சதுரகிரி சென்று, அங்கு காட்டுக்குள் சுந்தர மற்றும் சந்தன மகாலிங்க சுவாமிகளாக வீற்றிருக்கும் அந்த இறைவனை மீண்டுமொருமுறை தரிசிக்கும் நல்வாய்ப்பு சமீபத்தில் கிட்டியது. அப்போது அவர் முதல்முறை என்னை அங்கு வரவழைக்க நிகழ்த்திய திருவிளையாடல்களையும் அதில் நான் கற்ற கீழ்க்கண்ட பாடங்களையும் அசை போட்டேன். அந்த நினைவுகளின் தொகுப்பே இப்பதிவு.
1. ஆயிரம் குதிரைகள் கட்டி இழுத்தாலும் இறைவனின் விருப்பம் இன்றி ஒரு அடி கூட நம்மால் அவரை நோக்கி எடுத்து வைக்க இயலாது.
2. நமது செயல்களுக்கு மட்டுமல்ல... நாம் மனதில் நினைக்கும் எண்ணங்களுக்கும், வாயில் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் சமமான விளைவுகள் நிச்சயம் உண்டு.
சதுரகிரி செல்ல வேண்டும் என்பதில் எனக்கு மட்டுமல்ல... பெரும்பாலும் மலையேற்றம் செல்பவர்களுக்கும், ஆன்மீகத்தில் நாட்டம் இருப்பவர்களுக்கும் பொதுவான ஒரு ஆர்வம் உண்டு. ஆனால் அது அவ்வளவு எளிதல்ல...
பருவத மலைக்கு பலமுறையும், தமிழகத்தில் உள்ள பிற மலைகளுக்கு சில முறையும் சென்று வந்த நான், அடுத்த முயற்சியாக சதுரகிரி செல்ல திட்டமிட்டேன். நண்பர்கள் பலரும் உடன் வர விருப்பம் தெரிவித்ததால் அவர்களுக்கும் சேர்த்து பயணச்சீட்டு எடுக்க எண்ணி விவரங்களை சேகரித்தேன். பயணச்சீட்டு எடுக்கும் அன்று காலை எதேச்சையாக நாளிதழை பார்க்க, சதுரகிரியில் முன்தினம் ஆடி அமாவாசை அன்று திடீரென பெய்த எதிர்பாராத மழையால், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பேர் மரணம் என்ற செய்தி இருந்தது. எங்கள் பயணத்திட்டமும் அத்துடன் நிறைவு பெற்றது.
இரண்டாம் முயற்சி (2015)
சென்ற முறை நண்பர்களுடன் செல்ல திட்டமிட்டு, அது கை கூடாததால் இம்முறை யாரிடமும் சொல்லாமல், நான் மட்டும் தனியாக செல்ல பயணச்சீட்டு பதிவு செய்தேன். இதை அறிந்த எனது உறவினர் ஒருவர் தானும் உடன் வருவதாக கூறி அதே ரயிலில், தனியாக பயணச்சீட்டு எடுத்து என்னுடன் பயணத்தில் இணைந்து கொள்ள திட்டமிட்டார். டிசம்பர் மாதம் இறுதியில் திட்டமிட்ட எங்கள் பயணத்திற்கு ஒரு வாரம் முன்னர் லேசான சாரல் மழை பெய்ததால், எல்லாம் எனது திட்டப்படி சரியாக நடக்குமா என்ற கவலை ஏற்பட்டது. எனவே அங்குள்ள சூழ்நிலையை அறிந்து கொள்ளும் பொருட்டு கூகுளில் தேட, வனக்காவலர் ஒருவரின் தொலைபேசி எண் கிடைத்தது. சென்னையில் இருந்து ரயில் ஏறுவதற்கு முன்பு அவரை தொடர்பு கொண்டு பேசுகையில் அன்றைய தினம் மழை எதுவும் இல்லாததால் பக்தர்களை மலை ஏற அனுமதித்தனர் என்று கூறி எங்கள் வயிற்றில் பால் வார்த்தார்.
