முன்னுரை
ஆன்மீக பூமியாம் தமிழ் திருநாட்டில் உள்ள கோவில்கள் எண்ணிலடங்காதவை. குறிப்பாக காஞ்சிபுரம், கும்பகோணம் மற்றும் மதுரை ஆகியவை கோவில்கள் அமைவதற்காகவே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட புண்ணிய நகரங்களாகும். ஆன்மீக பிரியர்களுக்கு இவை அள்ள அள்ள குறையாத அருள் நிறைந்த அட்சய பாத்திரமாக விளங்குகின்றன. அப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தில் நான் பருகிய சில துளி அமிர்தமே இந்த பயணக்கட்டுரை.
பயணத் திட்டம்
பொதுவாக எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் (குறிப்பாக தனியாகச் செல்லும்போது) அவற்றிலுள்ள இறை வடிவங்களையும், கோவிலின் கட்டிட கலையையும், அதன் வரலாற்றையும் முடிந்த அளவு ஆற, அமர நிதானமாக ரசிப்பது எனது வழக்கம். ஏனெனில் அதிக எண்ணிக்கையை விட ஆழ்ந்த அனுபவங்களே முக்கியம் என்பது எனது உறுதியான எண்ணமாகும் ஆனால் திடீரென இன்று (5 டிசம்பர் 2021) என் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறான ஒரு சிந்தனை தோன்றியது. ஒரே நாளில் குறிப்பாக ஒரு சில மணி நேரங்களில் முடிந்த அளவு அதிக கோவில்களுக்கு சென்றால் என்ன? என்பதே அது. சாரல் மழையை ஜன்னலோரத்தில் நின்று நிதானமாக ரசிப்பதில் ஒரு வித சுகம் உண்டு என்றால் கொட்டும் மழையில் குடையின்றி முழுதும் நனைவதிலும் ஒரு வித சுகம் இருக்கவே செய்யும் என்ற சிந்தனை தோன்றியதே அதற்கு காரணம்.
எனவே ஏற்கனவே பலமுறை செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்த, சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சி மாநகரில் உள்ள ஒரு சில கோவில்களை பார்க்க திட்டமிட்டு அதிகாலை 6 மணி அளவில் எனது ஸ்கூட்டரில் (Suzuki Access 125) புறப்பட்டேன். அடிக்கொரு லிங்கம் அண்ணாமலை என்பதுபோல் எந்த திசையில் பார்த்தாலும் கோயில்களால் நிரம்பி வழியும் காஞ்சி மாநகரில் வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஆகியவை மிகப்பெரிய கோயில்கள் ஆகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு நகரமே விஷ்ணு காஞ்சி மற்றும் சிவ காஞ்சி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வரதராஜ பெருமாள் கோவிலுக்கு ஓரிரு முறை சென்று வந்த அனுபவம் இருப்பதால் முதலில் சிவ காஞ்சியை நோக்கி புறப்பட்டேன். நான் வசிக்கும் குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக பயணித்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க காஞ்சி மாநகரை காலை 7.15 மணி அளவில் அடைந்து ஆன்மிக அமுதத்தை பருக தொடங்கினேன்.
முதல் துளி - ஏகாம்பரேஸ்வரர் கோயில்
தொண்டைநாட்டு சிவாலயங்களில் முதன்மையானதும், சிவ காஞ்சியின் பிரதான கோவிலுமான ஏகாம்பரநாதர் என்றழைக்கப்படும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு முதலில் சென்றடைந்தேன்.. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோவிலின் ராஜ கோபுரம் கிபி 1509ம் ஆண்டில் விஜயநகரப் பேரரசரான ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டுள்ளது. 192 அடி உயரம் கொண்ட கோபுரம் ஆண்டுகள் 500 கடந்தும் உறுதியாகவும், நகரத்திற்கு அழகு சேர்க்கும் வகையில் பிரம்மாண்டமாகவும் உள்ளது. கோவிலின் உள்ளே நுழைந்ததும் சன்னிதிக்கு வெளியே இருந்த கரிகால் சோழனின் சிலை என்னை வரவேற்பது போல் ஓர் எண்ணம் தோன்றியது. முற்காலச் சோழர்களில் ஒருவரான இவரின் சிலை இங்கு இருப்பதே கோவிலின் பழமைக்கு சான்றாகும்.
