எனது இரு முன்மாதிரிகள் (My two role models)...

நமது அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நாம் பலரை சந்திக்கிறோம். அவர்கள் அனைவரிடமும் நாம் பின்பற்ற வேண்டிய சில குணங்கள் நிச்சயம் உள்ளது.  சிலரது நற்செயல்கள், நாம் அவர்களை பின்பற்றி நல்ல குணங்களை கற்கவும், சிலரது துர் செயல்கள் எவற்றையெல்லாம் நாம் செய்யக்கூடாது என்ற பாடங்களையும் நமக்கு தருகின்றன. எனவே அவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வழியில் நமது முன்மாதிரிகளாக (Role models) விளங்குகின்றனர்.

முன்மாதிரிகள் அனைவரும் நம் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்களது அனைத்து குணங்களையும் நாம் பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை. ஒவ்வொரு மனிதனிடமும்,  விலங்கிடமும்,  மரம் செடி கொடிகள் போன்ற தாவரங்களிடமும் ஏன் உயிரற்ற ஜடப் பொருட்களிடமிருந்து கூட நாம் கற்றுக்கொள்ள வேண்டிய எண்ணிலடங்கா குணங்கள் உள்ளன. எனவே இப்பிரபஞ்சத்தில் என்னைச் சுற்றி இருக்கும் அனைத்துமே எனது முன் மாதிரிகளாகும். 

இக்கட்டுரையில் என்னை மிகவும் கவர்ந்த, நான் முன்மாதிரியாக நினைக்கும் இரு முக்கிய நபர்களை பற்றி காண்போம்... இவர்கள் இருவரும் நமது சமகாலத்தில் வாழ்பவர்கள்... வயதில் இளையோராக இருந்த போதிலும், இருவரிடமும் நான் கற்றுக்கொள்ள வேண்டிய நற்குணங்கள் ஏராளமாக உண்டு...



Role model - 1


தேடுதல் என்பது இயற்கையின் நியதி. தேடுதலே மனிதனை பரிபூரணமாக்குபவை. அத்தேடுதலில் மிகவும் ஈடுபாடு உள்ள இவளே எனது முதல் முன்னுதாரணம். இவள் உலகில் உள்ள அனைத்து இடங்களையும் தேடி சென்று ஆராய்வதில் பேரார்வம் கொண்டவள். பாரதி கண்ட புதுமைப்பெண் இவள்தான் என்பது எனது தாழ்மையான கருத்து

நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவள். தனது நண்பனின்றி இவளை தனியே காண்பது அரிதினும் அரிது. அனைத்து உயிர்களிடமும் அன்பாய் இருப்பவள். சக நண்பர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் எவ்வளவு தொலைதூரத்தில் இருந்தாலும் தேடி வருபவள். இவள் எதிர்கொள்ளாத சவால்கள் இல்லை. தன் வழியில் எவ்வளவு சவால்கள் இருந்தாலும் மூன்றே முயற்சிகளில் அதை சமாளிக்கும் திறனும் தொழில்நுட்பமும் கொண்டவள். 

கற்பிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவள். தான் பேசும் வார்த்தைகளை குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து அவர்களையும் பேச சொல்லி உற்சாகப்படுத்துபவள். கூட்டு முயற்சியே இவளின் வெற்றிக்கு அஸ்திவாரம். அவள் சந்திக்கும் சவால்களில் நம் அனைவரையும் பங்கேற்க அழைப்பாள். நமது உதவியுடன் தந்திரங்கள், திருட்டுத்தனம் போன்ற அனைத்துப் பிரச்சினைகளையும் முறியடிப்பவள். என்றும் நன்றி மறவாதவள். பிற செய்த உதவிக்கு உடனே நன்றி தெரிவிப்பது இவளது வழக்கம். 

இவள் பொதுமக்களின் பேரன்பை பெற்றவள். சமீபத்தில் இவள் மருத்துவமனையில் இருப்பது போல் வெளியான புகைப்படத்தை பார்த்த பொதுமக்கள் அனைவரும் அவள் குணமாக கண்ணீர் மல்க இறைவனை வேண்டிக் கொண்டது, இவள் மீதான மக்களின் அபிமானத்திற்கு சான்றாகும்.

இவளிடம் இருக்கும் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் கூகுளிடம் கூட இல்லை என்றே கூற வேண்டும். இவளிடம் செவ்வாய் கிரகம் உட்பட இப்பிரபஞ்சத்தின் எல்லா இடங்களுக்கும் வழிகாட்டக்கூடிய செல்லக்கூடிய அதிநவீன மென்பொருள் கொண்ட வரைபடமும், தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் உடனே வருவித்து தருவிக்க கூடிய மந்திர பையும் உள்ளது.

