மூணுமணி முனுசாமி



    தெனாலி கமலுக்கும், நமது மூணுமணி முனுசாமிக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். தெனாலிக்கு பார்ப்பதெல்லாம் பயம் ஆனால் நமது முனுசாமிக்கோ எதைப் பார்த்தும் எள்ளளவும் பயமில்லை (ஒரு விஷயத்தை தவிர). எவ்வளவு பெரிய கூட்டம் எதிர்த்து வந்தாலும் ஒற்றை ஆளாக சமாளிக்கக்கூடிய தைரியத்தை கொண்டவன். ஆம்! அவன் பிரபல அரசியல் தலைவர் ஒருவரின் தீவிர தொண்டன். அவரைப் போலவே ஆவேசப் பேச்சிலும், அடக்குமுறை எதிர்ப்பிலும் தீவிரமாய் செயலாற்றுபவன். இவ்வளவு ஏன், சென்னையில் சுனாமி வந்தபோது சுற்றி சுற்றி வேலை செய்தவன். சென்னை பெரு வெள்ளத்தின் போது விடிய விடிய உதவியவன். புயலின் போது, அதைவிட வேகமாக சுழன்றவன். பலர் பயம் கொள்ளும் பருவத மலையில் பத்து முறைக்கு மேல் ஏறியவன். மொத்தத்தில் பொங்கும் கடல் அலையையும், சீறும் சூறாவளி காற்றையும், ஓங்கி உயர்ந்த மலைகளையும் கண்டு சிறிதும் அசராத அசகாய சூரன். 


     இவ்வளவு பெருமைகள் இருந்தும், மாவீரன் முனுசாமிக்கும் பயம் கொள்ளும் ஒரு விஷயமும் உலகில் இருக்கத்தான் செய்தது... அதுவே அதிகாலை மூன்று மணி... ஆம்! அந்நேரத்தில், அவன் மனம் அவனை படுத்தும் பாடு சொல்லில் அடங்காதது‌. ஊரே உறங்கும் அதிகாலை நேரத்தில்தான் அவன் மனதில் பல அற்புத சிந்தனைகள் பொங்கி பெருக்கெடுத்து வெளிப்படும். அவனும் உடனடியாக அவற்றை ஆர்ப்பாட்டமாக செயல்படுத்துவான். அப்போது அவனது செயல்கள் அவனை மட்டுமல்ல, அவனைச் சார்ந்தோரையும் பயம் கொள்ளச் செய்யும் அளவுக்கு பயங்கரமானவை.


    பிரம்ம முகூர்த்த நேரம் துவங்கும் அதிகாலை மூணு மணிக்கும், நமது முனுசாமிக்கும் உள்ள தொடர்பு அவனைப் படைத்த பிரம்மாவிற்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இன்று நேற்றல்ல... அவனது சிறுவயதில் இருந்தே அதிகாலை மூன்று மணிக்கு அவன் மூளைக்குள் மூடி வைக்கப்பட்டிருந்த அலாரம் தானாகவே அடிக்கத் துவங்கும். எவ்வளவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் திடீரென எழுந்து அமர்வான். அந்த இருள் நேரத்திலேயே முந்தினம் தொலைத்த பென்சிலையும், இரவில் மிச்சம் இட்லியையும் தேடித் திரிவான். மேலும் சில நேரங்களில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தன் பெற்றோரையும் எழுப்பி அந்த நேரத்திலேயே சாக்லேட்டும், ஐஸ்கிரீமும் வாங்கி தரச் சொல்லி அடம் பிடிப்பான். 


    முதலில் குழந்தை பயத்தில்தான் இப்படி நடந்து கொள்கிறான் என நினைத்த அவனது பெற்றோர்கள் அவனை மசூதிக்கும், அம்மன் கோயிலுக்கும் அழைத்துச் சென்று மந்திரித்தனர். ஆனால் அந்த மந்திரங்களால் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை. அவனது இந்த செயல்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்படித்தான் ஒருநாள் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து பார்க்கையில் அவனை காணவில்லை. பிறகு ஒவ்வொரு அறையாக தேடுகையில் வீட்டு குளியலறையில் உறங்கிக் கொண்டிருந்தான். அவனை எழுப்பி காரணம் கேட்க, நேரமாகிவிட்டதால் குளிக்க வந்ததாகவும், அசதியாக இருந்ததால் அப்படியே தூங்கி விட்டதாகவும் கூறினான். அடுத்த வாரத்தில் ஒருநாள் அதிகாலை 4:30 மணியளவில் காம்பவுண்டில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறி அவனை அழைத்து வந்து வீட்டில் விட்டு அதிர்ச்சி அளித்தனர் அண்டை வீட்டார்.


