
நாம் மேற்கொள்ளும் பல்வேறு சிறு சிறு பயணங்களை உள்ளடக்கியதே வாழ்க்கை என்னும் பெரும் பயணம். அந்த சிறு பயணங்கள் ஒவ்வொன்றும் பல விதமான அனுபவங்களை தந்தாலும், ஒட்டுமொத்த வாழ்க்கை பயணத்தின் சுருக்கமான வடிவமே பாதயாத்திரை. பொதுவாக பழனி, திருச்செந்தூர், வேளாங்கண்ணி மற்றும் திருப்பதி திருமலை போன்ற தலங்களுக்கு ஆண்டுதோறும் பாதயாத்திரை மேற்கொள்ளுவது நெடுங்காலம் முதலே நமது மக்களின் தொடர் வழக்கமாகும். அப்படி உடலை வருத்தி பல நாட்கள் பயணம் செய்வதின் காரணம் என்ன? அது பக்தியின் வெளிப்பாடா? அல்லது உடல் சக்தியின் வெளிப்பாடா?
இது போன்ற என் மனக் கேள்விகளுக்கு விடையாய் வந்ததே எனது திருமலை திருப்பதி பாதயாத்திரை. அந்த அனுபவங்களின் தொகுப்பே இக்கட்டுரை.
சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு குழுக்கள் ஆண்டு முழுவதும் திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரை செல்கின்றன. குறிப்பாக கொடுங்கையூர் R.V. நகர் பகுதியில் இருந்து திரு. குரு அவர்கள் 1987ம் ஆண்டு முதலே இப்புனித பயணத்தை மேற்கொண்டு வருகிறார். முதலில் ஓரிருவராக ஆரம்பித்த அப்பயணம், தற்போது 80-90 நபர்கள் கொண்ட பெரும் ஆன்மிக குழுவாக வளர்ந்துள்ளது. இரண்டாம் முறையாக அக்குழுவுடன் இணைந்து கடந்த ஆண்டில் (2022) நான் மேற்கொண்ட பாதயாத்திரை அனுபவங்களே இப்பதிவு.
முதல்நாள் (13.8.22 சனிக்கிழமை)
திரு. குரு அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற ஒரு சிறு பூஜை முடிந்ததும், பானகம் பருகிய பின் மாலை 4:50 மணியளவில் பாதயாத்திரை துவங்கியது. பயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எதிர்பாரா மழையில் இருந்து தற்காத்துக் கொள்ள ஒரு பிளாஸ்டிக் கவரும், பயண அட்டவணையும் (Schedule) வழங்கப்பட்டது. கடந்த முறை 4 நாட்கள் பயணமாக (சனிக்கிழமை மாலை முதல் செவ்வாய் மாலை வரை) இருந்த பயணத்திட்டம், தற்போது பயணிகளின் வசதிக்காக 5 நாட்கள் பயணமாக (சனிக்கிழமை மாலை முதல் புதன் மாலை வரை) தளர்த்தப்பட்டிருந்தது. சுமார் 140 கிலோமீட்டர்கள் கொண்ட பயணம், பல்வேறு சிறுபகுதிகளாக பிரிக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் தங்குமிடம், நேரம் போன்ற விவரங்களை தெளிவாக உள்ளடக்கிய அட்டவணை அது.
பயண அட்டவணை
உடன் வந்த கார்களில் எங்களின் பைகளை பத்திரமாக வைத்துவிட்டு, மனதில் மட்டுமின்றி உடலிலும் பாரம் ஏதுமின்றி அளவில்லா ஆர்வத்துடன் எங்களின் பாதயாத்திரையை துவக்கினோம்.