இசையில் மிகவும் நாட்டம் கொண்டவளான இவள், ஒவ்வொரு சவாலையும் வென்றபின், அவள் பாடும் வெற்றிப் பாடல் மிகவும் பிரபலம்... இக்கொரோனா கால ஊரடங்கு, ஈ-பாஸ் (E-pass) நடைமுறை போன்றவை கூட  இவளின் பயணத்தை தடை செய்ய முடியவில்லை. இவள் கடந்து வந்த பாதையை ஒருபோதும் மறவாதவள்.  ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் தான் கடந்து வந்த பாதையையும், அதிலுள்ள சிறப்பம்சங்களையும் மீண்டும் நினைவு கூர்வது இவளின் தனிச்சிறப்பு.


இவளைப் போலவே நானும் ஒரு பயணி என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...




ஆம்! அவள்தான் எனது முன்மாதிரியும்,






சக பயணியுமான...










டோரா...



Role model - 2


இவன் ஒரு அதிரடி வீரன் என்றபோதிலும் அன்புக்கு அடிபணிந்து வாழ்பவன். நட்புக்கு இலக்கணமாக திகழ்பவன். துணிச்சலும் வீரமும் இவனது இரு விழிகள். தன் பிறந்த நாட்டிற்காக தன் இன்னுயிரையே பணயம் வைக்கவும் தயங்காதவன்.

காந்தியின் வழியில் எளிமையின் அடையாளமாக திகழ்பவன். எப்போதும் நெற்றியில் பொட்டு வைத்து முகமலர்ச்சியுடன் தோற்றம் தருபவன். தெய்வ பக்தி நிறைந்தவன். கடவுள்களான கிருஷ்ணர், பாலவிநாயகர், ஹனுமான் ஆகியோரை தனது தோழர்களாக கொண்டவன். 

ஒற்றுமையே இவனது பலம். சக நண்பர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து அவர்களை அரவணைத்துச் செல்பவன்‌. குறிப்பாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் தருபவன். எதிரிகளிடம் கூட அவர்களை தண்டிப்பதை விட,  திருத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவன். தனது ஊர், தன் நாடு என்ற குறுகிய வட்டத்துக்குள் வாழாமல் தேவைப்பட்டால் பிற நாடுகளுக்கும் சென்று அவர்களின் பிரச்சினைகளையும் தீர்ப்பவன். அரசாங்கத்துடன் நேரடி தொடர்பில் இருந்தாலும், மக்களோடு மக்களாக ஒன்றாய் வாழ்பவன்.

பலனை எதிர்பாராமல் மக்களுக்கு உதவுபவர்கள் மிகச் சிலரே. அவர்களில் இவன் குறிப்பிடத்தக்கவன் ஆவான். இவன் தன்னிடம் உதவி பெறுபவர்களிடமிருந்து  கைமாறு ஏதும் எதிர்பார்ப்பதில்லை. குறிப்பாக தன் நண்பர்களுக்கு செய்யும் உதவிக்கு நன்றி கூறினால், "நண்பர்களுக்குள் நன்றி எதற்கு?" என்பான். நாட்டுக்காக வீரதீர செயல்கள் செய்யும் போதும், பிறர் பாராட்டும் பொழுதும் "இது எனது கடமை" என்று பணிவுடன் இருப்பவன்.

இத்தகைய நற்குணங்கள் கொண்ட இவனை எனது முன்னுதாரணமாக கொண்டது நான் செய்த சிறப்பான செயல்களில் ஒன்று. என்னை பொருத்தவரை அரசாங்கம் உத்தரவிட்டால் தீவிரவாதம் உள்ளிட்ட  உலகிலுள்ள எப்பேர்ப்பட்ட பிரச்சினைகளையும் இவனால் மட்டுமே தீர்க்க முடியும் என உறுதியாக நம்புகிறேன்.

இப்படிப்பட்ட மாவீரனான அவனுக்கு மிகப் பெரிய ஆசைகள் எதுவும் இல்லை.  அவனது அதிகபட்ச ஆசை எல்லாம் ஒன்றே ஒன்று தான்... 


அதுதான் அவன் விரும்பி உண்ணும் லட்டு...






ஆம்! அவன் தான்....






எனது நண்பனும் இரண்டாவது முன்மாதிரியுமான 







சோட்டா பீம்.




பின் குறிப்பு:

இக்கட்டுரை பொழுதுபோக்கு நோக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தாலும் எனது முன்மாதிரிகள் இருவரிடமும் இங்க அரிய நற்குணங்கள் நிறைந்திருப்பது மறுக்க முடியாத ஆணித்தரமான உண்மையாகும். எனவே அத்தகைய நற்குணங்களை கொண்ட இவர்களை நமது வாழ்வில் பின்பற்றி, பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்ப்போமாக...


நன்றி
  • இப்பதிவை படிக்கும் உங்களுக்கு...
  • முன்னுதாரணமாய் விளங்கும் எனது நண்பர்களுக்கு...


Comments

  1. It is hillorious.... But ur words r true.... I too like dora....

    ReplyDelete
  2. Awesome.... It's true.. Really I like it 👍👍

    ReplyDelete
  3. Its really awesome boss congrats for your writing skills to develop more and we expect more stories

    ReplyDelete
  4. Unexpected but awesome👏👏👏 Way to go 🤩

    ReplyDelete

Post a Comment