முந்தைய பகுதிகளை படிக்க...
குடிமல்லம்
வேட்டைக்கு கிளம்பிய திண்ணனும் அவனது நண்பர்களும் ஏர்பேடு என்னும் அடர்ந்த காட்டுப் பகுதியை நோக்கி செல்லும் வழியில், ஒரு நாள் நடை பயணத்திற்குப் பிறகு குடிமல்லம் என்ற கிராமத்தை அடைந்தனர். குடிமல்லத்தில் உலகின் மிகப் பழமையான பரசுராமேஸ்வரர் ஆலயம் உள்ளது. அழகிய வயல்வெளியின் நடுவில் உள்ள அந்த ஆலயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் ஒருங்கிணைந்த வடிவமாக ஒரு சிவலிங்கம் உள்ளது. பல்வேறு உயிர்களை கொன்ற பரசுராமர் பிரம்மஹத்தி தோஷத்தில் பீடிக்கப்பட்டதால், பிரம்மா அவரை பிசாசு வடிவமெடுத்து துரத்தும் போது, இங்கு உள்ள லிங்கத்தில் அவர் ஐக்கியம் ஆனதாக இக்கோவிலுக்கு ஒரு வரலாறு உண்டு. சப்த சிரஞ்சீவிகளில் ஒருவரான பரசுராமர், சிவலிங்கத்தில் ஐக்கியமானதால் பரசுராமேஸ்வரர் ஆலயம் என இக்கோவில் அழைக்கப்படுகிறது. வேட்டைக்குச் செல்லும் வழியில் இத்தலத்தை வழிபடுமாறு திண்ணனின் தந்தை கூறியிருந்ததால் மூவரும் அக்கோவிலிலை நோக்கி நடந்தனர்.
திண்ணன் வாழ்ந்த கிராமத்தில் கோயில் எதுவும் இல்லை. ஒரு பெரிய மரத்தடியில் அவர்களின் குல தெய்வமான முருகப்பெருமானின் வேல் மட்டுமே நடப்பட்டிருக்கும். வேடுவர் குல முறைப்படி பூஜை அனைத்தும் அந்த வேலுக்கே செய்யப்படும். தனது கிராமத்தில் தாண்டி எங்கும் செல்லாத காரணத்தினால் திண்ணன் இதுவரை கோயில்களுக்கு சென்றது இல்லை. இறைவனின் சிலைகளையும் கண்டதில்லை. முதன்முறையாக கோயிலுக்கு அருகில் செல்ல செல்ல திண்ணனின் உடலில் சொல்லிலடங்கா ஒருவித பரவசம் படர்ந்தது. மனதில் ஒருவித குதூகலம் பிறந்தது. ஆனால் அந்த குதூகலம் வெகு நேரம் நீடிக்கவில்லை. அங்கு வெட்டவெளியில் வயல்வெளி நடுவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இறைவனின் திரு உருவத்தை பார்த்த திண்ணனின் சப்த நாடியும் ஒருகணம் அடங்கிப் போனது...
ஆம்! அவன் எதிரில் கண்டது அவனது உருவத்தையே! தூண் போன்ற ஒரு பாறையில், பிசாசு போன்ற தடித்த மனிதனின் உருவத்தின் தோள் மேல் நின்று கொண்டிருப்பது போல் செதுக்கப்பட்ட மனிதனின்* சிலை, ஏற்கனவே பல முறை தண்ணீரில் கண்ட தனது உருவத்தை போல அச்சு அசலாக இருந்ததை பார்க்கையில் ஒரு கணம் உறைந்து போனான். அச்சிலையில் தினவெடுத்த தோள்கள், உறுதியான கரங்கள், தான் மரங்களை வெட்ட பயன்படும் அதே கோடாலி என அந்த உருவம், தனது உருவத்தை அப்படியே பிரதிபலித்ததால் திக்குமுக்காடிப் போனான்.
