ஆனந்த தேடல்...




கேள்வி: ஆனந்தம் எதில் உள்ளது?


    "ஆனந்தம் எதிலும் உள்ளது" என்பது சித்தர்கள் கூறும் வாக்கு ஆனால் சாமானிய மனிதர்கள் அனைவருக்கும் இவ்வாக்கு நிச்சயம் பொருந்தாது. சிலருக்கு ஆனந்தம் வெற்றியில்... சிலருக்கு ஆனந்தம் பொழுதுபோக்கில்... சிலருக்கு ஆனந்தம் போதையில்... குரூர எண்ணம் கொண்ட சிலருக்கோ மற்றவரின் துன்பத்தில்...அரிதினும் அரிதான வெகு சிலரே பிறரின் மகிழ்ச்சியில் தனது ஆனந்தத்தை காண்கின்றனர். எனவே ஆனந்தத்தின் அளவீடும் அது கிடைக்கும் இடமும் நபருக்கு நபர் மாறுபடுகிறது.


எனவே இக்கட்டுரையில் எனது ஆனந்தம் எவற்றில் உள்ளது என நான் எண்ணக்கூடிய சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஆவல் கொள்கிறேன்.



1. பயணமே ஆனந்தம்


    எனக்கு ஆனந்தம் அளிக்கக்கூடிய விஷயங்களில் முதன்மையானது பயணமே... இவ்வுலகை நாம் அறிவதற்காக இறைவன் வகுத்த அற்புத பாதையே பயணமாகும். இடம் ஒன்றே என்ற போதிலும், ஒவ்வொரு முறை மேற்கொள்ளும் போதும் வெவ்வேறு அனுபவங்களை அள்ளித் தருவதில் பயணத்திற்கு நிகரான ஒன்று இவ்வுலகில் வேறெதும் இல்லை. எதிர் வரும் பாதையில் என்னென்ன அதிசயங்கள் உள்ளன என்று அறிந்து கொள்ள முடியாத அற்புதங்கள் நிறைந்த சாகச பயணமே மனித வாழ்க்கை என்றால் மிகையில்லை... 





    நினைத்த நொடியில் மனமானது உலகின் வேறொரு மூலையை நம் கண்முன் கொண்டுவந்து நிலை நிறுத்துவதில் இருந்தே, மனித மனம் பயணத்தை எவ்வளவு தூரம் நேசிக்கிறது என்பதை அறியலாம். பயணமே மனிதனுக்கு வேண்டிய பக்குவத்தை அளிக்கிறது. அதனால்தான் முற்றிலும் துறந்த முனிவர்கள் கூட பயணத்தை துறக்காமல் தேசாந்திரம் சென்றனர் என எண்ணுகிறேன்.


மொத்தத்தில் பயணமே என்னை உயிர்பிக்கும் உன்னதமான முதல் கருவி என்றால் அது மிகையில்லை...



2. பந்தமே ஆனந்தம்


        மனிதனை இவ்வுலக வாழ்வோடு பிணைக்கும் மாயக் கயிறே பந்தம் எனும் உறவு. பந்தமில்லா வாழ்க்கை பயனில்லா வாழ்க்கை என்பதே உண்மை. தன் மழலையின் அணைத்தலில் கிடைக்கும் சுகம்,  நண்பர்களுடன் அளவளாவும் போது கிடைக்கும் சுகம், பிரியமானவர்களுடன் செல்ல சண்டைகள் போடும் போது கிடைக்கும் சுகம், எந்தவொரு பெரிய பிரச்சினைக்கு பிறகும் புரிதலில் ஏற்படும் சுகம் என பந்தத்தில் கிடைக்கும் சுகங்கள் அளவிட முடியாதவை...







நமக்கு கிடைக்கும் மிகச்சிறிய மகிழ்ச்சியை கூட பன்மடங்காக்கவும், எவ்வளவு பெரிய கவலையையும் சிறு துளியாக்கவும் திறனுடையோர் நமது பாசமிகு உற்றார் மற்றும் உறவினரே. மொத்தத்தில் இப்புவியின் புற அச்சாக விளங்கி நமது வாழ்வை இயக்குவது பந்தங்களே என்பதே எனது திண்ணமான எண்ணம்...



