ஊரடங்கிலும் தேடி வந்த நால்வர்
இந்த கொரோனா கால ஊரடங்கு அனைவரின் வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கி விட்டது. பலரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குரியாக்கியது. சிலருக்கு வீடே அலுவலகமாக மாறியது. மிகப்பெரிய பள்ளிகள் கூட மிகச்சிறிய தொலைபேசியாக சுருங்கியது. எனது வழக்கமான பயணங்கள் அனைத்தும் ரத்தானது. நண்பர்கள், உறவினர்கள் யாரையும் சந்திக்க முடியாமல் தவித்தபோது தான், தினந்தோறும் என்னை தேடி வரும் சிலரை அடையாளம் கண்டேன். நான் கவனிக்க மறந்தாலும், அவர்கள் என்னை கவனிக்க ஒருபோதும் தவறியதில்லை. இக்கடினமான நேரத்தில், அவர்கள் எனது மன நலத்தையும், உடல் நலத்தையும் பேண எனக்கு உதவினர். அவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரு மகிழ்ச்சி....
1. கோலம் மேல் ஓவியம் வரைந்தவன்
இவன் எனது முதல் நண்பன். ஊரடங்கு துவங்கும் முன்பே அடிக்கடி எங்கள் இல்லம் தேடி வந்து, தனது தடத்தை விட்டு சென்றவன். ஆயினும் வெகுகாலம் வரையில் இவன் என் பார்வையில் படாதது என் துரதிர்ஷ்டமே.
வழக்கமாக எங்கள் வீட்டு வாசலில் என் மனைவி போடும் அழகிய (?!) கோலங்கள் சில நேரங்களில் லேசாக அழிந்திருக்கும். யாரோ அதை மிதித்து சென்ற தடம் இருக்கும். சில நேரங்களில் நான் சீக்கிரம் எழுந்து வெளியில் சென்று திரும்பும் போது, நான் தான் அக்கோலத்தை மிதித்து விட்டேன் என என் மனைவியும், ஏன் சில சமயங்களில் நானும் கூட எண்ணியிருந்தேன். அவனை பார்க்கும் வரையில்.....

வீடே அலுவலகம் மாறிய ஊரடங்கில், எனது வழக்கமான அலுவலக பணிகளை என் வீட்டு வரவேற்பரையில் (Hall) அமர்ந்து, செய்து கொண்டிருந்தேன். வெயில் காலம் என்பதால் கொரோனாவை மிஞ்சும் வண்ணம் கோடை வெப்பம் அதிகமிருந்தது. காற்று சற்று குறைவாக இருந்ததால், வீட்டு கதவை திறந்து வைத்து விட்டு வேலை செய்துக் கொண்டிருந்தேன். அப்போது எத்தேச்சையாக வாசலை பார்க்க, ஒரு மெல்லிய கயிறு போன்ற உருவம் வாசலை கடந்து சென்றதாக தோன்றியது. ஏதேனும் எலியின் வேலையாக இருக்கும் என எண்ணி அதை கண்டுகொள்ளவில்லை. சிறிது நேரம் போன பின் மீண்டும் அதே போன்ற உருவம் தோன்ற, லேசாக கவனிக்க ஆரம்பித்தேன். அவன் நான் கவனிக்கவில்லை என்று எண்ணி என் வீட்டு கோலத்தின் மீது தனது கைவண்ணத்தை (மன்னிக்கவும், வால் வண்ணத்தை) காட்டிக் கொண்டிருந்தான். திடீரென என்னை பார்த்ததும், விரைவாக சென்று ஓடி ஒளிந்துக் கொண்டான்.
இப்போது தான் எனக்கு கோலம் அழிந்த ரகசியம் பிடிபட்டது. அது அவனின் வேலைதான். பல நாட்களாக எங்கள் இல்ல வாசலை தேடி வந்து, தன் தடத்தை விட்டு சென்றிருக்கிறான். அவன் யார் என்று தெரிந்த பின், எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் அவன் என்ன எண்ணினான் என தெரியவில்லை. இப்போதெல்லாம் முன்பு போல அவன் அடிக்கடி வருவதில்லை. ஆயினும் அவன் அழிப்பதற்காகவே தினந்தோறும் எங்கள் இல்ல வாசலில் கோலத்தை போட்டு வைத்திருக்கிறோம். அவன் வருகைக்காக தினமும் வாசலில் விழிவைத்து காத்திருக்கிறோம் ....