இம்முறை இறைவனின் அனுமதி கிடைத்துவிட்டது என்று உற்சாகமாக கிளம்பி விருதுநகர் வழியாக வத்திராயிருப்பு சென்று, அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் சதுரகிரியின் அடிவாரமான தாணிப்பாறையை அடைந்த எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்! முந்தினம் பக்தர்களை அனுமதித்த நிலையில், இரவிலும் மழை ஏதும் இல்லாத நிலையில், ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருப்பதாக கூறி அன்றைய தினம் எங்களை அனுமதிக்க மறுத்தனர். வெகுநேரம் காத்திருந்தும் பலன் எதுவும் இல்லாததால் வேறு வழியின்றி ஏற்கனவே சிந்தித்து வைத்திருந்த மாற்றுத்திட்டமான (Plan - B) ஸ்ரீவில்லிபுத்தூர், அதன் பிறகு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கோயில்களை பார்க்க அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் புறப்பட்டோம்.
ஷேர் ஆட்டோவில் எங்களைத் தவிர மேலும் இரு பயணிகள் ஏறினர். சுமார் 40-45 வயது தோற்றம் கொண்ட கணவன்-மனைவி போல் காணப்பட்ட அவர்களிடம் எதேச்சையாக பேச்சு கொடுக்கும் போது, அவர்களும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும் முன்தினம் மலையேறி, இறைவனை தரிசித்து விட்டு, அங்கேயே இரவு தங்கி காலையில் இறங்கி வந்ததாக கூறினர். எங்களை அனுமதிக்காததால் அடுத்ததாக மதுரை செல்ல இருப்பதாக நாங்கள் கூற, அவர்களோ திருநெல்வேலிக்கு செல்லுமாறும், மேலும் அங்கிருந்து குற்றாலம் சென்றால் தற்போது அருவியில் நல்ல நீர் இருப்பதாகவும் கூறினர்.
அத்திட்டம் எங்களுக்கும் ஏற்புடையதாக இருந்ததால் நானும் எனது உறவினரும் அதை பற்றி விவாதித்துக் கொண்டே வத்திராயிருப்பை அடைந்து அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ரங்க மன்னாரையும், ஆண்டாளை தரிசித்த பின் அன்றிரவு திருநெல்வேலி சென்று தங்கி மறுநாள் அதிகாலையில் நெல்லையப்பர் கோயிலில் தரிசனம் கண்டோம். பிறகு குற்றாலம் சென்றடைந்தோம். அவர்கள் கூறியது போல் குற்றாலத்தில் நீர் ஆர்ப்பரித்து கொட்டியது என்றபோதும் குளிப்பதற்கு ஆட்கள் யாரும் இல்லை. நாங்கள் மட்டும் மணிக்கணக்கில் மெயின் அருவியிலும், ஐந்தருவியிலும் உருண்டு புரண்டு விளையாடி அற்புத அனுபவத்தை பெற்றோம். டிசம்பர் மாதம் சபரிமலை சீசன் என்றாலும், அன்றைய தினம் கூட்டம் ஏதும் இல்லாமல் இருந்தது அதிசயமே...