3. கடமையே ஆனந்தம்


உலகில் ஆனந்தம் நிலவ என்ன செய்ய வேண்டும்? 

அவரவர் கடமையை சரியாக செய்தாலே அகிலமெங்கும் ஆனந்தம் நிலவும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும். ஆம்! நமக்கு உண்டான கடமைகளையும், நமக்கு பிடித்த செயல்களையும் (அடுத்தவரை பாதிக்காத வண்ணம்) தொடர்ந்து செய்வதில் கிடைக்கும் ஆனந்தத்தை வார்த்தைகளால் அளவிட முடியாது. அந்த ஆனந்தத்தின் பொருட்டே இக்கட்டுரையை நான் எழுதி, எனக்கு பிடித்த எழுத்து பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறேன் எனும் உண்மையை மீண்டும் ஒரு முறை உணருகிறேன்.




நாம் ஒவ்வொருவருக்கும் தலையாய பணிகள் பல உள்ளன. உண்மையில் அவற்றை நிறைவேற்ற மிகவும் சிரமம் கொள்கிறோம். குடும்பத்தை காப்பது, அதற்குண்டான வருவாயை ஈட்டுவது, குழந்தைகளை வளர்ப்பது, குறைந்தபட்ச சமூக கடமைகளை சரிவர செய்வது என ஒவ்வொருவரும் அவரவர் செய்யும் வேலைகளை சற்று சிந்தித்து, அனுபவித்து செய்தால், அதில் உள்ள சிரமங்கள் வெகுவாக குறைந்து மனதிற்கு அளப்பரிய ஆனந்தத்தை தரும் என்பது (செயல்படுத்த சற்று கடினமாக இருப்பினும்) மறுக்க முடியாத ஒன்றாகும்.


தனது கடமையை சரிவர செய்த மனநிறைவை, உலகில் வேறெந்த ஒரு பொருளாலும் தர இயலாது என்பது ஆணித்தரமான உண்மை...




மீண்டும் அதே கேள்வி. 


"ஆனந்தம் எங்கு உள்ளது?"


இக்கட்டுரையைப் படிக்கும்போது பயணங்களிலும், பந்தங்களிலும், எனக்கு பிடித்த வேலைகளை அனுபவித்து செய்திலும் எனது ஆனந்தம் இருப்பதாக தோன்றலாம். ஆனால் அவை அனைத்தும் ஆனந்தத்தின் உண்மையான உறைவிடங்கள் அல்ல...


ஆனந்தத்தின் பலவித வடிவங்களை,  பயணங்கள் மேற்கொள்ளும் போதும், பந்தங்களுடன் உறவாடும் போதும், பிடித்த வேலைகளை செய்யும்போதும் என் பார்வையிலும், பேச்சிலும், சிந்தையிலும் நிறைந்திருப்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன் ஆனால் மேலும் சற்று ஆழ்ந்து சிந்தித்தால், உண்மையான ஆனந்தத்தை என் பயணங்களிலிருந்தும், பேச்சிலிருந்தும், செயலில் இருந்தும் பிரித்துப் பார்க்க முடிகிறது..



ஆம்! நானே பயணத்தை மேற்கொள்கிறேன். நானே நண்பர்களுடன் உரையாடுகிறேன். நானே பிடித்த வேலைகளை விரும்பி செய்கிறேன். மேலும் இவை அனைத்திலும் உள்ள ஆனந்தத்தையும் நானே அனுபவிக்கிறேன், என எனது செயல்களை பகுத்துப் பார்க்கும் போது...





"எனது ஆனந்தம் என்னிடமே உள்ளது" என்ற தலையாய உண்மையை உணருகிறேன்..


ஆம்!  ஒவ்வொருவரின் ஆனந்தமும் நிச்சயம் அவர்களிடமே உள்ளது... 

உங்களின் ஆனந்தம் உங்கள் கையில்...

என்றும் ஆனந்தமாக இருப்போம்...

நன்றி! வணக்கம்🙏🙏🙏

Comments

Post a Comment