பஞ்ச பூத சிவாலயங்களில் நிலத்திற்கு உண்டான இத்திருத்தலத்தில் மணலால் உருவாகிய சிவலிங்க திருமேனியில் ஏவார்குழலி என்று அழைக்கப்படும் பார்வதி தேவியால் கட்டியணைக்கப்பட்ட சுவடு இன்றும் காணப்படுகிறது என்பது புராண ரீதியான முக்கியத்துவம் வாய்ந்தது. தேவி தழுவியதும் மணலால் உருவாகிய இறைவனின் திரு உருவம் குழைந்ததால், இத்தலத்து இறைவனுக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற பெயரும் உண்டு. தல விருட்சமான மாமரம் 3500 ஆண்டுகள் பழமையானது. சன்னதியின் நுழைவாயிலின் வெளியே உள்ள நீண்ட மண்டபத்தை காணும்போது, எழுத்தாளர் கல்கியின் வரலாற்று புதினமான (எனக்கு மிகவும் பிடித்த) சிவகாமியின் சபதத்தின் இறுதிக் காட்சியில் சிவகாமி தேவி இங்குதான் நடனமாடி இருப்பார் என எண்ண தோன்றியது. அது மட்டுமல்லாமல் என் கண்கள் தன்னையறியாமல் மாமன்னர் நரசிம்மவர்ம பல்லவரை தேடியது...
இரண்டாம் துளி - நிலாதுண்ட பெருமாள்
என்னதான் காஞ்சி மாநகரம் சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் சிவகாஞ்சி நகருக்குள்ளேயே பெருமாள் கோயில்கள் பல உண்டு. குறிப்பாக 108 திவ்ய தேச கோவில்களில் பலவும் இப்பகுதியில் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஏகாம்பரேஸ்வரர் கோயில் வளாகத்திலேயே, மூலவர் சன்னிதிக்கு அருகிலேயே திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நிலாதுண்ட பெருமாள் என்கிற சந்திரசூட பெருமாள் வீற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாற்கடலை கடையும் போது வாசுகி பாம்பு கக்கிய விஷத்தாலும், அமிர்தத்திற்கு முன்பாக வெளிப்பட்ட ஆலகால விஷத்தாலும், மந்திர மலையை ஆமை வடிவில் தாங்கி பிடித்ததாலும் விஷ்ணுவின் சரீரம் வெப்பமடைந்ததாகவும் அதை பிறைசூடரான சிவ பெருமான் உதவியோடு அவர் தலையில் உள்ள சந்திரன் குளிர்வித்ததால் இத்தலத்தில் உள்ள பெருமாள், நிலாதுண்ட பெருமாள் என அழைக்கப்படுவதாக புராணம் கூறுகிறது. இப்பெருமாளின் தரிசனம், இன்னும் பல திவ்ய தேசங்களை நான் அன்று தரிசிக்க போவதை முன்கூட்டியே எடுத்துரைத்தது.
மூன்றாம் துளி - பாண்டவ தூத பெருமாள் கோவில்
துவாரகையின் மன்னரான கிருஷ்ணர், இக்கோவிலில் தனது மனைவி ருக்மணியுடன் வாசம் செய்கிறார். இது ரோகிணி நட்சத்திரத்திற்கு உகந்த திருத்தலம் என்றும், பாண்டவர்களின் துயர் துடைக்க, தூது சென்ற பகவான் அதே போல் கடும் துயரில் உள்ள பக்தர்களுக்கு மனமிரங்கி அருள் புரிவார் என்றும் இக்கோவில் புராணம் கூறுகிறது. அமைதியான கோவில்.
நான்காம் துளி - காமாட்சி அம்மன் கோவில்
காஞ்சி சங்கர மடத்தால் பராமரிக்கப்படும் நேர்த்தியான ஒரு கோவில். கோவிலின் பராமரிப்பு அற்புதமாக உள்ளது ஆனால் பழமை சுற்று மாறி பளிச்சென்று இருக்கிறது. விளக்கொளியில் ஜொலித்த அம்மனின் தரிசனம் அற்புதமாக இருந்தது. ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள திவ்யதேசம் போல இக்கோவிலும் அம்மன் சன்னிதிக்கு அருகில் திருக்கள்வனூர் ஆதிவராகப் பெருமாள் சன்னதி உள்ளது என்று கேள்விப்பட்டேன் ஆனால் அவரை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. எனினும் இக்குறையை பஞ்ச கங்கை என்னும் குளத்தருகே குடி கொண்டிருந்த பெருமாளின் தரிசனம் தீர்த்து வைத்தது. காமாக்ஷி அம்மனின் அண்ணனாக கருதப்படும் பெருமாள் தனது தங்கைக்கு பாதுகாப்பாக அங்கேயே உள்ளார் போலும்.