மதிய வெயில், மாலை வரை தொடர்ந்த அந்த நாளில் நகரப்பகுதி என்பதால் மூலக்கடை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசு சற்று அதிகமாகவே இருந்தது. சுமார் ஒரு மணி நேரத்தில் மாதவரத்தை அடைந்ததும் வெயில் விடைப்பெற்ற பின், "நானும் உடன் வருவேன்" எனக் கூறி கார்மேகமும் எங்களுடன் யாத்திரையில் கொண்டது. அந்த மாலைப்பொழுதில், புழல் அருகே கதிரவன் விடைபெறும் அற்புதமான இயற்கை காட்சி என் கண்களை கொள்ளை கொண்டது. அப்போது அருகிலிருந்த மரத்தில் அமர்ந்திருந்த ஒரு காகமும் கரைந்து என் கருத்தை ஆமோதித்தது போல தோன்றியது.
மாலை சுமார் 6:30 மணியளவில் நகர சிறையில் இருந்து விடுபட்டு புழல் சிறையை கடக்கையில், இனியும் பொறுக்க முடியாது என விண்ணில் இருந்து சிந்திய மழைத்துளி, எனது உடலில் பட்டு மனதை லேசாக்கியது. அப்போது பல்வேறு வண்டிகளில், பாத்திர பண்டங்களோடு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதைக் கண்டேன். மறுநாள் ஆடி மாத கடைசி ஞாயிறு என்பதால் அவர்கள் பெரியபாளையம் நோக்கிச் செல்கின்றனர் என அறிந்துக் கொண்டேன்.
சுமார் 7:20 மணியளவில் செங்குன்றம் ரேவதி ஸ்டோர்ஸ் அருகே உள்ள விநாயகர் கோவிலில் சில பிஸ்கட்களை உண்டு, சூடான தேநீரை பருகி தொடர்ந்த எங்கள் பயணத்தில், நாங்கள் செல்லும் பாதையில் முன்னரே பெய்திருந்த மழை அந்த பாதையை குளிர்வித்து இருந்தது.
மொத்தத்தில் சுமார் 4:30 மணி நேரத்தில் 18 கிலோமீட்டர்களை வெற்றிகரமாக நடந்து, இரவு 9:20 மணியளவில் முதல்நாள் இலக்கான காரனோடை KPK தினகரன் மாளிகையை அடைந்தோம். அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த இரவு உணவை (சப்பாத்தி, சாம்பார் மற்றும் தயிர் சாதம்) உண்டு முடித்து உறங்க சென்றோம். நீண்ட நாட்களுக்கு பிறகு வெகுதொலைவு நடந்த சோர்விலும், புதிய இடம் என்பதால் உறக்கம் விரைவாக வரவில்லை. மாறாக பயணத்தின் மீது கொண்ட எனது ஆர்வம், மேலும் பல்வேறு சிந்தனைகளை தோற்றுவித்து அந்த இரவை விழுங்கியது.
இரண்டாம் நாள் (14.8.22 ஞாயிற்றுக்கிழமை)
இன்று எங்கள் பயணத்தின் இரண்டாம் நாள். சரியான தூக்கம் இல்லாமல் அதிகாலை 2:45 மணிக்கே எழுந்துவிட்டாலும், காலை தேநீரை பருகியபின் 4:30 மணிக்குதான் யாத்திரையை துவங்க முடிந்தது. முதல்நாள் கிடைத்த பயிற்சியில் (warm-up) இரண்டாம் நாளின் முதற்பகுதி சற்று எளிதாகவே தோன்றியது. காலை 6:45 மணிக்கே எங்கள் அடுத்த இலக்கை அடைந்துவிட்டோம். காலை சிற்றுண்டி (இட்லி, வடை, பொங்கல், கேசரி) ஏற்பாடு செய்திருந்த இடத்தில் எதிர்பாராமால் நடந்த பராமரிப்பு பணி காரணமாக உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த இக்கட்டான நிலையில் உடனடியாக உதவிய கன்னிகைபேர் ஊர் மக்களுக்கு நன்றி.
