மகள்களை பெற்ற அப்பாவிற்கு மட்டும் தான் தெரியும், கதை சொல்வது எவ்வளவு கடினம் என்பது...
கதை மிகவும் நீண்டதாக இருக்க வேண்டும், புதியதாக இருக்க வேண்டும் என அவர்கள் போடும் பல நிபந்தனைகளில் நமக்கு தெரிந்த ஒன்றிரண்டு கதைகள் கூட மறந்து விடக் கூடும். அத்தகைய தருணங்களில் நாம் ஏற்கனவே கேட்ட, படித்த பல கதைகளை ஒருங்கிணைத்து, ரீமிக்ஸ் செய்து ஒரு புதிய கதையாக சொல்வது சூழ்நிலையை ஓரளவு சமாளிக்க உதவும். அப்படி நான் சமாளித்து பல கதைகளை கலந்து ரீமிக்ஸ் செய்து என் மகளுக்கு கூறிய ஒரு கதையே இது.
ஒரு காட்டுல ஒரு குட்டி டைனோசர் இருந்துச்சு. அதோட பேரு டைனோ. அது கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டது. அது ரொம்ப நல்லா பாட்டு பாடும். அதே காட்டுல ஒரு குட்டி காண்டாமிருகம் இருந்துச்சு. அதோட பேரு ரைனோ. அது கொஞ்சம் தைரியசாலி. இந்த ரைனோவும், டைனோவும் ரொம்ப குளோஸ் பிரண்ட்ஸா இருந்துச்சு. தினமும் ஒன்னா ஊர சுத்தும். நிறைய நிறைய கதை பேசும். ஃப்ரீயா இருக்கும்போது பாட்டுக்குப்பாட்டு (அந்தாக்ஷரி), லுடோ (Ludo) மாதிரியான விளையாட்டுகள் எல்லாம் விளையாடும். அந்த காட்டுல இருக்கிற ஒரு குட்டி மலை உச்சியில போய் அடிக்கடி விளையாடுறது அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
அதே காட்டில ஒரு புலி இருந்துச்சு. அதோட பேரு டைகர். இந்த டைகர்க்கு டைனோவையும், ரைனோவையும் சாப்பிடனும்னு ரொம்ப நாளா ஆசை. ஒருநாள் டைனோவும், ரைனோவும் அந்த குட்டி மலை உச்சியிலே விளையாடிட்டு இருக்கும்போது டைகர் அங்க வந்துச்சி. அவங்கள பாத்து "டேய்! குட்டி பசங்களா! நான் உங்கள சாப்பிட போறேன்" அப்படின்னு சொல்லுச்சு. அத கேட்ட ரெண்டு பேரும் ரொம்ப பயந்துட்டாங்க. இத பார்த்ததும் டைகர் ரொம்ப குஷி ஆயிடுச்சு. யார முதல்ல சாப்பிடறதுன்னு முடிவு பண்ண இங்கி-பிங்கி-பாங்கி போட்டு பார்த்துச்சு. அதுல ரைனோ அவுட் ஆயிடுச்சி. அதனால டைனோவ சாப்பிட முடிவு பண்ணுச்சி. நம்ம குட்டி டைனோ ரொம்ப பயந்து போச்சு. டைகர் கிட்ட வரும்போது கண்ண நல்லா மூடிகிச்சு.
டைகரும் நல்லா ஆர்வத்தோட நாக்கை சப்பு கொட்டிட்டு டைனோ கிட்ட வந்தது. தன் கண்ணெதிரிலேயே தன்னோட நண்பன் சாகப் போறத ரைனோவால பாக்க முடியல. ஏதாவது பண்ணி தன்னோட நண்பன காப்பாத்தணும் நெனச்சது. டைகர், டைனோவ கடிக்க வாய தொறந்தப்ப குடுகுடுன்னு ஓடிப்போய் தன்னோட கொம்பால டைகர முட்டுச்சி. உடனே டைகர் கொஞ்சம் தள்ளிப் போய் டமால்னு கீழே விழுந்தது. சத்தம் கேட்டு டைனோ கண்ணத் தொறந்து பார்த்தது. தன்னோட நண்பன் தான் தனக்காக சண்டை போடுறான்னு புரிஞ்சுது.
கீழே விழுந்த டைகர்க்கு செம கோவம் வந்துச்சு. அது கர் கர்னு உறுமியபடி இப்ப ரைனோவ நோக்கி வந்துச்சு. இத பார்த்த டைனோ தன் நண்பன காப்பாத்த குடுகுடுன்னு ஓடிப்போய் தன்னோட முள்ளு மாதிரி இருக்கிற வாலால டைகர ஓங்கி ஒரே அடி அடிச்சுச்சி. டைகர் சுருண்டு போயி விழுந்துச்சு. இப்ப டைகருக்கு ரொம்ப ரொம்ப கோவம் வந்துச்சு.
