தொடர் பயண அனுபவங்கள் - பகுதி 3

 முந்தைய பகுதியை படிக்க...



திருமலை வையாவூர் மற்றும் தஞ்சை



பயணம் 4 - திருமலை வையாவூர் (7.10.2023)

 
    பயணங்களை போலவே குடும்பத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளும் உற்சாகத்தை அள்ளித்தருபவை என்ற காரணத்தால் எதிர்வந்த நவராத்திரியின் பொருட்டு எனது தொடர் பயணங்களுக்கு இருவார இடைவெளி விட முடிவு செய்தேன். ஆனால் அந்த இடைவெளியில் எங்கள் குலதெய்வத்திடம் இருந்து அழைப்பு வர, வேடந்தாங்கல் அருகே உள்ள திருமலை வையாவூருக்கு ஒரு திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 

    சிறுவயதில் இருந்தே பலமுறை சென்றிருந்தாலும், அந்த வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாளின் வரலாற்றை நூல் வடிவில் வெளியிட்டிருந்தாலும் ஒவ்வொருமுறை செல்லும் போதும் சிறந்த அனுபவங்களை தருவதில் குலதெய்வத்திற்கு என்றும் நிகரில்லை. எனது அடுத்த நூலும் சிறப்பாக வெளிவர அவரை வேண்டி விடைபெற்றேன்.   


Whatsapp 9962512007 to buy this book 


        சிறுமலையான அந்த திருமலையில் தற்போது ஏறவும் இறங்கவும் தனித்தனி வண்டிப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது நன்று. புரட்டாசி மாத சனிக்கிழமை என்பதால் எக்கச்சக்க கூட்டத்தை எதிர்பார்த்து சென்ற நேரத்தில், கூட்டம் ஏதுமின்றி அமைதியாக அருள் புரிந்த அந்த வையாவூர் வேங்கடவனை தரிசனம் மனதிற்கு மகிழ்வாய் இருந்தது. அடுத்து வந்த வாரஇறுதி (14, 15 அக்டோபர் 2023) நவராத்திரி கொலு ஏற்பாட்டில் கரைய, தஞ்சை மண்ணிலிருந்து அடுத்த ஒரு பயண அழைப்பு வந்தது, ராஜராஜ சோழனிடம் இருந்து...    
        

பயணம் 5 - தஞ்சை (24.10.2023)

        ஆர்வமும் அர்ப்பணிப்பும் உள்ள ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு நிச்சயம் என்பது போல நடனத்தில் பேரார்வம் கொண்ட எனது மகளுக்கு தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் நடைபெறும் ராஜராஜசோழனின் சதயவிழாவில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அவள் மூலம் எனக்கும் அந்த சோழ மண்ணில் சிலமணி நேரம் வாழும் வாய்ப்பு கிடைத்தது.                


நிசும்பசூதனி (புகைப்பட உதவி : Google)


        நடன நிகழ்வு மாலையில்தான் என்பதால் இடையில் கிடைத்த இரண்டு மணிநேரத்தை பயன்படுத்த எண்ணி முதலில் சோழர்களின் போர் தெய்வம் எனக் கருதப்படும் நிசும்பசூதனி எனப்படும் வடபத்திரகாளி கோயிலுக்கு சென்றேன்.  எட்டு கரங்களில் பல்வேறு ஆயுதங்களை தாங்கி ஒரு காலத்தில் பல்வேறு போர்களில் சோழத்தை  காத்த அந்த தெய்வம் தற்போது உக்கிரத்தை குறைத்து, தலையை சாய்த்து அமைதியாக பார்த்தது போல தோன்றியது.  அருகில் உள்ள பூமாலை ராவுத்தர் கோயிலையும் தரிசித்த பின் வழியில் சந்தித்த முகமறியா நண்பர் ஒருவரின் உதவியோடு (நன்றி) அரண்மனையை நோக்கி சென்றேன்.  