யார் தனது உருவத்தை இப்படி இங்கு செதுக்கி இருப்பார்? தனது உருவத்தை தாங்கி நிற்கும் இந்த தூண் போன்ற கல்லின் பெயர் என்ன? அது ஏன் இப்படி ஒரு வடிவம் கொண்டுள்ளது? அதன் நெற்றியில் காணப்படும் மூன்று கோடுகளின் அர்த்தம் என்ன? போன்ற பல கேள்விகள் அவன் மனதில் எழுந்தன. இதுவரை தனது கிராமத்திலிருந்து எங்கும் செல்லாததால் இதற்கு முன் அவன் சிவலிங்கத்தை கண்டதில்லை என்பதால், இதுகுறித்து தனது உடன் வந்த தனது நண்பர்களிடம் கேட்டபோது தூண் போன்ற அந்த உருவத்திற்கு பெயர் "லிங்கம்" என்றும் அது "குடுமி சாமி" என்றழைக்கப்படும் இறைவனின் உருவம் என்று கூறினர்.
"குடுமி சாமி"
"குடுமி சாமி"
"குடுமி சாமி"
அப்பெயரும் அதன் உருவமும் அவன் மனதில் ஆழப் பதிந்து விட்டது...
* குடிமல்லம் சிவலிங்கத்தில் பகவான் பரசுராமரின் திருவுருவம் காணப்படுகிறது.
பொன்முகலி தீர்த்தம்
"குடுமி சாமி"யின் அறிமுகம் கிடைத்தபின் மேற்கொண்டு செல்ல மனம் விரும்பாவிட்டாலும் தான் வந்த வேட்டை காரியம் முடியாததால் அடர்ந்த காட்டை நோக்கி தன் நண்பர்களுடன் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான் திண்ணன். காட்டை அடைந்ததும் தனது வேட்டையை தொடங்கினான். அக்கால வேடுவர்களுக்கு மிகவும் பிடித்தது பன்றி கறி. அதிலும் கொழுத்த பன்றியை வேட்டையாடுவது என்பது அவர்களுக்குப் பெருமை தரும் செயலாகும்.
முதலில் முயல்கள் போன்ற சிறு சிறு விலங்குகளை பிடிக்கத் துவங்கிய அவர்கள் ஒரு கொழுத்த பன்றியை பார்த்ததும் அதை துரத்தத் துவங்கினர். பன்றியும் அவர்களுக்கு போக்கு காட்டிவிட்டு வேகமாக காட்டுக்குள் ஓட துவங்கியது. தனது திறமையை நிரூபிக்கும் முதல் வாய்ப்பு என்பதால் திண்ணனும் விடாமல் அதை துரத்தினான். பன்றியும் ஓட; அவர்களும் துரத்த, இந்த விளையாட்டு நீண்ட நேரம் தொடர்ந்தது. சில மணி நேரங்களுக்கு பிறகு காட்டை விட்டு வெளியேறிய பன்றி காட்டின் ஓரம் உள்ள ஒரு ஆற்றை நோக்கி ஓடத் துவங்கியது. எப்படியும் பிடித்து விடலாம் என்ற எண்ணத்துடன் மூன்று திசைகளிலும் நமது வேடுவர்கள் அதை சுற்றிவளைத்த நிலையில் அவர்கள் துரத்தி வந்த பன்றி மாயமாய் மறைந்து போனது. திண்ணனும் அவனது நண்பர்களும் திடுக்கிட்டுப் போயினர்...
பின்பு சுதாரித்த திண்ணனும் அவனது நண்பர்களும் நீண்ட தூரம் துரத்தி வந்ததால் ஏற்பட்ட களைப்பாலும், பொழுது நன்றாக இருட்டி விட்டதாலும் அந்த ஆற்றங்கரை ஓரமாகவே தங்கினர். காலையில் குடிமல்லத்தின் கண்ட தனது உருவத்தையும், மாயமாய் மறைந்த பன்றியை பற்றி சிந்தித்து கொண்டிருந்ததால் திண்ணனுக்கு சரியான உறக்கம் வரவில்லை.
