"சாய்ந்து விழுந்ததும் காதல்" வழியில் பார்த்த சினிமா போஸ்டரில் செக்கச்செவேலென இருந்த ஹீரோயினை, அண்டங்காக்கா போல இருக்கும் அந்த தடியான ஹீரோ தாங்குவதை போல இருந்த காட்சியை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த காலத்து பசங்கள புரிஞ்சுக்கவே முடியல… சாய்ந்து விழுந்ததும் எப்படி காதல் வரும்? எனக்கு சிரிப்புதான் வந்தது.
ஒருவேளை எனக்குதான் வயசாயிடுச்சா? யோசித்தபடியே சென்னை தாம்பரம் ரயில் நிலைய பார்க்கிங்கில் நான் ஒரு ஓரமாக நின்றிருந்தேன். என் பெயர் பிளாட்டினா. இது நான் வழக்கமாக நிற்கும் இடமல்ல… கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகு திடீரென ஒரு பல்சர் என் அருகில் வந்து உரசியபடி நின்றான். அருகில் இடம் அதிகம் இருந்தும் கொஞ்சம் கூட பொறுமை இல்லாமல் அவன் அப்படி இடித்தது எனக்கு பிடிக்கவில்லை.
என்னை பார்த்து லேசாக சிரித்தபடியே “சாரி பாஸ், என் ஓனர் கொஞ்சம் அவசரமா போகணும்” என்றான் அந்த பல்சர்.
“அதுக்காக இப்படி தான் மேல வந்து விழணுமா? அப்படி என்ன அவசரம்?” சிடுசிடுத்தேன்.
“அவருக்கு ஆபீஸுக்கு டைம் ஆயிடுச்சி. அது மட்டுமில்லாம, நான் வழக்கமா நிக்கற இடத்துல தான் நீங்க நிக்கறீங்க… அதான் தெரியாம உரசிட்டாரு… உங்களுக்கு ஒன்னும் பெரிய அடி இல்லையே” சமாதானம் கூறினான் அவன்.
“ஆமா! இதுக்கு முன்னாடி நான் உங்கள இங்க பார்த்தது இல்லையே! புதுசா?” மேலும் பேச்சை தொடர்ந்தான்.
“என்ன பாத்த புதுசு மாதிரியா தெரியுது? வயசு பதினாறு ஆகுது. போன வருஷம் தான் எப்.சி. ஆனேன்.”
“நெஜமாவா சொல்றீங்க? உங்கள பாத்தா அப்படி ஒன்னும் வயசான மாதிரி தெரியலையே..” ஐஸ் வைத்தான்.
“எங்க ஓனருக்கு என் மேல கொஞ்சம் செண்டிமெண்ட். ரொம்ப நல்லா பாத்துக்குறார். போன வாரம் கூட சர்வீஸ் விட்டார்னா பாத்துக்கோயேன்”
“நீங்க குடுத்து வெச்சவரு பாஸ். என்ன பாருங்க வெறும் அஞ்சு வருஷம் தான் ஆகுது. என் ஓனரு, அதான் அந்த தடியனுக்கு சர்வீஸ்ன்னு ஒன்னு இருக்குன்னே நியாபகம் இருக்காது. எப்பவாவது ஆயில் மாத்தறதோட சரி”
நான் குபுக்கென்று சிரித்தேன்.
“என்ன பாஸ்? நான் என் கவலைய சொன்னா சிரிக்கிறீங்க?”
“தப்பா நினைச்சிக்காத, நீ தடியன்னு சொன்னதும் என்ன அறியாம சிரிப்பு வந்துடுச்சு”
“என்ன பண்றது பாஸ், நானும் தடியன்தான். அதனால தான் அந்த தடியன சுமக்க முடியுது” வெள்ளந்தி போல சிரித்த அவனை எனக்கு பிடித்திருந்தது.
“ஆமா பாஸ், என்ன இந்த பக்கம்?”