    ஒருவேளை தூக்கத்தில் நடக்கும் வியாதியோ என எண்ணிய அவனது பெற்றோர்களும் டாக்டரிடம் அழைத்துச் செல்ல, அவரும் தீவிரமாக பரிசோதித்துவிட்டு அப்படி எதுவும் இல்லை என கூறினார். மற்றொரு நாள் அதிகாலை 5 மணிக்கு அவன் வீட்டு கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால், முனுசாமியும் அவன் பள்ளி வாட்ச்மேனும் நின்றிருந்தனர். ஆம்! கடமை உணர்வு கொண்ட நமது முனுசாமி காலை 10 மணிக்கு தேர்வுக்கு, அதிகாலை 3 மணிக்கே எழுந்து குளிக்காமல் கொள்ளாமல் சென்றிருக்கிறான். விஷயம் கேள்விப்பட்ட பள்ளி மாணவர்கள் அவனை "மூணுமணி முனுசாமி" என கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.


    அதன்பின் அவனது பெற்றோர், வீட்டுக் கதவையும் நன்றாக பூட்டிவிட்டு படுக்க ஆரம்பித்தனர் என்ற போதும் மாதம் ஒரு முறையாவது அவர்களுக்கு அதிர்ச்சியூட்ட அவன் தவறியதில்லை. பெரும்பாலான நாட்களில் மூன்று மணிக்கு எழுந்து எதையாவது யோசித்துக் கொண்டும், தேடிக் கொண்டும் இருப்பான். திடீர் திடீரென ஒரு நாள் வீட்டை விட்டு காணாமலும் போவான். விடிந்ததும் தானாய் வீடு வந்து சேருவான். பூட்டிய வீட்டிலிருந்து எப்படி வெளியேறுகிறான் என்பது அவனுக்கு கூட தெரியாத ஒரு ரகசியம். 


    இப்படித்தான் ஒரு நாள் அவன் பள்ளியில் புவியியல் பாடம் எடுக்கும்போது, உலகம் மிகப் பெரியது என்றும், அதற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை என அவன் ஆசிரியர் விளக்கினார். மறுநாள் அவரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் ஒரு சம்பவத்தை செய்தான். அதிகாலையில் பால் வாங்க எழுந்து வெளியே வந்த அவர், தான் வசிக்கும் முட்டு சந்தின் மூலையில் அவன் நின்றிருப்பதைக் கண்டு விசாரிக்க, "உலகம் எங்கே முடிகிறது?" என்று அந்நேரத்தில் தேடி வந்ததாக கூறி அதிர்ச்சி அளித்தான் நமது மூணுமணி முனுசாமி. அதன்பின் அவனைக் காணும் போதெல்லாம் அவருக்கும் தன்னையறியாமல் ஒரு பதட்டம் தோன்றச் செய்தான்.


    ஒரு வழியாக பள்ளிப் படிப்பை முடிந்ததும் கல்லூரியில் சேர்ந்தான். இருபாலரும் சேர்ந்து படிக்கும் அக்கல்லூரியில் புதிய தோழர்களும், தோழிகளும் கிடைத்தனர். ஏற்கனவே பள்ளியில் "மூணுமணி முனுசாமி" என பட்டபெயர் பெற்றதால், தனது பலவீனம் யாருக்கும் தெரியாமல் எச்சரிக்கையாய் இருந்தான் என்ற போதும், அது வெகுநாளைக்கு நீடிக்கவில்லை. இரண்டாம் ஆண்டு படிக்கும் போது வழக்கம் போல மூன்று மணிக்கு எழுந்த அவன், நேராக கல்லூரியின் பெண்கள் ஹாஸ்டலுக்கு சென்று, அங்கு தங்கி தன்னுடன் படிக்கும் தோழிக்கு அதிகாலை 3:30 மணிக்கே பிறந்தநாள் வாழ்த்துக் கூறினான். அவனது மூணு மணி ரகசியம் தெரியாத அவளும், தற்செயலாக அதே நேரத்தில் பிறந்திருந்தால், தான் பிறந்த அதே நேரத்தில் தன்னை தேடி வாழ்த்து கூறிய அவனின் அன்பைத் கண்டு பூரித்துப் போனாள். அந்த அன்பு காதலாக மாறி அடுத்த கட்டத்தை அடைந்தது. தனது ரகசியம் காத்த முனுசாமியும், நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்தில் அக்காதலை மனமார ஏற்றுக் கொண்டான். மூணு மணி ரகசியத்தைப் பற்றி அவளிடம் எள்ளளவும் மூச்சு விடவில்லை. 