பொழுது விடிந்ததும் சற்று தாமதமாக எழுந்த அவர்கள், எதிரே இருந்த ஆற்றில் குளித்துவிட்டு தாங்கள் ஏற்கனவே பிடித்து வந்த சிறுசிறு விலங்குகளின் மாமிசத்தை புசிக்க எண்ணினர். அழகான தோற்றம் கொண்ட அந்த ஆறு, தூரத்திலுள்ள ஏழு மலைகள் கொண்ட பெருமாள் மலையிலிருந்து (திருமலை திருப்பதி) வருவதாக திண்ணனின் நண்பன் நாணன் அவனிடம் கூறினான். மலை அடிவாரத்தில் பாய்ந்து கொண்டிருக்கும் அந்த நதியின் அற்புத அழகில் மனதை பறிகொடுத்த திண்ணன் அதில் இறங்கி நீராட துவங்கினான்.
அகத்திய மாமுனியின் வேண்டுதலால், விநாயகப் பெருமானின் தந்தத்தால் கீரி, திருமலையில் உருவாக்கப்பட்டு, திருக்காளத்தி வழியாக பாய்ந்து நெல்லூர் அருகே வங்கக்கடலில் கலக்கும் சொர்ணமுகி ஆறு எனப்படும் பொன்முகலி தீர்த்தம், திருக்காளத்தியில் உள்ள முக்திதரும் தீர்த்தங்களில் முதன்மையானது. இதுவே இறைவனின் நெற்றிக் கண்ணால் பாதிக்கப்பட்ட நக்கீரரின் நோய் தீர்க்க உதவிய புண்ணிய தீர்த்தமாகும். அப்படிப்பட்ட புகழ்பெற்ற புண்ணிய நதி, திண்ணன் தன்னுள் மூழ்கி எழுந்ததும் அவனது பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களை கரைக்க துவங்கியது.
மலைக்குப் மறுபக்கம் கீழ் வானில் சூரியன் உயர்ந்து கொண்டிருந்த அந்நேரத்தில், பொன்முகலி ஆற்றில் குளித்த திண்ணன், முதன்முறை முங்கியபோது வழக்கம்போல நீரில் தெரிந்த தனது உருவத்தை ரசித்தான், இரண்டாம் முறை முங்கிய போது அதே நீரில் தெரிந்த பிரம்மாண்ட மலையின் நிழலை கண்டு பிரமித்துப் போனான். மூன்றாம் முறை முங்கிய போது மலையின் நிழலில் தனது உருவம் கலந்து மறைந்து போனது போல ஒரு காட்சி அவன் கண்களுக்கு தெரிந்தது. அக்காட்சி அவன் ஏற்கனவே குடிமல்லத்தில் கண்ட லிங்கத்தில் ஐக்கியமானது போல் தோன்றிய தனது உருவத்தை போல தோற்றமளித்தது. அப்போது அவனது உடல் சிலிர்த்து, மனதிற்குள் ஒரு புதிய சக்தி பாய்ந்தது போல் தோன்றியது.
ஒரு வழியாக நீராடி முடித்ததும் தனது நண்பர்களிடம் எதிரே உள்ள மலையை பற்றி வினவ தொடங்கினான். அவனது நண்பர்களும் அம்மலையின் பெயர் திருக்காளத்தி மலை என்றும் அங்கு நாம் ஏற்கனவே கண்ட குடுமி சாமியின் உருவம் உள்ளது என்றும் கூறினர்.
"குடுமி சாமி"
பெயரைக் கேட்டதும் மலையை நோக்கி புயலெனப் பாய்ந்து ஓடத் தொடங்கினான் திண்ணன்...
அடுத்த பகுதியை படிக்க...
Very interesting...
ReplyDeleteVery Interesting
ReplyDeleteSo intriguing... Info about Gudimallam and connection with Bhakta Kanappa is truly enlightening.
ReplyDeleteWonderful research.