“என் ஓனர் அவசரமா செங்கல்பட்டு போகணும். அதுவரைக்கும் நான் தாங்க மாட்டேன்னு என்ன இங்க நிறுத்திட்டு போயிருக்காரு. கொஞ்ச நேரத்துல வந்துடுவாருன்னு நினைக்கறேன்.”
“அவரு என்ன பன்றாரு?”
“அவரு பேமிலி மேன். ஒரு கம்பெனில ஒர்க் பன்றாரு. முன்னலாம் தினமும் அவரு கூட ஆபீஸ் போவேன். இப்போல்லாம் எப்போவாவது வீக்லி ஒன்ஸ் தான் வெளியே வரேன்”
“ஆமா, நீங்க எவ்ளோ மைலேஜ் தருவீங்க?”
“வயசாயிடுச்சுல்ல… இப்போல்லாம் 50-55 தான். ஒரு காலத்துல 70க்கு மேல தந்தேன் தெரியுமா?”
“சூப்பர் பாஸ் நீங்க! நானெல்லாம் 40 தந்தாலே அதிகம். கொஞ்சம் ஒழுங்கா மெயின்டைன் பண்ணா 45 தர ட்ரை பண்ணுவேன்”
“அதுக்கு என்னப்பா பண்றது? உன் மாடல் அப்படி.. இந்த காலத்து பசங்களுக்கு எல்லாம் உன்னதானே பிடிக்குது”
“அது என்னவோ உண்மைதான் பாஸ், நான் கொஞ்சம் சர்ரு புர்ருன்னு ஓடுவேன். ஆனா, இப்போல்லாம் புல்லட்டுக்கு தான் மவுசு. அத வாங்க முடியாதவங்க, காலேஜ் பசங்க தான் என்ன மாதிரி பல்சர வாங்கறாங்க”
“ஹம்ம்… காலம் மாறிடுச்சு” என நான் கூறியதை கவனிக்காமல் எங்கேயோ பார்த்து கொண்டிருந்தான்.
அப்போது ஒருவன் எங்கள் அருகே வந்து பல்சருக்கும் எனக்குமான இடைவெளியை அதிகமாக்க முயற்சித்தான். பல்சரை நகர்த்தும் முயற்சிகளை தோல்வியுறவே என்னை மட்டும் ஒரு பக்கம் நன்றாக நகர்த்தினான் அந்த இடைவெளியில் நவநாகரீக மங்கை ஒருத்தி தனது ஸ்கூட்டியை நிறுத்தினாள். அவள் செல்லும் வரை அமைதியாய் நின்றிருந்த பல்சர் அவள் சென்றதும்…
“என்ன மேடம், இந்தப் பக்கம் காத்தடிக்குது?” என்றான்.
“ஏன்? நான் எங்க நின்னா உனக்கென்ன?” ஸ்கூட்டி முறைத்தாள்.
“சும்மா கோவிச்சிக்காதம்மா, எப்போவும் லேடிஸ் லைன்ல தானே நிப்ப, அதான் கேட்டேன்”.
“அங்க இன்னிக்கு ஃபுல்லாயிடுச்சு இடம் இல்ல…” என பல்சருக்கு பதில் சொன்னவள், என்னை பார்த்து “நான் இங்க வந்ததுல உங்களுக்கு ஏதாவது சிரமமா அண்ணா?” என்றாள்.
அங்கிள்ன்னு கூப்பிடும் வயதான என்னை அண்ணா என அவள் கூப்பிட்டது எனக்கு பிடித்தது. அவன் சொன்னது போல நான் ஓரளவு யங்கா தான் இருக்கேன் போல…
“நீ தினமும் இங்க தான் வருவியா மா?” வாஞ்சையுடன் கேட்டேன்
“ஆமாண்ணா, எங்க அக்கா (owner) காலேஜ் படிக்கறாங்க. தினமும் என்ன இங்க விட்டுட்டு ட்ரைன்ல போவாங்க” பதிலுரைத்தாள்.
