முந்தைய பகுதியை படிக்க...
பெருமாள்மலை மற்றும் திருவண்ணாமலை
பயணம் 2 - திண்டுக்கல் (தொடர்ச்சி)
பெருமாள்மலை (26.09.2023)
சிறுமலையில் இருந்து புறப்பட்டு, கொடைக்கானலை அடைந்து ஓய்வெடுத்த பின் மறுநாள் காலை 8.45 மணியளவில் பெருமாள்மலை மக்களுடன் தீர்த்தவாரி பயணத்தை துவங்கினோம். சென்ற முறை சென்ற குறுக்குப் பாதையை தவிர்த்து, இம்முறை புதிய பாதையில் புதிய அனுபவங்களுடன் பயணித்தோம். வழியில் உள்ள நீர்நிலைகளில் வசிக்கும் அட்டை பூச்சிகளால் ஏற்பட்ட ஆபத்துக்களை கடந்து, இயற்கையை ரசித்துக்கொண்டே இதமாக மலையேறியனோம். குறிப்பாக பனி சூழ்ந்த ஒரு சிகரத்தின் உச்சியில் நடந்து சென்ற அனுபவம் என்றென்றும் என் நினைவில் இருக்கும். வழியெங்கும் இருந்த சிறு சிறு தாவரங்கள், பூக்களை கடந்து இறுதியாக பெருமாள்மலை தீர்த்தத்தை அடைந்தோம்.
செல்லும் வழியில் இருந்த தடை காரணமாக குழந்தைகள் மற்றும் பெண்கள் வந்த வந்த வண்டி பாதை மாறிச் செல்ல, செய்வதறியாது திகைத்துப் போனோம். இறுதியாக இறைவன் அருளால் அனைவரும் இலக்கை அடைந்தனர். தீர்த்தம் எடுக்கும் தருணத்தில் வழக்கம் போல விண்ணில் இருந்து விழுந்த சிறு மழை துளிகள் அந்த இறைவனின் ஆசிர்வாதத்தை தெரிவித்தது.
ஒரு சிறிய பூஜைக்கு பிறகு தீர்த்தக் குடங்களை சுமந்து சென்ற பக்தர்கள் பறப்பட்டனர். அவர்களை பின் தொடர்ந்து நாமும் புறப்பட்டோம். அப்போது உடன் வந்த சிறுவர்களுடன் கூட்டு சேர்ந்து காட்டுக்குள் இருந்த நெகிழிப் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தியது மனதிற்கு திருப்தியாக இருந்தது. இறுதியாக பெருமழையாக பொழிந்த இறைவனின் கருணையோடு இயற்கை எழில் கொஞ்சிய பெருமாள்மலையில் மகிழ்ச்சியுடன் இருந்து விடை பெற்றோம்.
பெருமாள்மலை புகைப்படங்கள்
பெருமாள்மலை சிகரம்
செல்லும் வழியில்
செல்லும் வழியில்
செல்லும் வழியில்
பனிபடர்ந்த பாதை
அழகிய மலர்
அழகிய மலர்
அழகிய மலர்
அழகிய மலர்
ஒருவகை தாவரம்
ஒருவகை தாவரம்
பழனிமலை காட்சி
நெகிழிகளை அப்புறப்படுத்திய பொறுப்பான சிறுவர்கள்
இறை வடிவங்கள்
பயணம் 3 - அண்ணாமலை (01.10.2023)
பர்வதமலை, சிறுமலை, பெருமாள்மலை பயணத்திற்கு பிறகு எனது மகளின் நடன நிகழ்ச்சி காரணமாக அந்த திருவண்ணாமலை செல்ல வாய்ப்பு கிடைத்தது. சனிக்கிழமை இரவு திருவண்ணாமலையை அடைந்து, சிறு ஓய்வுக்கு பின் மறுநாள் அதிகாலையில் அந்த கோயிலுக்குள் நுழைந்தேன். அருணன் உதயமாகும் நேரத்தில் அருணாச்சலேஸ்வரரின் தரிசனம் கண்ட பின் அங்கு பக்தர் ஒருவரால் வழங்கப்பட்ட திருப்பதி லட்டு பிரசாதம், ஹரியும் சிவனும் ஒன்றே என எடுத்துரைத்தது. சன்னிதியில் பின்புறம் பெரிய நாயகி உடன் கம்பீரமாக அமர்ந்து இருந்த இறைவன் தரிசித்து வெளியே வரும் போது எதிர்ப்பட்ட சூரிய கதிர்கள் என்னை வரவேற்று ஆசிர்வதித்து எனது நாளை சிறப்பாக துவங்கியது.
