ரைன் நதிக்கரையினிலே...
1. இயந்திர பறவையில்
(Flight mode)
முன்னுரை
பல்லாண்டு கால உள்ளூர் அனுபவங்களுக்கு பிறகு முதன் முதலில் அலுவலக விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு இவ்வாண்டு (2021) கிட்டியது. ஜெர்மனி என்றவுடன் ஹிட்லரும், பெர்லின் சுவரும் நினைவில் வர, அங்கு சென்ற பின்பு தான் தெரிந்தது அந்நாட்டின் வேறொரு பகுதியும் அதன் பரிமாணமும்... இந்தியாவை விட்டு இம்மி அளவு கூட நகராத நான் முதன் முதலில் வெளிநாடு சென்று வந்த பயண குறிப்பின் பதிவே இக்கட்டுரை..
உலகம் கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருந்த நேரத்தில் விசா, கொரோனா பரிசோதனை உட்பட பல்வேறு ஏற்பாடுகளுக்கு பிறகு அக்டோபர் 7ம் தேதி அதிகாலை அலுவலக நண்பர்கள் ஐந்து பேருடன் (நான் உட்பட 6 பேர்) இந்தியாவிலிருந்து புறப்பட்டோம். 6ம் தேதி நள்ளிரவு 11:45 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் நுழைந்தாலும், நீண்ட வரிசை, பயண அனுமதி சீட்டு (Boarding pass), குடியேற்ற சோதனை (Emigration), ஏகப்பட்ட பாதுகாப்பு கெடுபிடிகளை கடக்கவே சுமார் 2:30 மணி நேரம் ஆனது. சென்னையிலிருந்து தோஹா (கத்தார்) சென்று அங்கிருந்து ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் நகருக்கு செல்லும் வகையில் எங்கள் பயண திட்டம் இருந்தது.
கொரோனா காலம் என்பதால் பயணிகள் அனைவருக்கும் முக கவசம் (Face shield) மற்றும் பிற பாதுகாப்பு பொருட்களும், குறிப்பாக நடு இருக்கையில் அமரும் பயணிகளுக்கு PPE பாதுகாப்பு உடையும் வழங்கப்பட்டது. தோஹாவிற்கு (Doha) செல்லும் இயந்திர பறவை சுமார் 40 நிமிட நேர தாமதத்திற்கு பிறகு அதிகாலை 4:20 மணிக்கு சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்திலிருந்து பறக்க துவங்கியது. நீண்ட நேர காத்திருப்பின் காரணமாகவும், இரவு முழுவதும் தூங்காததாலும் உடல் சோர்வாக இருந்த போதிலும் முதல் சர்வதேச பயணம் என்பதால் மனது சற்று உற்சாகமாகவே இருந்தது.
விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. சைவ உணவாக பொங்கல் மற்றும் கட்லட் வழங்கினர். சாப்பிடும் போது தான் தெரிந்தது அது கட்லட் அல்ல அவ்வடிவத்தில் செய்யப்பட்ட வடை என்று! பிறகு நறுக்கிய பழத்துண்டுகளை (Fruit salad) உண்டு பழரசம் (Juice) பருகிய பின் 38 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கத் துவங்கிய விமானத்தில் சில மணிநேரம் கண்ணயர்ந்தேன். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு கிழக்கு திசையில், ஜன்னலோரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் அமர்ந்திருந்த என்னை தனது செங்கதிர்களை வீசி எழுப்பினான் கதிரவன்... சிதறிய பஞ்சு போல் கொஞ்சம் கொஞ்சமாக மேகங்கள் நிறைந்த அவ்வானில், அதிகாலை நேரத்திலேயே வீசிய சூரிய கதிர்கள் பாலைவன பூமியான அரபு நாடு நம்மை வரவேற்க தயாராகி விட்டது எடுத்துரைத்தது.
சென்னையிலிருந்து அதிகாலை 4:20 மணிக்கு புறப்பட்ட விமானம் 4:30 மணி நேர பயணத்தில் சுமார் 3300 கிலோமீட்டர் தொலைவை கடந்து, பாரசீக வளைகுடா (Persian gulf) கடற்கரையோரம் அமைந்திருந்த தோஹா நகரின் ஹமாத் விமான நிலையத்தில் (Hamad international airport) அந்நாட்டின் நேரப்படி காலை 6:10க்கு தரையிறங்கியது. விமான நிலையத்தின் ஓடுபாதை (Runway) நமது GST சாலையை விட அகலமாக இருந்தது. விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கத்தார் ஏர்வேஸின் (Qatar Airways) விமானங்களின் எண்ணிக்கை நிச்சயம் நமது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கக்கூடும் என எண்ண தோன்றியது.