ஐந்தாம் துளி - ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோவில்
கச்சம் (ஆமை) வடிவில் திருமால் ஈசனை வழிபட்டதால் இத்தலத்திற்கு கச்சபேஸ்வரர் கோவில் என்று பெயர். கார்த்திகை கடை ஞாயிறு என்பதால் இக்கோவிலில் இன்று திருவிழா தினம். மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து மாவிளக்கு போட்டு அதை சட்டியில் வைத்து அதை தலையில் சுமந்து கொண்டு குடும்பத்துடன் இறைவனை தரிசித்து மகிழ்கின்றனர். இக்கோவில் வளாகத்தில் இஷ்ட சித்தி தீர்த்தம் உள்ளது. கூட்டம் அதிகம் என்பதால் இறை தரிசனம் செய்ய முடியவில்லை என்ற ஏக்கத்தை கோவிலின் எதிரே சாலையோரம் இருந்த சிறிய கோவிலில் இருந்த ஸ்ரீ ஐராவதீஸ்வரர் தீர்த்து வைத்தார்.
ஆறாம் துளி - கைலாசநாதர் கோவில்
தஞ்சை பெரிய கோவிலுக்கு முன்மாதிரியாக கருதப்படும் கோவில். கோபுரத்தை விட விமானம் அதிக உயரம் கொண்டது. எட்டாம் நூற்றாண்டில் முதலாம் நரசிம்மவர்ம பல்லவரால் கட்டப்பட்ட இக்கோவில் தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் வளாகத்தில் கோபுரத்திற்கு எதிரே உள்ள புல்வெளியில் நந்திகேஸ்வரர் கூரை ஏதுமின்றி வெட்டவெளியில் அமர்ந்து இருக்கிறார். கோயில் முழுவதும் யாழி சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. சிற்பங்கள் ஒவ்வொன்றையும் பார்க்கையில் கல்வியில் மட்டுமல்ல, கலையிலும் கரை கண்டது காஞ்சி என்பது புலனாகிறது. இக்கோயிலை பார்க்க மட்டுமே ஒரு நாள் தனியாக வேண்டும். மீண்டுமொருமுறை இக்கோவிலுக்கு வந்து, ரசித்து இதன் சிறப்பம்சங்களை பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆவல் தோன்றியது.
ஏழாம் துளி - கச்சி அநேக தங்காவதீஸ்வரர் கோவில்
கைலாசநாதர் கோவிலில் இருந்து திரும்பும் வழியில் அதன் அருகில் உள்ள ஸ்ரீ கச்சி அநேக தங்காவதீஸ்வரர் கோவிலுக்கு எதேச்சையாக சென்றேன். இது ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடல் பெற்ற தேவாரத்தலம். பக்தர்கள் பெரும்பாலும் யாரும் இல்லாத அமைதியான கோவிலில் இறைவனின் தரிசனம் அற்புதமாக இருந்தது. கோவில் அருகே உள்ள பெரியகுளத்தில் சிறுவர்கள் மீன்பிடித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். இக்கோவில் என் பயணத் திட்டத்தில் இல்லாவிட்டாலும் எனக்கான இறைவனின் திட்டத்தில் இருந்தது என்ற உண்மையை உணர்ந்தேன்.