பிறகு குற்றாலநாதர் மற்றும் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் சென்று அற்புதமான தரிசனத்தைக் கண்டு பூரித்துப் போனோம். அங்கிருந்து சென்னை திரும்பும் வழியில் எங்கள் பயணத்தை பற்றி விவாதித்துக் கொண்டே வந்தோம். திட்டமிட்டபடி சதுரகிரி செல்ல இயலாவிட்டாலும், வழியில் சந்தித்த தம்பதியினரின் அறிவுரைப்படி மேற்கொண்ட, அப்பயணம் இனிமையாக நிறைவடைந்ததை எண்ணி பேசிக் கொண்டிருக்கையில் தான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. ஆம்! சென்னையில் இருந்து வந்ததாக கூறி எங்களுக்கு வழிகாட்டிய அவர்கள், எங்களுடன் ஷேர் ஆட்டோவில் வரும் போது வத்திராயிருப்பு வரை வராமல் பாதி வழியிலேயே இறங்கிச் சென்றனர் என்பதை உணர்ந்தோம். வத்திராயிருப்பு வராமல் சென்னைக்குச் செல்ல வேறு வழி இல்லை என்ற நிலையில் அவர்களின் அந்த செயல் சற்று நெருடலாக தோன்ற, சற்று சிந்தித்த பின்னரே அதன் காரணத்தை அறிந்து கொண்டேன்.
வழிகாட்ட வந்தவர்கள் யார்?
இது 2006ம் ஆண்டு நடந்தது. அப்போது நான் தற்காலிகமாக வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில், நிர்வாகம் மாறிவிட்ட காரணத்தினால் நான் உட்பட சிலரை வேலையை விட்டு அனுப்ப திட்டமிட்டு கொண்டிருந்தனர். எனக்கு வேறு வழி தெரியவில்லை. எங்கு சென்று வேலை தேடுவது என்பதும் புரியவில்லை. பெரும் மன அழுத்தத்தில் சிக்கித் தவித்தேன். அப்போது என்னுடன் பணிபுரிந்த நண்பன் ஒருவன் (நன்றி திரு. சீனிவாசன்) சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்திற்கு அதிக ஆட்கள் தேவைப்படுவதால், அவர்கள் திருநெல்வேலியில் நேர்காணல் வைத்திருக்கின்றனர் என்றும் அங்கு சென்றால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று வழிகாட்டினார். வேலை கிடைக்குமா என்பது தெரியவில்லை ஆனால் நிச்சயம் மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஒரு வாய்ப்பு என எண்ணிக்கொண்டு தன்னந்தனியாக திருநெல்வேலிக்கு ஒரு பயணம் மேற்கொண்டேன்.
அங்கு தங்கியிருந்த போது திருநெல்வேலியில் பிரபலமான நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்று அங்கு காந்திமதி அம்மை உடனுறை நெல்லையப்பரை தரிசனம் செய்தேன். பொதுவாக எந்த கோயிலுக்குச் சென்றாலும் என்னிடம் வேண்டுதல் ஏதும் இருப்பதில்லை. ஆனால் அன்று மட்டும் ஏனோ வேலை கிடைத்தவுடன் மீண்டும் வந்து அவரை தரிசிப்பதாக வேண்டிக் கொண்டேன்.
நண்பர்கள் சிலர் உதவியால் வேலையும் கிடைத்தது. எனது வாழ்வும் மாறியது. வேலை கிடைத்த மறுநாள் ஒரு நாள் விடுமுறை கிடைக்க, திருநெல்வேலியில் சுற்றுவட்டார இடங்களில் ஏதேனும் ஒன்றை பார்க்கும் நோக்குடன் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றேன். அங்கிருந்து அருகில் உள்ள ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளை நோட்டம் விட்டபோது குற்றாலம் மற்றும் பாபநாசம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளை கண்டேன். இரண்டு இடங்களும் திருநெல்வேலியிலிருந்து கிட்டத்தட்ட சமமான தூரம்தான் என்ற போதிலும் குற்றாலம் பிரபலமான இடம் என்பதால் அங்கு கூட்டம் அதிகம் இருக்கும் என்ற எண்ணி அதை தவிர்த்து பாபநாசத்தை தேர்வு செய்தேன். மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் போது மீண்டும் முயற்சித்து குற்றாலம் செல்லலாம் என்ற எண்ணத்துடன்...
