குடுமிசாமியின் தீர்த்தங்கள்...3

முந்தைய பகுதிகளை படிக்க...

  1. முன்னுரை,  முதல் பயணம்
  2. குடிமல்லம், பொன்முகலி தீர்த்தம்


குடுமிசாமியின் தரிசனம்



    பொன்முகலி கரையில் புயலென துவங்கிய திண்ணனின் ஓட்டம், மலையடிவாரத்தில் உள்ள சோலையின் நடுவே சிவலிங்கத்தை கண்டதும் நின்றது. தான் குடிமல்லத்தில் கண்ட அதே தூண் போன்ற, ஆனால் சற்று சிறிய "குடுமி சாமி". இங்கு அதனுள் தன்னை போன்ற உருவம் இல்லை என்பதைக் கண்ட அவன், இதுவே அவரின் உண்மையான சொரூபம் என நினைத்தான். ஆற்றங்கரையில் இருந்து ஓடி வந்த அவனது அடிமனதில் தற்போது குடுமி சாமியை கண்டதும், தன்னையறியாமல் அன்பெனும் ஆறு பெருக்கெடுத்து ஓடியது. அன்பு மிகுதியால் லிங்கத்தை ஆலிங்கனம் (கட்டித் தழுவுதல்) செய்தான். மனதில் ஒரு இனம் புரியா உணர்ச்சி பொங்கியது. காரணம் ஏதும் தெரியாமலே கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது. உணர்ச்சிப் பெருக்கால் மூர்ச்சித்து போனான்...


திண்ணனை தேடி வந்த நாணனும், காடனும் அவன் குடுமி சாமி சன்னிதியில் மூர்ச்சித்து விழுந்து கிடப்பதைக் கண்டதும் துணுக்குற்றனர். வேண்டிய முதலுதவிகளை செய்து தனது நண்பனை எழுப்பினர். மயக்கத்திலிருந்து விடுபட்ட திண்ணன், நண்பர்களின் முகத்தை சிறிதும் ஏறெடுத்துப் பார்க்காமல் குடுமி சாமியை நோக்கியவாறே இருந்தான். நண்பர்கள் பல கேள்விகள் கேட்டும், விடையேதும் அவனிடம் இல்லை. அப்போது அவனது மனதில் இருந்த சிந்தனை ஒன்றே ஒன்று தான். இனி தன் வாழ்க்கை முழுவதும் இந்த குடுமி சாமியுடன் மட்டுமே என்பதே அது. ஆம்! தன்னையறியாமலே அவரிடம் சரணாகதி அடைந்தான்.


நீண்ட நேர வற்புறுத்தலுக்குப் பிறகும் அங்கிருந்து புறப்பட மறுத்த திண்ணன், தனது குடுமி சாமி இங்கு தனித்து இருப்பதாகவும், அவருக்கு பாதுகாப்பாய் தான் இங்கேயே இருக்கப் போவதாகவும் உறுதிபட கூறினான். முதலில் அவனுக்கு பித்து பிடித்ததாக எண்ணிய நண்பர்கள், அவனது குரலில் இருந்த தெளிவையும், கண்களில் இருந்த உறுதியையும் கண்டு அஞ்சினர். பின்னர் வேறு வழியின்றி தங்கள் பிரிய நண்பனை அங்கேயே விட்டுவிட்டு, அவனின் தந்தையும் தங்களது தலைவருமான நாகனுக்கு தகவல் தெரிவிக்க எண்ணி அங்கிருந்து கண்ணீருடன் புறப்பட்டனர்...


நண்பர்கள் புறப்பட்டதும், சிந்தனை ஏதுமின்றி குடுமி சாமியின் அருகிலேயே நீண்ட நேரம் அமர்ந்து இருந்தான். மாலையில் கதிரவன் மறைந்ததும் துவங்கிய இரவு வேளையில் அருகில் உள்ள காடு மற்றும் மலைகளில் இருந்து பல்வேறு விலங்குகளின் பயங்கர உறுமல் சப்தங்களை கேட்க துவங்கியது. சத்தங்களை கேட்டதும், அவன் முகத்தில் புன்னகை தவழ துவங்கியது. ஆம்! இனி இந்த பயங்கர காட்டில் குடுமி சாமியை காப்பாற்ற அவருக்கு துணையாக தானும், தனக்கு துணையாக அவரும் உள்ளார் என்ற எண்ணமே அதற்குக் காரணம்...