காலை உணவிற்கு பின் துவங்கிய பயணத்தில், அந்த ஆடி மாதத்தில், பெரியபாளையம் சாலையில் பல கிலோமீட்டர் தூரம் அணிவகுத்திருந்த வாகனங்களை கடந்து செல்வது சற்று சவாலாக இருந்தது. முடிவில்லா போக்குவரத்து நெரிசலில் மணிக்கணக்கில் நின்றிருந்த அந்த வாகனங்களில் அமர்ந்திருந்தவர்களின் நிலை சற்று பரிதாபமாகவே தோன்றியது. நல்லவேளையாக நாங்கள் பாதயாத்திரை சென்றதால் பாதகமில்லை. நடப்பதிலும் இப்படிப்பட்ட நன்மைகள் இருக்கிறது என எண்ணியபடியே காலை 11:30 மணியளவில் எங்கள் அடுத்த இலக்கான தண்டலம் லலித் மஹாலை அடைந்தோம். சிறிது நேர இளைப்பாறலுக்கு பின் அங்கு தயாராக இருந்த மதிய உணவை (சாதம், சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், உசிலி, தயிர்வடை) உண்டு ஓய்வெடுக்க ஆரம்பித்தோம்.
இரண்டாம் நாளின் இரண்டாம் பகுதி மாலை 3:30 மணிக்கு துவங்கியது. தூரத்தில் தெரிந்த மலைகள் வா வா என அழைக்க, சாலையின் இருபுறமும் விளைந்திருந்த நெல்மணிகள் தலைசாய்ந்து எங்களை வழியனுப்பி வைத்தது. மேகத்தின் பின்னால் ஒளிந்து கொண்ட சூரியன் சூழலை சற்று இதமாக்கிய போதும் எனக்கு பிடித்த ஒரு ஆலமர நிழலில் சற்றுநேரம் ஓய்வெடுத்த பின் எனது பயணத்தை தொடர்ந்தேன். பிறகொருமுறை சாலையோரம் உள்ள புல்வெளிகளில் அமர்ந்து அங்கிருந்த பட்டாம்பூச்சியிடம் பேசினேன். அது எனக்கு வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய வைராக்கியங்களை குறித்து பாடம் எடுத்தது போல தோன்றியது.
தொடர்ந்து சென்ற பயணத்தில், இலக்கை நெருங்க நெருங்க, உடல் சற்று சோர்வடைந்தாலும், உள்ளம் மட்டும் உற்சாகத்தை இழக்காமல் இருந்தது. மொத்தத்தில் சுமார் 35 கிலோமீட்டர் தூரம் நடந்து, ஆந்திர எல்லையில் நுழைந்து, மாலை 8:00 மணியளவில் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரரை தரிசித்த பின், அருகில் இருந்த SAR திருமண மண்டபத்தில் தஞ்சமடைந்து எங்கள் இரண்டாம் நாள் பயணத்தை முடித்துக்கொண்டோம்.
வழியில் கண்ட இயற்கையின் அற்புத தரிசனத்தை எண்ணியபடியே அவர்கள் தந்த இரவு உணவை (சப்பாத்தி, கிச்சடி, குளோப்ஜாமுன்) உண்டு உற்சாகமாய் உறங்கச் சென்றேன்.
மூன்றாம் நாள் (15.8.22 திங்கட்கிழமை)
அற்புத அனுபவங்களை தந்த மூன்றாம் நாள் பயணம் அதிகாலை 4:00 மணியளவில் துவங்கியது. சுருட்டப்பள்ளி கோவிலை கடந்து மலையோர சாலையில் சென்ற பயணம் ஆனந்தமாக இருந்தது. அப்போது மேகங்களுக்கு பின்னால் மறைந்திருந்து வேடிக்கை பார்த்த அந்த அதிகாலை நிலவு அழகாக காட்சியளித்தது. இடதுபுறம் சவுக்கு தோப்பும், வலதுபுறம் கரும்புக்காடும் நிறைந்த நாகலாபுரம் சாலையில் தூரத்தில் தெரிந்த நாகலாபுரம் மலை, பிரம்மாண்டமாக இருந்தது. பைபாஸில் செல்லாமல் ஊருக்குள் நுழைந்து, நாகலாபுரம் ஸ்ரீதேவி-பூதேவி சமேத வேதநாராயண பெருமாள் கோவிலை அடைந்தோம். சுமார் பத்து நிமிடங்கள் காத்திருந்த பின்னர் மச்சாவதார ரூபத்தில் இருந்த இறைவனை சுவாதி தரிசனம் கண்டோம்.

