பொதிகைமலை பயணம் - பாகம் 3 சிகரம் நோக்கி

பொதிகைமலை பயணம் - பாகம் 3 சிகரம் நோக்கி


முந்தைய பாகங்களை படிக்க 

பொதிகைமலை பயணம் - பாகம் 1 முதல் அடி

பொதிகைமலை பயணம் - பாகம் 2 அதிருமலை பயணம்

 



பிப்ரவரி 14 வெள்ளிக்கிழமை 

       இன்று நமக்கு முக்கியமான நாள். அதிகாலை 5.30 மணிக்கே எழுந்து  விட்டோம். மீண்டும் நமக்கு பிடித்த சிற்றாத்தில் நீராடி விட்டு, நமது குறிக்கோளை அடைய தயாரானோம். அப்போது பொதிகை மொட்டின் (சிகரத்தின்) பின்புறம் உதித்த சூரியனின் கதிர்கள் மலையெங்கும் படர்ந்து விரிந்த அற்புதக் காட்சி, நம் மனதை கொள்ளை கொண்டதுநாம் 3 நாள் பயண திட்டம் வைத்திருந்ததால் நிதானமாக அதை அனுபவிக்க முடிந்தது


பொதிகை - சூரிய உதயத்தின் போது

        காலை 7.00 மணி - உணவகத்தில் சுடச்சுட சுக்குக்காபி பருகிய பின் நமக்குண்டான உணவு பொட்டலத்தை (உப்புமா-சர்க்கரை) பெற்றுக் கொண்டு பயணத்திற்கு தயாரானோம்காலை 7.20 மணி அளவில்,  அதிருமலை காவல் தெய்வத்தை வணங்கி, மரவேர்கள் நிறைந்த பாதையில், சிற்சில ஓடைகளை கடந்து,   சமதளங்கள்,  ஏற்றங்கள் மற்றும் பாறைகள் வழியே பயணத்தை துவக்கினோம். சுமார் 30 நிமிடம் கடந்ததும் வலது புறம் பொதிகை மொட்டின் தரிசனம் கண்டோம்.

 

சிறு முகட்டில்

            அடுத்து வந்த சிறுமுகடு நாம் சிறிது இளைப்பாறவும், புகைப்படம் எடுக்கவும் மிகவும் அருமையான இடம். அங்கிருந்து நாம் பயணத்தை ஆரம்பித்த அதிருமலை முகாமை பார்க்கலாம். மீண்டுமொருமுறை  பொதிகை சிகரத்தை தரிசித்து வணங்கி நம் பயணத்தை தொடர்ந்தோம்.

 

கைலாய தரிசனம் 


கைலாய தரிசனம்

        காலை 8.10 மணி - நாம் மீண்டும் பயணத்தை துவங்கியவுடன், நமக்கு நன்றாக தெரிந்த பொதிகை மொட்டின் தரிசனம் மறைந்து விட்டது. அதை பற்றி சிந்தித்தவாறே தொடர்ந்து சென்றோம். பின்பு  சுமார் 5 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் தெரிந்த பொதிகை   சிகரத்தின் தோற்றம், கைலாய மலை போல் காட்சியளித்து, நம் மனதை தெய்வீக அனுபவத்திற்கு தயார் செய்தது.


பொங்கல பாறை


பொங்கல பாறை

           காலை 8.35 மணி - இடப்புறம் திரும்பி சுமார் 15 நிமிடம் நடந்தபின் பொங்கல பாறையை அடைந்தோம். இது அதிருமலை முகாமில் இருந்து சுமார் ஒரு மணி நேர பயணமாகும். பொதிகை மலையில் உருவாகும் 3 முக்கிய ஆறுகளில் கல்லாறு, அட்டையாறு  ஆகியவை பொங்கல பாறை வழியாக கேரளத்திற்கு செல்கிறது. பொங்கல பாறை ஓய்வு எடுக்கவும், உணவு அருந்தவும் மிகவும் ஏற்ற இடம். அங்கு பொதிகை மொட்டின் தரிசனத்திலும் அதன் எதிர்புறம் தெரிந்த பிற சிகரங்களின் அழகிலும் நம் மனதை மீண்டுமொருமுறை பறிகொடுத்துவிட்டு பயணத்தை தொடர்ந்தோம்.