இப்ப டைகர் நடுவுல நின்னுச்சு. ரைனோ ஒரு பக்கமும், டைனோ எதிர்ப்பக்கமும் இருந்துச்சி. டைகர் ரைனோவ நோக்கிப் போகும்போது டைனோவும், டைனோவ நோக்கி போகும்போது ரைனோவும் அட்டாக் பண்ணுச்சு. டைகரால சமாளிக்க முடியல... செம அடி வாங்குச்சு... கொஞ்ச நேர சண்டைக்கு அப்புறம் அந்த குட்டி மலை உச்சியிலிருந்து ரெண்டு பேரும் சேர்ந்து டைகர உருட்டி விட்டாங்க. டைகரும் நல்லா உருண்டு, அடிபட்டு மலை அடிவாரத்தில் இருக்கிற ஒரு புதர்ல மயங்கி விழுந்துச்சி.
ரொம்ப நேரம் அங்கேயே மயங்கிக் கிடந்த டைகர் வலி தாங்காம முணுவுச்சி. அப்ப அந்த பக்கம் ஒரு நரி வந்துச்சு. அது உயரத்துல ரொம்ப குள்ளமா இருந்துச்சு. அதனால அதுக்கு குள்ளநரின்னு பேரு. புதரில் இருந்த டைகரோட முணுகல் சத்தம் அதுக்கு கேட்டுச்சு. அது யாரா இருக்கும்னு புதர் உள்ள போய் பார்க்கும் போது அது டைகர்னு தெரிஞ்சதும் குள்ளநரி அப்படியே ஷாக்காயிடுச்சு. ஏன்னா, அந்த டைகர் தான் அந்தக் காட்டிலேயே ரொம்ப பலசாலி அப்படின்னு அந்த குள்ளநரி நெனச்சிட்டு இருந்தது. உடனே குடுகுடுன்னு ஓடிப்போய் பக்கத்திலிருந்த ஒரு குளத்துல இருந்து கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வந்து டைகர் மூஞ்சில தெளிச்சது. டைகர் மயக்கம் தெளிஞ்சு எழுந்தவுடனே குள்ளநரிக்கு தேங்க்ஸ் சொல்லுச்சு.
"என்ன ஆச்சு டைகர் அங்கிள்?" அப்படின்னு குள்ளநரி கேட்க, "ஒன்னுமில்ல மலையிலிருந்து சறுக்கி விழுந்துட்டேன்" அப்படின்னு டைகர் பதில் சொல்லுச்சு. ஆனா நம்ம குள்ள நரிதான் புத்திசாலி ஆச்சே... மலை மேல நிக்கிற டைனோவையும், ரைனோவையும் பார்த்தவுடனே அதுக்கு நடந்த விஷயம் தெரிஞ்சுடிச்சு. அதுக்கும் அந்த டைனோவையும், ரைனோவையும் சாப்பிடணும்னு ரொம்ப நாளா ஆசை. அதனால டைகர் கிட்ட "நீங்க கவலைப் படாதீங்க! நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்" அப்படின்னு சொல்லுச்சு
குள்ளநரி பயங்கரமா பிளான் பண்ணி மறுநாள் நைசா அந்த மலை உச்சியில் போய் படுத்துகிச்சி. வழக்கம் போல டைனோவும், ரைனோவும் அங்க விளையாட வந்தாங்க. அப்ப குள்ளநரி அங்க அழுவுற மாதிரி ஆக்க்ஷன் பண்ணுச்சு. அதை பார்த்த டைனோக்கு மனசு இளகி போச்சு. "என்ன ஆச்சு ?" அப்படின்னு கேட்டது. அதுக்கு அந்த குள்ள நரி, "நேத்து நான் இந்த மலைக்கு கீழே தூங்கிட்டு இருந்தேன். அப்ப அங்க உருண்டு வந்த ஒரு டைகர் என்ன அடிச்சுடுச்சு. அதான் பயந்து இன்னைக்கு மலைக்கு மேல வந்து படுத்தேன்" அப்படின்னு பொய் சொல்லுச்சு. "எனக்கு பிரண்ட்ஸ் யாரும் இல்ல, நீங்க என்ன பிரண்டா சேர்த்துக்குவீங்களா?" அப்படின்னு பாவமா கேட்டுச்சு.
