பைந்தமிழ் காதல் - முதல் பகுதி
பைகளுக்கும் மனிதனுக்குமான உறவு
அவன் பிறக்கும் முன்பே துவங்கி விடுகிறது.
ஆம்! அவன் உருவாவதே தாயின் கருப்பைக்குள் தான்...
இன்று (2006ம் ஆண்டு)
நான் காத்திருக்கிறேன்...
நெரிசல் மிகுந்த சென்னை மாநகர அண்ணா சாலையின் மையப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் இரண்டாம் மாடியில் காத்திருக்கிறேன். இங்கு ஒரு மிகப் பெரிய அறையில், என்னைத் தவிர மேலும் சிலரும் காத்திருக்கின்றனர். அவர்களும் என்னைப் போலவே நேர்முகத் தேர்வின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
காத்திருத்தல் எனக்கு புதிது அல்ல... காத்திருக்கும் ஒவ்வொரு தருணமும், அத்தகைய தருணத்தை விட மிகவும் நீண்டது போலும்... இந்த நேரத்தில்தான் நம் மனமானது பல்வேறு சிந்தனைகளிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும். ஆனால் எனது சிந்தனை, குறிக்கோள் அனைத்தும் ஒன்றே! நான் நிச்சயம் இந்த நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுவேன்! என் எண்ணமெல்லாம் நான் அடுத்ததாக எழுதப்போகும் என் வாழ்க்கை என்னும் தேர்வை பற்றி மட்டும்தான்...
என் பெயர் வெற்றி என்கிற வெற்றி செல்வன். இருபத்தி மூன்று வயது நிரம்பிய இளைஞன். நான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். படிப்பில் ஓரளவு நல்ல மதிப்பெண்கள் எடுத்த போதிலும், ஆங்கிலம் பேசும் திறன் சற்று குறைவாக இருப்பதால் வேலை கிடைப்பது சற்று தாமதம் ஆகிறது. ஆனால் இன்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இன்றைய தேர்வில் நான் அளித்த உறுதியான பதில்களும், தேர்வாளர் பேசிய நேர்மறையான விதமும் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையை என் மனதில் துளிர் விட செய்திருக்கிறது.
"முயற்சிகள் என்னை கைவிடலாம்; ஆனால் நான் முயற்சியை ஒருபோதும் கைவிட மாட்டேன்" என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டே, கடந்த ஓராண்டாக பல்வேறு நிறுவனங்களில் நிரந்தர வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இன்று என் முயற்சி கை கூட சாத்தியம் இருக்கிறது. எனது அடுத்த முயற்சியும் இதுபோலவே வெற்றி பெற வேண்டும் என என் மனது துடிக்கிறது...
நான் இப்போது ஒரு மின்விசிறியின் கீழ் அமர்ந்துள்ளேன். மின்விசிறியில் இருந்து காற்று நன்றாக வந்த போதும், என் மனமானது புழுக்கத்தில் தவிக்கிறது. எனது கையானது, என் மடியில் வைத்திருக்கும் எனது பையை வருடிக் கொண்டிருக்கிறது. இந்த பையில் இரண்டு அறைகள் உள்ளன. ஒன்றில் நான் இத்தகைய நேர்முகத்தேர்வுகளில் பிறருக்கு காட்டும் எனது மதிப்பெண் சான்றிதழ்களும், மற்றொன்றில் நான் இதுவரை யாருக்கும் காட்டாத என் மனதின் மறுபக்கத்தின் சாட்சிகளும் உள்ளன. என் மனமானது எனக்கு மேலிருந்த மின்விசிறியை விட வேகமாக சுழல்கிறது. அச்சுழற்சி என்னை ஐந்து ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு செல்கிறது...