மேகங்களின் விளையாட்டு 


பொதிகையை மூடிய மேகங்கள்

           பொங்கல பாறையை கடந்து இடதுபுறமாக நாம் நம் தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைத்த தருணத்தில், பொதிகை மொட்டின் உச்சியை மேகம் மறைத்து விளையாடியது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பொதிகையை ஒவ்வொரு முறையும் மேகம் தழுவும் போது, அதிலுள்ள நீர்த்துளிகள் சிகரத்தின்  மீது வழிகிறது. தொடர்மழை இல்லாத போதும், தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு ஜீவநதிகள் உருவாக   இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். சுமார் ஒரு மணி நேரம் பொதிகையை வலம் வந்தபின் உச்சியை நோக்கி ஏறும் வழியை அடைந்தோம். அங்கு நம் காலை உணவை முடித்துக்கொண்டு சிகரத்தில் ஏற ஆரம்பித்தோம்.

 

பசுமை வழி பயணம்

  

பாசி படர்ந்த பாறைகள்
   

        காலை 9.40 மணி - பொதிகை சிகரத்தின் உச்சியை நோக்கி ஏற ஆரம்பித்த பயணம் சற்று சவாலாக இருந்தது. ஈரமான பாறைகள் நடுவே கடும் ஏற்றம் நிறைந்ததாக இருந்தது. ஒவ்வொரு 30-40 அடிகளுக்கு ஒரு முறை நன்றாக மூச்சு வாங்கியது. இது ஏறும் நபர்களின் உடல்நிலையை பொறுத்து வேறுபடலாம்பாதை எங்கும் பாசி படர்ந்து இருந்ததால் சற்று பொறுமையாகவே செல்ல வேண்டி இருந்தது. பார்க்கும் மரங்கள் எங்கும் ஈரத்தில் நன்கு  ஊறிக்  காணப்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு கயிற்றை பிடித்து ஏற வேண்டிய, செங்குத்தான பாதையை அடைந்தோம். இங்கு வெறும் காலில் ஏறுவதே உத்தமம். எனவே  எங்கள் காலணிகளை ஒரு ஓரமாக பத்திரப்படுத்திவிட்டு வெறும் காலில் ஏற ரம்பித்தோம்.


குளிர் காடு 


A.C. காட்டில் நண்பர் பரணி

         பிறகு A.C. காடு எனப்படும் குளிர்ந்த வனப்பகுதியின் வழியே சென்றோம். வழியெங்கிலும்  இயற்கையாகவே விளைந்த கஸ்தூரி மஞ்சளும்,   பல்வேறு மூலிகைகளும், அவற்றிற்கு பாதுகாப்பாக அதை சுற்றி எக்கசக்க தேனீக்களும் காணப்பட்டனஇங்கு விளையும் கஸ்தூரி மஞ்சள் அதிருமலை உணவகத்தில் விற்பனைக்கு உள்ளது. பிறகு சற்று செங்குத்தான பாதையில் மீண்டும் கயிற்றை பிடித்தவாறு ஏறினோம். இது சற்று புது அனுபவமாக இருந்தது


கயிற்று பாதை


      பொதிகை மலை உச்சியை நெருங்கும் தருணத்தில், இடதுபுறம் கரையார் (பாபநாசம்-மேலணை) அணையின் எழில்மிகு  தோற்றம் நம் கண்களுக்கு புலப்பட்டது, மேலும் நீரோட்டங்கள் நிறைந்த பல்வேறு அழகிய சிகரங்களையும் கண்டோம் (இவற்றை பற்றி பிறகு விரிவாக காண்போம்). 



தூரத்தில் தெரிந்த சிகரங்கள்
 

        

        வழியெங்கும் நன்றாக ரசித்துக் கொண்டே சென்றதாலும், 3 நாள் பயண திட்டத்தாலும்,   சராசரியான 3 மணி நேரத்தை  விட சற்று கூடுதல் நேரம் எடுத்து கொண்டோம். சுமார் மூன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு காலை 10.50 மணிக்கு, பொதிகை மலையின் உச்சியை அடைந்தோம்.


Comments

  1. Excellent narrative, I felt as If am also travelling with you and it's happening now.

    ReplyDelete
  2. Neenkal sendru muditha pathai meendum varunkalathirku nalla pathaiyai katti erukirathu ....... entha pani thodara
    vazhthukkal...

    ReplyDelete
  3. Nice... Sorry for late response....

    Pongal Rock.... AC kaadu... Rope route.... Names are different.

    I felt that tremendously in rope route....

    I think rope route was very difficult for me.

    ReplyDelete

Post a Comment