பொதிகைமலை பயணம் - பாகம் 1 முதல் அடி
பொதிகைமலை சென்று வந்த அனுபவத்தை பலபேர், பல தளங்களில் ஏற்கனவே எழுதி இருந்தாலும், ஒவ்வொருவரின் பார்வையும், அவர்கள் பெற்ற அனுபவமும் நிச்சயம் வேறுபடும். எனவே எனது அனுபவத்தையும் இங்கே பதிவு செய்ய முயல்கிறேன். |
அகத்தியர் மலை என்னும் பொதிகை மலைக்கு செல்ல வேண்டும் என்ற எனது ஐந்தாண்டு கனவு இவ்வாண்டில் (2020) நிறைவேறியது. கடந்த 2015ம் ஆண்டு முதலே பொதிகை மலை குறித்த பல்வேறு தகவல்களை சேகரித்து வந்தேன். கடந்த ஆண்டு முழுமுயற்சியும் மேற்கொண்டேன். ஆனால், அகத்தியரின் அருள் பார்வை இப்போது தான் பரிபூரணமாக கிட்டியது.
கேரள வனத்துறையினரின் அகஸ்தியர் கூடம் அனுமதி குறித்த (ஜனவரி) அறிவிப்பு வந்தவுடன் பல்வேறு குழுக்களுடன் சேர்ந்து பயணிக்க முயற்சி செய்தேன் ஆனால், சரியான தேதி அமையாததால் கிட்டதட்ட பயண திட்டத்தை கைவிட்டு விட்டேன் எதற்கும் முயற்சி செய்யலாம் என அலுவலகம் செல்லும் வழியில் எனது கைபேசியில் முயற்சி செய்தேன். என்ன அதிசயம்! பலர் அதிவேக இணையத்தில் முயற்சி செய்தும் கிடைக்காத அனுமதி வெறும் கைப்பேசியில் முயற்சி செய்த எனக்கு அகத்தியர் அருளால் கிடைத்தது.
இறைவன் சித்தம்
பயணத்திட்டம், ரயில், தங்குமிடம் போன்ற பல்வேறு ஏற்பாடுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து பிப்ரவரி 11ம் தேதி செவ்வாய் கிழமை இரவு அனந்தபுரி விரைவு ரயிலில் புறப்பட்டோம். மறுநாள் காலை முதலே செல்லும் இடம் குறித்தும் பயணத்திட்டம் குறித்தும் பேசிக் கொண்டே இருந்தோம். ரயிலில் சக பயணியான திரு. சிவகணேசன் அய்யா அவர்கள் எங்களுக்கு அறிமுகம் ஆனார். அவரும் பொதிகை மலைக்கு செல்வதாகவும், தனியாக வந்து இருப்பதாகவும் கூறினார். எங்கள் திட்டம், அவரின் பயணத் திட்டதுடன் சரியாக பொருந்தியதால் அவரும் எங்களுடன் இணைத்து கொண்டார். இறைவன் இணைத்தார் என்பதே உண்மை.
திருவனந்தபுரம்
பிப்ரவரி 12ம் தேதி புதன்கிழமை மதியம் ரயில் திருவனந்தபுரம் அடைந்தவுடன் நேராக அனந்த பத்மநாபசாமி கோவில் வாயில் அருகில் உள்ள பத்மநாபசாமி லாட்ஜ்க்கு சென்று நாங்கள் ஏற்கனவே பதிவு செய்த அறையை அடைந்தோம். அங்கு குளித்து முடித்து அன்னபூர்ணா உணவகத்தில் மதிய உணவு முடித்த பின் திருவனந்தபுரத்தை சுற்றி பார்க்க ஆரம்பித்தோம். மாலையில் தான் கோவில் திறப்பார்கள் என்பதால் அருகிலுள்ள திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு சொந்தமான குதிரா மாளிகை அரண்மனைக்கு முதலில் சென்றோம்.
குதிரா மாளிகையில் மன்னர்களின் பொருட்கள், பல்வேறு கலை பொருட்கள் மற்றும் ஒரு ஓவிய கண்காட்சி ஆகியவை இருந்தது. கேரளத்தை பற்றிய பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. சுற்றி பார்க்க சுமார் 2 மணி நேரம் ஆனது. பிறகு மாலை 4 மணி அளவில் திரு அனந்தபத்மநாபசாமி கோவிலுக்கு சென்றோம். அங்கு நல்ல தரிசனம் கிடைத்தது. எங்கள் பயணம் சிறக்க அங்கு வேண்டிக் கொண்டோம். அதன்பின் பழவங்காடி கணபதி கோவிலுக்கும், திருகண்டீஸ்வரம் சிவன் கோவிலுக்கும் சென்றோம். பிறகு பேருந்து நிலையத்திற்கு சென்று மறுநாள் காலையில் புறப்பட வேண்டிய பேருந்து குறித்த விவரங்களை (நேரம், புறப்படும் இடம்) சேகரித்து விட்டு இரவு உணவிற்கு பின் எங்கள் அறையை அடைந்தோம்.
போனக்காடு
பிப்ரவரி 13ம் தேதி வியாழக்கிழமை காலை 5 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் பஸ் நிலையத்தில் இருந்து போனக்காடு செல்லும் பேருந்தில் (இதை விட்டால் வேறு பேருந்து இல்லை) ஏறினோம். பேருந்து சுமார் 8 மணிக்கு போனக்காடு எஸ்டேட்டை அடைந்தது. போனக்காடு ஆள், அரவம் இல்லா அமைதியான இடம். அங்கு ஒரு பழைய தொழிற்சாலை மற்றும் சிற்சில வீடுகளே உள்ளன. அங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள போனக்காடு சோதனை சாவடியை 40 நிமிட நடை பயணத்தில் அடைந்தோம். அங்கு காலை உணவை முடித்து விட்டு, மதிய உணவை பெற்று கொண்டோம்.
போனக்காடு காட்டிலாகா சோதனைச்சாவடி
காலை 9.30 மணி
காட்டிலாகா அதிகாரி திரு. முரளி அவர்கள் பயணம் குறித்த தகவல்கள் மற்றும் விதிமுறைகளை தெரிவித்தார். அவர் பயணத்தை குறித்து விவரித்த விதம், மலையாளத்தில் என்றாலும் கூட புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகவும் சிறப்பாகவும் இருந்தது. குறிப்பாக இது பொழுதுபோக்கு பயணம் அல்ல, ஆன்மீக பயணம் என்றுரைத்தது, பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. பிறகு ஒவ்வொரு குழுவாக செல்ல அனுமதி வழங்கினார். அங்கு நெகிழி (Plastic) பைகள், தடை செய்யப்பட்ட பொருட்கள் அனுமதி இல்லை. மேலும் நெகிழி தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் 100 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். பயணம் முடிந்த உடன் பணம் திருப்பி தரப்படும். நாங்கள் எங்கள் பைகளை சோதனை செய்தவுடன் எங்கள் பயணத்தை தொடங்கினோம்.
தொடரும்.....
Nice....
ReplyDeleteReally you went there ah.... Few months back Anand post one message regarding this spiritual place. Am I correct? When I was reading that message, I was very curious and nervous. I am also think to travel that place. But the next minute, there was message alarming from my small corner of brain. This place is not suitable for me. This place is suitable for our mountain king traveller "Vijaya Bashkar" only. So as usually I drop this plan.
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த பதிவை படிக்கும் பெழுது தங்களுடன் நானும் வந்த ஒரு உண்மையான உணர்வு ஏற்பட்டது. நன்றிகள் பல. தொடரட்டும் பல வாழ்த்துக்கள்.
ReplyDelete