தஞ்சை அரண்மனை 




        நாயக்கர் மற்றும் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்ட தஞ்சை அரண்மனை வளாகத்தில் ஒளிபரப்பட்ட சுற்றுலா துறையின் காணொலி காட்சி சிறப்பாக இருந்தது. பின்னர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் நுழைந்தேன். அங்கு மிகச்சிறியது முதல் பல்வேறு வடிவிலான ஓலைச்சுவடிகள் பாதுகாக்கபட்டிருந்தது. குறிப்பாக வரி வடிவமில்லா சமஸ்கிருத மொழி  செய்யுள்கள் கிரிந்த எழுத்து, ஒரிய எழுத்து, நந்திகாரி என பல மொழிகளில் பதியப்பட்டிருந்தது சிறப்பு. மேலும் திருக்குறளின் செப்பு பட்டயம், பல மொழி புத்தகங்கள், ஓவிய புத்தகங்கள், புகைப்படங்கள், இசை குறிப்புக்கள், பழங்கால வரைபடங்கள், மனித / விலங்கு ஒற்றுமை படங்கள் என  அனைத்தும் அங்கு வாழ்ந்த மன்னர்கள் கலா ரசிகர்கள் என எடுத்துரைத்தது. இங்கு புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.
      
        அடுத்ததாக சிற்பக்கூடத்தில் நுழைந்து அங்கிருந்த அற்புத கலையில் எனது மனதை பறிகொடுத்தேன். அங்கு கற்சிற்பங்கள் மட்டுமின்றி உலோக சிற்பங்களும் தனி அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பிறகு  தஞ்சை பெரிய கோயில் அமைப்பில் கட்டப்பட்ட ஆயுதகோபுரம் மற்றும் மணிகோபுரம், மராட்டிய தர்பார் கூடம் ஆகியவற்றை பார்வையிட்ட பின் எனது அறைக்கு திரும்பினேன்.       



மராட்டிய மன்னர் சரபோஜி


சரஸ்வதி மஹால் மேற்கூரை


தலையாட்டி பொம்மை


மணிக்கோபுரம்


ஆயுத கோபுரம்


ஆயுத கோபுரம்


அரண்மனை வளாகத்தில்


சிற்பக்கூடம் உள்ளே


இறைவனின் பின்னால் இறைவி


ஈசனை வழிபடும் அடியவர்கள்


கஜசம்ஹரார்


அய்யனார் சிற்பம்


சோமாஸ்கந்தர்


ஆலிங்கன சந்திரசேகரர் 



சதய விழா 

    மதியம் சிறிது ஓய்வுக்கு பின் சதயவிழாவையும் அதில் எனது மகளின் நடன நிகழ்வையும் காணும் பொருட்டு, ஈடு இணையற்ற அந்த பெருவுடையார் கோயிலுக்கு சென்றேன். கோயில் மட்டுமின்றி ஒட்டுமொத்த நகரும் ஒளி வெள்ளத்தில் மிதந்த காட்சி, விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருப்பதை எடுத்துரைத்தது. கலை நிகழ்ச்சிகளுக்காக தனி அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட இடத்தில் பணியாற்றிய காவல்துறை மற்றும் NSS மாணவர்களின் அர்ப்பணிப்பும், உழைப்பும் நிச்சயம் பாராட்டத்தக்கது. 

    ஒவ்வொருமுறை நுழையும் போதும் அற்புத அதிர்வை தரும் அந்த ஆலயத்தில், குறிப்பாக எழுத்தாளர் பாலகுமாரனின் 'உடையார்' நாவல்களை படித்த பிறகு எப்போது சென்றாலும் அந்த ராஜராஜனே என்னை கைபிடித்து அழைத்துச் சென்று, தான் கட்டிய அந்த பொக்கிஷத்தை சுற்றிக் காண்பிப்பது போல தோன்றுகிறது. இவ்வாண்டு ராஜராஜ சோழனின் 1038வது சதயவிழா என்பதால் 1038 கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்வு, நந்தி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் ராஜராஜனின் மெய்க்கீர்த்தி, தொடர்ந்து அந்த ஈசனை போற்றும் பாடல்கள் என அனைத்திற்கும் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த இசை மற்றும் நடனக் கலைஞர்களால் ஒரே நேரத்தில் நிகழ்த்தப்பட்ட கலைநிகழ்ச்சி பிரம்மாண்டமாக இருந்தது. இப்படிப்பட்ட வாய்ப்பினை நல்கிய அந்த பெருவுடையாரை நேரில் தரிசித்து, நன்றி கூறி அந்த தஞ்சை மண்ணில் இருந்து விடைபெற்றேன்.     

 
சதயவிழா 


கேரளாந்தகன் நுழைவாயில்


மக்கள் வெள்ளத்தில் பெருவுடையார் ஆலயம்


நந்தி மண்டபம்


ஒளி வெள்ளத்தில்


வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி



மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்...


பிற பதிவுகளை படிக்க...
 

Comments

Post a Comment