குடுமிசாமியின் தீர்த்தங்கள்...1

முன்னுரை


    கண்கண்ட தெய்வமான ஈசனுக்கே தனது இரு கண்களை தானமாக வழங்கிய கண்ணப்ப நாயனாரின் வரலாறு நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆறே நாட்களில் முக்தி அடைந்த அற்புத ஆத்மா அவர்.  யானைக்கும்,  பாம்புக்கும், ஏன் ஒரு சின்னஞ்சிறிய சிலந்திக்கு கூட முக்தியைத் தந்த இறைவன் ஏன் அந்த ஆறு நாட்கள் அவரை காக்க வைத்தார்? அந்த ஆறு நாட்களில் அவருக்கு எவ்விதமான அனுபவங்களைத் தந்திருப்பார் என்ற கேள்விகளே இக்கதைக்கான கருவாகும்.



ஸ்ரீ - காள - ஹஸ்தி


நமது இந்து சமயத்தில் முக்தி பெற நான்கு வழிகள் உண்டு என்பர். அவை சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம் ஆகும். அதாவது நல்லொழுக்கம், நற்செயல், பல்லாண்டு கால தவம் மற்றும் அற்புத ஞானம் ஆகியவையே இந்த நான்கு வழிகள். ஆனால் இவ்வழிகளை பற்றி அறியாத ஒருவரும் முக்தி பெற மேலும் ஒரு வழி உண்டு. அதுவே சரணாகதி. 


ஆம்! இறைவனிடம் மனப்பூர்வமாக சரணடைந்த ஒருவர் மேற்கண்ட நான்கு வழிகளை பின்பற்றாவிட்டாலும் இறைவன் அவருக்கு முக்தி அளிப்பது நிச்சயம். மேலும் தன்னிடம் சரணாகதி அடைந்த ஒருவரின் முக்திக்கு உண்டான முயற்சிகளையும் இறைவனே மேற்கொள்வார் என்பதும் நிதர்சனமான உண்மை. அப்படி தன்னிடம் சரணடைந்த ஆத்மாவிற்கு முக்தி அளிக்க இறைவன் காட்டிய வழியே இக்கதை.


காஞ்சியில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பது போல் திருக்காளத்தியில் ஒருவர் நுழைந்தால் (பிரவேசித்தால்) முக்தி என்பது பெரியோர் வாக்கு. பிரவேசித்தல் என்பதற்கு மனப்பூர்வமாக நுழைதல் என்று பொருள். அதாவது திருக்காளத்தியில் நுழைந்த ஒருவர் அங்குள்ள கோவில், மலைகள், நீர்நிலைகள் போன்ற மாயத் தோற்றங்களை கடந்து அவற்றின் உண்மையான உருவான இறைவனை கண்டால் அவருக்கு முக்தி நிச்சயம் என்பதே இதன் முழுமையான பொருளாகும்.


வேடுவ குலத்தில் பிறந்த, உயிர்களைக் கொல்வதையே தொழிலாகக் கொண்ட, தவம் மற்றும் ஞானம் என்றால் என்ன என்பதே அறியாத திண்ணன், வெறும் ஆறே நாட்களில் கண்ணப்ப நாயனாராக உருமாற உதவிய திருத்தலம் திருக்காளத்தி ஆகும். "கயிலை பாதி; காளத்தி பாதி" என்று தமிழ் புலவர் நக்கீரரால் பாடல் பெற்ற திருக்காளத்தியில் கண்ணப்ப நாயனாருக்கு முக்தியளிக்க இறைவன் பயன்படுத்திய கருவிகள் அங்குள்ள தீர்த்தங்களே...




ஆம்! திருக்காளத்தியில் மொத்தம் இருபத்தி ஏழு தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் இருபத்தி ஒன்று ஞானத்தை அளிக்கக் கூடிய (ஞான பிரதால) தீர்த்தங்கள் எனவும், மீதமுள்ள ஆறு முக்தியை அளிக்க கூடிய (முக்தி பிரதால) தீர்த்தங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இத்தகைய முக்தி தரும் தீர்த்தங்களின் வழியாகவே இறைவன், திண்ணன் என்று அழைக்கப்பட்ட வேடுவனை, தனது பூர்வஜென்ம பாவ-புண்ணியங்களை துறக்க வைத்து, தன்னுடன் இரண்டறக் கலக்க வைத்து கண்ணப்பர் என பெயரும் தந்து, முக்தியும் அளித்திருப்பார் என்பது வெறும் கற்பனையல்ல... எனது மனதால் உணர்ந்த உண்மையும் கூட...