உண்ணாமலை அம்மனை தரிசித்த பின்னர் நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் முக்கிய கதாபாத்திரமான அந்த அண்ணாமலையாரின் தந்தை ஸ்தானத்தில் இருக்கும் மூன்றாம் வீரவள்ளாலரின் சிலையை கோயில் முழுவதும் தேடி, வள்ளால கோபுரத்தில் கண்டேன். பிறகு பெரிய நந்தி, பாதாள லிங்கம், ராஜ கோபுரம், திருமஞ்சன கோபுரம், அருணகிரி நாதருக்கு அருள்பாலித்த பே கோபுரம், அம்மணி அம்மாள் கோபுரம், வெளிப்பிரகாரம் ஆகியவற்றை தரிசித்த பின் திருப்தியாக கோயிலில் இருந்து வெளியே வந்தேன்.
நடன நிகழ்ச்சி மதியம்தான் என்பதால் அடுத்ததாக சென்னையில் இருந்து வந்த நண்பர் செந்திலுடன் ஓங்கி உயர்ந்த அந்த அண்ணாமலையை நோக்கி நடந்தேன். ஒரு சிறிய ஏற்றத்திற்கு பிறகு குகை நமச்சிவாயர் கோயில், முலைப்பால் தீர்த்தம் ஆகியவற்றை கடந்து ரமண மகரிஷி தவம் புரிந்த விருபாட்ச குகையை அடைந்தோம். மகான் தவமிருந்த இடம் மனதிற்கு இதமாய் இருந்தது. சில நிமிட தியானத்தில் அந்த அற்புத குகையில் இருந்த தெய்வீக அதிர்வுகளை (Positive vibration) உணர்ந்தோம்.
பிறகு விருபாட்ச குகையில் இருந்து புறப்பட்டு கந்தாஸ்ரமம் சென்றோம். மழைகாலம் என்பதால் செல்லும் வழியில் பாறைகளில் அந்த அண்ணாமலையாரின் தீர்த்தம் அருவி போல கொட்டியது. அந்த புனித தீர்த்தத்தை பருகி, கந்தாஸ்ரமத்தில் சற்று இளைப்பாறி, பயணத்தை தொடர்ந்தோம். செல்லும் வழியில் இருந்து தெரிந்த அருணாச்சலேஸ்வரர் ஆலய அஷ்ட கோபுர தரிசனம் கண்கொள்ளா காட்சியாக விளங்கியது. இறுதியாக பல்வேறு அற்புத அனுபவங்களுடன் ரமணர் ஆசிரமத்தை அடைந்து எங்கள் பயணத்தை முடித்துக் கொண்டோம்
திருவண்ணாமலை புகைப்படங்கள்
அருணாச்சலேஸ்வரர் ஆலயம்
ராஜகோபுர தரிசனம்
வீர வல்லாள கோபுரம்
மூன்றாம் வீர வல்லாளர்
முலைப்பால் தீர்த்தம்
விருபாட்ச குகை
அண்ணாமலை தீர்த்தம்
கந்தாஸ்ரமம்
அஷ்ட கோபுர தரிசனம்
அண்ணாமலையில் இருந்து
ரமண மகரிஷியின் சிலை
பயணி தயாராக இருந்தால் பயண வாய்ப்புகளும் தானாகவே உருவாகும் என எண்ணும் வகையில், இப்பதிவுகளை வெளியிடும் நேரத்தில் இதோ அடுத்த பயணம், தஞ்சையை நோக்கி...
அடுத்த பகுதி...
பகுதி 3 - திருமலை வையாவூர் மற்றும் தஞ்சை
சிறு விசயங்களையும் ரசிக்க கற்றுக்கொடுக்கிறது உங்கள் பதிவு
ReplyDelete