கேள்வி:
உலகின் மிகவும் கடினமான தருணம் எது?
பதில்:
நமக்கு மிகப் பிடித்த ஒருவரை நாம் இழக்கும் (Missing) தருணமே மிகவும் கடினமான ஒன்று.
நமது அன்றாட வாழ்வில் யாரோ ஒருவரை இழந்துக் கொண்டு தான் இருக்கிறோம். நம் நினைவுகளும் நாம் இழக்கும் நபரை தொடர்ந்து நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அப்போதெல்லாம் அவர்களிடம் தூது செல்ல ஒரு துணையை தேடுகிறோம்.
தொழில்நுட்பம் வளர்ந்த இக்காலத்தில் ஒரு சிறிய அலைப்பேசி (Cell phone) அத்தகைய தூதுவர்களின் ஒருவனாக இருக்கிறது. நாம் நினைத்தவுடன் உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவருடனும் உடனே பேச முடிவது, விஞ்ஞானத்தின் வரப்பிரசாதமாகும்.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கடிதங்கள் இத்தூது பணியைச் செவ்வனே செய்து வந்தன. சென்ற தலைமுறையினருக்கு, தாம் எதிர்பார்க்கும் கடிதம் வந்து சேரும் வரை தினமும் வாசலையே எதிர்பார்த்திருந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
மன்னர் காலத்தில் புறாக்களும், தூதர்களும் தகவல் தொடர்பின் இரு தூண்களாக விளங்கின. விரைவுச் செய்திகளை புறாக்களும் ரகசிய செய்திகளை தூதர்களும் பகிர்ந்து கொண்டனர் என்ற போதும் அவை அனைவருக்கும் சாத்தியப்படாத ஒன்றாக இருந்தது. சங்க காலத்தில் தலைவி - தலைவனிடையே, தோழிகளிடையே பல்வேறு தருணங்களில், குறிப்பாக பிரிவின் துயரத்தை தகவல் பரிமாற்றம் செய்ய தூதின் தேவை அவசியமாக இருந்தது.
அத்தகைய தருணங்களில் தூது பணியை இயற்கையின் மீது திணித்தான் தமிழன். ஆம்! இயற்கையாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பறவைகள், காற்று, மேகம் போன்றவற்றை தனது தூதுவனாக பயன்படுத்திக் கொண்டான். இதனால் தான் கொக்கு விடு தூது, நாரை விடு தூது, மயில் விடு தூது, முகில் விடு தூது போன்ற பல்வேறு இலக்கிய நூல்கள் தமிழில் உள்ளன. சங்க காலத்தை சேர்ந்த சத்திமுத்தப் புலவர் இயற்றிய "நாராய் நாராய் செங்கால் நாராய்" என்று நாம் பள்ளி நாட்களில் படித்த பாடல், தூது இலக்கியத்திற்கு நல்லதோர் உதாரணமாகும்..
இத்தூதர்கள் உண்மையிலேயே தகவல்களை சுமந்து செல்வதில்லை என்ற போதிலும் பிரிவால் வாடும் நபர்களுக்கு இவை ஒரு ஆறுதலாக இருந்து வந்தன. இவ்வகை தூதுகளை விளக்க தமிழில் தூது இலக்கியம் என்ற தனி ஒரு வகை இலக்கியம் பயன்பாட்டில் உள்ளது என்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை அறியலாம். இது குறித்த தகவல்கள் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களிலும் உண்டு.
விஞ்ஞான வளர்ச்சி அடைந்த இக்காலத்திலும் அலைபேசி சிக்னல் இல்லாத இடங்கள் நிறைய உண்டு. எனவே இயற்கை தூதின் தேவை எல்லா காலத்திலும் உண்டு. நானும் பல்வேறு தருணங்களில் எனக்கு மிகப் பிடித்த சில நபர்களை இழந்திருக்கிறேன். குறிப்பாக வெளியூர் பயணங்களின் போது எனது பிரியமான மகளின் ஞாபகம் தோன்றும் போதெல்லாம் அப்படிப்பட்ட ஒரு தூது பொருளின் தேவை எனக்கும் அவளுக்கும் இருந்தது. அதை அனைவருக்கும் தெரிவிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நான் எப்போதும் சாலையை பார்த்து நடக்கும் பழக்கம் கொண்டவன். குறிப்பாக சாலையோரம் இருக்கும் பூக்களையும், வண்ணத்துப் பூச்சிகளையும், மரம் செடி கொடிகளையும் ரசித்துக் கொண்டே நடப்பது எனது வழக்கம் ஆனால் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் போது, குறிப்பாக காடு, மலைகளில் செல்லும்போது அடிக்கடி வானத்தை அண்ணாந்து பார்ப்பது எனது வழக்கமாகும். ஏனெனில் மலைகளைை, மேகங்கள் தழுவிச் செல்லும் காட்சிகள் அற்புதமானவை. மேலும் மலை சிகரங்களின் பின்னே ஒளிந்து விளையாடும் மேகங்களை பார்ப்பது, நமது நெஞ்சை கொள்ளை கொண்டு அளவில்லா ஆனந்தத்தை தரும்.
