பருவதமலை கிரிவலம்

        "அடிக்கொரு லிங்கம் அண்ணாமலை; பிடிக்கொரு லிங்கம் பருவதமலை" என்பது காற்றில் கலந்த காஞ்சி மஹா பெரியவரின் வாக்கு. அத்தகைய புகழ் பெற்ற பருவதமலையில் ஏறி மல்லிகார்ஜுன ஸ்வாமியை தரிசிக்கும் வாய்ப்பை பலமுறை எனக்கு அளித்து கொண்டிருக்கும் இறைவன், மற்றொரு வடிவில் எனக்கு அளித்த அரிய தரிசனமே பருவதமலை கிரிவலம்....


பருவதமலை சிகரம்


        நம்மில் பெரும்பாலானோர் திருவண்ணாமலையில் பௌர்ணமியன்று கிரிவலம் சென்றிருப்போம். அவற்றுள் சிலர் பருவதமலையில் மலையேற்றம் சென்றிருக்க வாய்ப்புண்டு. ஆனால் திருவண்ணாமலை போன்றே பருவத மலையில் கிரிவலம் நடைபெறுவது நம்மில் பெரும்பான்மையோருக்கு தெரிய வாய்ப்பில்லை. எனக்கும்தான் இந்த வாய்ப்பை இறைவன் அளிக்கும் வரை....

        மாதாந்திர பௌர்ணமி தோறும் ஒரு சிலர் பருவதமலையை வலம் வந்தாலும்,  ஆண்டுக்கு ஒரு முறை மார்கழி மாதம் முதல் நாள் பருவத மலையை கிரிவலம் செல்வது தனிச்சிறப்பு. ஏனெனில் அந்த தினத்தில்தான் 1944ம் ஆண்டு காஞ்சி மகாபெரியவரான சந்திரசேகர சுவாமிகள் பருவதமலையை கிரிவலம் செய்தார். முதலில் மலை ஏற வந்த அவர், மலையே ஈசனின் வடிவமாக தெரிந்ததால் கிரிவலம் செய்தார் எனக் கூறப்படுகிறது. 



        இத்தகைய சிறப்பு மிக்க நாள் பருவதமலை அடிவாரத்தில் மிகப்பெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் மேற்கொள்கின்றனர். ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டில் கிடைத்த அந்த அரிய வாய்ப்பு, மீண்டும் ஒருமுறை இந்த ஆண்டும் (2023) கிடைத்தது. அத்தகைய உன்னத அனுபவத்தை இக்கட்டுரையில் காண்போம். 

    சுமார் 25 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பருவதமலை கிரிவலத்தை, அடிவாரத்திலுள்ள தென்மாதிமங்கலம் மற்றும் கடலாடி என இரு இடங்களில் இருந்தும் துவங்கலாம். சென்ற முறை நண்பர்களுடன் கிரிவலம் செய்த நான், இம்முறை தனித்து பயணித்தேன். சென்னையில் இருந்து சனிக்கிழமை (16-12-2023) மாலை புறப்பட்டு, பருவதமலை அடிவாரத்தில் உள்ள கடலாடி மௌனகுரு விடோபானந்தா ஆசிரமத்தை அடைந்து, அங்கு இரவு தங்கி, மறுநாள் (17-12-2023) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஆசிரமத்தின் அருகில் உள்ள விநாயகரை வேண்டி,  கிரிவலத்தை துவங்கினேன்.          

        இருள் நேரம் என்பதால் அலைபேசி ஒளியுடன் (Mobile torch) கிரிவலம் துவங்கியது. முதலில் வயல்வெளி நடுவே மண்பாதையில் துவங்கிய பயணம், சுமார் பத்து நிமிடங்களுக்கு பிறகு 'பச்சையம்மன் மன்னார்சாமி" கோயிலை அடைந்தது. அங்கு பச்சை அம்மன் மற்றும் கம்பீர முனீஸ்வரரை வணங்கி திரும்பிய போது எதிரே இருந்த மண்டபத்தில் ஏழு விதமான வடிவில் காட்சி அளித்த விதவிதமான முனீஸ்வரர்களை கண்டு ஆச்சர்யம் அடைந்தேன்.