வாழ்வில் முதன்முதலில் தன்னந்தனியே மேற்கொண்ட அற்புத பயணம் அது. மழைச்சாரலில் நனைந்தபடி யாரும் தெரியாத ஊரில் பாபநாசம் மலைக்கு மேலே சென்று காரையார் அணையையும், அணை முழுதும் நீரால் நிறைந்த அப்பொன்னாளில் படகில் பயணம் செய்து ஆர்ப்பரித்து கொட்டிய பாணதீர்த்த அருவியையும் தரிசனம் செய்தது இப்பிறவியில் மட்டுமல்ல, இன்னும் பல பிறவிகள் எடுப்பினும் மறக்க முடியாத ஓர் உன்னத அனுபவம்.
ஆண்டுகள் பல கழிந்தன. அதன்பின் மீண்டும் நெல்லையப்பரை தரிசிக்கவோ அல்லது குற்றாலம் செல்லவோ நான் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. அந்த வேண்டுதலும் என் நினைவில் இல்லை. ஆம்! காலப்போக்கில் வழக்கமான மனித இயல்பின் படி அதை மறந்தும் போனேன். ஆனால் நான் மனதில் எண்ணிய அந்த வேண்டுதலை நிறைவேற்றவே அந்த இறைவன் இப்படி ஒரு நாடகம் நடத்தி, எனக்கு வழிகாட்டினார் என்பதை அறிந்து கொண்டேன். நான் மறந்தாலும் அவரே அம்மை-அப்பராக (வழியில் சந்தித்த) தம்பதி வடிவில் மலையில் இருந்து இறங்கி வந்து வழிகாட்டியது மட்டுமின்றி திருநெல்வேலியில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மையாக தரிசனம் தந்து, கொஞ்சம் நீர் விழும் போதே எப்போதும் கூட்டமாக இருக்கும் குற்றாலத்தில், ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் மணிக்கணக்கில் தன்னந்தனியாக நீராட வைத்த அவர்களின் கருணையை மனமாற உணர்ந்து நன்றி கூறினேன்.
மூன்றாம் முயற்சி (2016)
இம்முறை பழைய வேண்டுதல்கள் ஏதும் பாக்கியில்லை என்பதால் சற்று உறுதியாகவே அடியெடுத்து வைத்தேன். மேலும் சதுரகிரி பயணத்திற்கு சில நாட்கள் முன்பு வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று வந்ததும், அங்கு உடன் வந்த நண்பர்கள் எல்லாரும் திணறிய நிலையில், நான் மட்டுமே சற்று எளிதாக அந்த ஓங்கி உயர்ந்த தென் கயிலாய உச்சியை அடைந்ததும் எனது தன்னம்பிக்கையை கூட்டியது. மேலும் நான் கேள்விப்பட்ட வரையில் பருவதமலை, வெள்ளியங்கிரி அளவுக்கு சதுரகிரி கடினமான ஒன்றல்ல என்பதும் எனது உற்சாகத்தை கூட்டியது.
பயண நாளும் வந்தது. முதன்முதலில் திட்டமிட்டபடியே நண்பர்கள் புடைசூழ பயணத்தை ஆரம்பித்தேன். இம்முறை மழை அச்சம் ஏதுமில்லாததால் வனத்துறையின் அனுமதியும் எளிதில் கிடைத்தது. நல்ல உடல் உறுதியுடனும், அளவுகடந்த தன்னம்பிக்கையுடனும், பொங்கிப் பெருகிய உற்சாகத்துடனும் மலையேற ஆரம்பித்தேன். ஆனால் எனது அந்த உற்சாகம் வெகுநேரம் நீடிக்கவில்லை.