டைனோவும் சரின்னு சொல்ல, ரைனோக்கு மட்டும் அந்தக் குள்ளநரி மேலே லேசாக சந்தேகம் இருந்துச்சு. இருந்தாலும் பரவாயில்லை அப்படின்னு டைனோகாக, அதுவும் அந்த குள்ளநரிய ஃபிரண்டா சேத்துகிச்சு. கொஞ்ச நாள் மூன்று பேரும் அந்த மலை உச்சியிலேயே நல்லா விளையாடினாங்க. ஒரு நாள் Ludo விளையாடும்போது, ரைனோ ஜெயிச்சுடிச்சி. அப்ப அந்த குள்ளநரி ரைனோ ஏமாத்தி சீட்டிங் பண்ணதா பொய் சொல்லுச்சு. இது தெரியாம டைனோவும் அத நம்பிடிச்சி.
அதே போல ஒருநாள் அந்தாக்ஷரி விளையாடும்போது டைனோ ஜெயிச்சுடிச்சி. அப்ப குள்ளநரி டைனோ தப்பு தப்பா பாடினதா பொய் சொல்லுச்சு. ரைனாவும் அத நம்பிடுச்சு. இதுனால அவங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்துடுச்சி. ஒருத்தருக்கு ஒருத்தர் பேசாம பிரிஞ்சு போயிட்டாங்க. அதுக்கப்புறம் டைனோவும், ரைனோவும் ஒன்னா விளையாடுறதில்ல. ரைனோ மலைக்கு மேலேயும், டைனோ மலைக்கு கீழையும் தனித்தனியா போய்ட்டாங்க. இருந்தாலும் ரைனோக்கு குள்ளநரி மேல லேசா டவுட் இருந்தது.
அதுக்கப்புறம் ஒரு நாள் மலையில இருந்து ரைனோ வேடிக்கை பார்க்கும் போது, அந்தக் குள்ளநரியும், டைகரும் பேசிட்டு இருந்தத பார்த்துச்சி. அங்க என்ன பேசுறாங்கன்னு அதுக்கு கேட்கல. ஆனா எதோ பிளான் பண்றாங்கன்னு மட்டும் தெரிஞ்சது. மலைக்கு கீழே குள்ளநரி டைகர் கிட்ட "நம்ம போட்ட பிளான் ஓ.கே. ஆயிடுச்சு, அவங்க ரெண்டு பேரும் இப்ப தனித்தனியா பிரிஞ்சிட்டாங்க. இப்ப நம்ம அவங்கள ஈஸியா வின் (win) பண்ணலாம்" அப்படின்னு சொல்லுச்சு. டைகரும் "சக்சஸ், சக்சஸ்" அப்படின்னு சொல்லி சிரிச்சது.
இதெல்லாம் தெரியாம டைனோ கொஞ்சம் தள்ளி இருக்கிற மரத்துல இருந்து இலைய பறிச்சி சாப்பிட்டு இருந்தது. டைகரும், குள்ளநரியும் ஆளுக்கொரு பக்கம் போய் அதை அட்டாக் பண்ண பார்த்தாங்க. மலை உச்சியிலிருந்து பார்த்த ரைனோ அலர்ட் ஆயிடுச்சு. டைகரும், குள்ளநரியும் தன்னை நோக்கி வர்ரத பார்த்த டைனோ ரொம்ப பயந்து போயி கண்ண மூடி அழ ஆரம்பிச்சது. அப்ப திரும்பவும் டமால்னு ஒரு சத்தம் கேட்டுச்சு. கண்ண தொறந்து பாத்தா அங்க டைகர் இல்ல. அதுக்கு பதில ரைனோ இருந்துச்சு.
இப்பதான் டைனோக்கு உண்மை தெரிஞ்சது. திரும்பவும் தன்னோட ஃபிரண்டு ரைனோ தான் தன்ன காப்பாத்துசுன்னு. இப்ப ஒரு பக்கம் டைகரும், குள்ளநரியும் நின்னாங்க. எதிர் பக்கம் டைனோவும், ரைனோவும் நின்னாங்க. இரண்டு டீமுக்கும் நடுவுல செம சண்ட நடந்துச்சு. ரொம்ப நேரம் நடந்த சண்டைக்கு அப்புறம் நம்ம டைனோவும், ரைனோவும் சண்டையில ஜெய்சாங்க. டைகரும், குள்ளநரியும் தோற்றுப்போய் ஓடிட்டாங்க.