அற்புத இயற்கை தரிசனம் மற்றும் அருள்மிகு இறை தரிசனம் இரண்டையும் மனமார கண்ட பின், பஞ்சுப் போல இட்லியுடன் வடகறி மற்றும் பொங்கலுடன் கொச்சு ஆகியவற்றை வயிறார உண்டோம். அன்றைய நாள் (ஆகஸ்ட் 15) இந்திய சுதந்திர தினம் என்பதால் கோயிலின் அருகினில் மூத்த யாத்திரிகர் ஒருவர், கொடியேற்றினார். தேசியக் கொடியை வணங்கிய பின் பயணத்தை தொடர்ந்தோம். முன்தினம் கருணை காட்டிய சூரியன், இன்று சுட்டெரித்து தனது இருப்பை காட்டிக் கொண்டான். முதல்நாள் வான்மழை துளிகளில் நனைந்த நாங்கள், இன்று வியர்வை மழையில் நனைந்தோம். பிறகு காலை 11:00 மணியளவில் பிச்சாடூர் TEDR மஹாலில் சரணடைந்தோம்.
மதிய உணவிற்கு பின் மீண்டும் மாலை 3:30 மணியளவில் புறப்பட்டு, பிச்சாட்டூர் ஏரிக்கரையில் நடந்தோம். பிறகு கைலாசகோனா பகுதியை கடந்துச்செல்லும் போது அந்த இருள் நேரத்தில் கடும் மழை பெய்து எங்கள் பயணத்தை சிறிதுநேரம் தடை செய்தது. அந்த காரிருளில், மழைச்சாரலில், எங்கள் காலணிகளை (Shoes) துறந்து, உடன்வந்த நண்பர்களுடன் ஒற்றுமையாக பேசிக்கொண்டே சென்றது நல்ல அனுபவமாக இருந்தது.
ஒருவழியாக 36 கிலோமீட்டர் கொண்ட மூன்றாம் நாள் பயணத்தை நல்லபடியாக கடந்து, இரவு 9:10 மணியளவில் நாராயணவனம் கோயில் அருகே இருந்த TTD கல்யாண மண்டபத்தை அடைந்து இரவை கழித்தோம். மொத்தத்தில் அற்புதமான நாள்.
நான்காம் நாள் (16.8.22 செவ்வாய்க்கிழமை)
திருமலை பெருமாளுக்கு திருமணம் நடந்ததாக கருதப்படும் நாராயணவனம் ஆலயம் திறக்க நேரம் ஆகும் என்பதால் அந்த இறைவனை தரிசனம் செய்ய வாய்ப்பு கிட்டவில்லை. அதிகாலை 5:30 மணிக்கு புறப்பட்டு சுமார் ஒரு மணிநேர பயணத்தில் புத்தூர் தோசைக்கடையை (Dosa corner) விரைவாய் அடைந்தோம். அங்கு சிறிது நேர காத்திருப்பிற்கு பின் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.
முன்தினம் போலவே இன்றும் வெயில் நன்றாக வாட்டிவதைக்க, யாத்திரீகர்களை காக்க எண்ணி மதிய தங்குமிடம் 3 கிலோமீட்டருக்கு சற்று முன்னதாகவே மாற்றி அமைக்கப்பட்டிருந்தது சற்று ஆறுதலாகவே இருந்தது. மதிய உணவு மற்றும் ஓய்வுக்கு பின் வடமலைபேட்டையிலிருந்து மாலை 3:40க்கு புறப்பட்டோம்.