கம்பீர முனீஸ்வரர் 

    செம்முனி,  வெங்குமுனி, ஜடாமுனி , முத்துமுனி, சிம்மமுனி, வேதமுனி, விலாடமுனி என பல பெயர்களில் கிராமங்களை காக்கும் அந்த தெய்வங்களை வணங்கிய பின் பயணத்தை தொடர்ந்தேன். சென்ற முறை வயல்வெளி நடுவே  ஒத்தையடி பாதையாக தோன்றிய இடங்கள் எல்லாம், தற்போது அகலம் அதிகரித்து, சில இடங்களில் தார் சாலைகளும் அமைக்கப்பட்டிருந்தன.  


வழியெங்கும் வண்ணக் கோலங்கள்


    வயல்கள் மற்றும் ஒரு சில கிராமங்களை கடந்து, நல்ல சாலை ஒன்றில் காலடி எடுத்துவைத்த தருணத்தில் மலையில் இருந்து இறங்கி எனது மேனியை தழுவிய காற்று, உடலை மட்டுமின்றி உள்ளத்தையும் குளிர்வித்தது. அப்போது கீழ்வானில் தோன்றிய விடிவெள்ளியை ரசித்த பின் பயணத்தை தொடர்ந்தேன். வழியில் உள்ள ஊர்களில் எல்லாம் ஆங்காங்கே அன்னதானமும், பால், தேனீர் போன்ற பானங்களும் பல்வேறு குழுக்களால் வழங்கப்பட்டன. குறிப்பாக அதிகாலையில் எழுந்து வாசல் முழுதும் கோலமிட்டு அதில் பூசணி, செம்பருத்தி உள்ளிட்ட பூக்களை வைத்திருந்த கிராம மக்களின் கலாச்சாரமும், பக்தர்களுக்கு தங்களால் முடிந்த அளவு குறைந்தபட்சம் குடிநீராவது வழங்க வேண்டும் என்ற அன்பு நிறைந்த பண்பும் மெய்சிலிர்க்க வைத்தது.    

        சுமார் இரண்டேகால் மணிநேர பயணத்திற்கு பிறகு வெள்ளம்தாங்கி ஈஸ்வரர் கோயிலை அடைந்தேன். பொங்கி வந்த வெள்ளத்தை தடுத்து, ஊரை காத்த அந்த இறைவன் குடியிருந்த பழமையான ஆலயத்தில் இருந்த தெய்வங்கள் எல்லாம் அருகில் உள்ள புதிய கோயிலுக்கு இடம் பெயர்ந்ததால், தற்போது கருவறைக்குள் இறை உருவங்கள் ஏதுமின்றி வெற்றிடமாய் காணப்பட்டது. இருப்பினும் அங்கு ஏற்றப்பட்டிருந்த விளக்குகளின் ஒளியில் என் மனதில் இருந்த இறைவனை வணங்கினேன். 


வெள்ளம்தாங்கி ஈஸ்வரர் கோயில்


         அடுத்து வந்த கரும்பு தோட்டங்களை கடந்த பின் எலுமிச்சை வாசம் நிரம்பிய வடபத்ரகாளியை வணங்கி புறப்பட்ட போது, திடீரென அந்த சூழ்நிலையே ரம்மியமாக மாறியது போல தோன்றியது. அடுத்த சில நிமிடங்களில் அத்தகைய சூழலை உண்டாக்கிய கார் மேகங்கள் லேசான தூரலை தூவிய போதும், அது பெரும் மழையாக மாறாததால் பயணத்தை தொடர முடிந்தது.        
      
         வழியெங்கும் இருந்த வயல்வெளிகளில் நெற்பயிர்கள் நடவு முதல் அறுவடை வரை பல்வேறு நிலைகளில் காணப்பட்டன. வாழ்வில் செல்வம் சேர சேர் பணிவும் வர வேண்டும் என்பது போல நன்றாக விளைந்த நெல்மணிகளை தாங்கிய பயிர்கள் தலை சாய்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தன.      



தலை சாய்ந்த நெற்பயிர்கள் 


       நன்றாக விடிந்த பின்பும் பனிமூட்டம் அதிகம் இருந்ததால் எதிரே இருந்த பருவதமலை உச்சி சிகரம் பெரும்பாலும் கண்களுக்கு புலப்படவில்லை. குறிப்பாக சென்றமுறை ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு வடிவில் காட்சியளித்து, அற்புத தரிசனத்தை அளித்த அம்மலையின் உச்சி,  இம்முறை  கண்களுக்கு புலப்படாமல் மாயமாய் தோன்றியது வித்தியாசமாக இருந்தது. இதுவே இறைவன் தந்த அனுபவம் என எண்ணி, மலையை நோக்கிய கவனத்தை என் மனதையும், அதில் தோன்றிய எண்ணங்களையும் நோக்கி செலுத்தியபடி நடந்தேன்.

