பைகளின் தரம் அவை தைக்கப்படும் பொருட்களை பொறுத்து மாறுபடுவது போல் மனிதர்களின் குணங்களும் அவர்களின் சூழ்நிலையை பொறுத்து மாறுபடும்.
இன்று முதல்நாள் கல்லூரி. என் வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்ல இரண்டு வழிகள் உண்டு. ஒன்று மின்சார ரயிலில் சென்று பிறகு பேருந்தில் செல்ல வேண்டும் அல்லது இரண்டு பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டும். பஸ்பாஸ் மற்றும் ரயில்பாஸ் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து செலவழிப்பது கடினம் என்பதால் பேருந்தில் செல்ல ஆரம்பித்தேன். ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பின் கல்லூரியை அடைந்தேன். முதல் நாள் என்பதால் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மட்டுமில்லாது அனைத்து பிரிவு மாணவர்களையும் கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் அமர வைத்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் கொண்ட அறிமுக உரை மற்றும் வரவேற்பிற்கு பின்னர் அனைவரையும் அவரவர் வகுப்பறைக்கு செல்லுமாறு கல்லூரி முதல்வர் கூறினார். கூட்டம் கலைய ஆரம்பித்தது. எந்த திசையில் வகுப்பறைக்கு செல்ல வேண்டும் என்று தெரியாததால், யோசித்தபடியே ஹாலில் இருந்து வெளியே வரும்போது தான் எனக்கு முன்னே அந்த வாசகம் மீண்டும் என் கண்களுக்கு தென்பட்டது. "It's always good time to begin"...
திக்கு தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த நான், அந்த வாசகத்தை தொடர்ந்தபடியே சென்றேன். சிறிது நேரத்துக்கு பிறகு தான், நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவுக்கு பதில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் வகுப்பறையில் நுழைய இருந்தது தெரியவந்தது. பிறகு சுதாரித்துக்கொண்டு எனது வகுப்பறைக்கு வந்து சேர்ந்தேன். அந்த பையை பற்றி யோசித்தபடியே...
பிறகு சற்று சிந்தித்த பின்னர்தான் நான் செய்த முட்டாள்தனம் எனக்கு புரிந்தது. நான் தொடர்ந்து சென்றது ஒரு பெண்ணை என உணர்ந்தேன். பொதுவாக இன்ஜினியரிங் கல்லூரிகளில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பெண்கள் சேர விரும்பமாட்டார்கள். இதைக் கூட யோசிக்காமல் அந்த பெண்ணின் (பையின்) பின்னால் சென்று சற்று வெட்கமாக இருந்தது. முதல் நாள் வகுப்பே இப்படி வேடிக்கையாக கடந்து சென்றது என்றால், அதைவிட வேடிக்கையாக இருந்தது அடுத்த வந்த நாட்களில் கல்லூரி பாடங்கள் புரியாமல் நான் முழித்த முழிப்பு...
நான் படித்த பள்ளியில், நான் நன்றாகப் படிக்கும் மாணவன் என்ற போதிலும் இது வரை தமிழ் மீடியத்தில் தான் படித்தேன். மற்ற பாடங்களில் 80-90 எடுக்கும் நான், ஆங்கிலத்தில் 60-70 மட்டுமே எடுத்தாலும் பெரும்பாலான மாணவர்கள் என்னை விட குறைவான மதிப்பெண்களைப் பெற்றதால், இக்குறையை பள்ளி நாட்களில் நான் பெரிதாக உணரவில்லை. ஆனால் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தும் கல்லூரியில் என் பாடு திண்டாட்டமாகி போனது. பாடங்கள் ஓரளவு புரிந்தாலும் தேர்வுகளில் ஆங்கிலத்தில் கேட்கப்படும் வினாக்கள் புரியாததால் மதிப்பெண்கள் குறைய ஆரம்பித்தது. இதனால் பாடத்தை தவிர வேறு எதையும் கவனிக்காமல் படிப்பில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தேன்...
நாட்கள் செல்லச் செல்ல ஓரளவு தேர்ச்சியும் பெற ஆரம்பித்தேன். அப்போது நான் முதல் ஆண்டு இறுதித்தேர்வு துவங்கியது. இன்ஜினியரிங் கல்லூரிகளில் பொதுவாக காலையில் ஒரு பிரிவுக்கும் மதியத்திற்கு மேல் வேறொரு பிரிவுக்கும் தேர்வு நடப்பது வழக்கம். ஐந்து தேர்வுகள் முடிந்துவிட்டன. இன்னும் ஒரே ஒரு தேர்வு மட்டும் நாளை பாக்கி உள்ளது. ஐந்தாம் நாள் தேர்வை வெற்றிகரமாக முடித்த நான் வெளியே வந்த போது எதிரில் எலக்ட்ரிக்கல் பிரிவில் படிக்கும் என் நண்பன் சூர்யா என் எதிரே வந்தான். அவனுடன் அவளும் வந்தாள்...
அவள் பெயர் தமிழ் என்கிற தமிழ்ச்செல்வி. அவனுடன் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படிக்கிறாள். அவளை எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவன், அவள் தேர்வுக்குத் தேவையான சயின்டிஃபிக் கால்குலேட்டரை (Scientific calculator) வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விட்டதால், அதை கொடுத்து உதவும்படி கூறினான். எனது அடுத்த தேர்வு மறுநாள் காலையிலேயே இருப்பதால் நான் சற்று தயங்கினேன். அதற்கு அவள் தானும், நான் வசிக்கும் அதே மேற்கு மாம்பலத்தில் தான் இருப்பதாகவும் இன்று மாலையே என்னை சந்தித்து அந்த கால்குலேட்டரை கொடுத்து விடுவதாகவும் கூறினாள். அது எனக்கும் ஏற்புடையதாக இருந்ததால் எனது கால்குலேட்டரை அவளிடம் தந்தேன்.
அவள்தான், கல்லூரியின் முதல் நாளில் (பையை) பின்தொடர்ந்து சென்ற பெண். அதன்பின் அவளை சில முறை நேருக்குநேர் பார்த்திருந்தாலும், பேசியது இதுவே முதல் முறை. இப்போதுதான் அந்தப் பை எப்படி அவளிடம் சென்று அடைந்தது என்பதை புரிந்து கொண்டேன். ஒரே பகுதியில் வசிக்கும் நாங்கள் இருவரும், ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு முன்பு ஒரே கடையில், ஒரே நேரத்தில் இருந்திக்கிறோம்... ஒருவரை ஒருவர் சந்திக்காமல்! ஆனால் அவளது நீலநிற பை, எங்கள் இருவரையும் அன்று சந்தித்திருந்தது...
It's always good time to begin...
தொடரும்...
அடுத்த பகுதியை படிக்க
Super. . Really interesting
ReplyDeleteNice Story, its like a film
ReplyDeleteGood
ReplyDelete