2001ம் ஆண்டு
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு சென்னை புறநகரில் உள்ள கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் சேர்ந்தேன். அந்தகால SSLC படித்த என் அப்பா ஒரு அலுவலகத்தில் கணக்கு எழுதும் வேலையில் செய்து கொண்டிருந்தார். மேலும் கூடுதல் குடும்பச் செலவுகளை சமாளிக்கும் வகையில் தினமும் காலையில் வீடு வீடாக சென்று பால் பாக்கெட் போடும் வேலையும் செய்துவந்தார். தான் பள்ளிபடிப்பு மட்டுமே முடித்திருந்ததால் தன்னை விட தன் மகன் அதிகம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடன்பட்டு கல்லூரியில் சேர்த்தார். முதன் முறையாக கல்லூரிக்கு செல்வதால், அதற்கேற்ப தயாராகும் வகையில் புத்தம் புதிய ஆடைகள் மற்றும் பிற பொருட்கள் வாங்கவும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்தார்.
அடுத்த வாரம் கல்லூரி ஆரம்பம். நான் சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வசித்து வந்ததால், அதன் அருகில் உள்ள தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளுக்கு, என் நண்பனுடன் சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தேன். முதலில் ஆடைகள், காலணி ஆகியவற்றை வாங்கியபின் புத்தகங்களை கொண்டு செல்லும் வகையில் ஒரு கல்லூரி பை (College bag) வாங்க ஒரு கடைக்குள் சென்றேன். என்னுடன் வந்த என் நண்பன், தனக்கும் சில பொருட்கள் வாங்க வேண்டும் எனக் கூறி அருகிலுள்ள மற்றொரு கடைக்குச் சென்றான். பல பைகளை பார்த்து, சல்லித்து எனக்கு பிடித்த நீலநிற வண்ணத்தில் ஒரு பையை தேர்வு செய்தேன். அது பார்ப்பதற்கு பல ஆண்டுகள் உழைக்கும் தரத்தில் இருந்தது. மேலும் அதிலிருந்த "It's always a good time to begin!" என்ற வாசகம் என்னை மிகவும் கவர்ந்ததும் அதனை தேர்வு செய்ய ஒரு காரணமாகும்.
பணம் செலுத்த வேண்டிய நேரத்தில் தான், தேவையானதை விட என்னிடம் உள்ள தொகை சற்று குறைவாக இருந்ததை அறிந்தேன். இருப்பினும் அந்த பை எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், அதை அங்கேயே வைத்துவிட்டு கூடுதல் பணத்தை என் நண்பனிடம் பெற வேண்டி கடைக்கு வெளியே வந்தேன். சுமார் பத்து நிமிடங்களுக்கு பின்பு மீண்டும் பணத்துடன் கடைக்குச் சென்று பார்க்கும்போது அந்த பை அங்கே இல்லை. விற்பனையாளரிடம் கேட்டதற்கு, சற்று முன் தான் வேறு யாரோ அதை வாங்கி சென்றதாக கூறினார். அதே போன்ற வேறு ஒரு பை அந்த கடையில் இருப்பு இல்லதாதால், வேறு வழியின்றி வேறொரு பையை வாங்கிக்கொண்டு கடையை விட்டு வெளியேறினேன். ஒரு பத்து நிமிடத்தில் எனக்குப் பிடித்த ஒன்றை தவறவிட்ட ஒரு சிறிய வருத்தத்தோடு.
தொடரும்...
அடுத்த பகுதியை படிக்க
Interesting...
ReplyDeleteReally superb....
ReplyDeleteSuper and waiting for next..
ReplyDeleteInteresting.
Nice
DeleteNice waiting to the next one
ReplyDeleteஎல்லா காதல் கதைகளும் இனிமை தான்,ஆனால் இந்த காதல் கதையில் இருந்த அறம், இந்த கதையை இன்னும் இனிமையாக்கியது
ReplyDeleteஒவ்வொரு வரிகளும் ஏதோ ஒரு தேடலை நம்முல் விதைக்கிறது.கிளர்ச்சியை ஏற்படுத்தும் காதல் கதைகளுக்கு மத்தியில் இந்த காதல் கதை புரட்சியை ஏற்படுத்தியது புதுமையே
ReplyDelete