எட்டாம் துளி - திருமேற்றளீஸ்வரர் கோவில்
இது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்) மற்றும் சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட தொண்டை நாட்டுத் தலம். காஞ்சிபுரத்தில் உள்ள திருமுறைத் தலங்கள் ஐந்தில் இதுவும் ஒன்று. கோயிலின் உள்ளே நுழைந்த உடன் எதிரே இருந்த மண்டபத்தில் அருள்மிகு பராசக்தி தேவி சாந்த ஸ்வரூபமாக நம்மை வரவேற்கிறார். மேற்றளீ என்பதற்க்கு மேற்கு நோக்கி பார்த்த தளி (கோவில்) என பொருள். இக்கோவிலில் உள்ளே சுயம்பு லிங்கமான திருமேற்றளீஸ்வரரின் சன்னிதி மேற்கு பார்த்த வண்ணம் உள்ளதால் இவர் இவ்வாறு அழைக்கப்படுகிறார் என பிறகு அறிந்துகொண்டேன்.
இக்கோவில் திருமேற்றளீஸ்வரர் கோவில் என அழைக்கப்பட்டாலும், இக்கோவிலின் மூலவர் ஓத உருக்கீஸ்வரர் ஆவார். சிவ தரிசனம் பெற இக்கோவிலுக்கு வந்த திருமால், திருஞானசம்பந்தர் ஓதிய பதிகத்தில் மனதை பறிகொடுத்து அப்படியே உருகி லிங்க வடிவம் பெற்றதால் ஓத உருக்கீஸ்வரர் என பெயர் பெற்றார் என இத்தல புராணம் கோருகிறது. சிவலிங்கத்தின் முன் காணப்படும் விஷ்ணுவின் பாதம் இத்தல புராணத்திற்கு சாட்சியாகும்.
ஓரிடத்தில் பல துளிகள் (9-12) - உலகளந்த பெருமாள் கோவில்
இவ்வளவு நேரம் ஒவ்வொரு துளியாக ஆன்மீக அமுதத்தை வழங்கி வந்த இறைவன் ஒரே நேரத்தில் பல துளிகளை வாரி வழங்கிய பிரம்மாண்ட தருணம் உலகளந்த பெருமாள் கோவில் என்னும் திருத்தலத்தில் நிகழ்ந்தது. ஆம்! இங்கு ஒரே கோவிலுக்குள் நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது.
கோவிலில் நுழைந்தவுடன் எதிரே உலகளந்த பெருமாள் சன்னிதி உள்ளது. சிறிய உருவம் கொண்ட வாமன அவதாரத்தில் இறைவன் எடுத்த விஸ்வரூபமே உலகளந்த பெருமாள். ஆம்! இக்கோவிலில் இறைவன் உண்மையிலேயே விஸ்வரூப தோற்றத்தில் காட்சியளிக்கிறார். கருவறையில் நமது சிரம் தாழ்ந்து பார்த்தால் மட்டுமே, அவரது முழு உருவமும் தெரியும் வண்ணம் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட சிலை அதி அற்புதமாக இருந்தது. இது போன்ற தோற்றத்தில் இதற்கு முன் இறைவனை எங்கும் நான் தரிசித்தது இல்லை. மூலவரின் விமானம் பழங்கால கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
மூலவர் உலகளந்த பெருமாளின் சன்னிதியில் இடப்புறம் திவ்யதேசங்களில் ஒன்றான திரு ஊரகத்தான் சன்னிதி உள்ளது. இதில் பெருமாள் ஆதிசேஷன் உருவத்தில் காட்சியளிக்கிறார். உலகளந்த பெருமாள் நடந்த திருக்கோலத்தில் கிழக்கு திசையில் உள்ளார் என்றால் அக்கோவிலை சுற்றி வரும் பிரகாரத்தில் திருநீரகத்து பெருமாள் நின்ற திருக்கோலத்தில் வடக்கு திசையில் தெற்கு திரு முகமாக குடி கொண்டுள்ளார். மேலும் பிரகாரத்தை சுற்றி வர, ஸ்ரீ காரகத்து பெருமாள் தெற்கு திசையில் ஆதிசேஷனின் மேல் வீற்றிருந்த திருக்கோலத்தில் குடிகொண்டுள்ளார். கோயில் நுழைவாயில் அருகே உள்ள ஸ்ரீ கார்வண்ண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் நின்ற திருக்கோலத்தில் தென்திசையில் வட திசையை நோக்கியவாறு தரிசனம் தருகிறார். இவ்வாறு எல்லா திசையிலும் சன்னதிகள் அமைந்து பக்தர்களுக்கு தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகிறது இத்திருக்கோவில்.
