வெங்காய ரகசியம் (Secret of Onion)

முன்குறிப்பு:

இது எனது சொந்த கதை அல்ல. 
நான் சிறுவயதில் கேள்விப்பட்ட ஒரு சோகமான கதை‌. இளகிய மனம் படைத்தோர் கதையை படிக்க வேண்டாம்.



ஒரு ஊர்ல ஐஸ்கிரீம், குண்டு மிளகாய், தக்காளி, கேரட், காலிஃபிளவர்,  வெங்காயம் எல்லாம் நண்பர்களாக இருந்தாங்க. தினமும் ஜாலியா ஒன்னா சேர்ந்து விளையாடினாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் உயிரா இருந்தாங்க.‌ எப்பவும் எங்கேயும் பிரிய மாட்டாங்க...

ஒருநாள் அவங்களுக்கு ஒரு ஆசை வந்துச்சு. அதன்படி எல்லாரும் ஒண்ணா சேர்ந்து பீச்சுக்கு போனாங்க. பீச்சுல நல்லா கடலில் இறங்கி குளிச்சி விளையாடினாங்க. அப்ப அவங்க ஐஸ்கிரீம் நண்பன் காணோம். கடல் தண்ணில கரைந்து செத்துப் போயிட்டான்... அதனால எல்லாருக்கும் ரொம்ப சோகமா ஆயிடுச்சு. கடற்கரையில உட்கார்ந்து மத்தவங்க எல்லாம் கண்ணீர் விட்டு அழுதாங்க..‌


அழுது அழுது அவங்க எனர்ஜி எல்லாம் போயிடுச்சு. ரொம்ப பசி எடுத்ததால சாப்பிடுறதுக்கு பீச்சுல இருக்கிற பஜ்ஜி கடைக்கு போனாங்க. பஜ்ஜி கடைக்காரரும் அவங்களுக்காக சூடா பஜ்ஜி போட்டாரு.‌‌ அப்போ பஜ்ஜி ரெடி ஆயிடுச்சான்னு நம்ம குண்டு மிளகாய் எட்டி பார்த்துச்சு. அதப்பாத்த பஜ்ஜி கடைக்காரர், தன் கடையில் இருந்த பஜ்ஜி மிளகாய் தான் தவறிக் கீழே விழுந்துச்சின்னு நெனச்சி நம்ம மிளகாயையும் எடுத்து மிளகாய் பஜ்ஜி போட்டுட்டாரு... மிளகாயும் செத்துப் போயிடுச்சி... அதனால மிச்சமிருந்த  நண்பர்கள் எல்லாரும் ரொம்ப அழுதாங்க..‌‌.

கொஞ்ச நேரம் அழுததுக்கு அப்புறம்,  இந்த பீச்சுல இருந்தா நம்ம எல்லாருக்கும் ஆபத்து அப்படின்னு நினைச்சு உடனே அங்கிருந்து கிளம்பினாங்க. பீச்சுல இருந்து வெளியே வந்து ரோடு கிராஸ் பண்ணி பஸ் ஸ்டாப்புக்கு போனாங்க. அப்ப தக்காளி  ரோடு கிராஸ் பண்ணும் போது சிக்னல சரியா கவனிக்கல. அதனால ரோட்ல வந்த ஒரு லாரி தக்காளி மேல் ஏறி நசுக்கி கொன்னுடிச்சு... இதப் பாத்த கேரட், காலிபிளவர், வெங்காயம் முன்று பேரும் கதறி கதறி அழுதாங்க...



அழுது அழுது அவங்களுக்கு மயக்கம் வர மாதிரி ஆயிடுச்சு. உடனே பக்கத்துல இருந்த ஜூஸ் கடைக்கு போனாங்க. அங்க ஒரு பையன் கேரட் ஜூஸ் வேணும்னு கேட்டு அடம் புடிச்சுட்டு இருந்தான். கடைக்காரர் கேரட் இல்லன்னு சொன்னாரு. அப்ப பார்த்து நம்ம கேரட் கடைக்கு உள்ளே போக, அந்த கடைக்காரரும் அந்த பையனோட  தொல்ல தாங்காம நம்ம கேரட்டை புடிச்சி ஜூஸ் போட்டு அவனுக்கு குடுத்துட்டாரு. நம்ம கேரட் நண்பனும் செத்துப் போயிட்டான். 



இப்ப மிச்சம் இருக்கிற காலிபிளவருக்கும், வெங்காயத்துக்கும் என்ன பண்றதுன்னே தெரியல. கடவுள்தான் நம்மள காப்பாத்தணும் அப்படின்னு நினைச்சி பக்கத்துல இருந்த காளி கோயிலுக்கு போனாங்க. அங்கு ரொம்ப நேரம் சாமிகிட்ட வேண்டிகிட்டாங்க. அப்போ கோவில் மூடற நேரம் ஆயிடுச்சு‌. அன்னிக்கு பார்த்து அந்த கோவில் சாமிக்கு பூஜை பண்ண பூ எதுவும் கிடைக்கல‌. பூசாரி என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தாரு. 



அப்ப எதேச்சையா நம்ம காலிபிளவரை பார்த்த பூசாரி, காளி தேவிக்கு பிளவர் கிடைக்கலன்னா என்ன இந்த காலிஃப்ளவரை வச்சி விட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி நம்ப காலிஃபிளவர தூக்கிட்டு போய் சாமி கிட்ட வெச்சிட்டு கோவில் கதவ சாத்திட்டு போயிட்டாரு. காலிஃபிளவரும் மூச்சு முட்டி அங்கேயே செத்துப் போச்சு. 



இப்ப நம்ப வெங்காயம் மட்டும் தனியா இருந்துச்சு. தன்னோட பிரண்ட்ஸ் எல்லாருமே தன் கண்ணு முன்னாடி செத்துப் போனத நினைச்சு கதறி கதறி அழுதுச்சி‌‌. தொடர்ந்து அழுதுகிட்டே இருந்துச்சி‌. தொடர்ந்து நாள் கணக்கா அழுதுகிட்டே இருந்துச்சு. அது அழுததை பார்த்த கடவுளுக்கு ரொம்ப பாவமா இருந்துச்சு. நேரா வெங்காயத்துக்கு முன்னாடி போயி ஏன் இப்படி அழுவுற? உன் ஃப்ரெண்ட்ஸ்க்கு விதி முடிஞ்சு போச்சு அதான் செத்து போய்ட்டாங்க. கவலை படாதே! அப்படின்னு சொன்னாரு.



உடனே வெங்காயம், நான் அத நினைச்சு அழுவல. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் செத்துப்போன அப்ப நான் அழுதேன். ஆனா நான் செத்துப் போனா அழறத்துகு யாருமே இல்ல. அதான் ரொம்ப கவலையா இருக்கு அப்படின்னு சொல்லுச்சு. உடனே கடவுளும் கவலைப்படாத உன்ன யாரு சாகடிக்கிறாங்களோ அவங்களே அழுவாங்க அப்படின்னு ஒரு வரம் கொடுத்தாரு.


இதுவே நாம வெங்காயத்த வெட்டும் போது நம்ம கண்ணுல தண்ணி வர காரணமான ரகசியம்.... 


Comments