மிகச்சிறிய நாடாக இருந்த போதிலும் எண்ணெய் வளம் கொட்டி கிடப்பதால் கத்தார் ஒரு வளமிக்க நாடு என்பது விமான நிலையத்தின் பிரம்மாண்ட தோற்றத்திலேயே புலப்பட்டது. ஹமாத் உலகின் மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்று. விமான நிலையத்தில் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குச் செல்லவே 1.5 - 2.0 கிலோமீட்டர் நடக்க வேண்டும். அதற்கு தானியங்கி மின் நடைபாதைகள் (Conveyors) இயந்திரங்களும் உண்டு. அடுத்து செல்ல வேண்டிய விமானத்தின் பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு விமான நிலையத்தில் இருந்த ஒரு இந்திய உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட்டோம். ஒரே ஒரு மசாலா தோசையின் விலை 7.46 அமெரிக்க டாலர் (சுமார் 550 ரூபாய்) மட்டுமே என்ற போது தான் நாம் அந்நிய தேசத்தில் உள்ளோம் என்ற உண்மையை உணர தொடங்கினோம்...
சிறிது நேர இளைப்பாறுதலுக்கு பிறகு அங்கிருந்து பிராங்க்ஃபர்ட் செல்லும் அடுத்த விமானத்தில் ஏறி மீண்டும் விண்ணில் புறப்பட்ட பிறகு தான் நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட தோஹா நகரின் உண்மையான அழகு நம் கண்களுக்கு புலப்பட்டது. கடல்சூழ் நகரில் எங்கு பார்த்தாலும் விண்ணை முட்டும் கட்டிடங்கள் அதன் பிரம்மாண்டத்தை எடுத்துரைத்தது. உயரத்திலிருந்து பல்வேறு கட்டுமான பணிகளை பார்க்கையில் அடுத்தாண்டு (2022) நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு அந்நகர் சிறப்பான முறையில் தயாராகி உள்ளது என்று தோன்றியது.
பிராங்க்ஃபர்ட் செல்லும் விமானம் தோஹாவிற்கு வந்த விமானத்தை விட சற்று பெரிதாக இருந்தது. அது போயிங் B777-ER300 Jumbo jet வகையைச் சார்ந்தது என்று அங்கிருந்து பாதுகாப்பு கையேடை பார்த்து தெரிந்து கொண்டேன். அதில் சுமார் 300-400 பேர் பயணம் செய்யலாம். ஒவ்வொரு வரிசையிலும் 10 இருக்கைகள் (3+4+3) கொண்ட விமானத்தில் கொரோனா காரணமாக மைய இருக்கைகள் பதிவு செய்யப்படவில்லை. பெரும்பாலானோர் தங்கள் இருக்கையின் முன்பிருந்த தொடுதிரை தொலைக்காட்சியில் (Touch screen TV) இருந்த திரைப்படங்களில் மூழ்க ஆரம்பிக்க, நான் வழக்கம் போல எனது ஜன்னலோர இருக்கையில் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன்.
தொடுதிரையில் இருந்த Flight maps செயலி எனக்கு ஒரு சிறந்த அனுபவத்தை அளித்தது. அது விமானம் இருக்கும் இடம், பயண தூரம், நேரம், பறக்கும் உயரம், வெளிப்புற வெப்பநிலை போன்ற விவரங்களை விவரமாக காண்பித்தது. விமானம் குவைத், பாக்தாத் வழியாக 34,000 அடி உயரத்தில் பறக்க ஆரம்பித்தது. தெளிந்த வானில் மேகங்கள் ஏதும் இல்லாததால் அவ்வளவு உயரத்தில் இருந்தும் தொலைதூர நகரங்களும், பாலைவன மலைகளும், அதன் நடுவே ஊர்ந்து செல்லும் பாம்பு போன்ற நதிகளும், பிரமாண்ட ஏரிகளும் நமது விழிகளுக்கு தெளிவாக புலப்பட்டது. உயர்ந்த மலைகளை, அதைவிட அதிக உயரத்தில் இருந்து பார்ப்பது நல்ல அனுபவமாக இருந்தது. கத்தார் ஏர்வேஸ் இஸ்லாமிய நாட்டைச் சார்ந்தது என்பதால் தொடுதிரை தொலைக்காட்சி அடிக்கடி அவர்களின் புனித நகரான மெக்கா இருக்கும் திசையை காட்டிக் கொண்டே இருந்தது.
