண்டு. 

    அவ்வாறு கோடையை வரவேற்று கொண்டாடும் ஒரு சிலரை பற்றிய தொகுப்பே இந்த கட்டுரை.


1. மலர் செரியும் கொன்றை

    வெகு நாள் கழித்து வெளிநாட்டில் இருந்து திரும்பும் காதலியை உற்சாகத்துடன் ஆர்ப்பாட்டமாய் வரவேற்கும் காதலனை போல கோடையின் துவக்கத்திலேயே மஞ்சள் மழை பொழிந்து அதை வரவேற்கும் உன்னத அன்பு கொண்டது கொன்றை.



    மற்ற மரங்கள் எல்லாம் தங்கள் இலைகளை இழந்து, வெறும் கிளைகளாய் காட்சியளிக்க, கொன்றை மரம் மட்டும் தன் மேல் மஞ்சள் போர்வை போர்த்தி மங்களகரமாய் காட்சி தருவது கோடையின் துவக்கத்திலே நிகழும் ஒரு அற்புதமாகும். மேலும் தனது அந்த மகிழ்ச்சியை அனைவருக்கும் தெரிவிக்கும் வண்ணம் தனது நிழலில் நடப்பவர் மீதும் மலர் மழை பொழிந்து அவர்களையும் உற்சாகப்படுத்துவது கொன்றையின் வழக்கமாகும்.

    கோடையின் துவக்கத்தில் காலை வேளையில் சில நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்கையில் கொன்றையின் அடியில் சில நிமிடங்கள் நிற்பதும், அது பொழியும் மஞ்சள் மழையில் நனைவதும், அது அமைத்துக் கொடுத்த மலர் பாதையில் சில அடிகள் நடப்பதும் இந்த கோடையில் மட்டுமே கிடைக்கும் ஒரு உன்னத அனுபவம் என்பதால் கோடையை வரவேற்பதில் கொன்றைக்கு இணையில்லை எனலாம்.


2. பொங்கி வரும் மேகங்கள் 

    எதிர்பாரா நேரத்தில் திடீரென வந்து நம்மை மகிழ்விக்கும் நண்பனை போல் பெரும்பாலும் தெளிவாக வறண்டு காணப்படும் கோடையில், திடீரென பறந்து வரும் பஞ்சு போல வானில் அணிவகுப்பவை பொங்கி வரும் மேகங்கள். காய்ந்த இந்த பூமியில் சூரியன் நம்மை சுட்டெரிக்கும் போது மேகங்களே நமக்கு குடையாய் மாறும் அதிசயமும் சில சமயங்களில் கோடையில் நடக்கும்.



    கடலின் அலைகள் கண்ணாடியில் பிரதிபலிப்பது போல் தெரிந்த வானில் திரண்டு வரும் மேகங்களின் அழகுக்கு ஈடான ஒன்று இவ்வுலகில் இல்லை எனலாம். அத்தகைய சிறப்புமிக்க மேகங்கள் கோடையின் இறுதியில் பெருக்கெடுக்க ஆரம்பிக்கும். அது விரைவில் அந்த கோடை விடைபெற்று, மழை தர அந்த வானம் தயாராய் இருப்பதை நமக்கு உரக்க அறிவிக்கும். ஒரு சில நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது, கோடை நடுவிலும் திடீரென தோன்றி, கோடை மழை பொழிந்து இப்பூமியை காக்கவும் மழையின் தூதுவனான இம்மேகங்கள் தவறுவது இல்லை. 

    மழலையின் முகத்தில் தோன்றும் மயக்கும் சிரிப்பை போல் நீல வானில் வலம் வரும் மேகங்களின் அழகு, கோடையில் சில சமயங்களில் காணக்கிடைக்கும் ஒரு அற்புதமாகும்.


3. அறியா மானிடர்கள்
        
        கோடையின் முதல்பாதி கொன்றைக்கும், இரண்டாம் பாதி பொங்கிவரும் மேகங்களுக்கும் உரியது என்றால் ஒட்டுமொத்த கோடையும் நமக்கு உரியதே... ஆம்! என்னதான் கோடையை உதட்டளவில் எதிர்த்தாலும், நம்மை அறியாமலேயே சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அதனை கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறோம். 
 
     குறிப்பாக மழைக் காலத்தில் ஓரிரு நாள் விடுமுறைக்காக ஏங்கும் பள்ளிச் சிறுவர்களுக்கு, அந்த சூரியன் அளிக்கும் பம்பர் பரிசே கோடை விடுமுறை. என்னதான் அலைபேசியில் தொலைந்தாலும், தொலைக்காட்சியில் புதைந்தாலும்  எப்பேர்ப்பட்ட சிறுவர்களுக்கும் மைதானத்திலோ அல்லது குறைந்தபட்சம் வீட்டின் வெளியே உள்ள வீதியிலோ விளையாடும் வாய்ப்பை பெற்றுத் தர அந்த கோடை என்றும் மறந்ததில்லை என்பதால் அதை கொண்டாடும் சிறுவர்களின் உற்சாகத்திற்கும் குறைவில்லை.   

        சிறுவர்கள் மட்டுமல்ல, அன்றாடம் அலுவலக வேலையில் மூழ்கிக் கிடைக்கும் பெரியவர்களுக்கும் கொளுத்தும் கோடை காலம் ஒரு வரப்பிரசாதமே...     அதிகாலையிலேயே தனது கதிர்களை வீசி தூக்கத்தை கலைக்கும் சூரியன், சுறுசுறுப்புக்கு வழிகாட்டி, அந்த விடியல் பொழுதிலேயே உடல்நலத்தின் மீதான நமது அக்கறையை நினைவுபடுத்துவதால் மழை மற்றும் பனிக் காலங்களில் முழுவதும் இழுத்துப் போர்த்திக் கொள்ளும் மனிதர்களை கூட அதிகாலையிலேயே எழச் செய்யும் அதிசயத்தை அந்த கோடையே செய்கிறது.

     

    மேலும் கால நேரம் பார்க்காமல் ஓய்வின்றி உழைப்பவர்களுக்கு விடுமுறை, சுற்றுலா, கடற்கரை, ஷாப்பிங், ஐஸ்கிரீம், பழச்சாறு, உறவினர்கள், நண்பர்கள் என அனைத்தையும் அந்த கோடையே நினைவுபடுத்துகிறது. எனவே நிழல் மற்றும் நீரின் அருமையை நமக்கு உணர்த்தும் கோடையும் தேவைதான். அதை போற்ற மறந்தாலும் தூற்ற வேண்டாம்.

எனவே கோடையை கொண்டாட பழகுவோம்.


எனது பிற பதிவுகளை படிக்க...

Comments