    கல்லூரி முடிந்ததும், ஒரு BPO கம்பெனியில் முதல் ஷிப்ட் வேலையில் சேர்ந்தான். காலை 6 மணிக்கு வேலை ஆரம்பம். மாதத்தில் சில நாட்கள் வேலை பளு அதிகம் இருக்கும் நேரத்தில், தனது வழக்கமான வேலையை காட்டினான். ஆம்! தன்னையறியாமலே சில நாட்கள் ஆறு மணி வேலைக்கு மூன்று மணிக்கே எழுந்து கிளம்பி சென்று விடுவான். காரணம் கேட்டால் வேலை அதிகமாக இருப்பதால் வந்ததாக கூறி சமாளித்தான். அவன் பலவீனம் தெரியாத கம்பெனியும், அதை அவனது கடமை உணர்ச்சியாக அதை எண்ணி அவனை பாராட்டியது. கூடிய விரைவிலேயே பதவி உயர்வு பெற்று அந்த ஷிப்டுக்கே இன்சார்ஜ் ஆனான். இவ்வாறு நடப்பதெல்லாம் அவனுக்கு சாதகமாக இருந்தபோதிலும், சில நேரங்களில் சில விபரீத சிந்தனைகளின் காரணமாக பாதகமாகவும் அமைந்தது.  


    ஆம்! ஒரு நாள் அதிகாலையில் அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் இருந்து அவனது பெற்றோருக்கு போன் வந்தது. காரணம் நமது முனுசாமி தான். அவர்கள் பதறியடித்து அங்க போய் பார்க்க, நமது முனுசாமி ஹாயாக ஒரு பெட்டில் படுத்துக்கொண்டு காலாட்டிக் கொண்டிருந்தான். பொழுது விடியா அப்பொன் நேரத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறி ஆஸ்பத்திரி வாட்ச்மேன், செவிலியர்கள், டாக்டர்கள் என அனைவரையும் எழுப்பி ஒரு வழி செய்து விட்டான். அவர்களும் அந்நேரத்தில் ECG, X-Ray என அனைத்தையும் எடுத்து பார்த்துவிட்டு அவனுக்கு ஒன்றும் இல்லை எல்லாம் மனப்பிராந்திதான் என தெரிவித்தனர்.    எல்லாம் முடிந்த பின் இறுதியாக அவன் கூறிய வார்த்தைகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. ஆம்! தனக்கு ஒன்றுமில்லை என்று தனக்கே தெரியும் என்றும், ஒருவேளை தனக்கு உடம்பு சரியில்லை என்றால் அந்நேரத்திலும் அவர்கள் ‌‌ கவனிப்பார்களா? என உறுதி செய்ய வந்ததாக கூறி அவர்களை வெறுப்பேற்றினான். அவர்களும் தலையில் அடித்துக் கொண்டே அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பில் தொகையாக 2000 ரூபாய் வாங்கிக்கொண்டு...


    பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவனது பெற்றோர்கள் கோபத்தின் உச்சியை அடைந்தனர். அவனை நன்றாக திட்டி தீர்த்தனர். நடந்ததெல்லாம் யோசித்துப் பார்க்க ஒரு கட்டத்தில், யாரைக் கண்டும் பயப்படதாத அவனுக்கு தன் மேலே ஒரு பயம் வந்தது. தான் ஏன் இப்படி எல்லாம் செய்கிறோம் என்ற கவலை பயமாக உருமாற்றம் அடைந்தது.  தனது இப்பிரச்சனை தனது காதலிக்கு தெரிந்தால் தனது வாழ்க்கை என்ன ஆகும் என்ற மற்றொரு கவலையையும் இன்னொரு பக்கம் மூணுமணி முனுசாமியை வாட்டி வதைத்தது. இதனாலேயே தன்னைத் திருமணத்தை முடிந்த அளவு தள்ளி போட்டான்.