நம்ம டைனோவும், ரைனோவும் ஒருத்தரை ஒருத்தர் கட்டி பிடிச்சிட்டாங்க. ரெண்டு பேரும் மாத்தி மாத்தி "சாரி" சொன்னாங்க. இனிமே எப்பவும் சண்டை போட மாட்டோம்னு சத்தியம் பண்ணிக்கிட்டாங்க. ரெண்டு பேரும் ரொம்ப ஹாப்பியா பீல் பண்ணாங்க. அப்பதான் அவங்களுக்கு அந்த சத்தம் கேட்டது. பக்கத்துல இருக்க புதர்ல இருந்து வீல் வீல்னு ஒரு சத்தம் கேட்டுச்சு. உடனே குடுகுடுன்னு ஓடிப்போய் அந்த புதர விலக்கி பார்த்தாங்க. அதுல ஒரு பொண்ணு பாப்பா இருந்துச்சு.
அந்த பாப்பா பார்க்கறதுக்கு ரொம்ப அழகா இருந்துச்சு. அந்த பாப்பா அங்க எப்படி வந்ததுன்னு யாருக்கும் தெரியல. நம்ம டைனோ எதேச்சையா மேல பார்க்க, அப்ப வானத்துல ஒரு ஃபிளைட் பறந்து போய்டு இருந்துச்சு. உடனே அதுக்கு விஷயம் புரிஞ்சது. அந்த பாப்பா பிளைட்ல இருந்து தவறி கீழே விழுந்துடுச்சின்னு. நல்லவேளை புதர்ல விழுந்ததால பாப்பாவுக்கு அடிபடல. இப்ப பாப்பா அவங்கள பார்த்து சிரிக்க ஆரம்பிச்சது. ரைனோக்கும், டைனோக்கும் ரொம்ப ஹாப்பியா இருந்துச்சு. ரெண்டு பேரும் பாப்பா கூட கொஞ்ச நேரம் ஜாலியா விளையாடினாங்க.
கொஞ்ச நேரம் கழிச்சு பாப்பா திரும்பவும் அழுதுச்சு. ரைனோக்கும், டைனோக்கும் என்ன பண்றதுன்னு தெரியல. அம்மா-அப்பா நியாபகதால தான் பாப்பா அழுவுதுன்னு அவங்களுக்கு புரிஞ்சது. ரெண்டு பேரும் நல்லா யோசிச்சாங்க. ஃபிளைட் போன திசைய வச்சு அது சென்னைக்கு தான் போகுதுன்னு கண்டுபிடிச்சாங்க. உடனே அந்த பாப்பாவ தூக்கிட்டு ரெண்டு பேரும் சென்னைக்கு வந்தாங்க.
ரொம்ப தூரம் நடந்து சென்னைக்கு வந்ததும் அவங்க ரொம்ப டயர்ட் ஆயிட்டாங்க. அவங்களுக்கு ரொம்ப பசி எடுத்துச்சு. உடனே ஒரு கடையில பானிபூரி வாங்கி சாப்பிட்டாங்க. அப்படியே பானிபூரி கடைக்காரரோட போன்ல இருந்த கூகுள் மேப்ல பாப்பா அவங்க வீட்டுக்கு லொகேஷன் (Location) போட்டு கொடுத்துச்சு. அத யூஸ் பண்ணி அந்த போன்ல ஓலா (OLA) ஆட்டோ புக் பண்ணாங்க. அந்த பாப்பாவ அவங்க வீட்டில் கொண்டு போய் விட்டாங்க. பாப்பாவோட அம்மா-அப்பா நம்ம டைனோக்கும், ரைனோக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சொன்னாங்க. நிறைய ஐஸ்கிரீம், சாக்லேட் எல்லாம் சாப்பிட கொடுத்தாங்க. அத சாப்பிட்ட அப்புறம் டைனோவும், ரைனோவும் திரும்பவும் காட்டுக்கு போயி பழையபடி ஹாப்பியா விளையாட ஆரம்பிச்சாங்க...
அந்த டைனோவும், ரைனோவும் காப்பாத்திக் கொண்டு வந்து விட்ட பாப்பா தான் எங்க வீட்ல வளர்ர பொண்ணு பாப்பா...
நன்றி:
- இக்கதையை சொல்ல தூண்டிய என் செல்ல மகளுக்கு...
- கதை கேட்டு கற்பனையை வளர்க்கும் அனைத்து குழந்தைகளுக்கு...
- அனைத்து ஒரிஜினல் கதைகளுக்கு...
- இப்பதிவை படிக்கும் உங்களுக்கு...
Haha.. எனக்கும் ஒரு கதை கெடைச்சாசி..
ReplyDeleteகதை அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்