  காலை 8:45 மணியளவில், எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பிய  மற்றொரு அடிவாரமான தென்மாதிமங்கலத்தை அடைந்தேன். அவ்விடத்தில் சிறிது இளைப்பாறி,  லேசான சிற்றுண்டி உண்டு பயணத்தை தொடர்ந்தேன். இம்முறை ஞாயிற்றுகிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் பல மடங்காக இருந்தது. மெயின் ரோடு வரை நீண்டிருந்த வாகனங்களின் அணிவகுப்பும் அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் எண்ணிக்கையை சொல்லாமல் சொல்லியது. 


கிராம மக்களின் திருப்பணி 


          கிரிவல பாதையில் வழியில் இருளான சாலைகளில் மின்விளக்குகளும், பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்களில் கழிவறை வசதியும், ஒரு சில இடங்களில் மருத்துவ வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பாராட்டதக்க ஒரு விஷயமாகும். பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டாலும் உணவுகளை வீணாக்கிய மக்களின் அலட்சிய போக்கும், எங்கும் குப்பைகளை வீசி சுற்றுப்புறங்களை அசுத்தப்படுத்தும் பழக்கமும் வருந்ததக்கதாக இருந்தது.           
            
    காலை 10:15 மணியளவில் இன்னும் மூன்று கிலோமீட்டர் தொலைவே இருக்கும் போதுதான் சூரிய ஒளி லேசாக தலைகாட்ட ஆரம்பித்தது. வெறுங்காலில் நடந்த பயணத்தில் சிறு சிறு கற்கள் நிரம்பிய கடைசி இரண்டு  கிலோமீட்டர் பாதை சற்று சிரமமாகவே இருந்தது. இருப்பினும் இறைவனின் அருளால்  அவற்றையும் கடக்க முடிந்தது. இறுதியாக சுமார் ஆறு மணிநேர நடைக்கு பின் காலை 10:55 மணிக்கு கிரிவலம் இனிதாய் நிறைவடைந்தது. சிறிதுநேர ஓய்வுக்கு பிறகு மௌனகுரு ஆசிரமத்தில் வழங்கப்பட்ட மதிய உணவை உண்டு, அற்புத நினைவுகளுடன் அங்கிருந்து புறப்பட்டேன்.


மேலும் சில புகைப்படங்கள் 


பல்வேறு முனிகள்
(கடலாடி பச்சை அம்மன் கோயிலில்) 


செம்முனி

வெங்குமுனி

ஜடாமுனி 

முத்துமுனி 

சிம்மமுனி 

வேதமுனி 

விலாடமுனி 



பருவதமலை பகுதியில் விவசாயம்
(பல்வேறு நிலைகளில்)















மேலும் சில காட்சிகள் 




வழியெங்கும் விளக்குகள்

மருத்துவ முகாம்

வெள்ளம் தாங்கி ஈஸ்வரர் கோயில் 

கடலாடி மௌனகுரு ஆசிரமம் 

ஒரு இயற்கை காட்சி

ஒரு இயற்கை காட்சி



பருவதமலை சிகர தரிசனம்
(2017ல் எடுக்கப்பட்ட படங்கள்)  



கண்களுக்கு புலப்படா சிகரம்

தூரத் தெரியும் சிகரம்  

சிகரமே லிங்கமாய்

சிகரமே கோபுரம் போல



படுத்திருக்கும் சிம்மம் போல






மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்.


நன்றிகள் 
  • அற்புத அனுபவங்களை அளித்த இறைவனுக்கு. 
  • மௌனகுரு விடோபானந்தா ஆசிரமத்திற்கு.
  • பருவதமலை சுற்றுப்புறங்களில் உள்ள கிராம மக்களுக்கு. 
  • சிறந்த ஏற்பாடுகளை செய்த அரசாங்கத்திற்கு. 
  • அன்னதானம் வழங்கிய உள்ளங்களுக்கு.     
  • கிரிவலம் செய்த சக பக்தர்களுக்கு.
  • இந்த பதிவை படிக்கும் உங்களுக்கு.  
 
பிற பதிவுகளை படிக்க...
 

Comments

Post a Comment