உடன் வந்த நண்பர்கள் சற்று பின் தங்க, ஓரளவு வெயிலில் புதி (Pudi) ரயில்வே கேட்டை கடந்துச் சென்ற பாதையில் பெரும்பாலும் தனியாகவே நடந்தேன். காய்ந்த மரங்கள் நிறைந்த சாலையோர சிறு ஏரிகளில் முன்தினம் பெய்த மழையின் காரணமாக ஓரளவு நீர் இருந்தது. பிறகு அழகான சூரிய அஸ்தமனத்தை தரிசனம் செய்த பின் இரவு 7:10 அளவில் நான்காம் நாள் இலக்கான 32 கிலோமீட்டர்களை கடந்து திருச்சானுரை அடைந்தோம். பத்மாவதி தயார் கோயில் வாயில் அருகே உள்ள 'ஸ்ரீ பெத்த ஜீயர்' மடத்தில் பருப்பு பொடியுடன் கூடிய ஆந்திர உணவை முடித்து, இரவு தங்கினோம்.
இறுதி நாள் (17.8.22 புதன்கிழமை)
இன்று எங்கள் யாத்திரையின் இறுதிநாள். இரவு முழுதும் பெய்த பெருமழையால் கார்மேகம் சூழ்ந்த அதிகாலைப் பொழுதில், வெகு அருகில் அந்த அலமேலுமங்கை எனப்படும் பத்மாவதி தாயாரின் குங்கும அர்ச்சனை தரிசனம் கண்டேன். இறைவனின் துணைவியான அந்த இறைவியை வணங்கும்போது அதேப்போல நமது வாழ்க்கை துணையையும் போற்ற வேண்டும் என்ற எண்ணத்தை அவர் என் மனதில் தோற்றுவித்தார். எனது மனைவியின் உருவம் ஒருகணம் மனதில் தோன்றி மறைந்தது.
பிறகு அற்புத காலை உணவு முடித்த பின் காலை 7:30க்கு புறப்பட்டு எங்கள் இலக்கான திருமலையை நோக்கி நடந்தோம். அப்போது சென்னையில் இருந்து வந்த எனது மனைவியும் என்னுடன் அப்பயணத்தில் இணைந்துக்கொள்ள, தம்பதியாக மலையேறினோம். இத்தனை நாட்கள் நடந்துப் பழகிய கால்களால் சற்று எளிதாகவே மலையேற முடிந்தது. படிகளை கடந்து செல்லும்போது வழக்கமான பாதையில் இருந்து விலகி 'அன்னமய்யா மார்க்கம்' எனப்படும் மலைப்பாதையில் சென்றது சற்று வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அப்பாதையில் இருந்து திருமலையில் இயற்கையாகவே அமைந்துள்ள 'பெருமாள் பாதம்' போன்ற அமைப்பை தரிசித்தோம். மதியம் ஒரு மணிக்கு திருமலையை அடைந்து, மீண்டும் ஒருமுறை குளித்து முடித்து, பிற்பகல் இரண்டு மணியளவில் தரிசன வரிசையில் இணைந்தோம். அனைத்தையும் கடந்து இறுதியாக,
இலக்கை அடைந்தோம்...
இறைவனை தரிசித்தோம்...
இன்பம் பெற்றோம்.
பாதயத்திரையின் பயன்கள்
- என்னதான் குழுவோடு சேர்ந்து பயணித்தாலும் தனியாக நடக்கும் வாய்ப்புகள் பாதயாத்திரையில் மிகவும் அதிகம். அந்நேரங்களில் சாலையோரங்களில் இருக்கும் சாதாரண பூக்கள், பூச்சிகளை கூட உன்னிப்பாக கவனிக்க தோன்றும். படிப்படியாக மனம், நமது ஆழ்மனதில் உள்ள எண்ணங்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பிக்கும். சிந்தனை திறன் அதிகரித்து, அது நம்மை நாமே சுயப் பரிசோதனை செய்து கொள்ள சிறந்த வாய்ப்பாக அமையும்.
