ஆன்மீக அமுதத்தில் மேலும் சில துளிகள் (காஞ்சி பயணம் - 2)

சென்ற பகுதியை படிக்க


6 பிப்ரவரி 2022



முன்னுரை

ஒரு முறை நனைந்தால் மீண்டும் மீண்டும் நனைய தூண்டும் ஆவலை தோற்றுவிக்கும் சக்தி வான் மழைக்கு மட்டுமல்ல. ஆன்மீக மழைக்கும் உண்டு. ஆம்!  சென்றமுறை காஞ்சிபுரம் சென்று சில கோவில்களை தரிசித்து ஆன்மீக மழையில் நனைந்த நான், விடுபட்ட கோவில்களில் சிலவற்றை தரிசிக்கும் பொருட்டு மீண்டும் ஒரு முறை ஆன்மீக அமுதத்தை அள்ளித்தரும் காஞ்சியை நோக்கி புறப்பட்டேன். 


பயணத்திட்டம்

சென்ற முறை முதலில் சிவ காஞ்சிக்கு சென்றதால், இம்முறை முதலில் விஷ்ணு காஞ்சியை நோக்கி எனது Suzuki Access 125ல் அதிகாலை 5:45 மணி அளவில் சென்னை குன்றத்தூரில் இருந்து புறப்பட்டு வண்டலூர் பைபாஸ், மண்ணிவாக்கம், முடிச்சூர், ஒரகடம் ஆகிய ஊர்களின் வழியே பயணித்து வாலாஜாபாத்தில் ஒரு சில நிமிடங்கள் ஓய்வெடுத்து பிறகு இடப்புறம் திரும்பி காஞ்சி மாநகரை நோக்கி சென்றேன். வாலாஜாபாத்-காஞ்சிபுரம் சாலையின் இருபுறமும் இருந்த சிறுசிறு கோவில்கள், நான் கோவில் நகரமான காஞ்சியை நெருங்கிக் கொண்டிருக்கிறேன் என எடுத்துரைத்தது. மீண்டும் ஒரு முறை ஆன்மீக அமுதத்தில் மேலும் சில துளிகளை பருக தயாரானேன்...


முதல் துளி -  அய்யன்பேட்டை ஆலயங்கள்

முதலில் காஞ்சிக்கு சற்று முன்னர் உள்ள முத்தையால்பேட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்து எனது பயணத்தை துவங்க திட்டமிட்ட நான், ஆர்வ மிகுதியால் காஞ்சிக்கு ஒன்பது கிலோ மீட்டர்கள் முன்பே உள்ள அய்யம்பேட்டை என்றழைக்கப்படும் அய்யன்பேட்டையின் பிரதான சாலையில், கிழக்குப் பகுதியில் உள்ள மோகாம்புரி அம்மன் ஆலயத்தில் காலை 6:45 மணியளவில் நுழைந்தேன்.


அய்யம்பேட்டை மோகாம்புரி அம்மன் ஆலயம்


யாருமில்லா கோவிலில் மோகாம்புரி அம்மனையும், பாலசுப்பிரமணியரையும் தரிசித்து, பிறகு வெளிப்பிரகாரத்தில் உள்ள விநாயகர் மற்றும் நாகர் உட்பட பல தெய்வங்களை வழிபட்டு, இறைவனின் சித்தப்படி எனது ஆன்மீக பயணத்தை ஆனந்தமாக அங்கேயே துவக்கினேன். பின்பு அங்கிருந்து புறப்பட்டு முத்தியால்பேட்டை செல்லும் வழியில் கமலாட்சி உடனுறை கைலாசநாதர் கோவிலின் கோபுர தரிசனத்தை பெற்று இறை கடலான காஞ்சியை நோக்கி எனது பயணத்தை தொடர்ந்தேன்.