முதல் பயணம்



    திருக்காளத்திக்கு தெற்கே சுமார் 30 மைல் தொலைவிலுள்ள கைலாசகோனா* அருகிலுள்ள மலையடிவார கிராமத்தில் வேடுவ இனத்தைச் சேர்ந்த மக்கள் பெருந்திரளாக உற்சாகத்துடன் கூடியுள்ளனர். அவர்கள் கண்களில் ஒருவித ஆர்வமும், பெருமையும் நிரம்பியிருக்கின்றன. அவர்களின் தலைவனான நாகன் அவர்கள் முன் நின்று கொண்டிருக்கிறார். குறிஞ்சி கடவுளும், அவர்களின் குல தெய்வமுமான முருகக்கடவுளின் வேல் ஒன்று நன்கு அலங்கரிக்கப்பட்டு அவரது கையில் பிடிக்கப்பட்டுள்ளது‌. அது நாகனின் அருகில் நின்று கொண்டிருக்கும் அவர்களின் எதிர்கால தலைவனான திண்ணனிடம் இன்னும் சில நிமிடங்களில் ஒப்படைக்கப்பட உள்ளது.


திண்ணன், வேடர்குல தலைவனான நாகனின் ஒரே மகன். நாகனின் கண்களில் தனது மகனின் எதிர்காலத்தை எண்ணி பெருமிதம் நிரம்பி இருந்தாலும், பல்லாண்டு கால ஏக்கத்திற்கு பிறகு முருகக் கடவுளின் அருளால் பிறந்தவன் என்பதால் அவனை பொத்தி பொத்தி வளர்த்திருந்தார். இதனால் அவரது அடி மனதில் ஒருவித இனம் புரியாத தயக்கம் குடி கொண்டுள்ளது. பிறக்கும் போதே சற்று தடித்த (திண்ணிய) தோள்களை கொண்டிருந்ததால், திண்ணன் என அழைக்கப்பட்ட அவரது உயிருக்கு உயிரான மகன், அகவை 16 முடிந்ததால் இன்று கன்னி (முதல்) வேட்டைக்கு புறப்படுகிறான். இதற்காகவே இந்த கூட்டமும் உற்சாகமும். நாகனும் அவரது மனைவியும் திண்ணனின் நெற்றியில் வெற்றி திலகமிட்டு பூஜிக்கப்பட்ட வேலை அவனிடம் ஒப்படைக்கின்றனர். கூட்டம் "வெற்றிவேல்! வீரவேல்!" என முழக்கமிட்டு ஆர்ப்பரிக்கிறது. திண்ணனும் அவ்வேலை வாங்கி கண்ணில் ஒற்றிக் கொள்கிறான்.


திண்ணனின் முகத்திலும் ஆனந்தம் பொங்கி வழிகிறது. இதுவரை அவன் தனது ஊரின் எல்லையை தாண்டியது இல்லை. அதிகபட்சமாக கிராமத்தின் எல்லையோரம் உள்ள காட்டுப் பகுதியில் விறகு வெட்ட தனது நண்பர்களுடன் ஓரிரு முறை சென்றிருக்கிறான். வேடுவர் குலத்தில் பிறந்து வில்லேந்தி வேட்டையாடமல், இப்படி கோடாலி ஏந்தி மரத்தை வெட்டுவது அவனுக்கு பிடிப்பதில்லை என்ற போதும், அவனது தந்தையின் கட்டுப்பாட்டால் இதுவரை தனது கிராமத்தை விட்டு வெளியே செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. முதன் முதலில் அவன் கிராமத்தை விட்டு வெகுதூரம் செல்லப் போகிறான் என்ற எண்ணமே அவனுக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது.


சுய தரிசனம்


பொதுவாக குளங்களில் குளிக்கும் போதும், மீன் பிடிக்க செல்லும் போதும் நீரில் தெரியும் தனது உருவத்தை சுய தரிசனம் செய்வது, சிறு வயதிலிருந்தே அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். திடகாத்திரமான அவனது உடலின் மீது அவனுக்கு ஒரு பெருமை உண்டு. கிராமத்தை விட்டு எங்கும் செல்லாத அவனுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு இது. கிடைத்த இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி நல்ல கொழுத்த மிருகத்தை வேட்டையாடி தனது பெயரை நிலைநாட்ட வேண்டும் என உறுதி பூண்டான். தந்தையிடமும், தாயிடமும் ஆசிபெற்று, ஏற்கனவே பல வேட்டைகளுக்கு சென்று காடுகளைப் பற்றி நன்கறிந்த தனது நண்பர்கள் நாணன் மற்றும் காடனுன் தனது முதல் பயணத்திற்கு புறப்பட்டான்.


அதுவே தனது இறுதி பயணம் என்பதை அறியாமல்...


* பெரும்பாலானோர் கண்ணப்பர் பிறந்த இடம் ஆந்திர மாநிலத்தில் உள்ள உடுப்பூர் என்றும் கூறுவர். 


அடுத்த பகுதியை படிக்க...


Comments

  1. Amazing narration. I was waiting to go through liesurly and did it. Truly you are blessed. There is divinity in your writing. Please continue your great work to inspire people with the gnana blessed by divinity.
    God Bless you.

    ReplyDelete

Post a Comment