- பாதயாத்திரை நமது உடல் உறுதியை இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
- சிலர் ஆண்டு கணக்கில் தொடர்ந்து பாயாத்திரை போன்ற செயல்களை செய்து கொண்டிருப்பர். தொடர்ந்து ஒரு வேலையை செய்யும் போது, அது நம்முள் ஒரு சுய ஒழுங்கை தோற்றுவிக்கிறது. அந்த சுய ஒழுங்கு நமது அன்றாட செயல்களை நம்மை அறியாமலே பிரதிபலித்து நம்மை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
- ஒவ்வொரு முறை எவ்வளவு கடினமாக இருப்பினும், தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் ஒரு போராட்ட குணத்தை தோற்றுவிக்கிறது. மன உறுதியை அதிகரிக்கிறது.
- பொறுமையாக அமைதியாக சிந்திக்கும் வாய்ப்பை உருவாக்கி, நமது பிரச்சனைகளுக்கு சரியான தீர்வுகளை தேர்ந்தெடுக்க வழிகாட்டும்.
- நம்முடன் வந்தவர் நம்மை விட்டு சென்றாலும், நாமே மற்றவரை முந்தி சென்றாலும் தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற உத்வேகத்தை நம் வாழ்க்கை பயணத்தில் உண்டாக்கிறது.
- கடினமான சூழ்நிலையில் முகம் தெரியாத புதிய நபர்களுடன் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தி, ஒருவருக்கொருவர் ஆறுதல் தரும் பயிற்சியை அளிக்கிறது.
- வாழ்க்கையை போலவே யார் நம்முடன் இறுதி வரை வருவார் என கணிக்க முடியாத, வழியெங்கும் புதுப்புது பயணிகள் நிறைந்த பயணமே பாதயாத்திரை.
- இலக்கை பயணமே நாம் எடுத்துக் கொண்ட குறிக்கோளை அடைய தேவையான உறுதியை அளிக்கிறது. ஞானிகளும், அறிஞர்களும் ஏன் சில அரசியல் தலைவர்களும் பாதயாத்திரை மேற்கொள்வதின் காரணம் இதுவே ஆகும்.
மொத்தத்தில் பாதயாத்திரை என்பது பக்தியின் வெளிப்பாடோ, உடல் சக்தியின் வெளிப்பாடோ அல்ல... அது நம் அனைவருக்கும் தேவையான ஒரு சிறந்த மனவளப் பயிற்சி. பாதயாத்திரை செல்வோம். பயன் பெறுவோம்.
நன்றிகள்
- பாதயாத்திரையை ஏற்பாடு செய்த கொடுங்கையூர் R.V. நகர் யாத்திரை குழுவிற்கு...
- ஒவ்வொரு தங்குமிடத்திலும் அவர்கள் செய்திருந்த ஏற்பாடுகள் (குறிப்பாக உணவு) வெகு சிறப்பாக இருந்தது.
- வழியெங்கிலும் ஒவ்வொரு 1-2 கிலோமீட்டர் தூரத்தில் குடிநீரும், காலை மற்றும் மாலை வேளையில் சரியான இடங்களில் தேநீரும் வழங்கியது மிகவும் உதவியது.
- தேவையானவர்களுக்கு உடனடியாக மருத்துவ ஏற்பாடுகள் (தேங்காய் எண்ணெய், வலி நிவாரண மருந்துகள் மற்றும் மசாஜ்) செய்யப்பட்டது.
- குறிப்பாக தங்களுக்குள் விவாதம் ஏதுமின்றி, அற்புத ஒருங்கிணைப்புடன் அவர்கள் பணியாற்றிய விதம் பாராட்டத்தக்கது.
- என்னை இந்த யாத்திரையில் இணைத்த நண்பர்கள் திரு. பரணி மற்றும் திரு. வெங்கட் அவர்களுக்கு.
- உடன்வந்த நண்பர்களுக்கு, வழியில் சந்தித்த முகம் தெரியா அன்பர்களுக்கு.
- அற்புத வாய்ப்பையும், அனுபவத்தையும் அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு.
- இப்பதிவை படிக்கும் உங்களுக்கு.
மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்...
பிற பதிவுகளை படிக்க...
ஒரு பயணியின் வழித்தடம்
Great experience., Justification for walk is fantastic
ReplyDeleteGod bless you