இரண்டாம் துளி - முத்தியால்பேட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம்

வாலாஜாபாத்-காஞ்சிபுரம் பிரதான சாலையின் இடப்புறம் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலின் நுழையும் போதே பக்தி மணம் கமழும் பாடல்களுடன் அவர் என்னை வரவேற்றார். பிரசன்னம் என்பதற்கு தோற்றம் அல்லது வெளிப்படுதல் என்று பொருள். இறைவன் இத்தலத்தில் தோன்றி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதால் இப்பெயர் பெற்றிருப்பார் என எண்ணுகிறேன். அமைதியாகவும், சுத்தமாகவும் பராமரிக்கப்படும் அந்த ஆலயத்தின் பிரகாரத்தின் இடதுபுறம் பத்மாவதி தாயாருக்கு தனி சன்னிதி உள்ளது. மேலும் மூலவர் சன்னிதிக்கு வலதுபுறம் சக்கரத்தாழ்வாரும் அவர் பின்னால் யோக நரசிம்மரும் குடி கொண்டுள்ளனர்.


முத்தியால்பேட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம்


பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்திற்கு வெளியே உள்ள பிரதான சாலையின் ஓரம் பிரசன்ன ஆஞ்சநேயருக்கு தனி கோவில் உள்ளது. இவர் விஜயநகரப் பேரரசின் புரவலர் துறவியான வியாசராயரால் நிர்மாணிக்கப்பட்டவர் என்றும், சுமார் 400 ஆண்டுகள் பூமிக்குள் புதைந்திருந்த ஆஞ்சநேயர் சிலை 150 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் காலத்தில் வெளிக்கொணரப்பட்டு ஆலயம் அமைக்கப்பட்டதாகவும், மேலும் கூடிய விரைவில் சாலை விரிவாக்கத்திற்காக கோவிலை விரைவில் அப்புறப்படுத்த அரசு தீர்மானித்துள்ளதாகவும் கோவிலின் குருக்கள் கூறினார். ஆஞ்சநேயரின் தரிசனம் அற்புதமாக இருந்தது.



மூன்றாம் துளி - காஞ்சி வரதராஜ பெருமாள் ஆலயம்

அடுத்ததாக விஷ்ணு காஞ்சியின் தலையாய கோவிலாக கருதப்படும் அருள்மிகு வரதராஜ பெருமாள் ஆலயத்தில் நுழைந்தேன். அக்கோவிலின் பிரம்மாண்டமான 180 அடி உயரம் கொண்ட கிழக்கு கோபுர நுழைவாயில் மூடியிருந்ததால் மேற்கு வாசல் வழியே பிரவேசித்த நான், அதுவே அக்கோவிலின் பிரதான வாயில் என பின்னர் அறிந்து கொண்டேன்.


வரதராஜ பெருமாள் கிழக்கு ராஜகோபுரம்


பேரருளாளன் குடிகொண்டிருக்கும் இத்தலத்தில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க சற்று தாமதம் ஆனதால் கோவில் வளாகத்தில் உள்ள அத்திவரதர் சயனம் கொண்டிருக்கும் அனந்தசரஸ் தீர்த்த குளத்தை வலம் வந்தேன். அங்கு கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் அழகிய வெண் புரவிகள் இரண்டை கண்டேன். வரதராஜ பெருமாள், தேவர்களின் அரசன் என பொருள்படும் வண்ணம் தேவராஜர் என்றும் அழைக்கப்படுகிறார். அரசன் என்பதால் இவரின் குதிரைகள் இங்கு பராமரிக்கப்படுகிறது போலும். மேலும் குளத்தைச் சுற்றி வர, அங்கு தமிழகத்திலேயே மிகப்பெரிய சக்கரத்தாழ்வாரையும் அவர் பின்னே இருக்கும் யோக நரசிம்மரையும் தரிசனம் செய்தேன். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவில் விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டதால் கல்வெட்டுகள் பெரும்பாலும் தெலுங்கில் உள்ளது, மேலும் அர்ச்சகர்களும், வருகை தரும் பக்தர்களின் பெரும்பாலானோரும் தெலுங்கு பேசும் மக்களாகவே காணப்படுகின்றனர். 100 கால் மண்டபத்தில் காணப்படும் கற்சங்கிலிகளும், கலைநயம் மிக்க தூண்களும் கோவிலின் பெருமையை எடுத்துரைத்தது.