2. நேரம் தவறா நெருங்கிய நண்பன்
இக்கொரோனா கால மன அழுத்தத்திலிருந்து மீளவும், உடல் நலத்தை காக்கவும் எனது அன்றாட பழக்கவழக்கங்கள் சிலவற்றை தற்காலிகமாக மாற்றிக் கொண்டேன். குறிப்பாக தினமும் காலையில் எழுந்து மாடிக்குச் சென்று அங்கேயே தேநீர் பருகவும், நாளிதழ்கள் வாசிக்கவும், சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யவும் ஆரம்பித்தேன். உடற் பயிற்சி முடிந்ததும் கண்களை மூடி சுமார் 5 நிமிடம் தியான பயிற்சி மேற்கொள்ள முயற்சி செய்தேன். நான் கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பித்ததும், அந்நேரத்தில் அவன் கூக்குரலிட்டு என்னை அழைக்க ஆரம்பித்தான். என் தியானத்தை கலைக்க முயற்சி செய்தான். ஒரு நாள் அல்ல; இரு நாள் அல்ல தினமும் இது தொடர்ந்தது.
தினமும் காலை சரியாக 7.45 - 7.50 மணியளவில் அவன் வருவான். கொடி கம்பத்தின் உச்சியில் அமர்வான். கூக்குரலிட்டு என்னை அழைப்பான். நான் அவனைப் பார்த்ததும் சில வார்த்தைகளை பேசி, நலம் விசாரித்து விட்டு செல்வான். இவ்வாறாக ஊரடங்கிலும் என்னைத் தேடிவந்து பேசிச் சென்ற, என் மனதிற்கு நெருக்கமான நண்பன் இவன். தொடர்ந்து சுமார் இரண்டு மூன்று மாதங்கள் வரை தினமும் இவனை சந்தித்தேன். எனது நாட்களை சிறப்பாக துவங்க இவன் எனக்கு உதவினான்.
இப்போது ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு விட்டன. மக்கள் மீண்டும் வழக்கம்போல், அவரவர் பணிகளை கவனிக்க ஆரம்பித்து விட்டனர். நானும் தினமும் காலை மாடிக்குச் செல்லும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டேன். அவனும் தனது நேரத்தை மாற்றிக்கொண்டான். இப்போதெல்லாம் எப்போதாவதுதான் அவனை சந்திக்க முடிகிறது. எனினும் அவன் என்னை தேடி வந்து சென்ற நினைவுகள் என் நெஞ்சில் பசுமரத்தாணி போல் என்றும் நிறைந்திருக்கும். காலம் கனியும் போது மீண்டும் அவன் என் வாழ்வில் வருவான் என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.
3. இவன் நண்பனா? எதிரியா?
இந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து சுமார் ஒரு ஆண்டு கடந்த நிலையில், இப்போது தான் அக்கம் பக்கம் உள்ளோரை தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அதுவும் இந்த கொரோனா கால வார இறுதி நாட்களில், பல குடும்பங்கள் வெளியில் எங்கும் செல்ல இயலாமல் தத்தமது மாடிகளில் தஞ்சம் புகுந்ததால் ஏற்பட்ட ஒரே நன்மை இது.
இவ்வாறாக எங்கள் கட்டிடத்தின் பின்புறம் உள்ள குடும்பத்தினருடன் பேசி பழக ஆரம்பித்த போது அவனும் அவர்கள் கட்டிடத்திலிருந்து என்னையும், நான் பேசுவதையும் உன்னிப்பாக கவனிப்பான். அப்போதெல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாமல் மிகவும் அமைதியாக இருப்பான். அதேநேரம் சில சமயம் நான் தனியாக மாடிக்கு செல்லும் போது என்னை பார்த்து முறைத்தபடி கூச்சலிடுவான்.