மேலும் இக்கோவிலில் சகல சௌபாயங்களும் தரும் ஸ்ரீ ஆரணவல்லி தாயாருக்கென தனி சன்னதி மேற்கு திசையை பார்த்த வண்ணம் உள்ளது. இதுமட்டுமில்லாமல் கோவிலின் வெளியில் எதிரே உள்ள சாலையில் நான்கு கரங்களுடன் சதுர்புஜ ஆஞ்சநேயர் காட்சி அளிக்கிறார். மனதிற்கு மிகவும் நிறைவை தந்த திருக்கோவில்.
பதின்மூன்றாம் துளி - ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில்
பரமேஸ்வர விண்ணகரம் என அழைக்கப்படும் வைகுண்ட பெருமாள் ஆலயம் ஒரு மாடக் கோயில் ஆகும். ஆம்! கோயிலில் மூன்று நிலைகளில் இறைவன் குடி கொண்டுள்ளார். கீழ்பகுதியில் ராஜாங்க கோலத்தில் காட்சி அளிக்கும் அவர், நடுப்பகுதியில் ஸ்ரீரங்கநாதராக சயனக் கோலத்திலும், உச்சியில் நின்ற கோலத்திலும் காட்சி அளிக்கிறார் என இக்கோவிலின் அர்ச்சகர் கூற அறிந்து கொண்டேன். கோவிலின் மேல் பகுதிக்கு வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே செல்ல இயலும் என்பது குறிப்பிடதக்கது. 1600 ஆண்டுகள் பழமையான இத்திருக்கோவில், தற்போது தொல்லியல் கட்டுப்பாட்டில் அற்புதமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலின் உட்பிரகார சுவற்றில் உள்ள சிற்பங்களை காண கண் கோடி வேண்டும். இவ்வளவு சிறப்புகள் இருந்தபோதும், இவ்வாண்டு பெய்த பெருமழையிலும் இக்கோவிலில் குளத்தில் சொட்டு நீர் கூட இல்லாதது சற்று வருத்தமாக இருந்தது. வைகுண்டம் என்ற பெயருக்கு ஏற்றவண்ணம் மெய் சிலிர்க்க வைத்த ஒரு திருத்தலம்.
பதினான்காம் துளி - ஸ்ரீ சித்திரகுப்த சுவாமி கோவில்
நமது பாவபுண்ணிய கணக்குகளை நிர்வகிக்கும் ஸ்ரீ சித்திரகுப்த சுவாமி கோவில் காஞ்சி நகரின் முக்கிய பகுதியின் மெயின் ரோட்டிலேயே அமைந்துள்ளது. நானும் இவரை போல ஒரு கணக்காளர் (Accountant) என்பதால் இவரையும் தரிசனம் செய்து ஆசி பெற்றது எனது கடமை மட்டுமல்ல உரிமையும் கூட.
பதினைந்தாம் துளி - வழக்கறுத்தீஸ்வரர் கோவில்
விஷ்ணு காஞ்சியில் உள்ள இக்கோயிலில் நுழைந்தவுடன் எதிரில் மண்டப விநாயகர் நமக்கு காட்சி அளிக்கிறார். இடதுபுறம் திரும்பியவுடன் மூலவரான வழக்கறுத்தீஸ்வரர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னிதிக்கு அருகில் மாமுனிவர் வசிட்டரின் பேரனான பராசரர் வழிபட்ட லிங்கம் பராசரேசர் சன்னிதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் அம்மன் (உற்சவர்) பெயர் ஸ்ரீ மருவார்குழலி. இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது என பின்னர் அறிந்து கொண்டேன். வழக்குகளில் வெற்றி பெறவும், தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் வழக்கறுத்தீஸ்வரை தரிசனம் செய்தல் நலம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பதினாறாம் துளி - திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவில்
தீபப் பிரகாசர் எனப்படும் விளக்கொளி பெருமாள் அமைதியான, அதேநேரம் பழமையான திருக்கோவிலில் காட்சியளிக்கிறார். இது 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று. கோவிலில் வழக்கமாக காணப்படும் ராமானுஜரை தவிர அவரது குருவான ஆளவந்தாருக்கும் சிலை உள்ளது ஒரு சிறப்பம்சமாகும். இராமனுஜரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதிய ஆச்சாரியர் தூப்புல் வேதாந்த தேசிகர் வழிபட்டதால், இக்கோவிலை தூப்புல் வேதாந்த தேசிகர் ஆலயம் என்றும் அழைக்கின்றனர். இவருக்கென தனி சன்னதியும் கோவிலுக்கு வெளியே உள்ளது. தாயாரின் பெயர் மரகதவல்லி.