கலைநயம் மிக்க கற்சங்கிலி


காலை எட்டு மணிவாக்கில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதும், முதலில் ஸ்ரீ பெருந்தேவி தாயாரையும், அதன்பின் அழகியசிங்கர் என அழைக்கப்படும் நரசிம்மரையும்  வணங்கிய பிறகு பிரகாரத்தைச் அரைச்சுற்று சுற்றி சுமார் 25 படிகள் ஏறி சிறியதொரு குன்றின் மேல் உயர்ந்ததொரு சன்னிதியில் குடிகொண்டிருக்கும் கம்பீரமான பெருமாளின் தரிசனத்தை பெற்றேன். மூலவரின் சன்னதியின் வெளிப்புறம் உள்ள ஓவியங்கள் கண்ணைக் கவரும் வண்ணம் இருந்தபோதும் சிதிலமடைந்து காணப்படுகிறது. பிறகு சந்திர சூரிய அம்சமாகக் கருதப்படும் தங்க மற்றும் வெள்ளி பல்லிகளை தரிசனம் செய்து கோவில் வளாகத்திலேயே நான் கொண்டு சென்ற காலை உணவை முடித்துக் கொண்டு அடுத்த கோவிலை நோக்கி பயணத்தை தொடர்ந்தேன்.


நான்காம் துளி - மணிகண்டேஸ்வரர் கோவில்

வரதராஜ பெருமாள் தரிசனத்திற்கு பிறகு, அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்குச் செல்லும் வழியில் விஷ்ணு காஞ்சியின் பிரதான சாலையான SH58ல் உள்ள சிறிய கோவிலான ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றேன். அங்கு திருமணம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்ததால் பிரகாரத்தில் கூட்டம் களை கட்டியிருந்தது என்ற போதும் மூலவர் சன்னிதியில கூட்டம் ஏதுமின்றி அமைதியான தரிசனம் கிட்டியது.


மணிகண்டேஸ்வரர் ஆலயம்


திருப்பாற்கடலை கடைந்தபோது தோன்றிய நஞ்சால் துயருற்று, தங்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டு அந்நஞ்சை இறைவனுக்கு கொடுத்து உண்ணுமாறு செய்த பாவம் நீங்கும்படி பிரம்மன், திருமால் முதலியோர் காஞ்சிக்கு வந்து தங்களை காத்த இறைவனின் மணிகண்டத்திற்கு (கண்டம்-கழுத்து) போற்றி செய்யும் வகையில் "மணிகண்டம்" எனும் பெயரிலேயே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களின் பாவத்தை போக்கிக் கொண்ட இத்தலத்தின் வரலாறு காஞ்சி புராணத்தில் தனி படலமாக இடம்பெற்றுள்ளது என அறிந்து கொண்டேன். 


ஐந்தாம் துளி - அஷ்டபுஜ பெருமாள் ஆலயம்

ஆதிகேசவ பெருமாளாக இத்தலத்தில் குடியிருந்த இறைவன், சரபாஸ்வரன் என்ற கொடிய அசுரனை அழிக்கும் பொருட்டு எட்டு கரங்களுடன் அவதாரம் எடுத்ததால் அஷ்டபுஜ பெருமாள் என அழைக்கப்படுகிறார் என இக்கோவிலின் தலபுராணம் கூறுகிறது. கோவிலின் தாயார் பெயர் ஸ்ரீ புஷ்பவல்லி. வேறெங்கும் இல்லாத வகையில் கோவில் கோபுரத்தில் நுழைந்தவுடன் எதிரிலேயே சொர்க்கவாசல் உள்ளது. மேலும் "செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவரின் வைகுண்ட நீள் வாசல்" என்ற வாசகம் அவ்வாயிலின் மேல் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்திருகோவிலில், தற்போது குடமுழுக்கு விழாவின் முன்னேற்பாடாக பாலாலயம் நடைபெற்று, கோவில் முழுவதும் புனரமைக்கப்பட்டு வருகிறது என்பதால் மூலவரின் தரிசனம் கிட்டவில்லை என்றபோதிலும் உற்சவரின் தரிசனம் கிட்டியதால் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.


ஆறாம் துளி - சொன்னவண்ணம் செய்த பெருமாள் ஆலயம்

ஆன்மீக அனுபவத்தை தேடிச்சென்ற எனக்கு அதிசய அனுபவங்களை அள்ளித்தந்த கோவில் திருவெக்கா, யதோக்தகாரி போன்ற பெயர்களால் அழைக்கப்படும் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில். 


சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில்


திருமழிசை ஆழ்வாரின் நண்பரான சைவப்புலவர் கணிகண்ணன் தன்னை புகழ்ந்து பாடாததால், பல்லவ மன்னர் அவரை நகரை விட்டு வெளியேற உத்தரவிட, அவருக்குத் துணையாக புறப்பட்ட திருமழிசை ஆழ்வார் கூறியபடி இறைவனும் இத்தலத்திலிருந்து வெளியேறி ஒரு நாள் அருகில் உள்ள ஓரிக்கை என்னும் கிராமத்தில் தங்கியதாகவும், பின்னர் மனம் வருந்திய மன்னனின் வேண்டுகோளை ஏற்று திரும்பும் வேளையில் திருமழிசை ஆழ்வாரின் வேண்டுகோளுக்கிணங்க இங்கு சயனம் கொண்டதாக இக்கோவிலின் தலபுராணம் கூறுகிறது. இவ்வாறு தனது பக்தனின் சொல்படி இறைவன் செயல்பட்டதால் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என இறைவன் இங்கு அழைக்கப்படுகிறார். 


தாயார் ஊஞ்சல் மண்டபம்


உலகின் வேறெங்கும் காண முடியாத அதிசயமாய் இத்தலத்திற்கு பெருமாள் இடப்புறம் சயனம் கொண்டுள்ளார். தான் இல்லாமல் யாகம் வளர்த்த பிரம்மாவின் யாகத்தை அழிக்கும் பொருட்டு வேகவதி நதியாக பெருக்கெடுத்து வந்த சரஸ்வதி தேவியை இத்தலத்துப் பெருமாள் தடுத்ததால், சரஸ்வதி தேவி பெருமாளின் கால் அருகே அமர்ந்த கோலத்தில் குடிகொண்டுள்ளார். வேறெந்த தலத்திலும் இவ்வாறு இல்லை என்று தனிச் சிறப்பாகும்.


108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் பொய்கை ஆழ்வாரின் அவதார ஸ்தலம். இத்தலத்தின் தாயார் பெயர் கோமளவல்லி. கோவிலின் பின்புறம் தாயாரின் ஊஞ்சல் மண்டபமும் உள்ளது தனிச்சிறப்பு. கோயில் வளாகத்தில் உள்ள சன்னிதியில் ஆண்டாள் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார்.  கோபுரத்தில் குடிகொண்டிருந்த கிளிகளின் சத்தம் எனது செவிகளில் எதிரொலித்து ஆனந்த அனுபவத்தை தந்த திவ்ய தேசம்.


ஏழாம் துளி - பவள வண்ண பெருமாள் ஆலயம்


பவள வண்ண பெருமாள் ஆலயம்


அடுத்ததாக நுழைந்தது பவள வண்ண பெருமாள் என்று அழைக்கப்படும் பிரவாளவர்ண சுவாமி ஆலயம். இங்கு அத்தி மரத்தால் செய்யப்பட்ட இறைவன், வீற்றிருந்த திருமேனியாக காட்சி அளிக்கிறார். பிரகாரத்தின் இடப்புறம் உள்ள மண்டபத்தில் கண்ணாடி அறையும், உடையவர் சந்நிதியும் உள்ளது. இக்கோவிலின் தாயார் பெயர் பிரவாளவல்லி. கோவிலின் எதிரே உள்ள சக்கர தீர்த்தக்குளம் பாழடைந்து உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோவிலில் அசுரர்களை அழித்த பெருமாள், சிவந்த திருமேனியாக காட்சியளிப்பதால் பவள வண்ண பெருமாள் என அழைக்கப்படுகிறார் என இக்கோவிலின் தலபுராணம் கூறுகிறது. அமைதியான கோவில்.