நம் வாழ்வைப் போலவே வானிலும், மேகங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில நேரங்களில் பஞ்சு போல அடர்த்தியாக இருக்கும் மேகங்கள், சில நேரங்களில் காற்றின் திருவிளையாடலால் கலங்கியும், கலைந்தும் காணப்படும். வேறு சில நேரங்களில் மேகங்களே இல்லாமல் வானம் தெளிவாக இருப்பதும் உண்டு. இதை தவிர வானில் திரண்டு வரும் அலை போல் காணப்படும் கார் மேகத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இவையே மண்ணுலகை குளிர்விக்க விண்ணில் தோன்றும் அட்சய பாத்திரமாக விளங்குகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க மேகங்களே எங்களது தூதுவர்கள். ஒவ்வொரு வகை மேகமும் எனக்கும், என் பிரிய மகளுக்கும் நடுவில் நாங்கள் செய்திகளை பரிமாறிக் கொள்ளும் வழிமுறையாக நாங்கள் எண்ணுகிறோம். தெளிந்த வானில் வெண்பஞ்சு போல் அடர்த்தியாக இருக்கும் மேகம், என் மகள் எனக்கு அனுப்பும் தகவலாகும். அவள் தான் நீல வானில் என்னை நலம் விசாரிக்க வெண் பஞ்சுகளை கொண்டு அடைத்துவிட்டாள் என நான் எண்ணுவதுண்டு. எனது பயணங்களின் போது இதை காணும்போது அவை என் மகள் எனக்கு அனுப்பிய செய்திகளை கொண்டு வந்து சேர்ப்பது போல் தோன்றும். எனது தனிமையை போக்கும்.
என் மகள் எனக்கு அனுப்பும் தூது
சில நேரங்களில் காற்றின் காரணமாக மேகங்கள் கலைந்து காணப்படும். அதை காணும் என் மகள், நான் தான் அவளுக்கு தகவல் தெரிவிக்க சோப்பு நுரை கலந்த நீரை வானில் தெளித்ததாக எண்ணுகிறாள். குறிப்பாக நான் வெளியூர் சென்று திரும்பும் போது, வானில் கண்ட இம்மேகங்கள் நான் அனுப்பிய செய்திகளை அவளிடம் தெரிவித்ததாக கற்பனையுடன் கூறுவாள்.
நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட ஒரே நேரத்தில் வெளிப்படுத்துவதால் உண்டாகும் அன்பு மழையை பொழியவே கார்மேகங்கள் உருவாவதாக எனக்கோர் எண்ணமும் உண்டு.
மேலும் சூரிய உதயத்தின் போதும், சூரிய அஸ்தமனத்தின் போதும் தோன்றும் தங்க நிற மேகங்கள் எங்கள் அங்கம் எங்கும் பரவி மனதில் அன்பெனும் ஒளியை பாய்ச்சுவதாக தோன்றுகிறது.
தங்கநிற மேகங்கள் - சூரிய உதயத்தின் போது
மேகங்களே இல்லாமல் காணப்படும் தெளிந்த வானத்தை காணும் பொழுது எங்களின் மனதில் பொங்கிய அன்பானது வானெங்கும் நீக்கமற கலந்து பிரிக்க முடியாதபடி உலகெங்கும் வியாபித்து இருப்பதாக தோன்றுகிறது. இவ்வாறாக மேகங்கள் எங்களின் நல்லதோர் தூதுவனாக விளங்கி எங்கள் பேரன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொள்ள உதவுகிறது.
தெளிந்த வானில் பயணிக்கும் பறவைக் கூட்டம்
அடுத்த முறை வெளியே செல்லும்போது வானை ஒரு நொடி உற்றுப் பாருங்கள். அதிலுள்ள மேகங்கள், உங்களுக்கும் உங்கள் பிரியமானவர்களிடம் இருந்து தகவல்களை சொல்லக் கூடும்...
நன்றி
- அனைத்து தூது பொருட்களுக்கு குறிப்பாக மேகங்களுக்கு...
- புகைப்படங்கள் எடுக்க உதவிய Redmi7Sக்கு
- இப்பதிவை படிக்கும் உங்களுக்கு...
உங்களுக்கும், உங்களின் நெருங்கிய மனதிற்கும் நல்லதோர் தூதுவன் கிடைக்கட்டும்....
பிற பதிவுகளை படிக்க...
Comments
Post a Comment