அக்கினி வடிவில் பிரம்மாவின் யாகத்தை அழிக்க வந்த அசுரனை, திருமால் தனது கையில் தீபம் போல் ஏந்திகொண்டதால் இறைவன் இங்கு விளக்கொளிப் பெருமாள் (தீபப்பிரகாசர்) என அழைக்கப்படுகிறார் என இக்கோவிலின் தலபுராணம் கூறுகிறது. இவர் தம்மை நாடி வரும் பக்தர்களின் வாழ்விலும் இருளை போக்கி ஒளி தருவார் என்பது நிதர்சனம்.
பதினேழாம் துளி - திருவேளுக்கை அழகியசிங்கர் கோவில்
திருவேளுக்கை ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் சமேத அழகியசிங்கர் சுவாமி திருக்கோவில் என அழைக்கப்படும் நரசிம்மர் கோவில். இத்தலத்தின் அழகில் மயங்கிய நரசிம்மர் தானாகவே இங்கு குடிகொண்டதாக இக்கோவிலின் தலபுராணம் கூறுகிறது. பேயாழ்வாரால் பாடல் பெற்ற இக்கோவிலில், உற்சவர் சிலைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக ஜொலித்தது. இக்கோவிலின் பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாருகென தனி சன்னதி அமைந்துள்ளது. கோவிலின் பின்புறம் உள்ள தோட்டத்திற்கு ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் தோட்டம் என்று பெயர். குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்த அழகான கோவில்.
முடிவுரை
இறுதியாக பச்சைவண்ண பெருமாளை தரிசிக்கும் நோக்கில் Google maps காட்டிய இடத்திற்கு சென்றேன். அங்கு கோவில் ஏதும் இல்லாததாலும், மணி பிற்பகல் 12:30 எட்டியதால் கோவில்கள் அனைத்தும் நடை சாத்தப்பட்டிருக்கும் என்பதாலும் எனது இந்த ஆன்மிக பயணத்தை இனிதே முடித்து கொண்டேன்.
நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் கொண்ட காஞ்சி மாநகரில், குமரக்கோட்டம், பச்சை வண்ண பெருமாள் கோவில், அஷ்டபுஜ பெருமாள் கோவில், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில், விஷ்ணு காஞ்சியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், முத்தையால் பேட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் போன்றவை இப்பயணத்தில் போதிய நேரமின்மை காரணமாக நான் தவறவிட்ட கோவில்களில் சிலவாகும். இருப்பினும் சுமார் 5 மணி நேரத்தில் இவ்வளவு கோவில்களை தரிசித்து ஆன்மிக அமுதத்தில் பல துளிகளை பருகியதே இறைவன் எனக்களித்த மிகப் பெரிய வரமாகும். மீண்டுமொரு பயணத்தில் இக்கோவில்களை தரிசிக்க சித்தம் கொண்டு காஞ்சி சரவணபவனில் மதிய உணவை முடித்துக்கொண்டு வீடு திரும்பினேன். "திரவியம் பெற திரை கடலும் தாண்ட வேண்டும்; இறையருள் பெற இறை கடலான காஞ்சியை நாட வேண்டும்" என்ற உண்மையை உணர்ந்து...
நன்றிகள்
- Redmi 7S மற்றும் Google - புகைப்பட உதவிக்கு...
- Suzuki Access 125 - எனது பயணத் தோழனுக்கு...
- கோவில்களை கட்டிய பக்தர்கள் மற்றும் மாமன்னர்களுக்கு...
- கோவில்களை பராமரித்து வரும் அனைத்து பணியாளர்களுக்கு...
- இக்கட்டுரை படிக்கும் அனைத்து ஆன்மீக உள்ளங்களுக்கு...
அடுத்த பகுதி படிக்க
ஆச்சர்ரியமான நபர் ...... அழகான பயணம்
ReplyDeleteநாங்களும் மழைத்துளிகளில் நனைந்தோம். அருமையான பதிவு
ReplyDelete