எட்டாம் துளி - பச்சைவண்ண பெருமாள் ஆலயம்



பச்சைவண்ண பெருமாள் ஆலயம், பவள வண்ண பெருமாள் ஆலயத்தின் நேர் எதிரே உள்ள சாலையின் எதிரே அமைந்துள்ள அக்கோவிலின் அபிமான ஸ்தலமாகும். கோபுரம் எதுவும் இல்லை என்றாலும், மூலவரின் அழகான விமானம் பழமையான கட்டிடக் கலைக்குச் சான்றாக விளங்குகிறது. இக்கோவிலில் மரீச மகரிஷிக்கு ராமாவதாரமாக காட்சியளித்த மகாவிஷ்ணு, நின்ற திருக்கோலத்தில் குடி கொண்டுள்ளார். தாயார் மரகதவல்லி சீதா தேவியின் அம்சமாக காட்சியளிக்கிறார்.


ஒன்பதாம் துளி - அருள்மிகு ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில்



காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கும், குமர கோட்டத்திற்கும் இடையில் அமைந்துள்ள கோவில்.  இறைவனின் கண்களை விளையாட்டாக, இறைவி மூடியதால் உலகம் இருளில் மூழ்கிய நேரத்தில் இறைவியின் உடலில் இருந்து உருவான கரிய நிறமுடைய காளிதேவி இக்கோவிலில் குடி கொண்டுள்ளார். நான் சென்ற நேரத்தில் சிறப்பு பூஜை ஒன்று நடைபெற்று கொண்டிருந்ததால் இறைவியை தரிசனம் செய்ய முடியவில்லை என்ற போதும், மூலவர் சந்நிதிக்கு பின்புறம் உள்ள இடத்தில் படர்ந்திருந்த கொடிகளில், பூத்திருந்த பூக்களின் அழகில் என் மனதை பறிகொடுத்தேன். 


பத்தாம் துளி - குமரக்கோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவில்


குமரக்கோட்டம் சுப்பிரமணியர் ஆலயம்


கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலம் இது. கோவிலின் மூலவர் சுப்பிரமணியர் என்ற போதும்  சண்முகர், சோமஸ்கந்தர், முத்துக்குமார சுவாமி என பல வடிவங்களில் முருகப் பெருமான் இங்கு காட்சியளிக்கிறார். தேவர்களின் சேனாதிபதியான முருகப்பெருமானின் இக்கோவிலில், ஈசன் சேனாபதீஸ்வரராக அருள்பாவிப்பது தனிச்சிறப்பு. இதைத் தவிர உருகுமுள்ள பெருமாள், நவ வீரர்கள் சன்னதிகள் பிரகாரத்தில் இடப்புறத்திலும், கஜவள்ளி, வள்ளியம்மை, தெய்வானை சன்னிதிகள் பிரகாரத்தின் பின்புறத்திலும் உள்ளன. இதைத் தவிர வள்ளலார், பாம்பன் சுவாமிகள் மற்றும் கச்சியப்ப சிவாச்சாரியார் சிலைகள் மற்றும் தியான மண்டபம் ஆகியவை பிரகாரத்தின் வலது புறத்திலும் உள்ளது. இக்கோவிலின் உற்சவர் பெயர் சுப்பிரமணியர். நன்றாக பராமரிக்கப்படும் இக்கோவிலில் திருப்தியான தரிசனம் கிடைத்தது. 



பதினொன்றாம் துளி - ஜுரஹரேஸ்வரர் கோவில்

அடுத்ததாக நுழைந்து ஏகாம்பரநாதர் கோவில் தெருவில் அமைந்துள்ள தொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ள ஜுரஹரேஸ்வரர் கோவில். மன்மதனை எரித்த இறைவனின் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்ட தேவர்கள், இங்கு வழிபட்டு நிவாரணம் பெற்றதால், இத்தலத்தின் இறைவனை வழிபட்டால் நோய்கள் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை. கோவில் நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது என்ற போதிலும், காலை 11 மணிக்கே நடை சாத்தப்பட்டது சற்று ஏமாற்றமாக இருந்தது. 