    தீவிர சிந்தனைக்கு பிறகு தைரியத்தை வரவழைக்கும் பொருட்டு ஒரு திட்டம் தீட்டினான். மூன்று மணிக்கு எழுந்திருக்கும் தன் பழக்கத்தை பயன்படுத்தி, அந்நேரத்தில் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தான். சில நாட்கள் உடற்பயிற்சிலேயே உடல் திடமாக மாறியது என்ற போதும் அந்நேரத்தில் தோன்றும் அவனது அபூர்வ சிந்தனைகள், அவனை அப்பயிற்சியை தொடர விடவில்லை. போதாக்குறைக்கு அந்த அதிகாலை நேரத்தில் யூட்யூபில் (YouTube) உலாவ, எதேச்சையாக பிரபல அரசியல் தலைவர் ஒருவரின் சொற்பொழிவு வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தான். அவரது பேச்சை கேட்க கேட்க அவனது நாடி நரம்பெல்லாம் துடித்து அவரின் தீவிர தொண்டனாக மாறி, தனது சுய பிரச்சினை மறந்து, சமூக பிரச்சனைகளில் போராடும் அளவிற்கு தைரியம் வந்தது. ஏற்கனவே சொன்னது போல் சுனாமி, மழை வெள்ளம், புயல் போன்றவற்றின் போது பம்பரமாய் சுற்றி சுற்றி வேலை செய்தான். இதுதவிர அரசியல் போராட்டங்களில் கலந்துகொண்டு அரசாங்கத்தையே எதிர்க்கும் துணிவு கொண்ட தைரியசாலியாக மாறினான். இருப்பினும் அவன் மனது ஓரத்தில் மூணு மணி பயம் வாட்டி வைக்கத்தான் செய்தது.


    இப்படியே சென்ற அவனது வாழ்க்கையில் இறுதியாக அவன் பயந்த ஒரு விஷயம் நடந்து விட்டது. ஆம்! அவனுக்கு அவன் காதலியுடன் திருமணம் நிச்சயமாகி விட்டது. திருமண நாள் நெருங்க நெருங்க நமது முனுசாமிக்கு மூணு மணி பயம் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது. திருமணத்திற்கு பிறகு தனது மனைவிக்கு அது தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற கவலையே அதற்கு காரணம்‌. என்னதான் சமூகத்தில் தைரியமான போராளியாகவும், எதையும் எதிர்கொள்ளும் அசகாய சூரனாகவும் விளங்கினாலும், தனது மூன்று மணி பயத்தை மட்டும் அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை...  


    திருமண நாள் நெருங்க நெருங்க அவனது பதட்டம் அதிகரித்தது. 24 மணி நேரத்தில் 23 மணி நேரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவனால், ஒரு மணி நேரத்தை மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை. 


ஒருவழியாக திருமணமும் முடிந்தது.


ஆறு மாதங்களுக்குப் பிறகு...



    இப்போதெல்லாம் முனுசாமிக்கு மூணுமணி பயம் அறவே இல்லை. அவனது மனதில் முன்பு போல் விபரீத யோசனைகள் எதுவும் எழுவதில்லை. அதுமட்டுமில்லாமல் முன்பு சமூகப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எதிலும் அவன் பங்கேற்பதில்லை. இன்னும் சொல்லப் போனால், நள்ளிரவுக்கு பிறகு வரும் அந்த நேரத்தில்தான் தன்னையறியாமல் அவன் ஓரளவு பயமின்றி நிம்மதியாக தூங்க ஆரம்பித்தான். ஆம்! அசகாய சூரனாக இருந்த மூணு மணி முனுசாமியின் வாழ்க்கை திருமணத்திற்குப் பின் தலைகீழானது‌. ஜல்லிக்கட்டு காளையாக சீறி வந்த அவனை, திருமணம் மூக்கணாங்கயிறு போட்டு அடக்கி விட்டது.      


    ஆழ்ந்து உறங்கும் நேரமான அந்த மூன்று மணியை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் "தனது வாழ்க்கையுடன் போராடவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது".


இறுதியாக முனுசாமியின் மூணுமணி பயம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. 


பின்குறிப்பு : திருமணமான ஆண்களுக்கு இக்கதை சமர்ப்பணம்...


Comments

Post a Comment