இவ்வாறாக மற்றவர்கள் பார்வை படும் நேரத்தில் ஒரு மாதிரியும் மற்ற சமயங்களில் வேறு மாதிரியும் நடந்து கொள்வான். இவன் என் நண்பனா? அல்லது எதிரியா? என தீர்மானிக்க முடியாதபடி என்னை குழப்பத்திலேயே வைத்திருந்தான். இப்போது அனைவரும் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டதால், முன்புபோல் அக்கம்பக்கத்தினருடன் பேச நேரம் கிடைப்பதில்லை. நான் எப்போது மாடிக்கு சென்றாலும். என்னை பார்த்து கூச்சலிடுவதை ஒரு வழக்கமாகவே வைத்துக் கொண்டிருக்கிறான். என்றேனும் ஒரு நாள் நான் அவனது நண்பன்தான் என தானும் உணர்ந்து, எனக்கும் அதை தெரிவிப்பான் என எண்ணி நானும் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.....
4. மலையில் விழுந்து மறைபவன்
வழக்கமாக என் அலுவலக நண்பர்களுடன் மாலையில் தேநீர் பருகும் வழக்கத்தை கொண்ட நான், இக்கோரோனா காலத்தில் அவர்களை இழக்க (Missing) ஆரம்பித்தேன். வெறுமையில் வாடிய போது, வேறு வழியின்றி, தினமும் மாலையில் என் வீட்டின் மாடிக்கு சென்று தேநீர் பருகும் பழக்கத்தை ஆரம்பித்தேன். அப்போது தான், அதே நேரத்தில் தன் பணியை முடித்து விடை பெறும் அவனை தினமும் கவனிக்க ஆரம்பித்தேன்.
நாள் முழுவதும் கடுமையாக பணிபுரிந்தாலும் விடைபெறும் நேரத்தில், நமக்கு கிடைக்கப் போகும் ஓய்வை எண்ணி சற்று உற்சாகமாக இருப்பது மனித இயல்பு. ஆனால் ஓய்வறியா இவ்வுன்னத நண்பன் வேறொரு இடத்தில் தன் பணியை தொடரவே விடைபெற்று செல்கிறான். இருந்த போதும் தனது சோர்வை பிறர்க்கு காட்டாமல் தானும் மகிழ்ந்து, மற்றவர்களையும் மகிழ்விக்கிறான்.
மிகச்சிறந்த ஓவியனான இவன், தினமும் காலையில் தவறாமல் வந்து நாள் முழுதும் ஓய்வின்றி உழைப்பான். மாலையில் விடைபெறும் போது, வானில் பல அழகிய ஓவியங்கள் வரைந்து, அவற்றிற்கு வண்ணங்கள் பல தீட்டி, தனது வர்ணஜாலங்களை காட்டி, தான் விடை பெறுவதை இவ்வுலகிற்கு அறிவிப்பதில் இவனுக்கு மிகவும் மகிழ்ச்சி போலும். இதனால் தான் மலையில் விழுந்து மறையும் போதும் கூட அவனால் உற்சாகமாக செயல்பட முடிகிறது. இப்போதெல்லாம் நான் மாடிக்கு செல்லும் பழக்கம் குறைந்து விட்டது, எனினும் அவன் என்னுள் பாய்ச்சிய ஒளி என்னை உயிர்ப்பித்து கொண்டிருக்கிறது...
- இப்பதிவை படிக்கும் உங்களுக்கு.
- என் நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்த கொரோனாவுக்கு.
- என்னையும், என் நண்பர்களையும் படைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு.
It's amazing.
ReplyDeleteமிக மிக அருமை.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteSuper ....💐
ReplyDeleteAmazing
ReplyDeleteContent...
Simplicity of writing...
Refreshing effect...
Originality...
Strikes a chord with reader....
Keep it up...
I truly enjoyed.
As i do not read Tamizh fast I am slow but this one I thoroghly enjoyed.
Thank you for the post.
God Bless you.
நன்று👏👏👏
ReplyDeleteSuper
ReplyDelete