பாரத்வாஜ தீர்த்தம்


    இரவு முழுவதும் தூங்காமல் தனது குடுமி சாமிக்கு துணையாய் நின்ற திண்ணனுக்கு மறுநாள் அதிகாலையிலேயே பசி வயிற்றை கிள்ளியது என்றபோதும் அவரை விட்டுப் பிரிய மனம் இல்லாததால் அங்கேயே இருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு தன்னுடன் இருக்கும் குடுமி சாமிக்கும் தன்னைப் போலவே பசிக்கும் என்ற எண்ணம் தோன்றியதால் அவருக்கு தேவையான உணவை தருவது தனது முக்கிய கடமை என எண்ணி உணவைத் தேடி புறப்பட்டான்.


தான் கடந்து வந்த பொன்முகலி ஆற்றங்கரையோரம் பழங்கள் தரும் மரங்கள் எதையும் காணாததால், விலங்குகளை வேட்டையாடி தனது குடுமி சாமியின் பசியை ஆற்ற எண்ணி அருகிலுள்ள காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். சுமார் அரை நாழிகை நடை பயணத்திற்குப் பிறகு மலையோரம், மிகப்பெரிய குளம் ஒன்றை கண்டான். இம்மலைச்சரிவில் இவ்வளவு பெரிய குளமா? என ஆச்சரியம் அடைந்த அவனது மனம் ஆனந்தக் கூத்தாட துவங்கியது. ஆம்! தனது குடுமி சாமிக்கு தேவையான மீன்கள் அக்குளத்தில் கிடைக்கும் என்ற எண்ணமே அதற்கு காரணம்...


* பாரத்வாஜ தீர்த்தம் என்று அழைக்கப்படும் மிகப்பெரிய குளம் திருக்காளத்தி கோவிலின் அருகில் சுமார் 10 நிமிட நடை பயணத்தில், லோபாவி என்ற இடத்தில் உள்ளது. மகரிஷி பரத்வாஜரால் உருவாக்கப்பட்ட இக்குளம் திருக்காளத்தியில் முக்தி தரும் தீர்த்தங்களில் ஒன்று. இத்தீர்த்தம் இன்றும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



பாரத்வாஜ தீர்த்தம்


மேற்கொண்டு எதுவும் யோசிக்காமல் திருக்காளத்தியில் முக்திதரும் தீர்த்தங்களில ஒன்றான பாரத்வாஜ தீர்த்தம் எனப்படும் குளத்தில் அதன் பெயர் தெரியாமலேயே இறங்கி குளிக்க ஆரம்பித்தான். குளிக்க குளிக்க அவன் அறியாமலே அத்தீர்த்தம் அவன் உடலை மட்டுமல்லாமல், மனதையும் சுத்தப்படுத்தி நல்வழிப்படுத்தியது. பிறகு தனது இடுப்பு துணியை கழட்டி அதன் மூலம் தனது குடுமி சாமிக்கு தேவையான மீன்களைப் பிடிக்க முயற்சித்தான். மீன் பிடிப்பதில் முன் அனுபவம் இருந்தும், குளத்தில் மீன்கள் நிறைய இருந்தும், வெகுநேரம் முயற்சித்தும் அவன் துணியில் மீன்கள் எதுவும் சிக்காததன் காரணம் அவனுக்கு புலப்படவில்லை. சோர்வடைந்த அவன் எத்தேச்சையாக குளத்தின் கரையை பார்க்க, அங்கு அவனையேப் பார்த்தபடி நின்றிருந்தது முன்தினம் பொன்முகலி ஆற்றங்கரையில் மாயமாய் மறைந்த கொழுத்த பன்றி. அப்போது அவன் மனதில் மின்னல் போல ஒரு எண்ணம் தோன்றியது.


எப்பாடுபட்டாவது அப்பன்றியைப் பிடித்து தனது பிரியமான குடுமி சாமிக்கு விருந்தாக்க வேண்டும் என்பதே அது...


அடுத்த பகுதியை படிக்க...

Comments

Post a Comment