“அது சரி, இவங்கள உருட்டிட்டு போறதுக்கு நடந்தே கூட போய்டலாம்” கலாய்த்தான் பல்சர்.
“என்ன யாரும் உருட்டிட்டு போகணும்ன்னு அவசியம் இல்ல… நானே நல்லா ஓடுவேன்”
“ஆமா, இவங்க பெரிய P.T. உஷா… அப்படியே ஓடிட்டாலும்” நக்கலடித்தான் பல்சர்.
“தம்பி, எதுக்கு அவகிட்ட வம்பு பண்ற?” கொஞ்சம் ப்ரீயா விடு” சமாதானம் செய்ய முயன்றேன் நான்.
“அவரு அப்படிதான் அண்ணா, எப்போவும் தூரத்துல இருந்து மொறச்சுட்டு இருப்பாரு. இன்னைக்கு கொஞ்சம் பக்கதுல வந்ததும் கிண்டல் பன்றாரு”
"அப்படியே கிண்டல் பண்ணிட்டாலும்… உன் பிங்க் கலர பாத்து எனக்கு சிரிப்புதான் வருது" இது பல்சர்.
"ஏன் என் கலருக்கென்ன கொறச்சல்? நான் என்ன உன்ன மாதிரி கரிகட்ட போலவா இருக்கேன்?" இது ஸ்கூட்டியின் பதிலடி.
"இந்த காலத்து பசங்களே இப்படித்தான்’ என நான் அமைதி காத்து நின்றேன்.
“அப்புறம் அண்ணா, உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்க” அன்பாய் கேட்டாள் ஸ்கூட்டி.
நான் என்னை பற்றி சொல்ல ஆரம்பித்தேன் ஆனால் அதை எதையும் அவள் கவனித்தது போல தெரியவில்லை. நடுநடுவே “ஹ்ம்” என உச்சு மட்டும் கொட்டியபடியே இருந்த அவளின் கவனம் எங்கோ இருந்தது.
“உன்ன பத்தி மா?”
“அவ பேரு ஸ்கூட்டி, வயசு மூணு. பிங்க் கலர், பக்கதுல சேலையூர்ல இருக்கா… தினமும் காலை 8 மணிக்கு இங்க வருவா. சாயந்தரம் 5 மணிக்கு போவா” ஸ்கூட்டியை முந்திக் கொண்டு பதில் கூறினான் பல்சர்.
அதை கேட்ட ஸ்கூட்டி கண்கள் விரிய ஆச்சர்யத்துடன் மௌனம் காத்த நேரத்தில், திடீரென திரும்பி வந்த என் ஓனர் என்னை பார்க்கிங்ல் இருந்து வெளியே எடுத்தார். அப்போது எதிர்பாராமல் ஸ்கூட்டியை லேசாக இடித்து விட, சற்றும் எதிர்பாராமல் சாய்ந்தாள் அவள்.
கீழே விழப் போன ஸ்கூட்டியை தாங்கிப் பிடித்து கம்பீரமாய் நின்றான் பல்சர்.
நான் “பை பை” சொன்னது அவர்களின் காதுகளுக்கு கேட்கவில்லை. அக்காட்சியை கண்ட எனக்கு மீண்டும் அந்த சினிமா போஸ்டர் நினைவுக்கு வந்தது.
"சாய்ந்து விழுந்ததும் காதல்"
இந்த காலத்து பசங்களே இப்படித்தான் என நடையை கட்டினேன் நான்.
பின்குறிப்பு
ஒரு வேலை விஷயமாக வெளியூர் சென்று திரும்பிய போது ரயில்வே ஸ்டேஷன் பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருந்த எனது பஜாஜ் பிளாட்டினாவை எடுக்கும் போது திடீரென மனதில் தோன்றிய சிறுகதை இது. Just for fun.
பிற பதிவுகளை படிக்க
Nice and fun
ReplyDeleteBy
a 13 year old pulsar owner
Very Nice.. good imagination
ReplyDeleteGood one :-)
ReplyDelete