ஆம்! மலையேற்றத்தில் ஓரளவு அனுபவம் இருந்தும், உடல்நிலையும் நன்றாக இருந்தும் என்னால் எனது வழக்கமான வேகத்தில் ஏற முடியாமல் மிகவும் திணறி போனேன். வெகுநாள் கழித்து மலைக்கு வந்த மற்றும் அவ்வளவு அனுபவம் இல்லாத நண்பர்கள் எல்லாம் வேகவேகமாக எளிதாக மலையேற, எனக்கு மட்டும் மூச்சு முட்டியது. அதையும் மீறி நான் வேகமாக செல்ல முயற்சித்த போதேல்லாம், என்னை ஏதோ ஒரு சக்தி தடுத்து நிறுத்துவது போல தோன்றியது. ஒரு முறை, இரு முறையல்ல... பலமுறை முயன்றும் தோற்று போன பின் கிட்டதட்ட பத்திற்கும் மேற்பட்ட நண்பர்களுடன் பயணத்தை துவங்கிய நான் கடைசி ஆளாகவே மலையேறி அந்த இறைவனை தரிசிக்க முடிந்தது. அவரை பார்த்த கணத்திலே தான் வழியில் ஏற்பட்ட சோதனைக்கான காரணம் புரிந்தது.
வாக்கு பலித்தது
சதுரகிரி பயணம் உறுதியானதும், நண்பர்களுடன் உரையாடும் போது அதற்கு சில நாட்கள் முன்பு சென்றுவந்த வெள்ளியங்கிரி பயணம் பற்றிய பேச்சு வந்தது. அப்போது வெள்ளியங்கிரி பயணத்தில் உடன்வந்த நண்பர்களை விட்டுவிட்டு நான் மட்டும் வேகமாக முதலில் மலையேறியதாக குறைபட்டு கொண்டான் நண்பன் ஒருவன். அதற்கு பதிலுரைக்கும் போது, வெள்ளியங்கிரி அளவுக்கு சதுரகிரி மலை அவ்வளவு கடினமாக இருக்காது என்றும், அதேப் போல என்ன ஆனாலும் அனைவருக்கும் பிறகு நான்தான் கடைசியாக வருவேன் என விளையாட்டாக ஆறுதல் கூறினேன். அப்பேச்சை அத்தோடு மறந்தும் போனேன்.
ஆம்! என்னையறியாமல் நான் உதிர்த்த அந்த வார்த்தைகளை மெய்யாக்கவே அந்த இறைவன் அத்தகைய சோதனையை அளித்தார் என்பதையும், நாம் மனதில் நினைக்கும் சிந்தனை, உதட்டில் உதிர்க்கும் சொல் என அனைத்தையும் தான் கவனித்து கொண்டிருக்கிறேன் என்பதை மனமார உணர்த்தவே இத்தகைய அனுபவத்தை எனக்கு அந்த சதுரகிரி மகாலிங்கேஸ்வரர் அளித்தார் என புரிந்துகொண்டேன்.
அதுமட்டுமின்றி சதுரகிரி இறைவனை தரிசித்த பின்னர் இம்முறை சீசன் நேரம் என்பதால் உடன் வந்த நண்பர்களை எல்லாம் குற்றாலம் அழைத்துச் சென்றேன். ஆனால் என்ன ஆச்சரியம்! அன்று சீசன் இல்லாத நேரத்திலும் ஆர்ப்பரித்து கொட்டிய அந்த அற்புத அருவியில் இன்று நீரோட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது மட்டுமன்றி அதில் குளிக்க மிக நீண்ட வரிசையும் இருந்தது. அதை கண்ட போதே கடந்த முயற்சியில் என்னை அங்கு வரவழைத்து, எனக்கென தனித்த அனுபவம் அளித்த அந்த இறைவன் நிகழ்த்திய திருவிளையாடலும் புரிந்தது.
சதுரகிரி - நாம் மனதில் நினைக்கும், வாயில் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் பலிக்கும் இடம். நேர்மறை எண்ணத்துடன் செல்வோம். இறையருள் பெறுவோம்.
அடுத்த பதிவு - சதுரகிரி புகைப்படங்கள்
Arumai
ReplyDelete