ஜுரஹரேஸ்வரர் கோவில் (மேகத்தில் விமானத்தின் நிழல்)


மேடை போன்ற அமைப்பின் மேல் கட்டப்பட்ட கோவிலில், மேடையின் அடியில் இருந்த அழகான விநாயகரின் தரிசனம் பெற்றேன். மேலும் பிரகாரத்தை சுற்றி வருகையில், பழங்கால கட்டிட கலையின் உருவமாக விளங்கும் விமானத்தின் நிழல் மேகத்தில் பிரதிபலித்தது போன்ற ஒரு காட்சியை கண்டு மெய் சிலிர்த்தேன். மனதிற்கு மிகவும் பிடித்த ஒரு தலம்.


பன்னிரெண்டாம் துளி - காசிவிஸ்வநாதர் என்கிற தீர்த்தீஸ்வரர் கோவில்


சர்வ தீர்த்த குளம்


ஆன்மீக பயணத்தில், அடுத்ததாக நாடி சென்றது காசி விஸ்வநாதர் என்று அழைக்கப்படும் தீர்த்தீஸ்வரர் ஆலயம். மிகச்சிறிய ஆலயமாக இருந்த போதும், எதிரே உள்ள சர்வ தீர்த்த குளம் மிகப் பெரியதாகவும், பிரம்மாண்டமாகவும் இருந்தது நான் சற்றும் எதிர்பாராத ஒன்று. கோவிலின் நடை மூடப்பட்டிருந்ததால் அருகிலுள்ள மற்றொரு சிறிய கோவிலான மல்லிகார்ஜுனர் கோவிலுக்குச் சென்று இறை தரிசனம் பெற்று திருப்தி அடைந்தேன்.


பதிமூன்றாம் துளி - காஞ்சி காமகோடி பீடம்

இவ்வாறாக பயணத் திட்டத்தில் உள்ள கோவில்களில் தரிசனம் முடித்த பின் காஞ்சி காமகோடி பீடத்தில் நுழைந்தேன். அங்கு மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பிருந்தாவனத்தை தரிசிக்கும் வாய்ப்பு பெற்றேன். காலங்கள் பல கடந்தும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற மகான்கள் வாழ்ந்த இடத்தில் பிரவேசித்தது மன நிறைவாய் இருந்தது மட்டுமில்லாமல் நல்லதொரு அதிர்வுகளை தந்தது.


பதினான்காம் துளி - ஓரிக்கை மகா பெரியவர் மணிமண்டபம்


மகா பெரியவர் மணி மண்டபத்தில்


சரியாக மதியம் 12 மணிக்கு காஞ்சி காமகோடி பீடத்தில் நடந்த ஆராதனையில் பங்கெடுத்த பின் மகாபெரியவரின் மணி மண்டபத்தை தரிசனம் செய்ய ஆவல் கொண்டேன். காஞ்சியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஓரிக்கை கிராமத்தில் அமையப்பெற்ற மணிமண்டபம் சமீப காலத்தில் கட்டப்பட்டது என்றாலும் கட்டிட கலையிலும், ஆன்மீக அனுபவங்களை தருவதிலும் சிறந்து விளங்குகிறது. காற்றில் கலந்த மகாபெரியவரின் ஆசியை இங்கு பெற்றேன்.

முடிவுரை
சுமார் ஆறு மணி நேர பயணத்தில் ஆன்மீக அமுதத்தின் பல துளிகளை பருகிய பின்னர், இறுதியாக பிற்பகல் 12:45 மணியளவில் மணிமண்டபத்தில் அளிக்கப்பட்ட பிரசாதத்தை உண்டு மனமார மட்டுமல்லாமல், வயிறாரவும் திருப்தி அடைந்து எனது பயணத்தை இனிதே முடித்துக் கொண்டேன். ஆத்ம திருப்தியை அளித்த இறைவனுக்கு நன்றி கூறி...

மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்.


நன்றிகள்

  • Redmi 7S - புகைப்பட உதவிக்கு...
  • Google - பயணப் பாதையை காட்டியதற்கு...
  • Suzuki Access 125 - எனது பயணத் தோழனுக்கு...
  • கோவில்களை கட்டிய பக்தர்கள் மற்றும் மாமன்னர்களுக்கு...
  • கோவில்களை பராமரித்து வரும் அனைத்து பணியாளர்களுக்கு...
  • இக்கட்டுரை படிக்கும் அனைத்து ஆன்மீக உள்ளங்களுக்கு...


Comments

Post a Comment