மருந்துக்குக் கூட பசுமை எங்கும் புலப்படாத செந்நிற பூமியின் மேல் பறக்கும் போது தான் இந்தியாவின் வளமையும் அதை நாம் பாதுகாக்கத் தவறி கொண்டிருப்பதும் மீண்டும் ஒருமுறை நினைவுக்கு வந்தது. விமானத்தில் கொடுக்கப்பட்ட மதிய உணவை சாப்பிட ஆரம்பித்த நேரத்தில், துருக்கி நாட்டின் தலைநகர் அங்காரா (Ankara) மேல் பறக்கும் போது தான் வெளி வானில் மேகங்கள் லேசாக புலப்பட ஆரம்பித்தது. தொடுதிரையில் காண்பித்த -67 degree Fahrenheitஜ பார்க்கையில் உயரம் செல்லச் செல்ல வெப்பநிலை குறைந்து கொண்டே செல்லும் என்ற உண்மை புரிந்தது. இதனால்தான் மலை பிரதேசங்களின் மேல் குளிர் அதிகமாக காணப்படுகிறது போலும்.
பிறகு கருங்கடலுக்கும் மத்தியதரைகடலுக்கும் நடுவில் 36,000 அடி உயரத்தில் பறந்து துருக்கி நாட்டின் பாரம்பரிய நகரம் இஸ்தான்புல்லை கடந்தபின் மேக கூட்டங்களின் அடர்த்தி அதிகமாக காணப்பட்டது. இது நாம் ஐரோப்பா கண்டத்தில் நுழைய போகிறோம் என எனக்கு எடுத்துரைத்தது. உலக வரைபடத்தில் பச்சைப்பசேல் என்றிருக்கும் ஐரோப்பா கண்டத்தின் பேரழகை பார்க்கவிடாமல் அடர்த்தியான மேகங்கள் பனிப்போர்வை விரித்தாற்ப் போல் வெளியுலகை மூடியது சற்று வருத்தமாக இருந்த போதிலும் அதுவும் ஒரு அற்புத அனுபவமே...
அதன்பின் சுமார் 2 மணி நேரம் வெளிகாட்சிகள் எதுவும் நம் கண்களுக்குப் புலப்படவில்லை. பல்கேரியா, செர்பியா, ஆஸ்திரியா நாடுகளைக் கடந்த நமது விமானம், ஜெர்மனியில் நுழைந்தது பிராங்க்ஃபர்ட் நகரில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு மெயின் நதியை (Main river) கடக்கும் போதுதான் நமக்கு வெளியுலக காட்சிகள் புலப்பட்டது. கத்தாரில் இருந்து காலை 8:40 மணிக்கு புறப்பட்ட விமானம் சுமார் ஆறு மணி நேரம் பயணம் செய்து 2850 மைல்களை (சுமார் 4500 கீ.மீ) கடந்து ஜெர்மனியின் வர்த்தக தலைநகரான பிராங்க்ஃபர்ட் பெருநகரை அந்நாட்டின் நேரப்படி மதியம் 2:30 மணி அளவில் அடைந்தது. முதன்முதலில் ஐரோப்பா கண்டத்தில் காலடி பதித்தேன்.
தொடரும்...
மேலும் சில புகைபடங்கள்
அரபு நாட்டின் மேல் சிதறிய மேகங்கள்
தோஹா (கத்தார்) நகரின் மேல்
கடலோரத்தில் தோஹா (கத்தார்)
தோஹா நகர பிரமாண்ட கட்டிடங்கள்
புனித மெக்காவின் திசை
பாலைவனத்தில் பாம்பு போன்ற நதி
பிரமாண்ட ஏரிகள்
விமானத்தில் வழங்கப்பட்ட ஒரு உணவு
ஐரோப்பாவை போர்த்திய பனிபோர்வை
பிராங்க்ஃபர்ட் மெயின் நதி
பிராங்க்ஃபர்ட் விமானநிலையம்
அடுத்த பகுதியை படிக்க...
Unkal tamil ezhuththatral adutha nagarvai noki selkirathu vazhthukkal
ReplyDeleteSuperp
ReplyDeleteGood Vijay. Good expression words to feel my trip to Europe..
ReplyDeleteSuper....
ReplyDeleteAwesome narration Vijy👏👏👏Wish u good luck🍀
ReplyDeleteSuper sir , nicely explained
ReplyDelete